Wednesday, September 04, 2013

Y4K

6.Y4K

டைம் மிஷின் நின்று கொண்டிருந்த இடம், ஆள் அரவமற்று இருந்தது.

‘இலக்கை அடைந்து விட்டோம்’ என்று ஸ்கிரீனில் ஓடிக் கொண்டிருந்தது.

என் நெஞ்சம் படபடவென்று அடித்தது. கதவைத் திறப்பதற்கு முன்,

ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தேன். யாருமே கண்ணில்

தென்படவில்லை. கதவைத் திறந்து, இருவரும் கீழே குதித்தோம்.

டைம் மிஷினை ஒரு மரத்திற்கு பின்னால் பார்க் பண்ணிவிட்டு, கிளை

தழைகளை உடைத்து, மறைவாக மூடி வைத்தோம். பிறகு, சென்னை

செல்லும் வழியில் நடக்க ஆரம்பித்தோம்.

இரண்டு நிமிடங்கள் கூட நடந்திருக்க மாட்டோம். வாகன ஒலி, சைரன் ஒலி

என்று அடுத்தடுத்து கேட்க, ஐந்து கார்கள் எங்கள் அருகே கிறீச்சிட்டு

நின்றன. அதில் இருந்து திபுதிபுவென்று யூனிபார்ம் பெண்கள் பலர்

இறங்கினர். ஜெராக்ஸ் எடுத்தது போல, அனைவரும் ஒரே மாதிரியாக

இருந்தனர். முகத்தில் முரட்டுத்தனம் தெரிந்தது. கைகளில் குழல் போன்ற

ஒன்றை பிடித்து இருந்தனர். அவர்கள் அதைப் பிடித்திருந்த ஸ்டைலைப்

பார்த்தால், அது லேசர் துப்பாக்கியாக இருக்கலாம்.

எங்களை சூழ்ந்து கொண்ட ஜீனிஸுக்கள், தங்களுக்குள் ஏதோ ஒரு ரகசிய

மொழியில் பேசிக் கொண்டனர். அவர்களில் இரண்டு பட்டை சட்டை அணிந்த

ஜீனிஸ் பெண் மட்டும் எங்கள் அருகே வந்து, செந்தமிழில் கேட்டாள்.

“யார் நீங்கள்?”

குரல் கர்ண கடூரமாய் ஒலித்தது. அதில் தெரிந்த கடுமை எனக்குள்

நடுக்கத்தை உண்டு பண்ணியது.

“நான் ரேகா. இது என் நண்பர் சதீஷ்.”

“ஓ... கடிதப் புகழ் ரேகா. எட்டு கண்ணீர் கடிதங்கள் எழுதி இந்தியாவையே

ஒரு கலக்கு கலக்கியவர், இல்லையா?”

அந்தப் பெண் குரலை உயர்த்திப் பேசினாலும், அந்த பேச்சிலோ, முகத்திலோ

உற்சாகம் எதுவும் தென்படவில்லை. பிறகு எங்களைப் பார்த்து,

“ம்...ஏறுங்கள். உங்களை உபசரிப்பதற்காக எங்கள் தலைவி காத்துக்

கொண்டிருக்கிறார்”, என்று கூறி எங்களை ஒரு வாகனத்தில் ஏறச் சொல்லி

அவசரப்படுத்தினாள்.

“வெயிட். நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரிய வேண்டாமா?”

“நாங்கள் இந்திய பாதுகாப்புப் படையினர். உங்களை அழைத்து வரச்

சொல்லி, தலைவி எங்களைப் பணித்துள்ளார். ஆகவே, தலைவியை காக்க

வைக்காமல், உடனே கிளம்புங்கள்.”

ரேகா உற்சாகமாய் அவர்களின் வண்டியில் ஏறி அமர, நான் அரைமனதோடு,

தயங்கி தயங்கி ஏறினேன். இரண்டு பட்டை சட்டைக்காரி, ஒரு ஜீனிஸை

மட்டும் தனியாக அழைத்து, அவளிடம் ஏதோ கூற, அவள் தலையை

அசைத்து விட்டு, கீழேயே நின்றாள். மற்றவர்கள் வண்டியில் ஏறியதும்,

வண்டி ஸ்டார்ட் ஆனது. தனியாக விடப்பட்ட ஜீனிஸ் என்ன செய்கிறாள்

என்று தெரிந்து கொள்ள தலையைத் திருப்பி பார்த்தேன். அவள் நேராக,

டைம் மிஷினை மறைத்து வைத்த இடத்திற்கு சென்று, புதர்களை விலக்கி

எங்கள் டைம் மிஷினை விடுவித்தாள். என் மனதில் திக்கென்று ஒரு பயம்

ஒட்டிக் கொண்டது. அப்போது என்னருகில் உட்கார்ந்திருந்த ஜீனிஸ், என்

காதருகே கூறினாள்.

“பயப்பட வேண்டாம். உங்கள் கால இயந்திரம் பத்திரமாகவே இருக்கும்”

நாங்கள் உட்கார்ந்திருந்த வண்டிக்கு முன்னால் இரண்டு வண்டிகள், பின்னால்

இரண்டு வண்டிகள் என்று சென்று கொண்டிருந்தன. நாங்கள்

விருந்தாளிகளாய் செல்கிறோமா அல்லது சிறையாளிகளாய் செல்கிறோமா

என்ற ஒரே சந்தேகம்தான் என் மனதை வாட்டியது.

ஆனால் ரேகாவோ ஜாலியாக இருந்தாள். வாகன வடிவமைப்பு, வேகம்,

சுற்றியுள்ள கட்டிடங்கள் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.

நானும் வேகத்தை கவனிக்க, அது மணிக்கு 3500km என்று காட்டியது. அந்த

வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்ததை எங்களால் உணரவே

முடியவில்லை.

பத்து நிமிடத்தில் எங்களின் வாகன பயணம் முடிந்தது, ஒரு

பிரம்மாண்டமான பலமாடி கட்டிடம் முன்பு வண்டி நின்றது. உள்ளே

சென்றோம்.

அது ஒரு அலுவலகம். வேலைகள் அனைத்தையும் அங்கு இயந்திரங்களே

செய்து கொண்டிருந்தன. கிட்டத்தட்ட இரண்டாயிரம் இயந்திரங்களுக்கு மேல்,

அந்த ஆபிஸில் உள்ளன என்று கணக்கிட்டேன். அத்தனை

இயந்திரங்களையும் மேற்பார்வையிட, பத்து ஜீனிஸுக்கள் மட்டுமே

இருந்தார்கள். இதுதான் இந்திய நாட்டின் தலைமை செயலகமாய்

இருக்குமோ?

லிப்டில் பல மாடிகளை ஏறிய பின்பு, வெளிவந்தோம். அங்கு இருந்த

அலுவலக அறையை தாண்டிய பின்பு, ஒரு அலங்கரிக்கப்பட்ட அறை

வந்தது. கதவில் ‘இந்திய நாட்டுத் தலைவி’ என்ற தங்க எழுத்துக்கள்

மின்னின. அதன் கதவைத் திறந்து, உள்ளே அழைத்து செல்லப் பட்டோம்.

அது ஒரு விஸ்தாரமான அறையாக இருந்தது. மிக மிக ஆடம்பரமாக

அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த அறைக்குள், நடுநாயகமாய் ஒரு ஜீனிஸ்

பெண் உட்கார்ந்திருந்தாள். அவரை சுற்றி மேலும் பத்து ஜீனிஸுக்கள்

இருந்தார்கள். பாதுகாப்பு படையினர், எங்களை அறைக்குள் விட்டு விட்டு,

ஒன்றுமே பேசாமல் வெளியே சென்று விட்டனர்.

”ஆக, நீங்கள்தான் ரேகாவா?”, என்று நடுநாயக பெண்மணி கேட்டாள்.

“ஆம்”

“உங்களின் வருகை, இன்னமும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது”, என்று

அந்த ஜீனிஸ் கூறியது எனக்கு வித்தியாசமாகப்பட்டது.

ஆனால், ரேகா சந்தோஷமான குரலில், “நீங்கள்தான் இந்திய நாட்டுத்

தலைவியா?” என்று கேட்டாள்.

“ஆம்”

தலைவிக்கு ரேகா வணக்கம் செலுத்தினாள். ஆனால், அதற்கு தலைவி

ரெஸ்பான்ஸ் எதுவும் பண்ணாமல், அருகில் இருந்த ஜீனிஸிடம் ஏதோ கூற,

அவர்கள் புன்முறுவலித்தார்கள். எனக்கு சற்று கலக்கமாகவே இருந்தது.

“என் அழைப்பை நம்பி நீங்கள் வந்துள்ளது இன்னமும் என்னை

ஆச்சரியமூட்டுகிறது. மனிதர்கள் புகழ்ச்சிக்கு எளிதில் அடிமை ஆகி

விடுவார்கள் என்று என் ஆலோசகியான இவர் கூறிய போது, நான் நம்பவே

இல்லை”, என்று கூறிய தலைவி இடி இடியென்று சிரித்தாள். மற்ற

ஜீனிஸுக்களும் அவளோடு சேர்ந்து சிரிக்க, ரேகாவும் கலவரமடைந்தாள்.

“மேடம், யூ மீன் டு ஸே, நீங்கள் எங்களை ஏமாற்றி வரவழைத்துள்ளீர்களா?”

”பின், உங்களுக்கு விருதும், விருந்தும் கொடுப்பதற்காக வரவழைத்தேன்

என்றா நினைத்தீர்கள்?”

தலைவியின் குரலில் கடுமை அதிகரித்தது. எங்கள் முகத்தில் மிரட்சி

தெரிந்தது. நான் தலைவியிடம் கேட்டேன்.

“மேடம், என்னுடைய டி.சி. செய்திகள் பொய்யா? மனித வேட்டையை நீங்கள்

நிறுத்தி விட்டதாய், அது தவறாக கூறிவிட்டதா?”

“இல்லை, மிஸ்டர் சதீஷ். உங்கள் டி.சி. அருமையாக வேலை

செய்திருக்கிறது. உங்களுக்கு கிடைத்த செய்திகள் அனைத்தும் இங்குள்ள

தகவல் கேந்திர செய்திகள்தான். மனித வேட்டை எங்கள் நாட்டில் நிகழ்ந்து

கொண்டிருந்ததும் உண்மை. ரேகாவின் கடிதத்தால், அது நிறுத்தப்பட்டதும்

உண்மை. ரேகாவின் முதல் கடிதம் இங்கு வந்ததுமே, எங்கள் நாட்டில் பல

குழப்பங்கள் ஏற்பட்டன. எங்களின் செயலை ஜீனிஸ் பிரஜைகள் கடுமையாக

எதிர்த்தனர். நாங்களும், அவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து, மனிதக்

கொலைகளை உடனேயே நிறுத்தி விட்டோம். ஆனால்...”

“ஆனால்?”

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, மிஸ்டர் சதீஷ்? டி.சி. என்பதே 3037ல்

கண்டுபிடிக்கப்பட்ட சாதனம்!”

“புரியவில்லையே”

“3037ம் வருடம் டெல்லியை சேர்ந்த ஒரு ஜீனிஸால், டி.சி.

கண்டுபிடிக்கப்பட்டது. அப்படித்தான் எங்கள் வரலாறும் உள்ளது. ஆனால்,

2063ம் வருட டி.சி. கதிர்கள், எங்கள் நாட்டு செய்தி கேந்திரத்திற்குள்

வந்ததை அறிந்ததும், எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. நிஜமாகவே,

உங்களின் கண்டுபிடிப்பு அபாரம். ஆனால், அந்த கண்டுபிடிப்புதான் உங்களை

இங்கு வரவழைத்து உள்ளது!”

“இன்னமும் எங்களுக்கு புரியவில்லை, மேடம்”, என்று கூறிய ரேகா, “நீங்கள்

எங்களை எதற்காக வரவழைத்தீர்கள்? எங்களை என்ன செய்யப்

போகிறீர்கள்? சதீஷின் டி.சி. சர்க்கியூட் வேண்டுமா? எங்களை மீண்டும்

2063க்கு அனுப்புவீர்களா? மாட்டீர்களா”, என்று அடுத்தடுத்து கேள்விகள்

கேட்டாள்.

“பொறுமை, ரேகா. சதீஷின் டி.சி. போலவே, உங்களின் கடிதங்களும் மிக மிக

அற்புதம். எத்தகைய கொடுங்கோலரின் மனத்தையும் உருக்கி விடக் கூடிய

சக்தி படைத்தது. கடவுளின் படைப்பை அடியோடு அழிக்க எந்த வகையிலும்

எங்களுக்கு உரிமை இல்லை என்ற உங்களின் கருத்தை பற்றி

விவாதித்தோம். அதன் அடிப்படையில் இரண்டு முடிவுகள் எடுத்தோம். முதல்

முடிவு, மனித வேட்டையை நிறுத்துவது. இரண்டாவது முடிவு உங்களை

இங்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பது!”

ரேகா இடைமறித்து ஏதோ கேட்க முற்பட, தலைவி சைகையால் தடுத்து,

மீண்டும் தொடர்ந்தாள்.

“உடனேயே, எங்களின் தகவல் தொடர்பு சாதன அலைவரிசையை மாற்றி

விட்டோம். அதனால் உங்களின் மற்ற கடிதங்கள் எங்கள் ஜீனிஸ்

பிரஜைகளிடம் சேரவே இல்லை! எங்களின் பழைய அலைவரிசையான 128.4

டெராஹெர்ட்சில் பொய்யான செய்திகளை உலவ விட்டோம். உங்களின்

கடிதங்களால் இங்கு மாற்றங்கள் நிகழ்வதாய் பிரமையை உண்டு

பண்ணினோம். உங்களுக்கு ஒரு விருது கொடுப்பதாகக் கூறி, வலை

விரித்தோம். டி.சி. மூலம் வேறு அலைவரிசையில் நீங்கள் தேடியிருந்தால்,

எங்களின் குட்டு உடைந்திருக்கும். விதியை மாற்ற யாரால் முடியும்?

எங்களை நம்பி, எங்கள் வலையில் விழுந்து விட்டீர்கள்!” என்று கூறி

முடித்தார்.

எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. வியர்வை ஆறாய் பெருக்கெடுத்து

ஓடியது. உடம்பு முழுவதும் உதறலாய் இருந்தது.

“என்ன காரணத்திற்காக எங்களை வரவழைத்து உள்ளீர்கள் மேடம்?”, என்று

நாக்குழறலாய் ரேகா கேட்டாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, பின்பு தலைவி கூறினார்.

“தற்பாதுகாப்பிற்காக... உங்கள் வருடத்தில் உள்ள மனிதர்களுக்கு Y4K

விஷயம் என்னவென்பதோ, ஜீனிஸ் இனத்தை பற்றியோ எதுவுமே

தெரியாது. உங்கள் தலைவர்களுக்கு விஷயம் தெரிந்தால் என்ன

செய்வார்கள் என்று யோசித்தீர்களா? தங்களை விட ஒரு உயர் இனம் வரப்

போவதை அவர்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். உங்களிடம் கால

இயந்திரம் உள்ளது. எங்கள் ஜீனிஸின் ஆதி பிரஜையான குன்னூர் எழிலை

நீங்கள் அழிக்க முற்படுவீர்கள். அதன் மூலம் ஜீனிஸ் என்ற இனமே

தோன்றாதபடி பார்த்துக் கொள்வீர்கள்.

கடவுளின் படைப்பை அடியோடு அழிக்க எந்த வகையிலும் உரிமை இல்லை

என்ற உங்களின் வாசகத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள், ரேகா.

எங்களின் தற்பாதுகாப்பிற்காகவே உங்களை இங்கு ஏமாற்றி அழைத்து

வந்தோம்.”

“எங்களை என்ன செய்யப் போகிறீர்கள்?”

“பயப்படாதீர்கள். நாங்கள் உங்களை அழிக்க மாட்டோம். நீங்கள்

பாதுகாப்பாகவே இருப்பீர்கள். உணவு, தங்கும் வசதி அனைத்தும் உங்களுக்கு

கிடைக்கும். உங்களின் உடல் உழைப்பை சுரண்ட மாட்டோம். நீங்கள்

இருவரும் நண்பர்களா காதலர்களா என்று தெரியவில்லை. எப்படி

இருந்தாலும், உங்களை ஒன்றாகவே தங்க வைக்கப் போகிறோம். நீங்கள்

இங்கு சந்தோஷமாகவே இருப்பீர்கள்”, என்று தலைவி கூறி முடித்தார்.

எங்களால் பதில் பேச முடியவில்லை. என்ன பதில் சொல்ல முடியும்?

திகைத்துப் போய் நின்றோம்.

தலைவி பாதுகாப்பு படையினரை அழைத்து, அவர்கள் மொழியில் ஏதோ

கூறினார். அவர்கள் எங்கள் இருவரையும் அழைத்து - மன்னிக்கவும் -

இழுத்துக் கொண்டு செல்கின்றனர்.

”விதி...விதி...எல்லாம் என் தலைவிதி! பெண்களோட பேச்சக் கேட்கக்

கூடாதுன்னு நானே நிறைய பேருக்கு அட்வைஸ் பண்ணியிருக்கிறேன்.

அப்படி இருந்தும் இந்த முட்டாள் ரேகா பேச்சக் கேட்டு, இப்படி Y4K

பிரச்சனையில் மாட்டிக் கொண்டேனே... இந்த ராட்சசிங்க என்ன பண்ணப்

போறாங்களோ? நல்ல வேளை! இந்த ரேகாவும் என்னோட சேர்ந்து

மாட்டிகிட்டா! ஏதோ ஒருத்தனா இருந்து கஷ்டப்படுறத விட ரெண்டு பேரா

இருப்பது பெட்டர்தானே....! சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும்

பெண்களை நம்பாதேன்னு சும்மாவா சொல்றாங்க...!”

என்று புலம்பிக் கொண்டே நான் சென்று கொண்டிருக்கிறேன். ரேகா என்னை

முறைத்துக் கொண்டிருக்கிறாள்.

சில நாட்களுக்குப் பிறகு, வண்டலூர் மிருகக் காட்சி சாலையில், சிங்கம்,

புலி, சிறுத்தை என்று பலவித மிருகங்களும், நெருப்புக் கோழி, அல்பட்ராஸ்

போன்ற பறவைகளும், லேசர் கூண்டுகளில் அடைபட்டு இருக்கின்றன.

எல்லா கூண்டுகளும் சிறியதாகவே இருக்கின்றன. தென்திசை கடைசியில்

ஒரே ஒரு கூண்டு மட்டும் மிக மிகப் பெரியதாக இருக்கிறது. அதற்கு

உள்ளேயே, உணவு அறை, படுக்கை அறை என்று வசதியாக உள்ளது.

வெளியே போர்டில் ‘மனித இனம் - ஹோமோ சப்பியன்ஸ்’ என்று எழுதி

இருக்கிறது. அந்த கூண்டின் உள்ளே புல்தரையில் நானும் ரேகாவும் வாக்கிங்

சென்று கொண்டிருக்கிறோம்!
அப்போது, கூண்டுக்கு வெளியே ஒரு ஜீனிஸ்

கூட்டம் எங்களை வேடிக்கை பார்க்க வர, அவர்களை அழைத்து வந்த கைடு

ஜீனிஸ், “இது மனிதர்கள். நம்முடைய மூதாதையர்கள். இந்த இனத்திலும்

நம்மைப் போல, பெண்கள்தான் புத்திசாலிகளாக இருக்கிறார்கள்...! என்று

கூறிக் கொண்டு இருக்கிறாள். அந்த சோகமான நிலையிலும், ரேகா என்னைப்

பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டு இருக்கிறாள்!

** மணிமேகலை பிரசுரம் “என் பள்ளிக்கூடத்திற்கு வந்த ரோபோ” சிறுகதை தொகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற குறுநாவல்**

No comments: