Saturday, August 31, 2013

Y4K

2. டி.சி

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இவள் சுயநினைவோடுதான் பேசுகிறாளா?

“வாட் டூ யூ மீன்?”, என்று கேட்டேன்.

“ஐ மீன் வாட் ஐ ஸே”

“இதென்ன பைத்தியக்காரத்தனமான யோசனையாக இருக்குது.”

“ஸீ.. நான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் புராஜக்டே Y4Kதான். இதில் மட்டும் எனக்கு வெற்றி கிட்டிவிட்டால், ஒரே நாளில் உலகப் புகழ் பெற்று விடுவேன்.”

“ஆனால், Y4Kக்கு சென்றவர்கள் யாருமே திரும்பி வந்தது கிடையாது ரேகா”

”எனக்குத் தெரியும். இதில் ஏகப்பட்ட ரிஸ்க் உள்ளது. அதுவும் தெரியும். துணிச்சலான முயற்சி மேற்கொள்ளாமல், எந்த ஒரு ஆராய்ச்சியுமே வெற்றி அடையாது.”

“இது சாதாரண துணிச்சல் இல்லை. அசட்டுத் துணிச்சல். எத்தகைய உலகமாய் Y4K இருக்கிறது என்பதே தெரியாமல், அங்கு போவது சுத்த பைத்தியக்காரத்தனம்.”

“எத்தகைய உலகமாய் அது இருக்கும் என்று நீ நினைக்கிறாய்?”

“ஓசோன் ஓட்டை பெரியதாகி, மனிதர்கள் வாழ லாயக்கற்றதாய், பூமி ஆகியிருக்கலாம். ஏதாவது ஒரு பெரிய விண்கல் மோதி, பூமி சுக்கு நூறாக நொறுங்கிப் போயிருக்கலாம். உலகப் போர் நிகழ்ந்து, அணுக் கதிர் வீச்சு, பூமியை நிறைத்து இருக்கலாம். அல்லது சூரிய மண்டலமே ஒரு பிளாக் ஹோலாக மாறியிருக்கலாம்.”

“பரவாயில்லை. நன்றாக யோசிக்கிறாய், என்றாலும் போர்-அணுக்கதிர் வாய்ப்பைத் தவிர, மற்ற வாய்ப்புக்களுக்கு சாத்தியமே இல்லை. அந்த பிரச்சனைகள் இவ்வளவு விரைவில் வராது. கதிர்வீச்சை தடுக்க, அதற்குரிய உடையை நாம் அணிந்து செல்வோம்!”

“நோ...” என்று அலறிய நான், “விஷயம் என்ன என்று தெரியாமல் நான் அங்கு வரப் போவதில்லை”

“வரப் போவதில்லையா?” என்று கோபத்தோடு கேட்டாள்

“இல்லை. அது மட்டுமல்ல. உன்னையும் போக விடாமல் தடுப்பேன்.”

அவளுடைய கோபம் மேலும் அதிகரித்தது. சேரில் இருந்து வேகமாய் எழுந்தாள். படபடவென்று சரவெடியாய் வெடித்தாள்.

“ச்சே.. உன்ன மாதிரி ஐ.டி. பசங்க எல்லாருமே தொடை நடுங்கிகள். ஏ.சி. ரூமில் கம்ப்யூட்டரை தட்டிக் கொண்டு காலம் கழித்தால் போதும்னு நினைக்கிறீங்க. நாட்டு நலனுக்காக கூட ரிஸ்க் எடுக்க மாட்டீர்கள். கவர்ட்ஸ்!”

அவளை இப்போது இடையூறு செய்தால், பொரித்து விடுவாள். ஆகையால் நான் அமைதியாக இருந்தேன். ஆனால், அவளோ முடிக்கவில்லை.

“ஆபீஸ், டின்னர், டிரிங்க்ஸ் பார்ட்டி. இது மட்டும்தான் வாழ்க்கையா? ஆண் இனமே வேஸ்ட்! எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். 33% மகளிர் மசோதா பார்லிமெண்டில் தாக்கலாகப் போகிறது. பவர் எங்க கைக்கு வரப் போகிறது. அதற்கு அப்புறம்தான் நாடு உருப்படப் போகிறது.”

இதற்கு என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

“ஏய்... ஏன் சிரிக்கிறே? என்னோட கோபம் உனக்கு கிண்டலாக உள்ளதா?”, என்று என்னிடம் கேட்டாள்.

”அதில்லை ரேகா, புலிவருது புலிவருது கதையா, மகளிர் மசோதா வரப் போகுது, வரப் போகுதுன்னு, 1990ம் வருடத்தில் இருந்து சொல்கிறார்கள். 70 வருடம் ஆகியும் இன்னமும் மசோதா வந்தபாடில்லை!”

“இம்முறை நிச்சயம் பாசாகிவிடும். அடுத்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்து விடுவார்கள்”, என்றாள்.

“ஸீ ரேகா, முதல்ல கோபத்தை குறை. நான் சொல்கிறதை நன்றாக கவனி. உன்னோட தேவை என்ன? Y4K மர்மத்தை கண்டுபிடிப்பதுதானே? அங்கே சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரிய வேண்டும், அதுதானே?”

“ஆம்.”

“வெல், அதற்கு நாம் Y4Kக்கு போக வேண்டிய அவசியமே இல்லை. என்னோட டி.சி.யால் முடியும்.”

“டி.சி.?”

“என்னோட காலேஜ் புராஜக்ட்!”

“அதுதான் ஒர்க் ஆகவில்லையே”

“அது முன்பு. இப்போது பாதி வேலை செய்கிறது”

அவளுடைய கோபம் குறைந்தது. முகத்தில் ஆர்வம் பிறந்தது. மீண்டும் சேரில் அமர்ந்தாள். டி.சி. பற்றி விபரமாய் என்னிடம் கேட்டாள். நான் கூற அரம்பித்தேன்.

“ஸீ... தொலை தூரத்தில் உள்ள கம்ப்யூட்டரில் இருந்தோ அல்லது ஒரு தகவல் சாதனத்தில் இருந்தோ, தகவல்களை பெற வேண்டுமென்றால், ஒரு இண்டர்நெட் கனெக்‌ஷனோ அல்லது வேறு ஒரு வயர் கனெக்‌ஷனோ தேவை, இல்லையா?”

“ஆமாம்”

“ஆனால், ராணுவங்களில் உள்ள உளவுத் துறைகளில் எதிரி நாட்டுத் தகவல்களைப் பெற, அவர்கள் அனுப்பும் இடத்திலோ அல்லது பெறும் இடத்திலோ உள்ள அலைவரிசையை, தங்களின் ரீசிவிங் யூனிட்டில் ட்யூன் செய்து, வயர் கனெக்‌ஷனே இல்லாமல் தகவல்களை எடுக்கிறார்கள்.”

“அதுவும் தெரிந்த விஷயம்தானே!”

“ஆனால், இப்படி எடுக்கப்படும் தகவல்கள், குறிப்பிட்ட கோடிங் முறையில் இருக்கும். அந்த பாஸ்வேர்டை உடைத்து டிகோட் பண்ணினால் தான், ஒரிஜினல் தகவல்களை அறிய முடியும்.”

“.......”

“என்னுடைய டி.சி. செய்தித் தாள்கள், செய்தி ஏஜென்சிகள் இவைகளை மட்டும் குறி வைத்து செயல்படுகிறது. நான் செய்தி ஏஜென்சிகளின் அலைவரிசையை டியூன் செய்து, அவர்களின் தகவல்களை எடுத்துக் கொள்கிறேன். ஒரே ஒரு வித்தியாசத்தோடு. அவர்கள் எத்தகைய பாஸ்வேர்டு, கோடிங் உபயோகித்து இருந்தாலும், அதை டிகோட் பண்ண வேண்டிய அவசியம் எனக்கில்லை.”

“ஏன்?”

“ஏனென்றால், செய்தி எஜென்சிக்கள், தங்களின் தகவல்களை ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் மட்டுமேதான் தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. தகவல்கள் தவறு இல்லாமல் செல்ல வேண்டும் என்பதற்காக அல்ட்ரா ஹை பிரீக்குவன்சியை உபயோகிக்கின்றனர். தகவல்களின் வடிவமைப்பை வைத்தும், அது கம்பைலரில் சேகரிக்கப்பட்டிருக்கும் விதத்தை பொறுத்தும் 0,1 என்ற பைனரி தகவல்களாக - அதாவது ரா தகவல்களாக மட்டுமே நான் எடுக்கிறேன். டி.சி.யில் உள்ள கம்பைலர் அதை சரியான தகவல்களாக மாற்றி விடும்.”

“சுத்தமாக புரியவில்லை.”

“என்னோடு வீட்டுக்கு வா” என்று கூறி, ஆபீஸுக்கு லீவு சொல்லிவிட்டு, வீட்டிற்கு சென்றோம். என்னுடைய டேபிளில் பெட்டி பெட்டியாக இருந்த டி.சி. மிஷினை அவளுக்கு காண்பித்தேன்.

“இதுதான் செண்டிங் யூனிட், செய்தி ஏஜென்சிக்களின் அலைவரிசை, மற்றும் தகவல் வடிவமைப்பு இரண்டையும் சேர்த்து வைத்து, அதைத் தேடி, டி.சி. கதிர்கள், இந்த ஆண்டெனா மூலம் புறப்படும். இரண்டும் மேட்ச் ஆகும் சாதனத்தில் உள்ள கம்பைலர் டிஜிட்டல் தகவல்களை, மீண்டும் அது இங்கே கொண்டு வரும்.”

”ரீசிவிங் யூனிட் அதை பெற்றுக் கொண்டு ஒரிஜினல் தகவலை வடிகட்டி, ஸ்கிரீனுக்கு அனுப்பி விடும். புரிகிறதா?”

”ஓரளவிற்கு புரிகிறது.”

“ஒரு உதாரணத்தோடு கூறுகிறேன். சென்ற வாரம் டி.சி.யை, உன்னுடைய பெர்சனல் லேப்டாப் வடிவமைப்பு, மற்றும் அலைவரிசைக்கு டியூன் பண்ணி, அதில் உள்ள தகவலை உனக்குத் தெரியாமல் எடுத்தேன். டைரி என்ற ஃபோல்டருக்கு உள்ளே நீ எழுதியிருந்ததை வாசிக்கிறேன். கேள்!”

“சதீஷ் டார்லிங், உன் முன்னால் நிற்கும் போது மட்டுமல்ல, உன்னை விட்டு பிரிந்து வந்தாலும், அந்த காந்தக் கண்கள் என்னைத் தொடர்ந்து வருவதன் மர்மம் என்ன!?
............
நாம் உறவாக இணைவது
ஒருபுறம் இருக்கட்டும்.
நம் உதடுகள் இணைவது
இப்போது இருக்கட்டுமே!?
....
என் கண்ணில் தெரியவில்லையா காதல்
என் சொல்லை எதிர்பார்க்கிறாயே கள்ளா!
....”

“ஸ்டாப்....ஸ்டாப்” என்று ரேகா கத்தினாள்.

“இதெல்லாம் நீ எழுதியதுதானே?”

அவள் மௌனம் சாதித்தாள்.

“இப்ப புரியுதா? நான் ஒரு கம்யூனிகேஷன் எக்ஸ்பர்ட்ன்னு!”

“மண்ணாங்கட்டி! நீ ஒரு கம்யூனிகேஷன் திருடன்! கிரிமினல்! அடுத்தவர்களின் ரகசியங்களை எட்டிப் பார்க்கும் ரவுடி!”

“ஓகே. ஓகே. நம் லவ் மேட்டரை அப்புறம் பார்ப்போம். முதலில் டி.சி.யை கவனி. இதோட வேலை இத்துடன் முடியவில்லை.”

”டி.சி.ன்னா டெலி கம்யூனிகேஷனா?” என்று கேட்டாள்.

“இல்லை. டைம் கம்யூனிகேஷன்!”

“டைம் கம்யூனிகேஷன்?”

”யெஸ்... இப்ப டைம் மிஷின் எப்படி வேலை செய்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்.”

அவள் டைம் மிஷின் வேலை செய்யும் விதத்தை எனக்கு விவரிக்க ஆரம்பித்தாள்.

“முன்னால்-பின்னால், இடது-வலது, மேலே-கீழே என்ற X-Y-Z மூன்று பரிமாணங்களில் இருந்து விலகி, இறந்த காலம்-எதிர்காலம் என்ற நான்காவது பரிமாணமான காலப் பரிமாணத்தில் ஒரு ஊர்தி பயணம் செய்கிறது. இதை செய்ய இன்று பலவித சாப்ட்வேர்கள் உள்ளன”

“குட். அதாவது, நான்காவது பரிமாணத்தில் ஒரு மிஷின் அல்லது ஒரு ஊர்தி பயணம் செய்யலாம். இல்லையா?

“ஆமாம்”

“கால பரிமாணத்தில் ஒரு திடப் பொருளான ஊர்தியே பயணிக்கும் போது, டி.சி. அலைக் கதிர்களும் பயணம் செய்யும் இல்லையா?”

சட்டென்று அவள் முகம் பிரகாசமானது. அவளுக்கு டி.சி. வேலை செய்யும் வித்தை புரிந்து விட்டது.

“அப்படியென்றால், டி.சி. மூலம் எதிர்காலத் தகவல்களை பெற முடியுமா?”

“அதுதானே என்னுடைய ஆராய்ச்சி. அதில் பாதி வெற்றியும் கிடைத்து விட்டது.”

“அதென்ன பாதி?”

என்னால், இப்போது நூறு வருடத்திற்கு உட்பட்ட தகவல்களை மட்டுமே பெற முடிகிறது. 2170க்கு பிறகு, செய்தி கேந்திரங்களின் வடிவமைப்பு, அலைவரிசை எல்லாமே மாறிவிட்டது. நியூஸ் பேப்பர் வழக்கொழிந்து விட்டது. அதனால் சில டெக்னிக்கல் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. அதை சரி செய்து விட்டால், Y4K தகவல்களை கூட என்னால் பெற முடியும்.”

“கிரேட்... சதீஷ்....கிரேட். எங்கே, 2150ம் வருட செய்திகள் ஏதாவது காட்டு.”

நான் டி.சி.யை ஆன் செய்தேன். தேதிக்கு 05.08.2150 என்று டைப் செய்தேன். நியூஸ் போர்ட்டலில் பாரத் கிரானிக்கள் என்றேன். அலைவரிசை, அலைநீளங்களை கூறினேன். மேலும், சிறு சிறு கட்டளைகளை எண்டர் பண்ணியதும் ஆண்டெனாவில் இருந்து டி.சி. அலைக்கதிர்கள் கிளம்பின. ஐந்து வினாடிகளில் ரிசீவரில் தகவல்கள் வந்து சேர, நான் ஸ்கிரீனைப் பார்த்தேன். அதில் தெரிந்த தலைப்புச் செய்திகள்,

“அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 33 சதவீத மகளிர் மசோதா தாக்கல் செய்யப்படும்! பிரதமர் அறிவிப்பு!!”

“பெட்ரோல் விலை அதிகரிப்பு. லிட்டருக்கு ரூ 54000/- ஆனது”

“நடுவானில் இரண்டு ஹெலிகார்கள் மோதல். 8 பேர் உயிரிழந்த பரிதாபம்.”

“குன்னூரில் இரண்டு இதயங்களுடன் ஒரு அதிசய பெண்மணி”

“அடுத்த உலகக் கோப்பை வரை விளையாடுவேன். ரஞ்சன் ரண்டேக்கர் பேட்டி.”

பயணம் தொடரும்....

Friday, August 30, 2013

Y4K

1. ரேகாவின் புரோப்போஸல்

”விதி... விதி... எல்லாம் என் தலைவிதி! பெண்களோட பேச்ச கேட்கக் கூடாதுன்னு நானே நிறைய பேருக்கு அட்வைஸ் பண்ணியிருக்கிறேன். அப்படி இருந்தும் இந்த முட்டாள் ரேகா பேச்சக் கேட்டு, இப்படி Y4K பிரச்சனையில் மாட்டிக் கொண்டேனே.. இந்த ராட்சசிங்க என்ன பண்ணப் போறாங்களோ? நல்லவேளை! இந்த ரேகாவும் என்னோட சேர்ந்து மாட்டிக்கிட்டா! ஏதோ ஒருத்தனா இருந்து கஸ்டப்படுறத விட ரெண்டு பேரா இருப்பது பெட்டர்தானே...! சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்களை நம்பாதேன்னு சும்மாவா சொல்றாங்க...!”

என்னடா இவன் திருவிளையாடல் தருமி போல புலம்புகிறானேன்னு யோசிக்கிறீர்களா? என்னோட கதையை சொல்கிறேன். அப்பத்தான் என்னோட புலம்பல் நியாயமானதுன்னு உங்களுக்குப் புரியும்.

என் பேரு சதீஷ். 2056-2060 வருடத்தில் பி.எஸ்.ஜி.யில் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் படித்து முடித்த உடனேயே கேம்பஸ் இண்டர்வியூவில், எனக்கு பிக்கோ ஸாஃப்ட் கம்பெனியின் சென்னை யூனிட்டில் வேலையும் கிடைத்தது. மூன்று வருடத்தில் சீனியர் எக்ஸிகியூட்டிவ் என்ஜினியராக புரோமோஷன்ம் ஆகி விட்டேன்.

தினமும் ஆபிஸுக்கு வந்து, வீட்டிற்கும், நண்பர்களுக்கும் போன் பேசிவிட்டு, பெர்சனல் இ-மெயில்களை செக் பண்ணி, ரிப்ளை அனுப்பிவிட்டு, சொந்த பிளாகை அப்டேட் பண்ணிவிட்டு, கிடைக்கும் கேப்பில் மட்டும் ஆபீஸ் வேலைகளை பார்க்கும் ஒரு சராசரி ஐ.டி. என்ஜினியராகவே என் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

அன்றைய தினம், 2063ம் வருடம் ஜூன் மாதம் 18, தேதி, மறக்க முடியாத தினம்; சனி என்னை பிடித்த தினம்! நான் என்னுடைய அலுவலக அறைக்குள் உட்கார்ந்து கொண்டு, பிஸியாக ஒரு மாடல் தயாரிப்பில் இருந்தேன். பக்கத்து வீட்டு எட்டாம் வகுப்பு பானு, தன் ஸ்கூல் சயின்ஸ் எக்ஸிபிஷனில், உயிரியல் பாடத்திற்கு வைப்பதற்காக, ஒரு பரிணாம வளர்ச்சி மாடல் தயாரிக்க சொல்லியிருந்தாள். ஆகவே, என்னுடைய ஆபீஸ் வேலையை ஒதுக்கி விட்டு, டேபிளில் இறைந்து கிடந்த அமீபா, மீன், தவளை, டைனசர், பறவைகள், விலங்குகள் டம்மிகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என் அறைக்குள் ரேகா நுழைந்தாள்.

ரேகா - என் கனவுக் கன்னி! காதல் தேவதை! அழகும் அறிவும் ஒரு சேர இருக்கும் அதிசய பெண்களில் ஒருத்தி! டைரியில் அவளைப் பற்றி எழுதாத நாட்களே கிடையாது. யெஸ்! நான் அவளைக் காதலிக்கிறேன்.

”கண்ணைக் காட்டாதே கண்ணே
மன்மதன் உன்னைக் காணின்
கயல்விழி வில்லாகி விடும் - அவன்
மலர் வில்லுக்குப் பதில்”
என்று அவளைப் பற்றி கவிதையெல்லாம் எழுதி உள்ளேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆபீஸ் விட்டு திரும்பும்போது, பிட்சா கார்னரில் என் காதலை அவளிடம் கூறினேன். ஆனால், இன்றுவரை, அவள் அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தாள். அவளும் என்னை லவ் பண்ணுகிறாள் என்று எனக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், அதை அவள் வாய்மொழியாய் சொல்ல மாட்டேன்கிறாள். ஆண்களை அலைய வைப்பதில், பெண்களுக்கு அப்படியென்ன அலாதிப் பிரியமோ? அவளிடம் இது பற்றி கேட்டாலே, “சதீஷ், காதல், கல்யாணம், இதைப் பற்றியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை. ஐ வாண்டு டு அச்சீவ் சம்திங். ஏதாவது சாதிக்க வேண்டும். புகழ் பெற வேண்டும். அதற்கப்புறம்தான் மற்ற விஷயங்கள் எல்லாம்”, என்று கூறி என் வாயை அடைத்து விடுகிறாள்.

அவள் ஒரு புத்திசாலிப் பெண்தான். புதிய கண்டுபிடிப்புக்கள் செய்யக் கூடிய திறமை உடையவள்தான். சந்தேகமில்லை. ஆனால், பொதுவாகவே பெண்கள் அனைவரும் புத்திசாலிகள் என்ற தவறான கருத்தை உடையவள். தவறான என்ற வார்த்தையை அடிக்கோடு இடுங்கள். என்னைப் பொறுத்தவரை பெண்கள், எந்த செயலையும் முன்யோசனையின்றி செய்பவர்கள் என்ற கருத்தை உடையவன். ஆகவே, அவர்கள் சொல்லை நான் காது கொடுத்தே கேட்பதில்லை. ஆனால், ரேகா மட்டும் இதில் விதிவிலக்கு. அவள் வார்த்தை எனக்கு வேதவாக்கு. காதலியாயிற்றே!

ஒருநாள் அவள் என்னிடம், “நீயும் ஏதாவது சாதனை பண்ணப் பாரேன், சதீஷ்.” என்றாள். அதிலிருந்து, ரிசல்ட் கிடைக்காத என்னுடைய காலேஜ் புராஜக்டான டி.சி.யில் கவனம் செலுத்தினேன். அதில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்பட்டது.

வெல், நான் காலேஜ் படித்த சமயங்களில் என் சக நண்பர்கள், தங்களின் புராஜக்டில், பல தில்லுமுல்லு வேலைகள் செய்தார்கள். இது டைம் மிஷின் யுகம் என்று உங்களுக்குத் தெரியும். கால இயந்திரத்தை எல்லாருமே சர்வ சாதாரணமாய் உபயோகிக்கும் காலம் இது. இறந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் தங்கள் இஷ்டப்படி, ஒரு கட்டுப்பாடு இல்லாமல், எல்லாரும் சென்று வந்து கொண்டிருந்தனர்.

கல்லூரி மாணவர்கள், டைம் மிஷினை தங்களுக்கு சாதகமாய் உபயோகித்தார்கள். அதன் மூலம், எதிர்காலத்திற்கு சென்று, அங்குள்ள லேட்டஸ்ட் தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டு, திரும்பி வந்து, அதை தங்களுடைய சொந்த புராஜக்டாக சமர்பித்தனர். இதனால் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. குளறுபடிகள் உருவாயின. இவ்வாறு செய்யக்கூடாது என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தும், அதனால் பயனில்லை. தங்களுடைய கல்லூரிக்கு புகழ் கிடைக்கிறது என்பதற்காக, கல்லூரி நிர்வாகங்களே இந்த ஏமாற்று செயலை ஊக்குவித்தன!

அந்த சமயத்தில், ஒருநாள், சென்னையைச் சேர்ந்த கல்லூரி ஒன்றின் இரு மாணவர்கள், ஆர்வ மிகுதியால் கி.பி. 4000ம் வருடத்திற்கு டைம் மிஷினில் சென்றனர். சென்றவர்கள் சென்றவர்கள்தான். இன்றுவரை அவர்கள் திரும்பி வரவே இல்லை. அந்தக் கல்லூரி நிர்வாகம், மாணவர்களைத் தேடி இரண்டு ஆசிரியர்களை, மற்றொரு டைம் மிஷினில் அனுப்ப, அவர்களும் மறைந்து போயினர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உறவினர்கள் போலீஸில் புகார் கொடுத்தவுடன்தான் விஷயம் பெரிதானது. கல்லூரிகளின் பொறுப்பற்ற போக்கை பலரும் கண்டித்தனர். அறிவியல் முன்னேற்றங்கள் அழிவுக்குத்தான் இட்டுச் செல்கிறது என்று கூக்குரலிட்டனர். தொலைந்து போன மாணவர்கள், ஆசிரியர்கள் குடும்பங்களின் கண்ணீர் பேட்டி எல்லா மீடியாக்களிலும் வந்தது.

4000ம் வருடத்தில் உள்ள மர்மம் அனைவரையும் வசீகரித்தது. அதை அறிந்து கொள்ள உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து ஒரு வாரத்திற்குள், சுமார் 3000 பேர் சென்றனர். அந்தோ, பரிதாபம்! அவர்களில் ஒருவர் கூட திரும்பி வரவில்லை! அதன்பின்புதான், 4000 வருட ஆபத்தின் தீவிரம் எல்லா நாட்டிற்கும் புரிந்தது. வருடம் 4000 - சுருக்கமாய் Y4K - உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்கால பயணத்தை பல நாடுகள் தடை செய்தன. டைம் மிஷின்களில் இருந்த எதிர்கால பயண சாப்ட்வேர்கள் அழிக்கப்பட்டன.

என்றாலும், அரசாங்கமே, ரகசியமாய் டைம் டிராவல் மூலம் Y4K மர்மத்தை அறிய முயற்சிப்பதாகவும், அவைகளும் தோல்வியிலேயே முடிவதாகவும், பலவித வதந்திகள் உலவியது.

பல கதைகள் Y4K குறித்து வந்தன. இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் Y4K பற்றிய சினிமாக்கள் வந்தன. பேப்பர்களிலும், மேகசின்களிலும் Y4K பக்கம் ஒதுக்கப்பட்டது. கோவில்களில் Y4K ஸ்பெஷல் பூஜை நடத்தப்பட்டது. மந்திரிக்கப்பட தாயத்துக்கள், காப்புகள், கற்கள் அமோகமாக விற்பனை ஆனது. SMSன் பிரதான விஷயமாக Y4K இருந்தது.

அந்த பரபரப்பான சூழலில்தான், அன்று ரேகா என் அறைக்குள் வந்தாள். மினி ஷார்ட்ஸ், ஒய்-கட் ஸ்லீவ்லெஸ் ஷர்ட் சகிதம் அமர்க்களமாய் இருந்தாள். என்னுடைய லவ் புரப்போஸலுக்கு பதில் கூறத்தான் வந்துள்ளாளோ என்று நினைத்தேன்.

“சொல்... தேவதையே... சொல். சம்மதம் என்ற அந்த ஒற்றை வார்த்தையை உன் உதடுகள் உச்சரிக்கட்டும். ஐ லவ் யூ என்ற அந்த பொன்மொழி என் காதுகளில் தேனாகப் பாயட்டும்.”

அவள் என்னை மேலும் கீழும் பார்த்தாள்.

“என்ன... இருபதாம் நூற்றாண்டு டிராமா எதற்காவது ரிகர்சல் பண்றியா? இப்படி உளர்றே”, என்றாள்.

“என் லவ் புரப்போஸலுக்குத் தான் பதில் கூற வந்திருக்கிறாயோ என்று நினைத்தேன்”

“அதை ஒரு ஓரத்தில் தூக்கி வை, சதீஷ். நான் வேற ஒரு புரப்போஸலுக்கு வந்துள்ளேன்.”

“வேற புரப்போஸல்னா, லீ மெரிடியனில் டான்ஸ் கம் டின்னர், தென் ஒரு ரூம் ரிசர்வ் பண்ணி...”, என்று நான் இழுக்கவும் ஒரு முறை முறைத்தாள்.

“புத்தி போகுது பாரு. நான் சொல்ல வந்ததே வேறு.”

“சொல்லு, சொல்லு”

ஆனால் அவள் சொல்லத் தயங்கினாள். சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை பார்த்தாள். என்னுடைய ஆர்வம் அதிகரித்தது. என்ன சொல்லப் போகிறாள்? மெதுவான குரலில் கூறினாள்.

“என் பிரண்டு கிட்ட இருந்து, செகண்ட் ஹாண்டில் ஒரு டைம் மிஷினை சமீபத்தில் நான் வாங்கினேன். அதில்... அதில் எதிர்கால பயணத்திற்கு உரிய சாப்ட்வேர் அழிக்கப்படாமல் உள்ளது.”

“அதனால் என்ன? கவர்மெண்டில் இன்பார்ம் பண்ணி அதை அழித்து விட வேண்டியது தானே?”

“நான் அதை அழிக்கப் போவதில்லை.”

“பிறகு?”

“அந்த மிஷின் மூலம்”

“மிஷின் மூலம்?”

“நானும் நீயும்....”

“நீயும் நானும்?”

“Y4Kக்கு போகப் போகிறோம்.”

பயணம் தொடரும்....

ஹோம்வொர்க்

விச்சுவின் மனதில் பாறாங்கல் ஏறியிருந்தது. காய்ச்சல் உள்ளதா என்று பத்தாவது முறையாக கழுத்தில் வைத்துப் பார்த்தான். இல்லை.

“தலை வலிக்குது, அம்மா”

“மிஸ்ட்ட அடி வாங்கி முடித்ததும் எல்லாம் சரியாகி விடும்”, கோபத்துடன் கூறிக் கொண்டே புத்தகங்களை விச்சுவின் பையில் திணித்தாள் அம்மா.

”என்னை பார்த்தால் பாவமா இல்லை”

“நேற்று ஹாரி பார்ட்டர் பார்த்த போது, ஹோம்வொர்க் செய்ய சொல்லி கத்திக் கொண்டே இருந்தேனே? அப்போது உனக்கு பாவமா இல்லையா?”

விச்சு இன்னமும் ஹோம்வொர்க்கை முடிக்கவில்லை. உட்கார்ந்தால் ஒரு மணி நேரம் ஆகும். எனவே இனிமேலும் முடியாது. லீவு போடவும் அம்மா விடவில்லை.

ச்சே... இந்த ஹோம்வொர்க்கை யார் கண்டுபிடிச்சாங்க?

சமீப காலமாய் விச்சுவின் கிளாஸ் மிஸ் நீண்ட பிரம்பை கொண்டு வருவது அவனது நடுக்கத்தை அதிகரித்தது.

இன்னும் எத்தனை வருஷம் இந்த பிரச்சனை? விரல் விட்டு எண்ணினான். ஸ்கூலில் ஏழு வருஷம் ... அப்புறம் காலேஜ் மூன்று வருஷம் ... என்ஜினியரிங், டாக்டர் என்றால் மேலும் ஒன்றிரண்டு வருஷம் ... ஓ ... நோ ... அதெல்லாம் படிக்கக் கூடாது.

வாசலுக்கு வந்தான். தூறல் விழுந்து கொண்டிருந்தது! அவனுள் உற்சாகம் தோன்றியது.

வாவ்! மழைன்னா லீவு விடுவாங்களே!

டிவீயை ஆன் பண்ணி நியூஸைப் பார்த்தான். புயல் சின்னமாம். குட்! பக்கத்து மாவட்டங்களிலெல்லாம் லீவு விட்டு விட்டார்கள். வெரிகுட்! நம் மாவட்டத்தில் ... வாட் இஸ் திஸ்? அறிவிப்பு ஒன்றும் இல்லையே?

கலெக்டர் என்ன செய்து கொண்டிருக்கிறார் ... தூங்கிக் கொண்டிருக்கிறாரோ?

“பஸ் வந்து விட்டது விச்சு”

பஸ்ஸில் செல்லும் போதெல்லாம் மிஸ் இன்று கிளாஸிற்கு வரக்கூடாது என்று ப்ரே பண்ணினான். யார் யாருக்கோ வைரஸ் காய்ச்சல் வருகிறதாம். நம் மிஸ்ஸிற்கு மட்டும் ஏன் வரமாட்டேன்கிறது என கவலைப்பட்டான்.

வகுப்பிற்குள் நுழைந்த போது மிஸ் அவனுக்கு முன்பாக இருந்ததை பார்த்தான். பிரம்பு அவர்களுக்கு முன்பாக இருந்ததையும் பார்த்தான்.

விச்சுவின் காய்ச்சல் எகிறியது. கால்களும் நடுங்க ஆரம்பித்தன. பில்டிங் ஸ்டிராங், பேஸ்மெண்ட் வீக் என்ற வடிவேலு டயலாக் தேவையில்லாமல் ஞாபகத்திற்கு வந்தது.

“சப்மிட் யுவர் ஹோம்வொர்க் நோட்ஸ்”

மற்றவர்களைப் போல விச்சுவும் நோட்டை டேபிளில் அடுக்கினான்.

மிஸ் ஒவ்வொன்றாக எடுத்து திருத்த அவன் கண்கள் தன் நோட்டிலிருந்து அகலவில்லை.

இன்னும் பத்து நோட்டுதான்.

அவனுக்கு பதட்டம் கூடியது.

ஆறு நோட்டு.

தலையில் கையை வைத்துக் கொண்டான்.

நான்கு நோட்டு.

வியர்வையை துடைத்தான்.

மூன்று நோட்டு.

அப்போது கிளாஸ் வாசலில் ஒரு மிஸ் தோன்றி, “விஷால், எச்.எம். இஸ் காலிங் யூ”

விச்சு குஷியானான். எச்.எம். ரூமிற்கு சென்று, விஷயத்தை கேட்டு விட்டு, ஒரு பத்து நிமிடம் கழித்துதான் வரவேண்டும். அதற்குள் பாடத்தை ஆரம்பித்து விடுவார்கள் என்று கணக்கு போட்டுக் கொண்டே எழுந்தான்.

தன் கையில் இருந்த பேப்பரை மீண்டும் சரிபார்த்த வாசல் மிஸ், “சாரி ... சாரி ... நாட் விஷால். இட் இஸ் விக்னேஷ்”

விக்னேஷ் எழுந்து வெளியே செல்ல விச்சுவின் முகம் காற்று போன பலூனாய் தொங்கியது.

இரண்டு நோட்டு.

ஒரு நோட்டு.

எடுத்து விட்டார்கள்.

விச்சுவின் நோட்டையே மிஸ் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த இருபது வினாடியும் இருபது யுகமாய் அவனுக்கு கழிந்தது.

“விஷால் ... வாட் இஸ் திஸ்?”

“ஹோம்வொர்க் ... நோட் ... எழுத ...”, என்று விச்சு இழுத்துக் கொண்டிருந்த போதே இடைமறித்த மிஸ், “எழுதி வீட்டில் வைத்து விட்டு இதை கொண்டு வந்து விட்டாய்”

மிஸ் உயர்த்திப் பிடித்த நோட்டை பார்த்தான். அது அம்மாவின் கோல நோட்டு!

“ஓகே. இதை மூன்று நாட்கள் கழித்து தருகிறேன்”, என்று கோல நோட்டை ஹேண்ட் பேகில் திணித்த மிஸ், “ஹோம்வொர்க்கை நாளை சப்மிட் பண்ணு!”, என்றார்.

தேங்க்ஸ்மா!

**ம்ணிமேகலை பிரசுரம் “என் பள்ளிக்கூடத்திற்கு வந்த ரோபோ” என்ற புத்தகத்தில் வந்த கதை**



Wednesday, August 28, 2013

என் பள்ளிக்கூடத்திற்கு வந்த ரோபோ


விச்சுவிற்கு மட்டும் ஏன் தான் பிரச்சனைகளாக வருகிறதோ? தெரியவில்லை. நண்பர்கள் அனைவரும் கவலையில்லாமல் களிப்போடு இருக்கும்போது, அவன் மட்டும் கடுப்பில் இருந்தான். எல்லாம் அவன் ஸ்கூலினால் வரும் பிரச்சனைதான்.

விச்சுவின் பள்ளியை வெறுமனே ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ள நர்சரி பள்ளி தானே என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள். காலேஜ் நடத்துவது போல அவர்கள் பண்ணும் அல்டாப்பிற்கு அளவே இல்லாமல் இருக்கும். இப்படிதான் இரண்டு வருடத்திற்கு முன்பு, ஸ்போர்ட்ஸ் டேவிற்கு கபில்தேவை சிறப்பு விருந்தினராக அழைத்து ஊரையே தடபுடலாக்கி விட்டனர். வரப்போகும் ஆண்டு விழாவிற்கு அப்துல் கலாமை கூப்பிட்டு இருப்பதாகவும், இசைவு கிடைத்து விடும் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

விச்சு ஐந்தாம் வகுப்பு மாணவன். சூப்பர் சீனியராடா என்று கேட்டால் ஒத்துக் கொள்ள மாட்டான். அல்டிமேட் சீனியராம்! அவன் தான் SPLம் கூட!   ஸ்கூல் டே, ஸ்போட்ஸ் டே, கல்ச்சுரல் டே, எக்ஸ்போ என்று அனைத்திற்கும் SPL தான் பிரதானமாக நிற்க வேண்டும். மாநகராட்சி மேயர் போல ஸ்பெஷல் ஓவர் கோட் காஸ்ட்யூம் கூட உண்டு. எனவே SPL போஸ்ட்ற்கு மாணவர்களிடையே வெளியே தெரியாத போட்டியே நடக்கும். படிப்பு, விளையாட்டு, ஜி.கே., மியூசிக் என்று அனைத்திலும் விச்சுவிற்கு போட்டியாக சுதாகர் வந்திருந்தாலும், தேவையான சில மிஸ்களுக்கு சோப்பும், மற்ற மிஸ்களுக்கு ஐஸ்ஸும், பிரின்சிக்கு இரண்டையும் போட்டிருந்ததால், SPL பதவி விச்சுவிற்கு எளிதில் கிடைத்திருந்தது.

அப்படியிருந்தும் விச்சுவின் கடுப்பிற்கு காரணம்? சரோ! சரோ யார்? விச்சு தான் SPL என்று பள்ளியில் அறிவிப்பு செய்யும் நேரத்தில், பிரின்சி வேறொரு விஷயத்தையும் அறிவித்தார்.

“ஏற்கனவே தமிழக அளவில் பிரபலமடைந்துள்ள(?) நம் பள்ளியின் தரத்தை மேலும் உயர்த்துவதற்காக ‘சரோ’ என்ற ஜப்பான் தயாரிப்பு கல்வி ரோபோ ஒன்றை நம் பள்ளி வாங்கியுள்ளது. ஒவ்வொரு வகுப்பிற்கும் குறைந்த பட்சம் ஒரு பாடமாவது சரோ நடத்தும். ஆவரேஜ் மாணவர்களை சிறந்த மாணவர்களாகவும், புத்திசாலி மாணவர்களை அதி புத்திசாலிகளாகவும் சரோ மாற்றும்! ‘சரோ’வை உங்கள் முன் அறிமுகப்படுத்துவதில் சந்தோஷமடைகிறேன்”, என்று கூறி மேடையில் உள்ள ஸ்கிரீனை விலக்க, ஒரு எந்திர மனிதன் கையசைத்து நின்று கொண்டிருந்தான்.

பள்ளி முழுவதும் கரகோஷம் எழும்பியது. தனக்கு கிடைக்க வேண்டிய கைத்தட்டலை இவன் தட்டிச் சென்று விட்டானே என்று விச்சு எரிச்சலடைந்தான். ஒரு நாலு நாள் கழித்து இவனை அறிமுகப்படுத்தி இருக்கலாமே என்று ஆதங்கப்பட்டான்.

ஆனால் பிரின்சியோ படு வேகமாய் செயல்பட்டார். அடுத்த நாளே சரோவைப் பற்றி பேப்பர்களில் விளம்பரங்கள் வந்தன. இந்திய பள்ளிகள் வரலாற்றில் முதல்முறையாக ரோபோவை அறிமுகப்படுத்தும் ஒரே பள்ளி எங்கள் பாரத் நர்சரி தான் என்று செய்தி தாள்களும், கேபிள் சேனல்களும் அலறின! எங்கு திரும்பினாலும் ரோபோ டீச்சிங், ஹைடெக் ஸ்கூல் என்ற பேச்சு தான் விச்சு காதில் கேட்டது.

“வேறு ஸ்கூல்களிலிருந்து அட்மிஷன் கேட்டு க்யூவில் நிற்கிறார்கள்” என்ற ஆசிரியர்களின் புகழாரமும், “இயர்லி ஃபீஸ் இனி 75000 ரூபாய். சிட்டியிலேயே பாரத்தில்தான் அதிகம்!”, என்ற பெற்றோர்களின் பந்தாவும் விச்சுவின் காதில் நாராசமாய் விழுந்தன!

எஜிகேஷனல் ரோபோவாம் ... ரோபோ. அறிவேயில்லாத ஒரு மிஷின் பாடம் நடத்தி நாங்களெல்லாம் உருப்படவா? விச்சுவின் பொருமலை யாரும் கவனிக்கக் கூட இல்லை!

டில்லியிலிருந்து போன் போட்ட மாமா,” என்னடா விச்சு, உன் ஸ்கூல், 'ரோபோ கல்வி'யில் கலக்குகிறார்களாமே ... வாழ்த்துக்கள்”, என்று கூறினாரே ஒழிய, SPL ஆனதற்கு வாழ்த்தவில்லை.

“ச்சே... ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது. பத்து வயசு பையனுக்கு இப்படி ஒரு வில்லனா!”

அன்று ஸ்கூல் இன்ஸ்பெக்‌ஷன். முந்தைய நாளே கிளாஸ் மிஸ் கூறிவிட்டார்கள்.

“கேள்விகள் அனைத்தும் உன்னிடம் தான் கேட்பேன், விஷால். நல்ல பெயர் வாங்க வேண்டும்!”

ஆனால், விச்சுவிடம் கேள்வியை ஆரம்பித்த இன்ஸ்பெக்டரின் கவனமோ அந்த அறையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரோவிடம் சென்றது.

“ஓ ... இதுதான் புது ரோபோவா? இங்கு இருக்கிறதே? ஆபிஸில் இருக்கும் என்றல்லவா நினைத்தேன்?”

”கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தது”, என்று பிரின்சி பெருமிதமாய் பதில் கூறினார்.

“ஓ ... பிரில்லியண்ட்!”

அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அனைத்தும் ரோபோவை சுற்றியே இருக்க, விச்சு தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான்!

இவையனைத்தையும் மிஞ்சும் விதமாய் ஸ்போர்ட்ஸ் டே அமைந்தது. வழக்கமாக ஸ்போர்ட்ஸ் டே அன்று ஒலிம்பிக் டார்ச்சை SPL ஏற்றுவதுதான் பள்ளியின் வழக்கம். இந்த ஒரு விஷயத்திற்காகவே விச்சு SPL பதவிக்கு ஆசைப்பட்டான். ஆனால் இந்த வருடம் விச்சு, டார்ச்சை சரோவிடம் கொடுக்க அது தீபத்தை ஏற்றுவதாக திட்டமிட்டு விட்டார்கள்.

விச்சு கடுங்கோபம் அடைந்தான். இந்த அநியாயத்தை எப்படியும் நிறுத்தியாக வேண்டும் என்று நினைத்தான். ஆனால் எப்படி?

யோசிடா ... விச்சு ...  யோசி ...

காட் இட்.

ஆனால் ... மாட்டிக்கிட்டால் ... கிரிமினல் ஐடியா அல்லவா? என்றாலும் விச்சு துணிந்து விட்டான்.

பிளான் எளியது. ரோபோவின் பவர் சப்ளையை ஷார்ட் பண்ணி விடுவது தான் ஐடியா! அதையும் ஸ்போர்ட்ஸ் டே அன்று தான் செய்ய வேண்டும். அவர்களுக்கு சரி செய்ய டைம் கொடுக்கக் கூடாது.

ஸ்போர்ட்ஸ் டே அன்று காலை 7 மணிக்கே ஸ்கூலுக்கு வந்து விட்டான். ஃபங்சன் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாலும், சரியான சமயத்திற்காக விச்சு காத்திருந்தான்.

மனம் திக் திக் என்றிருந்தது. வியர்வை குற்றால அருவியாய் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. என்றாலும் சந்தர்ப்பம் பிரச்சனை செய்யாமல் தேடி வந்தது.

“விஷால், சீஃப் கெஸ்ட்க்குரிய சந்தன மாலை இது. பிரின்சி ரூமில் வைத்து விட்டு வா”

ஆஹா! ஆபீஸ் செல்ல வேண்டும். வில்லன் அங்கு தான் இருக்கிறான்.

ஆபீஸ் உள்ளே சென்ற விச்சு சுற்றும் முற்றும் பார்த்தான். யாருமே இல்லை. இதுதான் சரியான டைம். சரோ மூலையில் நின்று முழித்துக் கொண்டிருந்தான். அதன் பார்வை புலத்தில் படாமல் சைடுபுறமாக வந்து நெருங்கினான். அதன் பார்வை கோணம் 150 டிகிரி தான் என்பது விச்சுவுக்கு தெரியும்.

சரோ அருகில் நின்று, அதன் இதயப் பகுதியை கழற்றினான். உள்ளே இருந்த ஸ்விட்சை ஆஃப் மோடுக்கு மாற்றினான். பேட்டரியை வெளியே எடுத்து, அதன் ப்ளஸ், மைனஸை தன்னிடம் உள்ள சிறு வயர் துண்டால் இணைத்தான். மீண்டும் பேட்டரியை அதன் இருப்பிடத்திலேயே மாட்டினான்.

இப்போது ஸ்விட்சை ஆன் பண்ணினால், ரோபோ செயலிழந்து விடும்.

எதற்கும் சேஃப்டியாக இருக்கட்டுமே என்று, ஒரு கட்டையை வைத்து ஸ்விட்சை ஆன் பண்ணினான்.

உடனே சரோ மண்டையில் உள்ள சிவப்பு விளக்கு அணைந்து அணைந்து எரிந்தது. வயிற்று மானிட்டரில் செக் பாட்டரி செக் பாட்டரி என்று எச்சரிக்கை வந்தது. மானிட்டர் வேலை செய்ய கூடாதே என்று விச்சு யோசித்துக் கொண்டிருந்த போது, ஸ்விட்சிங் டு ஸ்டாண்ட்பை பேட்டரி என்ற வாசகம் ஸ்கிரினில் வந்தது. தலை விளக்கு பச்சைக்கு மாறியது. பிறகு, சரோ தன்னுடைய மெயின் பேட்டரியை கழற்றி, ஷார்ட் பண்ணியிருந்த வயரை எடுத்து கீழே போட்டு விட்டு, மீண்டும் பேட்டரியை மாட்டிக் கொண்டது. இப்போது, வயிற்று மானிட்டர் ஷிஃப்டிங் டூ மெயின் பேட்டரி. எவ்ரிதிங் நார்மல் என்ற வாசகத்தை காட்டியது.

ச்சே ... இந்த மடையன் தன்னை தானே சரி செய்து கொண்டானே .... இனி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, பிரின்சி கார் சத்தம் கேட்டது. விச்சு அரவம் இல்லாமல் நழுவி வெளியே வந்து விட்டான்.

சரோவை செயலிழக்க வைக்க விச்சுவுக்கு வேறு ஐடியாவும் தோன்றவில்லை. சந்தர்ப்பமும் அமையவில்லை.

கடைசியில்,  ஓலிம்பிக் டார்ச்சோடு கிரவுண்டை மாங்கு மாங்குவென்று சுற்றி வந்த விச்சு, டார்ச்சை சரோவிடம் கொடுக்க அதுவோ நோகாமல் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றியது. விச்சுவின் காதுகளில் புகை கிளம்பியது!

அசெம்பிளி பாடலா ... ? சரோவை கூப்பிடு!

பாடத்தில் சந்தேகமா ... ? சரோவை கேளு!

போட்டியா ... ? சரோவிடம் உதவி கேள்!

சரோ ... சரோ ... சரோ ...

ஆண்டு விழாவிற்கும் சரோவைத்தான் முன்னிலை படுத்துவார்கள். முட்டாள் ரோபோவிற்கு தான் மரியாதை கிட்டப் போகிறது. விச்சு ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.

அடுத்த நாள் காலை விச்சுவின் அம்மாவிற்கு பிரின்சி போன் வந்தது. என்னவோ ஏதோவென்று பதறி அடித்துக் கொண்டு அம்மா ஸ்கூலுக்கு சென்றார்கள்.

“உங்க பையன் டி.சி. கேட்கிறான், மேடம்!”

“என்ன!”, வியப்புடன் கேட்ட அம்மா, “உண்மையாகவா விச்சு?”

ஆமாம் என்று தலையசைத்தான்.

“காரணம் சொல்ல மாட்டேன்கிறான். வீட்டில் ஏதும் பிரச்சனையா, மேடம்?”

“அவனுக்கு பிரச்சனை வீட்டில் இல்லை”, என்ற அம்மா, தயங்கி தயங்கி, சரோவின் வருகையால் ஏற்பட்ட அவனின் மனச்சோர்வை விவரித்தார்.

பிரின்சிக்கு ஆச்சர்யமாக இருந்தது. சரோவால் விஷால் காயப்பட்டுள்ளானா? அவரால் நம்பவே முடியவில்லை.

“நீ பெருமைப்பட வேண்டும், விஷால். இவ்வளவு வாய்ப்புகளை, வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பள்ளியில் மாணவனாக இருக்க பெருமைப்பட வேண்டும். இந்த ரோபோ உன் அறிவை மேலும் மேலும் செதுக்கத்தான் செய்யும்”

”அது ஒன்றும் அவ்வளவு புத்திசாலி இல்லை, மேடம்”, விச்சு அழுத்தமாக கூறினான்.

“வாட் ...  கம் அகெய்ன்”

“இயந்திரங்கள் எப்பொழுதுமே முட்டாள்கள் தான், மேடம்! நாம், அதனிடம் பாடம் கற்க வேண்டிய அவசியமேயில்லை!”

பிரின்சி ஷாக்காகி விட்டார்கள். இத்தனை தீவிரமான கருத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தார். அங்கு ஒரு வேண்டாத அமைதி நிலவியது. சில நிமிடங்களுக்கு பிறகு, “ப்ரூவ் இட் விஷால்!”, என்றார்.

விச்சு கேள்விக்குறியாய் பிரின்சியைப் பார்த்தான்.

“நீ புத்திசாலின்னு எனக்கு நன்றாகவே தெரியும், விஷால். இண்டர் ஸ்கூல் ஜி.கே. போட்டியில் தொடர்ந்து இரண்டு முறையாக நம் பள்ளிக்கு பரிசு கொண்டு வந்துள்ளாய். உன்னை நான் குறைத்து மதிப்பிடவில்லை. உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். சரோவிடம் நீ பத்து கேள்விகள் கேட்கலாம். எனி டாப்பிக்! ஏதேனும் ஒரு கேள்விக்கு, சரோ தவறான விடையளித்து விட்டாலும், உன் வாதத்தை ஒப்புக் கொள்கிறேன்.சரோவை பாடம் சொல்லிக் கொடுக்க பயன் படுத்த மாட்டேன். அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர் வைக்க, சாக்பீஸ் வைக்க என்று ஆபீஸ் வேலைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கிறேன். ஓ.கே.வா?”

சில வினாடிகள் யோசனைக்கு பின்பு விச்சு, ”கேள்விகள் ரெடி பண்ண ஒருநாள் டைம் கொடுங்க, மேடம்”

“நாளை மாலை நான்கு முப்பது மணிக்கு!”

ஆபீஸ் ரேச்சல் மிஸ் மூலம், அத்தனை டீச்சர்களுக்கும் விஷயம் தெரிந்து விட்டது. அன்று முழுவதும், அவர்களுக்குள் அதே பேச்சுதான். ஃபார் விச்சு, அகைன்ஸ்ட் விச்சு என்று இரண்டு அணிகள் வேறு உருவாகிவிட்டன. பள்ளியே பரபரப்பாகி விட்டது.

அடுத்த நாள் பல பெற்றோர்கள் ஆபீஸிற்கு வந்து போட்டியைப் பார்க்க தாங்களும் வரலாமா எனக் கேட்டனர். லோக்கல் கேபிள் சேனல்களிலிருந்து போன் போட்டு போட்டி நேரத்தை உறுதி செய்து கொண்டார்கள். எதிர்பாராமல் வந்த இந்த பிரபல்யத்தை பிரின்சியே எதிர்பார்க்கவில்லை. எனவே விஷால் - சரோ போட்டியை ஆடிட்டோரியத்தில் விமர்சையாக நடத்த அவர் முடிவு செய்து விட்டார்.

சரோவை விற்பனை செய்த குடோஸ் கம்பெனி மார்கெட்டிங் மேனேஜர் நந்தகுமாருக்கும் அழைப்பு சென்றது.

“பத்து வயது பையனாவது ரோபோவை தோற்கடிப்பதாவது! சான்சே இல்லை! தோல்வியால் அந்த சிறுவன் மேலும் துவண்டு விடக் கூடாது மேடம்”

நந்தகுமாரின் ஆலோசனையை ஏற்கும் முடிவிலேயே பிரின்சி இல்லை.

“நீங்கள் அவசியம் வரவேண்டும் மி.நந்தகுமார். உங்கள் கம்பெனிக்கும் இது விளம்பரம் தானே...!”

தன்னை சுற்றி நடந்து கொண்டிருக்கும் இந்த களேபரங்கள் எதையும் விச்சு கவனிக்கவில்லை. முந்தைய நாள் மாலையிலிருந்தே பலவித ஜி.கே. புத்தகங்களையும், அறிவியல் கட்டுரைகளையும் வாசிப்பதிலேயே நேரத்தை செலவழித்தான். ஒவ்வொரு சப்ஜக்டிலேயும் பத்து கேள்விகள் வரை குறித்துக் கொண்டான். எதை எதை கேட்பது, எந்த வரிசையில் கேட்பது என்று மட்டும் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

போட்டி நேரம் வந்து விட்டது. பிரின்சி விச்சுவை புகழ்ந்து சில வார்த்தைகள் பேசினார்.

“என்னுடைய மாணவன் ரோபோவிற்கு சவால் விடும் அளவிற்கு இருப்பதைக் கண்டு பெருமிதம் அடைகிறேன். இதனை ஆரோக்கியமான போட்டியாகவே அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். பத்து கேள்விகள் கேட்கலாம் என்ற வரையறை வைத்திருந்தேன். என்றாலும் விஷால் விரும்பும் எண்ணிக்கையில் கேள்விகள் கேட்கலாம்! ஆல் தி பெஸ்ட்!”

விச்சுவால் ஜெயிக்க முடியாது என்ற எண்ணம் தான் பிரின்சியின் பேச்சில் தொனித்தது.

“பத்து கேள்விகள் மட்டும் போதும், மேடம்!”

சரோ ஒரு புறம் நிற்க விச்சு அதன் எதிரில் உள்ள சேரில் அமர்ந்தான். இருவருக்கும் மைக் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. முன் வரிசையில் பிரின்சியும், அடுத்து நந்தகுமாரும் உட்கார்ந்திருந்தனர். அடுத்தடுத்த வரிசைகளில் டீச்சர்களும் பெற்றோர்களும், மாணவர்களும் குழுமி இருந்தனர். உட்கார இடம் கிடைக்காமல் வெளியே வரை நின்று கொண்டிருந்தனர். மூன்று சேனல்களிலிருந்து கேமிரா குழுவினர் வந்திருந்தனர்.

ஆரம்பிக்கலாம் என்று பிரின்சி கண்ணசைக்க, முதல் கேள்வியை விச்சு கேட்டான்.

"புவியியலிருந்து கேள்வி. இந்திய நாட்டின் தென் கோடி முனை எது?”

“கன்னியாகுமரின்னு சொல்லுடா முட்டாளே...” என்று மனதிற்குள் விச்சு ப்ரே பண்ணினான்.

எளிதாக கேட்கிறானே என்று ஆசிரியர்கள் முணுமுணுத்தனர்.

“நிக்கோபார் தீவில் உள்ள இந்திரா பாயிண்ட்,  6.75N 93.83E”

சரோ தவறு செய்து விட்டது என்று மாண்வர்கள் அனைவரும் உற்சாக குரல் எழுப்பினர். நந்தகுமாரும் நெற்றியை சுருக்கினார்.

விச்சுவோ, “விடை சரிதான்! இரண்டாவது கேள்வி கணிதத்தில் இருந்து! ...  நான்கு ஒன்றுக்களை வைத்து எழுதக்கூடிய மிகப் பெரிய எண் எது?”

சரோ இதிலாவது சிக்குமா? 1111 என்ற பதில் வருமா என விச்சு எதிர்பார்த்தான்.

“11 இன் அடுக்கு 11!”

ப்ச்... சலித்துக் கொண்டான் விச்சு.

“நெக்ஸ்ட் அறிவியல்! உலர் பனிக்கட்டியின் மூலக்கூறு ஃபார்முலா என்ன?”

“திட கார்பன் டை ஆக்சைடு - CO2”

வரலாறு, உயிரியல், வானவியல் என்று துறைகளை மாற்றி மாற்றி கிடுக்குபிடி போட்டுப் பார்த்தான். ஆனால் விச்சுவின் வலையில் சரோ சிக்கவில்லை. ஒன்பது கேள்விகள் முடிந்து விட்டன!

இன்னும் ஒரே ஒரு கேள்வி! விச்சு டென்ஷனில் இருந்தான். மாணவர்கள் அனைவரும் ஏமாற்றத்தில் இருந்தனர். விச்சுவின் தோல்வி நிச்சயம் என்று புரிந்து கொண்டனர். ஆசிரியர்கள் தங்களுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டனர். விஷாலின் கேள்விகள் புத்திசாலித்தனமாக இருந்தது என்றும் சரோவை ஏமாற்ற நன்றாகவே முயன்றான் என்றும் சிலாகித்துக் கொண்டனர்.

“விஷால், இன்னொரு கேள்வியையும் கேட்க விரும்புகிறாயா? இல்லை போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறாயா?”

“கேட்கிறேன் மேடம். சப்ஜக்ட் தமிழ்!”

“தமிழிலா...! சரோவிற்கு 15 வருடமாய் தமிழ் மொழி சகவாசம் உண்டு. புதுக்கவிதையும் எழுதும்! வெண்பாவும் எழுதும்!”, என்று நந்தகுமார் அலட்டிக் கொண்டிருந்தார்.

“தமிழ் மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள்?”

என்ன ... இவ்வளவு எளிதான கேள்வி கேட்டு விட்டானே ... அனைவரும் ஏமாற்றத்துடன் முணுமுணுத்தனர். மாணவர்கள் சலசலப்போடு எழுந்தனர். நந்தகுமார் நக்கலாக சிரித்துக்கொண்டிருந்தார். பிரின்சி முகத்தில் கூட வருத்த ரேகை தென்பட்டது.

விச்சுவோ எதிலும் சலனமடையவில்லை. சரோவின் பதிலை மட்டும் டென்ஷனோடு கவனித்துக் கொண்டிருந்தான்.

“120”

“வாவ்!...ஜெயிச்சிட்டேன்!....ஜெயிச்சிட்டேன்!!” இரண்டு கைகளையும் உயர்த்திக் கொண்டு விச்சு குதித்தான்.

எப்படி?..... எப்படி?

அனைவர் முகத்திலும் ஆச்சர்யமும் அவநம்பிக்கையும் தென்பட்டன. விச்சுவின் அடுத்தடுத்த கேள்விகளில் ரோபோவின் நிலைமை கவலைக்கிடமானது.

தமிழ் என்ற வார்த்தையில் எத்தனை எழுத்துக்கள்?”

“ஐந்து”

“சரோ?”

”மூன்று”

“ஐந்தொகை?”

“ஏழு”

“மி. நந்தகுமார், ஏன் இப்படி தப்பு தப்பாக சொல்கிறது?”

“புரியவில்லை மேடம். விஷாலை காப்பாற்ற பொய் சொல்கிறதோ?”

“ரோபோவுக்கு பொய் சொல்ல தெரியாது மிஸ்டர். நீங்கள்தான் பொய் சொல்லி இதை எங்கள் தலையில் கட்டி விட்டீர்கள்!”

அதற்குள் மாணவர்கள் அனைவரும் மேடையில் ஏறி விச்சுவை தோள் மேல் தூக்கி வைத்து பள்ளியை வலம் வர ஆரம்பித்தனர். ஒரு மாணவன் தான் கொண்டு வந்திருந்த டென் தவுசண்ட் வாலாவை வெடித்து கலக்கினான். பள்ளியே அல்லோலகப்பட்டது.

ஆசிரியர்கள் அனைவரும் விச்சுவை வாழ்த்தினர். எப்படி? என்ற கேள்விக்கு, “அது ஒரு முட்டாள்”, என்று மட்டும் பதில் கூறினான். பிரின்சியும் விச்சுவை கை குலுக்கினார். சேனல்கள் விச்சுவை பேட்டி எடுத்தன.

ஓவர் நைட்டில் விச்சு பெரும் புகழ் அடைந்ததையும், ரீபண்டு கேட்டு நந்தகுமாருக்கு பிரின்சி நோட்டீஸ் விட்டதையும் இனி விவரிக்க வேண்டிய அவசியமேயில்லை.

வீட்டிற்கு வந்ததும் விச்சுவிடம் அம்மா கேட்டார்.

“சாதாரண கேள்விகளுக்கு கூட ரோபோ தப்பு பண்ணியதே? பேட்டரி கோல்மால் மாதிரி இதிலும் ஏதாவது பண்ணினாயா, விச்சு?”

”கோல்மாலெல்லாம் ஒன்னுமில்லைமா. ஒரு ஆர்ட்டிக்கிள் வாசித்தேன். தமிழ் சாப்ட்வேர்களுக்கு கம்ப்யூட்டர் கேரக்டர் மேப்பில் 120 இடங்கள் மட்டுமே ஒதுக்கியுள்ளார்கள் என்று! இந்த 120 கேரக்டர்களை வைத்துக் கொண்டு 247 தமிழ் எழுத்துக்களையும், வட மொழி எழுத்துக்களையும், அது சமாளிக்க வேண்டுமாம். அதனால், உயிர் மெய் எழுத்துக்களை எல்லாம் இரண்டு எழுத்துக்களின் கூட்டாக அது எடுத்துக் கொள்கிறது. அதனை ஒரே எழுத்தாக நமக்கு காண்பிக்க, சிறு சிறு புரோகிராம்கள் ஓடிக் கொண்டு இருப்பதால், கம்ப்யூட்டரில் கால விரயம் நடந்து கொண்டிருக்கிறது. Y2K பிரச்சனை மாதிரி பிற்காலத்தில் இதுவும் ஒரு பிரச்சனையாக வளருமாம்! இந்த அடிப்படை விஷயத்தை சரி செய்ங்கடா என்று கூறினால், தமிழ் எழுத்துக்களை சீர்திருத்தம் செய்வோம் ... உயிர் மெய் எழுத்துக்களை ஒழித்து விட்டு கம்ப்யூட்டருக்கு தகுந்தபடி நம் மொழியை மாற்றிக் கொள்வோம் என்று கூட சில புத்திசாலிகள் ஐடியா கொடுக்கிறார்களாம்! செருப்புக்கு தகுந்தபடி காலை வெட்டிக் கொள்வோம் என்று! அது ஞாபகம் வந்தது. கேள்வியை கேட்டுப் பார்த்தேன். ரோபோ மச்சான் மாட்டிக்கிட்டான்!”, உற்சாகமாக பேசிக் கொண்டிருந்த விச்சுவின் தோளில் தட்டிக் கொடுத்தார் அம்மா!

**வடக்கு வாசல் இதழிலும், மணிமேகலை பிரசுரம் “என் பள்ளிக்கூடத்திற்கு வந்த ரோபோ” என்ற சிறுகதை தொகுப்பு புத்தகத்திலும் வெளிவந்த கதை**