Saturday, July 21, 2007

யார் நான்



"நிஜமாவா?" பிரவீனுக்கும் கொஞ்சம் பிரமிப்பு!

"நிஜமாதான். ஆனா இது எப்படி பிரவீன்? எனக்கு..."

"பூர்ணா!, நான் உடனே அங்கே வர்ரேன். நேர்ல பேசலாம்"

"ஆனா, எனக்கு ரொம்ப குழப்பமாயிருக்கு."

"பூர்ணா1 கிம்மீ ஹாஃப் அன் ஆர். ஐ'ல் பி தேர்" சொல்லிவிட்டு பூர்ணாவின் வாகனத்தில் புறப்பட்டான். போய் கொண்டிருக்கும் பொழுது அவனுக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் முளைத்து கொண்டிருந்தன. வீட்டை அடைந்ததும் வெளியே பூட்டியிருந்த கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.

"பூர்ணா!"

கணிணியை நோண்டி கொண்டிருந்தவள், திரும்பி பார்த்தாள். அவளை மேலிருந்து கீழாக நிதானமாக பார்த்தான். சின்ன தவறு கூட இல்லாமல் வந்து சேர்ந்திருந்தாள்.

"பிரவீன் எப்படியிது? ரொம்ப ஆச்சர்யமாயிருக்கு. எப்படி ரெண்டு ஒன்னாச்சு?"

"சொல்றேன். அதுக்கு முன்னாடி, நீ எப்படி ஃபீல் பண்றே? உடல் ரீதியா, மனரீதியா?"

"மன ரீதியாதான் ரொம்ப குழப்பமாயிருக்கு. நேத்து நைட் வரைக்கும் உள்ள நினைவுகள்ள பிரச்சனையில்லை. அதுக்கப்புறம்தான், ரொம்ப குழப்பமாயிருக்கு."

"அதுக்கப்புறம் எதுவும் ஞாபகம் இல்லையா?"

"அப்படியில்லை. ரெண்டு நினைவுகளுமே ஞாபகம் இருக்கு. நேத்து நான் என்னோட வீட்டில் எல்லாதையும் பிரிச்சு போட்டு செக் பண்ணதும் ஞாபகம் இருக்கு. இங்கே உன்கூட இருந்ததும் ஞாபகம் இருக்கு."

"நிஜமாவா? இங்கே நடந்ததும் ஞாபகமிருக்கா?"

"இறுக்கி அணைக்கும்
போதெல்லாம்
பற்றி எரிகிறது
மோகத் திரியில்
காமத் தீ
"

"ஃபென்டாஸ்டிக்! உடல் ரீதியா?"

"ரெண்டு விதமா களைப்பாயிருக்கு. ஒரு வித சந்தோஷம், ஒரு வித ஏமாற்றம். ரெண்டும்!!! பிரவீன் என்ன பண்ணின?"

"பூர்ணா! கான்செப்ட் ரொம்ப சின்னதுதான். இப்ப நம்ம ரிசிவிங் எண்டுக்கு, ஒரே விதமான தகவல் ஒரு முறைக்கு மேல் வந்தால் என்ன நடக்கும்?"

"அப்படிப்பட்ட தகவல் 30%க்கு மேலவந்தா, ரிசிவிங் எண்ட்ல "Redundant Data" அப்படின்னு எரர் வரும். ரிசீவிங் எண்ட்ல புதிய பொருள் உருவாகாது. அதனால ஸென்டிங் எண்ட்லயும் பழைய பொருள் அழியாது."

"சரிதான். நான் என்ன பண்ணினேனா, ஒரே மாதிரி தகவல் ஒரு முறைக்கு மேல வந்திச்சினா, அதை கணக்கில் எடுத்துக்காம தகவல்களை பதிந்து கொள்றதுமாதிரி ப்ரோக்ராம் எழுதினேன். அதுனால ஒரே மாதிரி தகவல் இப்ப ரெண்டு முறை வந்தப்போ ஒரு தடவை மட்டுமே பதிவாகியிருக்கு. அந்த தகவல்களை வச்சு உன்னை உருவாக்கியிருக்கு. ஆனா நேத்து நைட்டுக்கப்புறம் நினைவுகள் ரெண்டு வெவ்வேறு இடத்தில் பதிவாகியிருக்கு. அதனால அதுக்குண்டான நினைவு செல்கள் ஒரே மாதிரி தகவல்களை இப்ப அனுப்பியிருக்க முடியாது. அந்த ரெண்டு நினைவு செல்களையுமே இப்ப ரிசீவிங் எண்ட் உருவாக்கியிருகிறதால, உனக்கு ரெண்டுமே ஞாபகமிருக்கு. நான் பண்ணியதெல்லாம், எரர் வரக்கூடிய அந்த ப்ரொக்ராமை மாத்தியெழுதுனதுதான். ஆனா இந்த நினைவுகளை பத்தி அப்ப எனக்குத் தோனலை. ரொம்ப கஷ்டமாயிருக்கா?"

"கஷ்டமில்லை. குழப்பமாயிருந்தது. ஆனா, இப்ப விளக்கம் கிடைச்சுட்டதால, கொஞ்ச நேரத்தில சரியாய்டும்னு நினைக்கிறேன்."

பேச்சை மாற்ற விரும்பி, "பூர்ணா, இப்ப இதை என்ன பண்றது? டிக்ளேர் பண்ணிரலாமா?" மெஷினை சுட்டிக் காட்டினான்.

பூர்ணா கொஞ்ச நேரம் அமைதியாக அந்த மெஷினையே பார்த்தவாறு யோசித்து கொண்டிருந்தாள்.

மெதுவாக, "பிரவீன்! ஒன்னு கவனிச்சியா? நம்மோட கண்டுபிடிப்போட அடிப்படை தத்துவமே தப்பாயிருக்கு. அதுனாலதன் இந்த பிரச்சனையெல்லாம்."

"என்ன சொல்றே?"

"நம்மோட கண்டுபிடிப்பு டெலிபோர்டிங் மெஷின்னு நாம சொல்றோம். ஆனா, இது உண்மைலேயே டெலிபோர்ட்டிங் மெஷினா? டெலிபோர்ட்டிங் மெஷின்னா, எந்தவொரு பொருளையும், அதுல இருக்கிற அதே துகள்களோட ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஒளி வேகத்துல கடத்தனும். ஆனா, நம்ம மெஷின் அந்த பொருளையே கடத்தறதில்லை. அந்த பொருளோட தகவல்களை மட்டும்தான் கடத்துது. அடுத்த முனையில அந்த பொருளே உருவாகறதில்லை. அந்த பொருளோட ஒரு பிரதிதான் உருவாகுது. இது தான் இப்ப பிரச்சனை. அப்படி உண்மையில் பொருளையே கடத்துற டெலிபோர்ட்டிங் மெஷினை கண்டுபிக்கிறதுல நாம ஈடுபடலாம். இதை டிக்ளேர் பண்ண வேண்டாம். ஆனா இதை வச்சு உண்மையான டெலிபோர்ட்டிங் மெஷினை கண்டுபிடிக்க முயற்சி பண்ணுவோம்."

பிரவீன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். "இந்த தத்துவம் தப்புன்னு எனக்கும் முன்னாடியே தெரியும். ஆனா, ஒரு பொருளின் துகள்களை அப்படியே கடத்துறங்கறது அவ்வளவு ஈஸியில்லை. ஒருவேளை சாத்தியமில்லாமல் கூட போகலாம். அதுனாலதான் இதைப் பத்தி உன்கிட்டே நான் அப்பவே விவாதிக்கலை."

"ஏன்? அப்பவே விவாதிக்கிறதுக்கென்ன?"

"சாத்தியமில்லைன்னு தெரிஞ்சுதுன்னா உன் மனசு கஷ்டப்படுமே. அதான்!"

"நான் ஏன் மனசு கஷ்டப்படக்கூடாது?" அவள் குரலில் பொய்யான கோபம்.

"ஏன்னா.... ஏன்னா, நான் உன்ன காதலிக்கிறேன்!!!"

அவள் அவன் கண்களுக்குள் பார்த்தாள். கண்ணிலிருந்து ஒரு துளி எட்டிப்பார்த்து கன்னங்களை நனைக்கலாமா என்று யோசித்தது. சிறிதாக, மிக சிறிதாக அவள் இதழ்கள் புன்னகைக்க, அவனும் அதில் இணைந்து கொண்டான்.

"கவிதை தேடித்தேடி
களைத்து போயிருந்தேன்
கடைசியாக இன்று
கிடைத்தே விட்டாய்
"

- முழுவதும் படித்த ஒன்றிரண்டு பேருக்கு

-------------------------------------- நன்றி!!!! --------------------------------------

கவிதைகள் (படபடக்கும், இறுக்கி) : நிலாரசிகன்

Saturday, July 07, 2007

யார் நான்

பிரவீன் சிறிது நேரம் இருவரையும் பார்த்தான். அவனால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிவது மட்டும் நிற்கவில்லை.

சிறிது நேரம் கழித்து புதியவள், "பிரவீன், பூர்ணா. இப்படியே உட்கார்ந்திருக்கிறதுல அர்த்தமேயில்லை. ஏதோ தப்பு நடந்திருக்கு. அது என்ன தப்புன்னு கண்டுபிடிச்சா, நிலைமையை சரி பண்ண முடியுமாங்கிறதைப் பத்தி யோசிக்கலாம். நாமெல்லாம் விஞ்ஞானிகள். எவ்வள்வு சீக்கிரம் சரி பண்ண முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இதை பண்றது நல்லதுன்னு எனக்கு தோனுது. ஒரு வேளை, சரி செய்யவே முடியலைன்னா..." என்று இழுத்தபடி அழுதுகொண்டிருந்த பூர்ணாவை பார்த்தாள். பிரவீனும் அவளைப் பார்த்தான்.

"முதல்ல சரி பண்ண முடியுமான்னு பார்ப்போம். கம்யூனிகேஷன் சேனல்தான் நேத்து ஒரு வினாடி படுத்துச்சு. முதல்ல அதை செக் பண்ணுவோம்." என்றபடி பிரவீன் கணிணித் திரையின் அருகே போனான். பேச்சு கொஞ்சம் திசைமாறியதில், ஒரு சின்ன ஆசுவாசம் அவனுக்கு.

கம்யூனிகேஷன் சானலின் 'Log'ஐ திறந்து நேற்றிரவு 9:30க்கு அருகிலிருந்து பார்க்க ஆரம்பித்தான்

'9:36:28'க்கு தொடர்பு அறுந்திருந்தது. ஆனால் அடுத்த வினாடியே அது சரியாகியும் இருந்தது. புதிதாய் உருவானவள் 'Log'ஐ கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

"ஒரு வினாடி கம்யூனிகேஷன் கட்டாகியிருக்கு. ஆனா அடுத்த வினாடியே சரியாயிருச்சே. அப்ப பிரச்சனை இருக்க கூடாதே..?!" பிரவீன் உதட்டைப் பிதுக்கினான்.

புதியவள், "பிரவீன்! இங்க பாரு. '9:36:27'க்கு எல்லா தகவலும் வந்துருச்சு. ஆனா அதுக்குரிய அக்னால்ட்ஜ்மென்ட், தொடர்பு மறுபடி சரியான பிறகு திரும்ப போன மாதிரி தெரியலை. "

உண்மைதான் அக்னாலட்ஜ்மென்ட் போனதற்கான அறிகுறி எதுவும் Logல் தெரியவில்லை. அந்த அக்னாலட்ஜ்மென்ட் இங்கிருந்து ஸென்டிங் எண்டிற்கு போய் சேர்ந்தால்தான் டெஸ்ட்ராயர் வேலை செய்யும்.

மூவருக்கும் கொஞ்சம் ஆயாசமாக இருந்தது. இது முழுக்க முழுக்க தற்செயலான ஒரு விபத்து. இதனால் ஏற்பட்ட விளைவை, இந்த தத்துவத்திலேயே இவ்வளவு தாமதமாக சரி செய்ய முடியாது. உடனே கவனித்திருந்தாலாவது சரி செய்திருக்கலாம். ஆனால் இப்பொழுது...?

பழைய பூர்ணா இன்னும் லேசாக விம்மிக் கொண்டிருந்தாள். பிரவீன் தீவிர யோசனையிலிருந்தான். புதிய பூர்ணாவோ கம்யூனிகேஷன் லைன்கள் அனைத்தையும் சோதித்துக் கொண்டிருந்தாள்.

பிரவீனின் முகம் திடீரென்று கொஞ்சம் பிரகாசமடைந்தது. ஒரு காகிதத்தை எடுத்து சில படங்கள், கணக்குகள் என்று போட்டு பார்த்தான். அரை மணி நேரத்துக்குப் பின், காகிதத்திலிருந்து கண்களை உயர்த்தி, பூர்ணாக்களை பார்த்தவனின் முகத்தில் கொஞ்சம் புன்முறுவல் தெரிந்தது. புதியவள் தன் சோதனைகளை முடித்து விட்டிருந்தாள்.

"பூர்ணா.." கொஞ்சம் உற்சாகமாகவே அழைத்தான். இருவரும் அவனை பார்த்தனர். இருவரையும் சிறிது நேரம் பார்த்தவன், "பூர்ணா! உனக்கு... உங்களுக்கு எம்மேல நம்பிக்கையிருக்கா?"

பூர்ணா தலையை ஆட்டினாள். விம்மி கொண்டிருந்தவள், சிறிது நேரம் அவனை ஒரு குற்றவாளியைப் போல் பார்த்துவிட்டு, மெதுவாக "ம்ம்." என்றாள்.

"அப்படின்னா என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. இது வொர்க் ஆகும்னுதான் நினைக்கிறேன்."

"என்ன ஐடியா?"

"அது... இப்ப வேணாம். ஏன்னா எனக்கு கொஞ்சம் சந்தேகமும் இருக்கு. 99 பர்ஸன்ட் இது வொர்க் ஆகும்."

"மீதி 1 பர்ஸன்ட்?" விம்மியவள் வினவினாள்.

"அது நீங்க எம்மேல வச்சிருக்கிற நம்பிக்கையை பொறுத்ததுதான். ஆனா வேற வழி ஏதும் இருக்கிறதா தெரியலை. பூர்ணா ப்ளீஸ். என்னை நம்பு! நீங்க ரெண்டு பேரும் ஒத்துழைச்சாத்தான் இதை செய்ய முடியும்"

"என்ன ஐடியான்னு இன்னும் நீ சொல்லலை."

"அதை இப்ப கேட்காதீங்க. நான் சொல்றதை மட்டும் ரெண்டு பேரும் செய்ங்க ப்ளீஸ்!" என்றான்.

ஒரு மாதிரியாக இருவரும், ஒரே மாதிரி தலையசைத்து சரி சொன்னனர்.

பிரவீன் உடனே காரியத்தில் இறங்கினான்.

ரிசீவிங் எண்ட் மெஷினின் சில பாகங்களை திறந்து சின்ன சின்ன வேலைகள் செய்தான். கணிணியில் ஒரு ப்ரோக்ராமை விரித்து வைத்து கொண்டு சிறிது நேரம் நோண்டினான். பினனர் எல்லாவற்றையும் இருமுறை சரியாக இருக்கின்றனவா என்று சோதித்தான். சரியாகவே இருந்தன.

"பூர்ணா, இப்ப உங்க வீட்டுக்கு போகனும்"

"யாரெல்லாம்?"

"மூனு பேரும்தான்"

காலையில் பூர்ணா வந்த வாகனத்திலேயே மூவரும் கிளம்பி பூர்ணாவின் வீட்டை அடைந்தனர்.

ஸென்டிங் எண்ட் இருந்த அறை கந்தல்கோலமாக இருந்தது. பிரவீன் பூர்ணாவை பார்த்தான்.

"நேத்து ராத்திரி டெஸ்ட்ராயர் வொர்க் ஆகாததால, எல்லாத்தையும் செக் பண்ணேன். அதான் இப்படியிருக்கு." என்றாள்.

பிரவீன் இந்த மெஷினையும் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக சோதனை செய்தான். பின்னர்...

"பூர்ணா! இப்ப ரெண்டு பேரும் கேபினுக்குள்ள போங்க"

இருவருமே அவனை பயங்கர வியப்போடு பார்த்தனர்.
"பிரவீன், உனக்கென்ன பைத்தியமா?"

"இதுதான் உன்னோட ஐடியாவா?"

"இதனால இப்ப இருக்கிற பிரச்சனை எப்படி ஸால்வ் ஆகும்?.."

இருவரும் மாறி மாறி கேட்ட கேள்விகளை மறித்து, "பூர்ணா, ப்ளீஸ். என்னை நம்புங்க! ரெண்டு பேரும் உள்ள போங்க ப்ளீஸ்!" கெஞ்சினான்.

இருவரும் வெற்றாக கேபினுக்குள் நுழைந்தனர். பிரவீன் கேபினின் கதவை மூடினான். சில வினாடிகள் கழித்து கதவுகளின் விளிம்பில் ஒளி கற்றை இறங்குவது தெரிந்தது. கணிணித் திரையை பார்த்தான்.

"1.824062e+3798 Packets Sent" என்றது. ஒரு வினாடி கழித்து "Destroying..." என்று ஓடி, உடனே "Destroyed Successfully." என்று மின்னியது.





அவன் செல்ஃபோன் அதிர்ந்தது. பூர்ணாதான்!

"ஹலோ! பூர்ணா பேசறேன்."

"அது தெரியுது. எத்தனை பேர்? அதை முதல்ல சொல்லு." பரபரத்தான்.

"இங்க இப்ப நான் ஒருத்திதான் இருக்கேன்!" அவள் குரலில் ஆச்சர்யம்!!!
- தொடரும்

Wednesday, July 04, 2007

யார் நான்

"யா....யா..ரு?" பிரவீன் கலவரமானான்.

"பூர்ர்ர்ர்ணா! இன்னும் தூங்கிகிட்டு இருக்கியா? ஏன்டா, என்னாச்சு உனக்கு? எவ்வளவு பெரிய பிரச்சனை? நான் கால் பண்ணா எடுக்கவே இல்லை. நீயும் திரும்ப கால் பண்ணலை? நம்ம பிராஜக்ட் இப்படி கவுந்து போச்சு. ஆனா உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பேயில்லை."

பிரவீன் தூங்கிக் கொண்டிருந்தவளின் அருகில் மெதுவாக சென்று, தலையணைக்கடியில் செல்ஃபோனை ஒளித்து வைத்து பேசிக் கொண்டிருக்கிறாளோ என்று பார்த்தான். அப்படி ஒன்றும் தெரியவில்லை.

"..."

"ஹலோஓஓ! லைன்ல இருக்கியா தூங்கிட்டியா?"

பிரவீனின் குழப்பம் எகிறிக் கொண்டே போனது.

"இல்லை.. சொல்லு.."

"எத்தனை தடவைதான் கால் பண்றது. அதான் இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்னு காலைலயே கிளம்பி உன் வீட்டுக்கு வந்துகிட்டிருக்கேன். இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல வந்துருவேன். வந்து பேசறேன்." லைன் கட்டாகிவிட்டது.

பிரவீன் சிறிது நேரம் செல்ஃபோனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். 'பூர்ணாவின் நம்பர்தான்! ஆனால் எப்படி? பிராஜக்ட் கவுந்து போச்சுன்னு ஃபோன்ல சொன்னாளே!? அப்ப இது?!?'

"அப்பவே எழுந்திரிச்சிட்டியா? காஃபி போடட்டுமா?" சிந்தித்தவாறே நின்று கொண்டிருந்தவனின் காதில், பூர்ணாவின் இந்த திடீர் கொஞ்சல் குரல் ஒரு நடுக்கத்தையே ஏற்படுத்தியது. திரும்பி பார்த்தான். படுக்கை அறை வாசலில் சிருங்காரமாக சாய்ந்து கையை கட்டிகொண்டு அவன் பதிலுக்காக அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள்.

பிரவீனின் மனதில் மறுபடி அந்த சந்தேகம் எழுந்தது, "ஏய்! இது என்ன காலைலேயே விளையாண்டுகிட்டு? ஒரு நிமிஷம் பயந்து போய்ட்டேன் தெரியுமா?"

"நான் எங்க விளையாண்டேன்? நீதான் நேத்து நைட்டு ஃபுல்லா விளையாண்ட", குறும்பாக அவனை பார்த்து சிரித்தாள்.

பிரவீனுக்கு இப்பொழுதுதான் தைரியம் வந்தது. "ஏஏய்ய்ய்! உன்ன்ன்னனன!" என்றவாறே அவளுருகில் நெருங்கினான்.

"ஐயோ! இப்ப வேணாம். இன்னைக்கு நமக்கு நிறைய வேலை இருக்கு. இன்னைக்கே டிக்ளேர் பண்ணிரலாமா?" அவள் கேட்டதும் வாசல் மணி ஓலித்தது.

பிரவீனின் இதயம் மறுபடியும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவன் குழப்பத்துடன் நின்று கொண்டிருக்கும்போதே, பூர்ணா வாசலை நோக்கி சென்று கதவைத் திறந்தாள்.

"ஹாஆஆயியார் நீநீநீநீ?" வெளியிலிருந்து பூர்ணா உள்ளேயிருந்தவளைப் பார்த்து கத்தினாள்.

"ஆஆஆஆஆஆஆ" உள்ளேயிருந்த பூர்ணா வீறிட்டாள்.

வெளியிருந்தவள் பிரவீனை கலவரமுகத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள். உள்ளேயிருந்தவளும் திரும்பி அவனை பார்த்தாள்.

பிரவீன் பேயறைந்தது போல் நின்று கொண்டிருந்தான். அவ்வளவு கலவரத்திலும் அவனுக்கு நேற்றிரவு கம்யூனிகேஷன் சேனல் ஒரு வினாடி சிகப்படித்தது நினைவில் ஓடியது.

வெளியிலிருந்தவளை பார்த்து, "பூ..பூர்ணா! நீ .. அப்ப இது? .." 'நேற்றிரவு டெலிபோர்டிங்கில் கடத்தும்பொழுது, இங்கே பூர்ணா உருவாகிய பிறகு அங்கே பூர்ணா அழியவில்லை!!!' இது மூளையில் உறைத்ததும், தலையில் கை வைத்து "ஓஓஓஓ..." என்று ஓலமிட ஆரம்பித்தான்.

"பிரவீன்! பிரவீன்! எனக்கு புரியலை. இங்கே என்ன நடக்குது. எப்படி?" வெளியே இருந்தவள் உள்ளே வந்து அவன் கைகளை இழுத்து உலுக்கினாள். அவளுக்கும் இப்பொழுது லேசாக புரிந்திருந்தது.

அவள் அவனை உலுக்கியதும் உடனே அவள் கைகளை உதறித் தள்ளிவிட்டான்.

"பூர்ணா! பூர்ணா நேத்து ஏதோ தப்பு நடந்திருக்கு. இங்கே உன்னோட பிரதி உருவாயிருச்சு. ஆனா ஸென்டிங் எண்டில் நீ அழிக்கப் படலை"

"ஆனா, ஆனா அது எப்படி நடந்தது?" வாசலில் நின்று கொண்டிருந்தவளும் அவன் அருகே வந்து விட்டாள்.

முகத்தை திருப்பி அவளைப் பார்த்தான், "தெரியலை. நேத்து நீ வரும்போது ஒரு செகண்ட், கம்யூனிகேஷன் கட்டாச்சு. ஒரு வேளை அதனால ஏதாவது..."

"இதுக்குத்தான் நேத்து உடனே கால் பண்ணினேன். நீ ஏன் அப்ப செல்லை எடுக்கலை?" பூர்ணா கோபமாகப் பார்த்தாள்.

"அது.. அது வந்து..." அவன் நேற்றிரவே வந்தவளைப் பார்த்தான்.

"ஏன் இப்படி இழுக்கிறே...? எதுக்கு அவளை பார்க்கிற...?", பூர்ணாவுக்கு நேற்றிரவு அவன் கடைசியாக ஃபோனில் பேசிய பேச்சு நினைவுக்கு வந்தது. "பிரவீன்! பிரவீன்!! நேத்து .... நைட்டு.... ஏதாவது.....?" அவளால் கேட்க முடியவில்லை. விம்மத் தொடங்கினாள். விம்மலுக்கிடையில் ஒரே ஒருமுறை "ஏமாத்திட்ட" என்றாள் உடைந்த குரலில்.

பிரவீன் அடிபட்ட பறவையாக குற்ற உணர்வுடன் அவளைப் பார்த்தான்.

புதிதாய் உருவான பூர்ணா, அழுது கொண்டிருந்த பூர்ணாவின் தலையை மெதுவாக வருடினாள். 'பூர்ணா' என்று தன் பெயரையே கூப்பிட்டு அவளை அழைப்பதற்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது.

"பூர்.. பூர்ணா! ஆனா.. இதுல பிரவீனை குற்றவாளியாக்கறதுல நியாயமே இல்லைனு தோனுது. கொஞ்சம் யோசிச்சு பாரு. பிரவீனோட காதலி பூர்ணா. பிரவீன் நேத்து இருந்ததும் பூர்ணாவோடதான். ஆனா அது நீயில்லை. நான்! ஏன்னா நானும் பூர்ணாதான்."

"ஆனா பிரவீனை காதலிச்சது நான். நீயில்லை!" என்று உறுமினாள் அழுது கொண்டே.

"ஆனா நேத்து நைட் வரைக்கும், நீ வாழ்ந்த வாழ்க்கை எல்லாமே நானும் வாழ்ந்ததுதான். ஏன்னா அப்ப நாம ரெண்டு பேர் கிடையாது. நீ ஒருத்தி.... இல்லை, நாம ஒருத்திதான். ஆனா இப்ப ரெண்டு பேர். இதுதான் இப்ப பிரச்சனை. பிரவீன்! எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு. பூர்ணாங்கற நான் யாரு?!?!"

பிரவீனுக்கு தலையே வெடித்துவிடும் போலிருந்தது. இருவரையும் பார்த்து, "பூர்ணா! இப்ப யாரு 'நீ'?" அவன் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது.

அழுது கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து, "அதையேதான் நாங்களும் கேட்கிறோம்? யார் 'நான்' "?

- தொடரும்

Sunday, July 01, 2007

யார் நான்


"பூபூபூர்ணா" மிக மெதுவாக அழைத்தவாறே அவளருகில் சென்றான்.

ஒரு நிமிடம் இருவராலுமே பேச முடியவில்லை. ஒருவரை ஒருவர் பரவசமாக பார்த்தவாறே நின்றிருந்தனர். பூர்ணா மெதுவாக புன்னகைக்க ஆரம்பித்து, உடைந்த பெரிய சிரிப்போடு பிரவீனின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அவள் வாயிலிருந்து "பிரவீன் பிரவீன்" என்ற வார்த்தை மட்டும் வந்து கொண்டிருந்தது.

பிரவீன் மெதுவாக அவளை தன் கழுத்திலிருந்து பிரித்தான், "நெஜமாவே ஜெயிச்சுட்டோம்!!!!" அவன் கண்களிலிருந்தும் லேசாக கண்ணீர் வழிந்தது.

"ம்ம்" என்று தலையசைத்துவிட்டு மறுபடியும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

"நாளைக்கே டிக்ளேர் பண்ணிருவோம். முதல்ல டெமான்ஸ்ட்ரேஷனுக்கு பெர்மிஷன் வாங்கனும். அப்புறம் இன்டர்நேஷனல்.." பேசிக் கொண்டே போனவனின் வாயைப் பொத்தினாள்.

"பிரவீன்! என்னோட சின்ன வயசுக் கனவு, இன்னைக்கு நனவாயிருக்கு. அந்த சந்தோஷத்தை நான் இன்னைக்கு முழுமையா அனுபவிக்க விரும்பறேன். அடுத்தது என்னங்கிறதைப் பத்தி, இப்ப, இன்னைக்கு யோசிக்க வேண்டாம். இன்னைக்கு முழுக்க நான் சந்தோஷமா இருக்க மட்டும் விரும்பறேன். என்ன? புரியுதா?" கொஞ்சலாக கேட்டாள்.

வாயை மூடியிருந்த அவள் சின்ன விரல்களை மெதுவாக பிரித்து "புரியுது" என்று சொல்லிவிட்டு, அந்த விரல்களில் முத்தமிட்டான்.

"மியூசிக் போடேன். நல்ல மெலடியா.."

அவளை அணைத்திருந்த கையை விலக்காமலே, ரிமோட்டை எடுத்து பிளேயரை ஆன் செய்தான். சத்தத்தை மிகக் குறைவாக வைத்தான். மெல்லிய தாள கதியில், சாக்ஸஃபோனும் வயலினும் கலந்து, கரைந்து மயக்க ஆரம்பித்தது.

சிணுங்கிய செல்ஃபோனை சைலன்ட் மோடில் மாற்றி விட்டு, அருகிலிருந்த குஷனில் தூக்கி எறிந்தான்.

அவளை அப்படியே அலாக்காக தூக்கி, படுக்கையில் வைத்து, மார்பில் சாய்த்துக் கொண்டான்.

"ஏய்! கவிதையெல்லாம் சொல்லுவியே! இப்ப ஏதாவது சொல்லேன்டா. கேக்குறேன்!"

"உடனே கேட்டா எப்படி?"

"உடனே உன்னால ஒன்னு எழுத முடியாதா? எனக்காக ஒன்னே ஒன்னு!!" அந்த கொஞ்சலில் பிரவீன் அப்படியே கிறங்கிப் போனான். அவள் முகத்தை நிமிர்த்தி, கண்களுக்குள் ஆழமாக பார்த்தான்.

"இறுக்கி அணைக்கும்
போதெல்லாம்
பற்றி எரிகிறது
மோகத் திரியில்
காமத் தீ
"

"ம். அப்புறம்."

"முத்தமழை பொழிந்ததை
அணைத்திடவா என்
செல்ல மேகமே!
"

"பிரவீன். நாம ஒரு குழந்தையோட நிறுத்திடக் கூடாது. எனக்கு அட்லீஸ்ட் நாலாவது வேணும். அப்பத்தான் அவங்களுக்கு..."

சட்டென்று அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் இதழ்களில் இதழ் பதித்தான்.

ஒரு நிமிடத்துக்குப்பின் அவள் முகத்தை விடுவித்து...

"முத்தம் செய்த காயத்தில்
வழியும் ரத்தம் உறைய
மீண்டும் வை முத்த....
"

அவன் கழுத்தை வளைத்து அவன் இதழ்களை மூடினாள். இப்பொழுது அவள் முறை!

அவன் கைகள் மெதுவாக இரவு விளக்கைத் தவிர, மற்றெல்லாவற்றையும் அணைத்தது.

------------------------->>>>>>>>>>><<<<<<<<<<<<<-------------------------

பிரவீன் படுக்கையிலிருந்து விழித்தபொழுது, மணி ஆறாகி பத்து நிமிடம் ஆகியிருந்தது. அருகில் பூர்ணா இன்னும் உறங்கி கொண்டிருந்தாள், அவன் தோளில் தலை வைத்து. மெதுவாக அவள் தலைக்கு தலையணை கொடுத்துவிட்டு, படுக்கையிலிருந்து எழுந்தான்.

ஹாலில், கம்பீரமாக அந்த மெஷின் இன்னும் விழித்து கொண்டிருந்தது. பெருமிதத்தோடு அதன் அருகில் சென்றான்.

அப்பொழுது செல்ஃபோன் குஷனில் அதிர்ந்துவிட்டு அமைதியடைந்தது. எடுத்துப் பார்த்தான்.

'32 மிஸ்டு கால்ஸ்!!!'
'யாரெல்லாம் கூப்பிட்டிருக்கா?' என்று நினைத்தவாறு மிஸ்டு கால்ஸ் லிஸ்ட்டைப் பார்த்தான்.
'என்னது?' திரும்பி படுக்கையை பார்த்தான்.

செல்ஃபோன் மறுபடியும் அதிர்ந்தது. அழைப்பை ஒரு வினாடி பார்த்தான். படுக்கையிலிருந்த பூர்ணாவை பார்த்தவாறே பச்சை பட்டனை அழுத்தினான்.

"ஹலோ, நான் பூர்ணா பேசறேன். குட் மார்னிங்டா!!!"

- தொடரும்