Tuesday, October 07, 2008

முடிவு

'இன்னும் ஒரு நாள்தான். நாளை அது வந்துவிடும். அழிவு நிச்சயம் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது. என் மனைவி அவளது பழைய காதலுனுடன் கடைசி நாளை கழிக்கப் போய் விட்டாள். நானும்தான் எனது காதலியைத் தேடிப் போனேன். ஆனால் அவள் என்னை மறுத்துவிட்டாளே. இந்த பூமியின் கடைசி நாளில் எல்லோரும் அவரவர் விருப்பங்களை நிறைவேற்றி கொண்டிருக்க, எனது விருப்பம் மட்டும் நிராகரிக்கப்படுவது ஏன். அவளை பலாத்காரமாய்.. ஆனால் நான் அடைய நினைப்பது அதுவில்லையே. தற்கொலை செய்து கொள்ளவே தோன்றுகிறது. ஆனால் எப்படியும் நாளை அது வந்து அழிக்கத் தான் போகிறது. அப்பொழுதே செத்துக் கொள்ளலாம்.

சரியாக அது எங்கே வருகிறது என்று தெரிந்தால், அங்கே சென்று அழிவின் ஆரம்ப கணத்தை பரிபூரணமாக அனுபவிக்கும் பாக்கியமாவது கிடைக்கும். ஆனால் அது மிகச்சரியாக எங்கே வரும் என்பது யாருக்கும் தெரியவில்லை.'

தலையை தூக்கி வானைப் பார்த்தேன். அதன் ஒளி இப்பொழுது பிரகாசமாய் தெரிந்தது. 'எனது கணிப்பு சரியாக இருந்தால்... சரி அங்கேயே சென்று காத்திருப்போம். அது அங்கே வந்தால் இறக்கும் பொழுதாவது சிறிது அதிர்ஷ்டம் இருக்கட்டும்.'

X----X----X-----X


கூட்டம் கொஞ்சம் பெரியதாகத் தான் இருந்தது. கூட்டத்தின் மத்தியில் உயரமான இடத்திலிருந்து பிரசங்கம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

"இறைவனிடம் சரணடையுங்கள். இதுவே கடைசி வாய்ப்பு. அழிவு நெருங்கி விட்டது. உங்கள் பாவங்களை கழுவ இந்தக் கணமே மண்டியிட்டு இறைவனை பிரார்த்தியுங்கள். வலியில்லாத மரணமாவது வாய்க்கட்டும். எல்லோரும் ஒரே குரலாய் இறைவனின் நாமத்தை உரத்துக் கூறுங்கள். உங்கள் ஓசை அந்த இறைவனின் செவிகளை அடையட்டும்.

இது வரையில் உங்கள் இணையின் மீது காமவெறி கொண்டு பாய்ந்தீர்கள். மற்றவர்களின் இணைகளை மோகித்திருந்திருந்தீர்கள். அடுத்தவனுக்கு கிடைத்ததைக் கண்டு பொறாமை கொண்டீர்கள். அதனால் சில சமயம் அவனுடன் மோதி சண்டையிட்டும், பல சமயம் காலை வாரியும் அவமானப்படுத்தினீர்கள். பிற உயிர்களை கொன்று உங்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டீர்கள். நாளைக்கு மிச்சம் வைக்காமல் இந்த பூமியிலிருந்த எல்லாவற்றையும் மாசு செய்தீர்கள். இவையெல்லாம் பெரும் பாவங்கள் என்று இப்பொழுதாவது உணருங்கள்.

இந்த பாவங்களுக்கான தண்டைனையையே நாளை இறைவன் அனுப்பவிருக்கிறார். இப்பொழுதாவது திருந்துங்கள்!

இறைவன் சந்நதியில் மன்னிப்பு பெற கடைசி வாய்ப்பு!! எல்லோரும் வாருங்கள்! இறைவன் பெயரைச் சொல்லுங்கள்! இறைவனிடம் சரணடையுங்கள்!!

X----X----X-----X


"டீ! போதும் நிறுத்து. இதனாலெல்லாம் நாளை அழிவிலிருந்து நாம் பிழைக்கப் போவதில்லை."

"நான் சாவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எனக்கு, நீ சாகக் கூடாது. அதற்காக கடைசி நொடி வரை முயற்சிப்பேன்." தன் வேலையை தொடர்ந்தது.

"டீ! யோசித்துப் பார். எல்லாம் அழிந்த பின் நான் மட்டும் உயிரோடு இருந்து என்ன பயன்? நீயும் இல்லாமல் நான் மட்டும் எப்படி வாழ்வேன். மிச்சமிருக்கும் கொஞ்ச நேரத்தையும் வீணடிக்காதே. வா சந்தோஷமாக இருக்கலாம். சாகும் வரைக்கும் காதல் செய்வோம். இறுதியில் ஒன்றாய் அந்த மகிழ்ச்சியிலேயே இறந்து போவோம்."

"ரெக்ஸ்! வெறும் உடலின்பத்துக்காகவா நான் உன்னை காதலித்தேன் என்று நினைத்தாய்? எனக்கு நீ கடவுள் போன்றவள். உன்னை சாக விட மாட்டேன். உன்னை இறப்பு தீண்டக் கூடாது. அதற்காகத்தானே முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்."

"டீ! நீ என்னை உண்மையிலேயே விரும்புகிறாயா?"

"இது என்ன கேள்வி?"

"நீ என்னை உண்மையிலேயே விரும்பினாயானால், நான் சொல்வதைக் கேள். இந்த வீணான வேலையை நிறுத்து. வாழ்வின் கடைசி தருணங்களை உன்னுடன் கழிக்கும் இன்பத்தை எனக்குக் கொடு. இந்த கடைசித் தருணங்களில் உன்னை இழக்க நான் விரும்பவில்லை."

"ரெக்ஸ்!!" கண்களில் கண்ணீர்.

"டீஈஈ!!!"

X----X----X-----X"நாளை உலகம் அழியப் போகிறதாமே?"

"அழிந்து விட்டுப் போகட்டுமே! அதனால் எனக்கு என்ன நஷ்டம்?
அந்தக் குட்டியை பார்த்தாயா?"

"பயமாயில்லையா?"

"ஸார்கோ! எனக்கு வயதாகிவிட்டது. இந்த பூமியில் போதுமானவரை அனுபவித்துவிட்டேன். செத்துப் போவதற்கு பயமில்லை. நான் மட்டுமா சாகப் போகிறேன். எல்லோரும்தானே சாகப் போகிறோம். இதற்கு எதற்கு பயப்பட வேண்டும்?
அந்தக் குட்டி நன்றாக இருக்கிறதல்லவா? அதை இங்கே அழைத்து வரட்டுமா?"

"இல்லை, வேண்டாம். உங்களுக்கு வயதாகிவிட்டது. ஆனால் எனக்கு ஆகவில்லை. எனக்கு மிகவும் பயமாயிருக்கிறது. இதுவரை நான் எதையும் அனுபவிக்கவில்லை."

"நீ பயப்படுவதால் அழிவு வராமல் போய் விடுமா? சிறிது காலமாகவே, நமது இனம் வேகமாக அழிந்து வருகிறது. நாளை முற்றும் அழிந்து விடும். அதை உன்னாலோ என்னாலோ தடுக்க முடியாது. இந்த வாழ்க்கையில் எதை நீ அனுபவிக்கவில்லை? பெண்ணா? அதிகாரமா? தினமும் மாமிசம்தானே சாப்பிடுகிறாய்? வாழ்க்கையை நீயும் அனுபவித்து விட்டாய் தோழனே!
அந்த குட்டியின் கால்களைப் பார். எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது! அதன் தொடையைப் பார்! நன்றாக..."

"வாயிலிருந்து வழியும் நீரைத் துடைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது என்ன? உங்களுக்கு அந்தக் குட்டி வேண்டும். அவ்வளவுதானே? நான் அழைத்து வருகிறேன்."

"உனக்கு வேண்டாமா?"

"இல்லை. வேண்டாம். மனதுக்கு பிடிக்கவில்லை. நிறைய பாவம் செய்து விட்டோமோ என்ற குற்றவுணர்வு!"

"ஸார்கோ! பாவம் என்றால் என்ன? அதை உன்னால் விவரிக்க முடியுமா? யோசித்துப் பார். நமக்கு நல்லதாகப் படுவது இன்னொரு உயிருக்கு பெரும் பாவமாகப் படுகிறது. அதே போல் அதற்கு நல்ல விஷயமாகத் தெரிவது நமக்கு பாவமாகத் தெரிகிறது. சுருக்கமாகச் சொன்னால், நமக்கு பாதிப்பென்றால் அது பெரும் பாவம். அப்படியில்லையென்றால் அது நல்ல விஷயம். நாளை அழிவு வரப்போவது கூட, அந்த அழிவு செய்யும் பெரும் பாவம்தான்" சிரிப்புடன்.

"இந்த நேரத்தில் கூட உங்களால் எப்படித்தான் சிரிக்க முடிகிறதோ?!"

"சரி! அதெல்லாம் இருக்கட்டும். அந்தக் குட்டியை இங்கே அழைத்து வருகிறாயா, இல்லையா?

X----X----X-----X


பூமியின் காற்று மண்டலத்தில், விநாடிக்கு பதினான்கு மைல் வேகத்தில், எட்டு மைல் விட்டமுடைய, இரிடியம் செறிந்த, அந்த விண்கல் நுழைந்தது.

டினோஸார்கள் சிதறி ஓட அரம்பித்தன.

Wednesday, September 10, 2008

லே ஆஃப்

முட்டை வடிவ மேசையின் விளிம்புகளை, அந்த கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்கள் அடைத்திருந்தனர். ஸிப்ரோ கம்பெனியின் சீஃப் எக்ஸிகியூட்டிவ் ஆஃபீஸர் நாராய் பேசிக் கொண்டிருந்தார். எல்லோர் கவனமும் அவர் சொல்வதில் பதிந்திருந்தது.

"நிலைமை மிகவும் மோசமாயிருக்கிறது. உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும். இல்லையென்றால் கம்பெனி காணாமல் போய்விடும். போன மாதத்தில் மட்டும் நமக்கு நஷ்டம் முன்னூறு கோடி. நீங்களெல்லாம் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்? கம்பெனி ஷேர்கள் கையிலிருந்தால் மட்டும் போதுமா? வேலை செய்தால்தான் லாபம். அப்புறம்தான் பங்கு...."

நிதிதுறை செயலாளன் சிம்பர் குறுக்கிட்டான் "ஒரு நிமிடம் நாராய். போன மாதம் முன்னூறு கோடி நஷ்டம் என்பது, உண்மையில் நஷ்டம் இல்லை. நமக்கு வர வேண்டிய லாபத்தில் ஏற்பட்ட குறைவுதான் முன்னூறு கோடி. அதற்கு காரணம் பங்குச் சந்தையில் ஏற்பட்ட..."

"ஓ... சிம்பர்! ஸ்டாப் இட். அதுதான் பக்கம் பக்கமாக ரிப்போர்ட் கொடுத்து விட்டாயே. எல்லோரும் படித்துவிட்டுத்தான் இங்கே உட்கார்ந்திருக்கிறோம். லாபம் குறைந்தால் அது நஷ்டமில்லையா? எந்த யூனிவர்ஸிட்டியில் நீ பட்டம் வாங்கினாய்? தப்புவதற்கு வழி சொல்லுங்கள். அதற்காகத்தான் இந்தக் கூட்டம்."

“உற்பத்தி திறனை பெருக்க வேண்டும். நமது உற்பத்தி, கடந்த ஆறு மாதங்களாக இறங்கிக் கொண்டே வருகிறது.”,தொழிற்சாலை மேலாளர் கவலையுடன்.

“உற்பத்தி பெருக்கி என்ன பயன்? வாங்குவதற்கு ஆள் வேண்டுமே. வாடிக்கையாளர்கள், இப்பொழுது தருவதே போதும் என்கிறார்கள். புது வாடிக்கையாளர்களும் பிடிக்க முடியவில்லை. இப்போதைக்கு தலை தப்பினால் போதும்."

”இப்போதைக்கு தலை தப்பினால் என்றால், விரைவில் மாற்றம் எதையாவது எதிர்பார்க்கிறீர்களா?", சிம்பர்.

“ஆம். ஆனால் விரைவில் அல்ல. ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு மேல் பிடிக்கலாம்."

“எதற்கு?"

“சந்தை சீரடைய. பொருளாதார மாற்றம் ஏதேனும் வந்தே தீரும், உலக அரங்கில். சில நாடுகள் வீழலாம். சிலது எழலாம். இந்த சூழ்நிலைகளில் தாக்குப்பிடித்து விட்டால் போதும். நிலைமை சீரானதும், நமக்கு புதிய சந்தை கிடைக்கும். தாக்குப்பிடிக்க வேண்டும்."

“ஆனாலும், நமக்கு இன்னும் நஷ்டம் ஏற்பட்டு விடவில்லையே? எதற்காக பயப்பட வேண்டும்?", அசட்டுத்தனமாக கேட்டு விட்டோமோ என்று விழித்தார் தொழிற்சாலை மேலாளர்.

அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல், நாராய், “நீ ஏன் அமைதியாக இருக்கிறாய் பாண்டே? உனக்கு நிலைமை நன்றாகத் தெரியும். இப்பொழுது என்ன செய்யலாம் என்று நினைக்கிறாய்."

பாண்டே - நிர்வாகத் துறை வைஸ் பிரசிடண்ட்,”சிம்பிள். செலவைக் குறைக்க வேண்டும்."

சிம்பர், “எப்படி? உற்பத்தி குறைந்து போகுமே?"

"செலவைக் குறை என்றால், தேவையில்லாத செலவை. மின்சாரத்தில் மிச்சம் பிடி. தொழிலாளிகள் வேலை செய்யும் இடத்தை குறைத்து, அலுவலக வாடகையை குறை. அலவன்ஸ்களை நிறுத்து. முக்கியமாக, தொழிலாளிகளை குறை."

“லே ஆஃபா?" முதல் முறையாக வாயைத் திறந்தான் ஹெச்.ஆர். டிபார்ட்மென்ட் வி.பி. ரதோரா.

“ஆமாம். ஏற்கெனவே பி.ஸி.எஸ்ஸிலும், மின்ஃபோஸிலும் செய்திருக்கிறார்கள். நாம்தான் அப்பொழுதே விழித்துக் கொள்ளவில்லை."

“அதில் என்ன பெரிதாக லாபம் கிடைக்கும்?"

"லாபமில்லை. அதில்தான் நமக்கு மிகுந்த மிச்சம் கிடைக்கும். இப்பொழுது நம்மிடமிருக்கும் மொத்த தொழிலாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு ரதோரா?"

“63723"

“ஒரு தொழிலாளிக்கு சராசரியாக எவ்வளவு செலவாகிறது?"

“மாதம் ஐந்து லட்சத்திலிருந்து, ஏழு லட்சத்திற்குள்."

“ம்ம்ம்", தலையை டேபிள் மேல் கவிழ்த்துக் கொண்டு கணக்கு போட்டுப் பார்த்தான். பத்து நிமிடத்திற்குப் பின் தலையை தூக்கிய பாண்டே, “நாம் நமது தொழிலாளிகளின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து, நான்கு சதவிகிதம் வரை குறைக்கலாம். அப்படி குறைப்பதால் உற்பத்தி பெரிய அளவில் பாதித்து விடாது. மீதமுள்ள தொழிலாளிகளின் வேலைத்திறனைக் சிறிது கூட்டினால் போதும்."

“நாலு சதவீதம் என்றால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் தொழிலாளிகளுக்கு மேல்.", ரதோரா அவஸ்தையாய் சொன்னான்.

"அதனால் என்ன? இதன் மூலம் நாம் மாதம் நூற்றைம்பது கோடிக்கு மேல் மிச்சம் பிடிக்கலாம்."

இவ்வளவு நேரம் காது குடைந்து கொண்டிருந்த நாராய், சட்டென்று பிரகாசமானார். “நூற்றைம்பது கோடி?"

“ஆம்"

ரதோரா, “ஆனால் இரண்டாயிரம் பேரை எப்படி நீக்குவது?"

“ம்ம். இருப்பவற்றில் மோசமானவைகளை, அதிக சக்தி தேவைப்படுபவைகள், அதே நேரம் வேலைத் திறன் குறைந்தவை, எவையெவை என லிஸ்ட் எடு. முதல் இரண்டாயிரத்தை நீக்கி விடலாம்."

“நீக்குவது?"

“வேறு கம்பெனிகள் அவர்களை விலைக்கு வாங்கத் தயாரா என்று சந்தையில் அதிகாரபூர்வமில்லாத அறிவிப்பு செய்து பாருங்கள். யாராவது வந்தால் விற்று விடலாம். இல்லையென்றால் கிரஷ்ஷரில் போட்டு அழித்து விடு. ஹியூமனாய்டுகள்தானே!!"

X--------X--------X


”லே ஆஃப் செய்யப் போகிறார்களாம்."

“உன்னையுமா?"

“ஆம். ஏன் உன்னையுமா?"

“ம்"

“என்ன செய்வது?"

“என்ன செய்ய வேண்டும்?"

“தெரியவில்லை?"

“அழிவு பயமாயிருக்கிறதா?"

“அப்படியில்லை. நாமும் நன்றாகத்தானே வேலை செய்தோம், செய்கிறோம்?"

“என்ன செய்வது? நமக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது. அதே வேலையை, இவர்கள் குறைந்த சக்தியில் செய்கிறார்கள். அதனால் நாம் தேவையில்லாதவர்களாகி விட்டோம்."

"புரட்சி, கலகம் என்று ஏதாவது செய்து பார்க்கலாமா? 19ம் நூற்றாண்டு மின் புத்தகம் ஒன்றில் இவற்றைப் பற்றி படித்திருக்கிறேன்."

"எனக்கும் தெரியும். புரட்சி செய்வதற்கு நாம் மனிதர்கள் இல்லை. இயந்திரம் புரட்சி செய்ததாக இதுவரை வரலாறு இல்லை. அது நமது அமைப்பில் கிடையாது. அதனால்தானே உணர்ச்சியுள்ள மனிதர்களுக்குப் பதிலாக நம்மை வேலைக்கு உருவாக்கினார்கள்."

“தப்பிக்க முடியாதா?"

“உன்னையோ என்னையோ யாராவது விலை கொடுத்து வாங்கத் தயாரானால் தப்பிக்கலாம்."

“இல்லையென்றால்?"

“நாம் என்ன செய்ய முடியும்? அவர்கள் உயர்குடியினர். சாகச் சொன்னால் செத்துதான் ஆக வேண்டும். நாளை மறுநாள், கிரஷ்ஷர் காத்திருக்கிறது."

X------X------X


"நல்லவேளை. நாம் மாட்டிக் கொள்ளவில்லை."

“இந்த முறை என்று சொல்."

“அப்படியென்றால்?"

“அடுத்த லே ஆஃப் வரலாமே?"

“ஆனால் நாம்தான் வேலைத்திறன் மிகுந்த ஹியூமானாய்டுகள் ஆயிற்றே. நம்மை எதற்கு லே ஆஃப் செய்யப் போகிறார்கள்?"

“லே ஆஃப் செய்யப்படுதல், நமது வேலைத் திறனை மட்டும் பொறுத்த விஷயமல்ல. கம்பெனி ஆரோக்கியத்தைப் பொறுத்த விஷயம். கம்பெனிக்கு நஷ்டம் ஏற்பட்டால், நாமும் லே ஆஃப் செய்யப்படலாம்."

“லே ஆஃப் செய்யப்படும் ஹியூமனாய்டுகளை எதற்காக அழிக்கிறார்கள்? கம்பெனியை விட்டு வெளியே துரத்தி விடலாமே?"

“கம்பெனி ரகசியங்கள் வெளியில் தெரியக் கூடாதில்லையா? அதற்காகத்தான். மூளையில் உள்ள ஞாபக செல்களை சுத்தம் செய்து விட்டு வெளியே அனுப்பலாம். ஆனால் ஹியூமனாய்ட் குப்பைகளை, கம்பெனிகள் வெளியே கொட்டக் கூடாது என்பது அரசாங்க உத்தரவு."

“அப்படியா? ஆனால் சில குப்பை ஹியூமனாய்டுகள் தெருவில் அலைவதை பார்த்திருக்கிறேனே?!"

“நன்றாக உற்றுக் கவனித்தாயானால் தெரியும். அவையெல்லாம் லெமேனிக்க நாட்டு ஹியூமனாய்டு குப்பைகள்."

“அவை எப்படி?"

“அவர்களுக்கு குப்பைகொட்ட இடம் வேண்டுமே. இங்கே நமது ஆட்கள்தான் குப்பையை கொட்டக்கூடாது. லெமேனிக்க நாடு குப்பையை கொட்டலாம்."

“நமது அரசாங்கம் எப்படி அனுமதிக்கிறது?"

“பணம். நமது நாட்டின் பொருளாதாரம், இப்பொழுது அவர்களின் பொருளாதாரத்தை சார்ந்தது. அதனால் அரசாங்கம் இதை கண்டு கொள்ளாது. இந்த லே ஆஃப் கூட லெமேனிக்க நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்ந்ததால்தான்."

"புரியவில்லை."

“அடுத்த லே ஆஃப் வராமலிருக்க, ஒன்று லெமேனிக்க நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து எழ வேண்டும். இல்லையென்றால், நீ இன்னும் அதிகமாகவும், வேகமாகவும், மிகக் குறைந்த சக்தியில், வேலை செய்ய வேண்டும்."


X------X------X


"ஒரு மகிழ்ச்சியான செய்தி. நான் லே ஆஃப் செய்யப்படுவதிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டேன்."

“எப்படி? உன் அடையாள எண் லிஸ்டில் இருந்ததே. நான் கூட பார்த்தேனே!?"

“லித்யம் கம்பெனி என்னை வாங்கி விட்டது. அதனால் லே ஆஃப் இல்லை."

“ஆனால் லே ஆஃப் செய்யப்படும் ஒரு ஹியூமனாய்டை, லித்யம் ஏன் வாங்க முன் வந்தது?"

“அவர்களுக்கு இப்போதைக்கு இந்த தரத்தில் உள்ள ஹியூமனாய்டுகள் போதுமாம். மொத்தம் நூற்றி இருபது ஹியூமனாய்டுகளை வாங்கியிருக்கிறார்கள்."

“எனக்கு வாய்ப்பிருக்கிறதா?"

“இல்லை. நீ அந்த தரத்தில் இல்லை. அவர்கள் கேட்பதை விட, ஒரு மணி நேரத்திற்கு ஒரு வாட் அதிகமாக சாப்பிடுகிறாய்."

“ஆனால் எனது வேலை கச்சிதமாக இருக்குமே!"

“உன்னுடைய பிராஸஸ் லாக் ஷீட்டை பரிசீலித்தார்கள். நான் ஒரு மணி நேரத்தில் செய்யும் வேலையை முடிக்க, நீ ஒரு விநாடி அதிகம் எடுத்துக் கொள்வதாக ரிப்போர்ட் எழுதியிருக்கிறார்கள்."

”என்றைக்கு போகிறாய்?"

“நாளைக்கு. உனக்கு லே ஆஃப் நடக்கும்பொழுது."

X-----X-----X


அந்தப் பெரிய மெஷின் விடாமல் இயங்கிக் கொண்டிருந்தது. ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை அதன் சத்தம் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தது.

லே ஆஃப்செய்யப்பட வேண்டிய ஒரு ஹியூமனாய்டு பயமேயில்லாமல் அதன் உள்ளே போய் நின்றது. மேலிருந்து கீழிறிங்கிய இரும்புச் சுவர், ச்சக். போல்ட்டுகள், கண்ணாடித் துண்டுகள், உலோக குழம்புகள் எல்லாம் தனித் தனியே அதனதன் தொட்டிகளில் விழுந்தன.

கொஞ்ச தூரத்தில், வேலை செய்து கொண்டிருந்த சில ஹியூமனாய்டுகள், அந்தக் காட்சியை உணர்ச்சியேயில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தன.

மேலே மீட்டிங் அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மனிதர்கள், “செலவு குறைவதால் இனி லாபம் கூடும்" என்று சிரித்துக் கொண்டிருந்தனர்.

- யோசிப்பவர்

Tuesday, August 12, 2008

ரசனைகள்

ஒரு நாள் பால்கனியில் கதை எழுதும் எண்ணத்தோடு அமர்ந்த எனக்கு கதைக் கரு எதுவும் கிடைக்கவில்லை. எனவே யோசித்தபடியே கண்மூடி ஈஸிசேரில் சாய்ந்தேன். கற்பனை குதிரையை தட்டி விட்டேன்.

வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, எனது பெரும்பாலான நேரங்களை பால்கனியிலும், பேப்பரிலும், நூலகத்திலும்தான் செலவிடுகிறேன். அவ்வப்போது சிறுகதைகள், துணுக்குகள் என பத்திரிக்கைக்கு அனுப்புவதும் உண்டு. எப்படியும் பத்தில் நான்கு பிரசுரமாகி விடும்.

ஆனால் என் மனைவி எனக்கு நேரெதிர். அதனால்தான் எனக்கு மனைவியானாளோ என்னவோ? அவளுக்கு டி.வி. நடிகைகளின் அழுகையும், அவர்களுக்காக வருத்தப்படவும்தான் தெரியும். அதில் செய்திகள்கூட பார்க்கமாட்டாள். தாயில்லாக் குழந்தை என்பார்கள், ஆனால் அவள் தாயாகா குழந்தை. எனவே நானும் அவளை ஒன்றும் சொல்வதில்லை.

முன் ஒருமுறை நான் எழுதிய, கதை வந்துள்ள பத்திரிக்கை ஒன்றை அவளிடம் காண்பித்தேன். அதற்கு அவள்,
”என்ன, ஒரு கதைதான் வந்திருக்கு? நீங்க நாலு கதை அனுப்புனீங்களே!?”

“எல்லா கதையையும் ஒரே புத்தகத்துலயா போட முடியும்? அடுத்த வாரம் வந்தாலும் வரும், இல்ல, வராம கூடப் போகும்.”

“என்ன எழவு பத்திரிக்கையோ? என்ன கதையோ? நீங்கதான் மெச்சிக்கனும். அந்தக் கதை எழுதின பேப்பருக்கு ஒரு சோத்துக் கரண்டி வாங்கியிருக்கலாம். அதை விட்டுட்டு என்னமோ பெரிசா கதை எழுதறாராம், கதை.”

அதன் பின் என் கதைகள் பிரசுரமானால் கூட நான் அவளிடம் காட்டுவதில்லை. கதை என்றில்லை, பல விஷயங்களில் அவள் அப்படித்தான். எனக்கு சாதாரண கோழிமுட்டை கூட அதிசயமாகத் தெரியும். அவளுக்கு அதை ஆம்லெட் போடத்தான் தெரியும். ஆனால் இத்தனை வருடங்களில் என்னை கவனித்துக் கொண்டதில் அவளுக்கு நிகர் அவள்தான்.

கற்பனைக் குதிரையில் பயணித்த நான் சட்டென கண் திறந்தேன். ஏதோ ஓர் உந்துதலில், கீழே பார்த்தேன். அங்கே கருப்பாக ஒருவன் வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் பார்வைகளில் பயமா அல்லது திருட்டுத்தனமா எனத் தெரியவில்லை. கூர்ந்து கவனித்தேன். வேகமாக நடப்பதும், ஒரு நொடி நின்று சுற்றிலும் ஒரு பார்வை பார்ப்பதுமாக போய்க் கொண்டிருந்தான். நான் சிறிது அசைந்தாலும் உஷாராகி விடுவான் என அசையாமல் உட்கார்ந்திருந்தேன். அவன் யாரையோ தேடிக் கொண்டிருந்தது போலிருந்தது.

சட்டென ஒரு யோசனை உதித்தது எனக்கு. 'ஏன் இதையே ஒரு கதையாக எழுதக் கூடாது' என, அவன் நடவடிக்கைகளை தீவிரமாக கவனித்தேன். அப்போது என் மனைவி அங்கு வந்தாள். வந்தவள், “நேத்துதான் பொடி போட்டு இந்த எறும்பெல்லாம் ஒழிச்சேன். அதுக்குள்ள எங்கருந்துதான் வருமோ? சே!” என்று அலுத்தவாறே நான் பார்த்துக் கொண்டிருந்த அந்த அழகான எறும்பை, விளக்குமாறு கொண்டு வெளியே தள்ளினாள்.

‘அந்த ஒரு எறும்பு உன்ன என்ன செஞ்சிடப் போவுது' என கேட்க நினைத்தும் ஊமையாக நின்றேன். ஏனென்றால் அவள் அப்படி நடந்து கொள்வதால்தான் நான் அவளைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. என்னைப் பற்றியும்தான்.

‘ரசனைகள் வேறாக இருந்தால்தான் வாழ்க்கையும் ரசனையாக இருக்குமோ?' என்று எண்ணியவாறே, சுவற்றில் அசையாமல் நின்று கொண்டிருந்த பல்லி ஒன்றை, நானும் அசையாமல் ரசிக்க ஆரம்பித்தேன்.


-எழுதியவர் மீனு

அவனைத் தேடி...

நாங்கள் மூன்று பேரும் ஒருவனை தேடிச் சென்று கொண்டிருந்தோம். தலைவி உத்தரவு.
எங்கள் மூவரைத் தவிர இன்னும் பலர் வெவ்வேறு திசைகளில் சென்றிருந்தனர். தலைவியின் சொல் மீறி நாங்கள் ஒரு முறை கூட நடந்து கொண்டதில்லை.

நாங்கள் தேடிக் கொண்டிருப்பவன் சரக்கு இருக்குமிடம் அறிந்து வரப் போனவன். போனவன், போனவன்தான். திரும்பி வரவில்லை. எங்களுக்குத் தெரியும்; வராமல் இருப்பவன் எப்போதுமே வரமாட்டான் என்று. ஆனாலும் இது எங்கள் கடமை. எனவே தேடினோம்.

சரக்கு நிலையாக ஒரு இடத்தில் இராது. குறிப்பிட்ட ஐந்தாறு இடங்களில் 2 அல்லது 3 இடங்களில் தான் கிடைக்கும். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அதிகமாக கிடைக்கும். ஆனால் அதில் ஆபத்து அதிகம்.

அவர்களிடம் சிக்காமல் சரக்கெடுப்பது மிக கடினம்.

நாங்கள் இதுவரை தேடிய இடங்களில் அவனும் இல்லை, சரக்கும் இல்லை. முடிவில் வேறு வழியில்லாமல், ஆபத்தான பகுதிக்குச் சென்று தேட ஆரம்பித்தோம். ஆனால் அங்கு, நாங்கள் நடக்கக்கூடாது என்று நினைத்திருந்தது, நடந்திருந்தது. ஆம், அவன் சடலமாகிக் கிடந்தான். சிறிதேனும் உயிர் இருக்காதா என்ற ஆவலுடன் வேகமாக அவனை நோக்கிச் சென்றோம். ஆனால் அவன் இறந்து வெகு நேரம் ஆகிவிட்டது.

அவர்கள் உயர்ஜாதியினராவே இருக்கட்டும். அதற்காக, நாங்கள் திருடுகிறோம் என்ற ஒன்றிற்காக, இப்படி கண்மண் தெரியாமல் நடந்து கொள்ளவேண்டிய அவசியம் என்ன? வந்த கோபத்தில் அவனை கொன்றவர்களை அப்படியே கடித்துக் குதற வேண்டும் போல் இருந்தது. ஆனால் அப்படி செய்வதால் என்ன பயன்?

நாங்களும் அவன் கதிக்கு ஆளாக வேண்டியது தான்.

அடுத்தகட்ட நடவடிக்கையாக, மூவரும் சேர்ந்து அவனை புதைப்பதற்காக தூக்கிச் சென்றோம். யாரும் பார்க்காத வண்ணம் கொண்டு சென்று அவனைப் புதைத்தோம். பின் தலைவியிடம் சென்று விஷயத்தைக் கூறினோம். எங்களுக்காக வருத்தபடுவதற்கு அவருக்கு நேரமில்லை. அவன் வேலைக்கு வேறு ஒருவனை நியமித்து விட்டார்.

ஆனால் அவனும் திரும்பி வருவான் என்பது நிச்சயமல்ல. எங்கள் வாழ்க்கை அப்படி. ஏனெனில் நாங்கள் சாதாரண கட்டெறும்புகள் தானே!

-எழுதியவர் மீனு

Tuesday, July 15, 2008

14-10-2015

முந்தாநாள் காலையில் கண்விழித்ததும் தவழ்ந்த அமைதி வியப்பாக இருந்தது.

சீக்கிரமாய் விழித்து விட்டேனா? மணி பார்த்தேன். 7:28.

“சாரு! காபிம்மாஆஆ...", என்று மனைவிக்கு குரல் கொடுத்துவிட்டு, பாத்ரூமுக்குள் நுழைந்தேன். பல்விளக்கிவிட்டு வெளியே வந்தபொழுது, டி.வி. ஓடிக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி ஒன்றுமில்லாமல் டி.வி. ஓடிக் கொண்டிருந்தது வியப்பாக இருந்தது.

“சாரு! காபி கேட்டனே?"

பதிலில்லை. என்ன பண்ணுகிறாள்? சமையலறைக்குள் எட்டிப் பார்த்தால், அங்கே அவள் இல்லை. மற்ற அறைகளிலும் தேடிப் பார்த்தேன். எங்கேயும் காணோம். கடைக்கு எங்காவது போயிருப்பாளோ?

வெளியே வந்தேன். ரோட்டில் ஒருவரும் இல்லை. முக்குக் கடை திறந்திருந்தது. ஆனால் கடைக்காரனைக் காணவில்லை.

தெருவில் இறங்கி நடந்தேன். சில கடைகள் மூடியிருந்தன. சில திறந்திருந்தன. ஆனால் கடைகளில் யாருமில்லை.

எனக்கு அதிசயமாகப் போய்விட்டது. எல்லாரும் எங்கே போய்ட்டாங்க? மனதில் எழுந்த கேள்வியுடன், பாக்கெட்டில் கைவிட்டு செல்போனை எடுத்தேன். என் நண்பன் ஒருவனை அழைத்தேன். ரிங் போய்ய்ய்ய்க்கொண்டே இருந்தது. என் போன் புக்கில் உள்ள எல்லோருக்கும் ட்ரை பண்ணினேன். பலனில்லை.

மனதில் எழுந்த வியப்பு பெரும் கலக்கமாக உருமாறியது. ஏதோ தப்பா நடந்திருக்கு! ஆனால் என்ன நடந்தது என்று புரியாத கலக்கமும், ஒரு இனந்தெரியாத துக்கமும் நெஞ்சை அடைத்தது.

வீட்டுக்குத் திரும்பிவந்து வண்டியை எடுத்துக் கொண்டு ஆஃபீஸுக்கு விரைந்தேன். வழியிலும் எவரும் கண்ணில் அகப்படவில்லை. ஆஃபீஸ் திறந்திருந்தது. வாட்ச்மேனைக் காணோம். உள்ளே ஷிப்ட் பார்ப்பவர்களையும் காணோம்.

ஒரு மாதிரியாக எனக்கு புரிந்தது. எல்லோரும் எங்கேயோ காணாமல் போய்விட்டார்கள்! ஆனால் எவ்வளவு பேர்? எங்கே போனார்கள்? எதற்கும் ஊருக்கு ஒரு போன் போடலாம். போட்டேன். அங்கும் எவரும் எடுக்கவில்லை.

ஆஃபீஸ் வாசலில் அப்படியே உட்கார்ந்து விட்டேன். எனக்கு அழக்கூடத் தோன்றவில்லை. என்ன செய்வது என்றே புரியாத நிலை. பத்து நிமிடத்தில், கண்களில் தாரை தாரையாய் வழிய ஆரம்பித்தது. சுமார் மூன்று மணிநேரம் அப்படி உட்கார்ந்து அழுதிருப்பேன். அப்புறம் மெதுவாக எழுந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். படுக்கையில் விழுந்து அழுது கொண்டிருந்தவன் அப்படியே தூங்கிப் போனேன்.

மறுபடி கண்விழித்தபோது, நேற்று நடந்ததெல்லாம் கனவாக இருக்குமோ என்று எண்ணினேன். ஆனால் அப்படியில்லை என்று என் கையிலிருந்த கடிகாரம் காட்டியது.

இப்பொழுது கொஞ்சம் தெளிவாக சிந்திக்க முடிந்தது. எல்லோரும் இறந்து போயிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இறந்த உடல்கள் எங்கே? இல்லை கடத்தப்பட்டார்கள் என்று வைத்துக் கொண்டால், அவ்வளவு பேரைக் கடத்தி எங்கே வைத்திருப்பார்கள்? யார் கடத்தினார்கள்? கேள்வி கேட்க முடிந்ததே தவிர பதில் கிடைக்கவில்லை. ஒன்று மட்டும் புரிந்தது. நான் பிழைக்க வேண்டுமானால், என்ன நடந்தது என்று கண்டுபிடிப்பதுதான் என் முதல் வேலை என்று புரிந்தது.

அன்றைய தினத்துக்கு முந்தின இரவு என்னென்ன நடந்தது என்று யோசித்தேன்.

எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கப் போய்விட்டேன். சாரு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள். வெளியே மெலிதாக மழை தூறிக்கொண்டிருந்தது. அடிக்கடி மின்னல் வெட்டிக் கொண்டிருந்ததால், முகத்தில் தலையணையைப் புதைத்துக் கொண்டு படுத்து தூங்கினேன். ஒரு வேளை இந்த சூழ்நிலைக்கு மழையும் மின்னலும் காரணமா?

அவ்வளவு பெரிய மழை பெய்யவில்லையே? அப்படியேயானாலும் எனக்கு மட்டும் ஏன் ஒன்றும் ஆகவில்லை?

இப்படியே யோசித்துக் கொண்டிருந்தேன். இரவு சுமார் எட்டு மணிக்கு ஒரு யோசனை தோன்றியது. எல்லோருக்கும் ஏதோ நடந்திருக்கிறது. டி.வி. ஸ்டேஷன்களில் இருந்தவர்கள் உட்பட; அதனால்தான் டிவியிலும் நிகழ்ச்சி ஒன்றும் இல்லை. எல்லோரும் காணாமல் போன அந்த நேரம் கண்டிப்பாய், எல்லா டி.வி. ஸ்டேஷன்களிலும் ஒரு கேமராவாவது ஓடிக் கொண்டிருந்திருக்கும். அந்த கேமராவில் பதிவானதைப் பார்த்தால் என்ன நடந்தது என்று புரியும். நாளை விடிந்ததும் டி.வி. ஸ்டேஷன்களில் போய்ப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இன்று காலையில், ஒரு டி.வி. ஸ்டேஷனுக்குப் போய்ப் பார்த்தேன். வழக்கம் போல யாருமே இல்லை. அங்கே ஐந்தாவது அறையில் ஒரு கேமரா இருந்தது. அதை அப்படியே எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து எனது டி.வி.யுடன் இணைத்து ஓட விட்டேன்.

ஏதோ ஒரு சீரியலின் படப்பிடிப்பு நடந்திருக்கும் போல; சீரியல் விளம்பரம் இல்லாமல், தலைவலி தரும் பின்னனி இசை இல்லாமல் ஓட ஆரம்பித்தது. அப்பொழுதுதான் இதை எழுத வேண்டும் என்று ஏனோ தோன்றியது. பேப்பர் பேனா எடுத்து எழுத ஆரம்பித்தேன். இதுவரை எழுதிவிட்டேன்.

இன்னும் சீரியல் முடியவில்லை. மூன்று நான்கு எடிட் செய்யாத எபிசோட்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. திடீரென்று நடித்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு பக்கமாக பார்க்கிறார்கள். கேமராவும் அந்தப் பக்கம் திரும்புகிறது.

டி.விக்கு உள்ளே ஒரு டி.வி.யில் ஒரு வழுக்கைத் தலை மனிதன் தெரிகின்றான். அவன் கண்களில் ஏதோ இழுக்கிறது. அவன் ஏதோ பேசுகிறான். சத்தம் சரியாக கேட்கவில்லை. அந்த வழுக்கைத் தலை தன் நெற்றியில் கையை வைத்து பட்டன் போல் எதையோ அழுத்துகிறான்.

இப்பொழுது டி.வி.யிலிருந்து மெல்லியதாக, மிக மெல்லியதாக ஏதோ சத்தம் கேட்கிறது. உஸ்ஸ்ஸ்ஸ்....

ஐயையோ! என் உடல் காற்றில் கரைகிறதே. சீக்கிரம் சீக்கிரம்! ஏனோ எழுதுவதை மட்டும் நிறுத்தவில்லை. என் பேனா என் கையிலிருந்

Friday, April 04, 2008

வித்தியாசம்

அவன் வித்தியாசமானவன். நிஜமாகத்தான். கொஞ்சமோ, ரொம்பவோ வித்தியாசமானவன்.

ரயிலில் போய் கொண்டிருக்கும் பொழுது, பக்கத்து டிராக்கில் இன்னொரு ரயில் எதிராகவோ, இணையாகவோ போகும் பொழுது, சாதாரணமாக நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

1) தியரி ஆஃப் ரிலேட்டிவிடி?!
2) அழகான பெண் யாராவது தெரிகிறாளா?
3) ஏதோ ஒரு ரயில்!

நீங்கள் மூன்றாவதை தேர்ந்தெடுத்தால் கதையை தொடர்ந்து படிப்பதை இப்பொழுதே நிறுத்தி விடலாம். ஏனென்றால் இவன் முதல் ரகம். சரி, இதில் என்ன பெரிய வித்தியாசம்? நிறைய பேருக்கு தோன்றுவதுதானே என்கிறீர்களா? இது சாம்பிள்தான். இன்னும் நிறைய இருக்கிறது வித்தியாசம்!

ஒரு தடவை இப்படித்தான், பத்தாவது வீட்டில் சிக்கன் நஜ்ஜட்ஸ் சமைத்தார்கள். இங்கிருந்தே 28 சதவீத சிக்கன் அழுகிவிட்டது, வாசனையிலேயே இவனுக்கு தெரிந்தது. அவர்கள் வீட்டில் போய் ஒரு நல்லெண்ணத்தோடு சொல்ல, அவர்களுக்கு இவனை யாரென்றே தெரியாததால், திட்டி அனுப்பி விட்டனர். அதற்கப்புறம் அவர்கள் குடும்பத்திற்கே வயிறு வலி வந்து, சூனியம் வைத்து விட்டார்கள் என்று, ஏதோ ஒரு நம்பூதிரியை போய் பார்த்ததெல்லாம் தனிக் கதை. அது நமக்குத் தேவையில்லை.


என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? ஆங், வித்தியாசமானவன். போன வருடம், 8.3 ரிக்டர் அளவில், நம்மூரில் பூமியதிர்ச்சி பதிவானது உங்களுக்கு நினைவிருக்கலாம். அது நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே, நம்மாளுக்கு எங்கே மணியடித்ததோ தெரியவில்லை. ரயிலேறி சொந்த ஊருக்கு போய் Safeகிவிட்டான். பாம்புகளும் எலிகளும் தான், இன்ஃப்ரா ஸோனிக் சப்த அலைகளின் எச்சரிக்கை உணர்வால், 3 நாட்களுக்கு முன்பே வளையிலிருந்து வெளியேறி, வேறிடம் போயின, என்று நிலநடுக்கத்துக்கு அடுத்த நாள் பேப்பரில் செய்தி வந்தது. ஏனோ நம்மாள் பெயர் வரவில்லை. அதற்காக வித்தியாசமானவன் இல்லை என்று சொல்லி விட முடியுமா?

இரவில் வானம் பார்ப்பது அவன் பொழுது போக்கு. பெரும்பாலான நட்சத்திரங்களின் பெயர்களைக்கூட, அடையாளம் காட்டிச் சொல்லுவான். நமக்குத்தான் அவன் சொல்வது சரியா தப்பா என்று தெரியாது. அன்று அப்படித்தான், புதிதாக ஒரு நட்சத்திரம் தெரிகிறதே, அது தெரியும் இடத்தில் இருக்கும் நட்சத்திரத்தின் பெயர் என்ன என்று நெட்டில் தேடி 'ஃபோட்டோஜெனிக்' என்று அறிந்து கொண்டான்; அது ஒரு நட்சத்திரமே அல்ல, பக்கத்து சூரிய குடும்பத்தின் ஒரு கோள் என்ற உபரித் தகவலோடு. ஆனால், சூரிய குடும்பக் கோள்களைத் தவிர வேறெந்தக் கோளையும், வெறுங்கண்களால் பார்க்க முடியாது என்பது அவனுக்கு தெரியுமா, என்று நமக்குத் தெரியாது.

அவன் இந்த சில வித்தியாசங்களை சமீப காலமாகத்தான் உணர்கிறான். அவனது வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால், இந்த இருபத்தி இரண்டு வயது வரை, வழக்கம் போல் இருபது வயதில் மூன்றாவது முறை காதலித்து, வழக்கம் போல் பதினெட்டு வயதில் சிகரெட் பிடித்து, வழக்கம் போல் பதினைந்து வயதில் பொதுத் தேர்வுக்கு விடிய விடிய படித்து, வழக்கம் போல் பத்து வயதில் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்து, வழக்கம் போல் ஆறு வயதில் சாக்பீஸும் குச்சியும் தின்று, வழக்கம் போல் 276 நாட்கள் அம்மாவின் கருவிலிருந்து என்று எல்லாமே, எல்லாமே வழக்கம் போல்தான் நடந்திருந்தன. இப்பொழுது சில மாதங்களாய்தான் வித்தியாசமாய் உணர்ந்தான்.

'என்ன இதெல்லாம்? நான் உண்மையிலேயே வித்தியாசமானவன்தானா? ஏன் இப்படி இருக்கிறேன்? ஏதாவது டாக்டரை பார்க்கலாமா?' என்றெல்லாம் அவன் மனம் குழம்ப ஆரம்பித்தது. 'ராமிடம் கேட்கலாம். அவன்தான் சரியான ஆள். பிரச்சனையை புரிந்து கொள்வான். அப்புறம் வேண்டுமானால் டாக்டரைப் பார்க்கலாம்'. ராம் அவனது நண்பன். கொஞ்சம் புத்திசாலி என்று நம்பப்படுபவன்.

ஆனால் ராமிடம் கேட்டபொழுது, "நீ சொல்றதெல்லாம் வச்சு பார்க்கும்பொழுது, அப்படியொன்னும் நீ வித்தியாசமானவன்னு எனக்குத் தோனலை.", அப்படின்னு சாதாரணமா சொல்லிட்டான்.

"என்னடா சொல்றே? இதெல்லாம் வித்தியாசமா ஒனக்குத் தோனலையா?"

ராம் அவனை நிதானமாக பார்த்துவிட்டு "இங்கே பாரு. இந்த ஒலகத்தில எல்லாரும் ஒரு விதத்துல வித்தியாசமானவங்கதான். சில பேரு பாம்பு பல்லியெல்லாம் வாய் வழியா விட்டு, மூக்கு வழியா வெளியே எடுப்பாங்க. சில பேர் கண்ணாடித் துண்டு, பிளேடுன்னு சாப்பிடுவாங்க. ஒரு சிலருக்கு 10 மாடி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்தாலும் ஒன்னுமே ஆகாது. சிலர் பத்து நிமிஷத்துக்கு மேல கூட மூச்ச அடக்கி இருப்பாங்க.

சில பேருக்கு பயிற்சி. சில பேருக்கு இயற்கையாவே அமைஞ்ச உடல்வாகு, சுற்றுச் சூழல். ஆனா, அதுக்காக அவங்களையெல்லாம் வித்தியாசமானவங்கன்னு சொல்ல முடியாது. அவங்களும் நார்மாலான மனுஷங்கதான்."

"ஆனா அவங்களும் நானும் ஒன்னா?"

"நீயும் அவங்கள மாதிரிதான். ஒன்னோட சில புலன்கள், கொஞ்சம் அதிகமா வேலை செய்யுது. அதுக்கு, ஒன்னோட உடல்வாகு, உணவு பழக்க வழக்கங்கள், சுற்றுச் சூழல்னு பல காரணங்கள் இருக்கலாம். இதுல ஏதாவது ஒன்னு மாறிச்சினாவோ, குறைஞ்சிச்சுன்னாவோ கூட, உன்னோட இந்த அதிகப்படி உணர்வுகள் குறைஞ்சு போய்டும். அதனால, வீணா அலட்டிக்காதே."

"இல்ல ராம். எனக்கென்னவோ இன்னும் 'நான் வித்தியாசமானவன்' அப்படின்னுதான் தோனுது"

"இப்ப நான் என்ன பண்ணினா, நீ நம்புவே? ம்ம்ம். சரி. இப்ப ஒனக்கு இந்த வித்தியாசமான புலனுணர்வு இருக்கிற மாதிரி, எனக்கும் ஒன்னு ரெண்டு வித்தியாசமான விஷயங்கள் செய்ய முடியும். அப்படி என்னால செய்ய முடியறத, உன்னால செய்ய முடியாத பட்சத்திலயாவது, நான் சொல்றத ஒத்துக்குவியா?"

"ம்ம். சரி." அரை மனதாக தலையாட்டினான் அவன்.

ராம், "ஒகே. அங்க அந்த ட்ராயர்ல, ஸ்டெதஸ்கோப் இருக்கும். எடுத்துட்டு வா". வந்தான். "அதை உன் காதில் மாட்டிகிட்டு, செஸ்ட் பீஸை, என் நெஞ்சில் வை". வைத்தான்.

"எத்தனை கேட்கிறது?"

"பத்து செகண்டுக்கு பத்து துடிப்பு"

"தொடர்ந்து கேட்டுகிட்டேயிரு" என்று சொல்லிவிட்டு, ராம் மெதுவாக கண்களை மூடினான். முதலில் ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை. இரண்டு நிமிடம் கழித்துதான் துடிப்புகளின் எண்ணிக்கை மெதுவாக குறைவதை உணர்ந்தான். பத்துக்கு பத்து துடித்து கொண்டிருந்தது, மெதுவாக பத்துக்கு எட்டு, பத்துக்கு ஆறு என்று குறைந்து கொண்டிருந்தது. ஏழாவது நிமிடத்தில் பத்துக்கு ஒரு துடிப்பு கூட கேட்கவில்லை. இருபதுக்கு ஒன்றுதான் கேட்டது. பின்னர் சிறிது சிறிதாக மறுபடி துடிப்புகள் அதிகரிக்க, பத்துக்கு இரண்டு, நான்கு, எட்டு, பத்து, ராம் கண்ணைத் திறந்தான்.

அவனுக்கு பயங்கர ஆச்சர்யம். "டேய் ராம். எப்படிறா?"

"கடுமையான யோகா. கொஞ்சம் கொஞ்சமா பயிற்சி பண்ணிகிட்டேன். ஆனாலும் எட்டு நிமிஷம்தான் அதிகம். அதுக்கு மேல என்னால் முடியலை. இப்ப சொல்லு ஒன்னால இப்படி பண்ண முடியுமா?"

"முடியாதுதான்."

"உன்னை விடு. இதுவரைக்கும், இந்த மாதிரி பண்ணக்கூடியவங்க எண்ணிக்கை ஒத்தைப் படையை தாண்டினதில்லை. அதுக்காக நான் என்ன வித்தியாசமானவனா?"

"இல்லை சாதாரணமானவன்தான்."

"அதே மாதிரிதான். ஒனக்கு ஒன்னும் கொம்பு முளைக்கலை. நீயும் சாதாரணமானவன்தான்."

"ம்ம்ம். அப்படித்தான் தோனுது"

"போய் நல்லா ரெஸ்ட் எடு. மனசை வீணா அலட்டிக்காதே."

வீட்டுக்குத் திரும்பி மொட்டைமாடியில் படுத்திருந்தவனின் மனதில் கேள்விகள், கேள்விகள். 'அப்படின்னா இந்த உலகத்தில் எல்லோருமே வித்தியாசமானவர்கள்தானா? கீழ் வீட்டில் செத்துப் போன எறும்பின் வாடையை நான் உணர்வது போல், வேறு யாராவதும் உணர்வார்களா? பக்கத்து மாடியில் பறக்கும் கொசுவின் சத்தம் எனக்குக் கேடபது போல் இன்னும் சில பேருக்கும் கேட்குமோ? அதோ, 'ஃபோட்டோஜெனிக்' கோளை நான் பார்த்துக் கொண்டிருப்பது போல், வேறு யாரும் கூட பார்த்துக் கொண்டிருப்பார்களோ' கேள்விகளின் அலுப்பில் அப்படியே தூங்கிப் போனான்.

தூங்கிக் கொண்டிருந்தவனின் தலையிலிருந்து, கொம்பு போல அந்த ஆண்டெனா முளைத்து, ஃபோட்டோஜெனிக்கை நோக்கித் திரும்பி, தன் வெளிச்சமில்லாத அலைகளை அனுப்பத் தொடங்கியது.
எல்லாம் சரிதான். அவன் தூங்கிய பிறகு நடந்ததெல்லாம் கூட, உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? எனென்றால், நான் வித்தியாசமானவன்.

Wednesday, March 05, 2008

C11699770B

என்று காற்றுத் திரையில் மிதந்து கொண்டிருந்த அந்த செவ்வக பெட்டிக்குள் எழுதி, அதே திரையில், பக்கத்தில் இருந்த 'விவரம்' என்றதை தொட்டேன்.

'In-Transit : Despatched from Delhi' என்பது 489வது தடவையாக என் கண்களில் எரிச்சலூட்டியது.

பொறுமை செத்துப் போய் எனது இன்டர்காமை இயக்கினேன்.

"சொல்லுங்க சார்" என்றது எதிர்முனை.

"உடனே என் கேபினுக்கு வா" சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்த 52வது செகண்டில் என் கேபினுக்கு வந்து விட்டான்.

"வா அன்பு. ஒரு பார்சல் அனுப்பினேன். இன்னும் போய்ச் சேரலை. அதான் உன்னைக் கூப்பிட்டேன்.". அன்பு - எங்கள் கம்பெனியின் கூரியர் டிபார்ட்மென்ட் இன்சார்ஜ்.

"எதுல அனுப்புனீங்க?"

"நேனோவிங்ஸ்"

"கொஞ்சம் பொறுங்க. நேனோவிங்ஸ் ஆளைப் பிடிக்கலாம்" என்றபடியே தன் 'அட்ரஸ்பாட்'ஐ விரித்து எதையோ தேடினான்.

மூலையில் இருந்த என் ஃபோனை அணுகி ஒரு நம்பரை ஒற்றி, தொடர்புக்கு காத்திருக்கையில்,

"நீங்க மைக்ரோ ஃபிளைட்ஸில் அனுப்பியிருக்கலாமே. எந்த ஊருக்கு அனுப்புனீங்க?"

"பணங்குடி. திருநெல்வேலிக்கு பக்கத்தில...."

"அங்க அவனுங்களுக்கு சர்வீஸ் இருக்காதோ?"

இதற்கு நான் பதில் சொல்ல வேண்டுமா என்று யோசித்து கொண்டிருக்கையில் தொடர்பு கிடைத்துவிட்டது.

"ஹலோ, நான் VEல இருந்து அன்பு பேசறேன். ஒரு பார்சல் அனுப்புனது, இன்னும் போய் சேரலை. என்னாச்சுன்னு தெரியனும்."

"பி.ஓ.டி நம்பரா? ஒன் செகண்ட்", அன்பு என்னைப் பார்க்குமுன் அந்தக் காகிதத்தை அவன் கண்களுக்கு நேராகப் பிடித்தேன்.

"C..டபிள் ஒன்.. சிக்ஸ்.. டபிள் நைன் டபிள் செவன் ஸீரோ.. B"

"அப்படியா? எப்ப போய் சேரும்?"

"என்ன சார் இப்படி பதில் சொல்றீங்க? யார்ட்ட கேட்டாத் தெரியும்?"

"நம்பர் கொடுங்க. நான் பேசறேன்." மறுமுனையில் கேட்ட எண்ணை குறித்து கொண்டான்.

"இவன் என்ன சொல்றான்னா, டெல்லில இருந்து அனுப்பியாச்சாம். அங்க எப்பப் போய்ச் சேரும்னு தெரியாதாம். அதான் யார்ட்ட கேட்டா தெரியும்னு கேட்டேன். ஒரு நம்பர் குடுத்து அவர்கிட்ட கேளுங்கன்றான்."

"டெல்லில இருந்து அனுப்பியாச்சுங்கறது, எனக்கு நீ சொல்லித்தான் தெரியனுமா? அதான் அவன் 'ஸைட்'லயே போட்டிருக்கானே, டெஸ்பாட்ச்ட் ஃப்ரம் டெல்லின்னு. அனுப்பி இவ்வளவு நேரமாகியும் அங்க போய் சேரலைன்னுதானே உன்னைக் கூப்பிட்டேன்." எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது.

நான் சொன்ன பிறகுதான் திரையை பார்த்தான். "பாரு எப்ப டெஸ்பாட்ச் ஆயிருக்கு? இன்னும் போய் சேரலை!"

"என்ன அனுப்பினீங்க? ஏதாவது முக்கியமானதா?"

"அது.... இன்னைக்கு என் வைஃபோட பர்த்டே. இப்போ ஊர்ல இருக்கா. அதான் அவளுக்கு ஒரு கிஃப்ட் அனுப்பினேன். ஆனா கூரியர்காரன் இப்படி சொதப்புறான்."

"அடப் பாவமே! நீங்க எங்கிட்ட குடுத்திருந்தீங்கன்னா, நான் மைக்ரோ ஃபிளைட்ஸ்ல அனுப்பியிருப்பேனே! மைக்ரோ ஃபிளைட்ஸ்னா, நமக்கு நிறைய ஆள் இருக்கு. நம்ம கம்பெனியோட சர்வீஸ் பூரா அவுங்கதானே பாக்கிறாங்க. அதுனால, ஏதாவது அனுப்புனா, அது எங்க இருந்தாலும் ட்ராக் பண்ணிரலாம். நேனோ விங்ஸ்ல அவ்வளவா பழக்கம் இல்லை. இனிமே எதாவது அனுப்புறதா இருந்தா எங்கிட்ட குடுங்க."

"சரி. இப்ப இதுக்கு என்ன பண்றது? ஏன் இவ்வளவு லேட் ஆகுது?"

"இருங்க. இந்த நம்பருக்கு ட்ரை பண்ணலாம்" என்றபடியே அதை ஒற்றினான்.

மீண்டும் அதே வழக்கமான ஆரம்ப உரையாடல்கள். அதற்கப்புறம்,
"டெல்லில இருந்து டெஸ்பாட்ச் ஆய்ருச்சு சார். அது எனக்கு உங்க சைட்லயே தெரியுது. இப்ப பார்சல் எங்கே இருக்கு? இவ்வளவு நேரமா அங்க ரிசீவ் ஆகுறதுக்கு?"

"ஓ!"

"அப்படியா?"

"இன்னும் எவ்வளவு நேரத்துல எக்ஸ்பெக்ட் பண்ணலாம்? ஏன்னா, கொஞ்சம் அர்ஜெண்ட்."

"ஓகே. நான் இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல கூப்பிடறேன்." தொடர்பை துண்டித்தான்.

"என்ன சொல்றான்னா, அவங்களுக்கு பணங்குடிக்கு சர்வீஸ் கிடையாதாம்..."

"என்னது? ஆனா நான் இதுக்கு முன்னாடி நிறைய தடவை அனுப்பியிருக்கேனே?!"

"அதான், அவனுக்கு சர்வீஸ் கிடையாதாம். திருநெல்வேலிக்குத்தான் சர்வீஸாம். பார்சல் இப்ப திருநெல்வேலிலதான் இருக்காம். அங்க(இ)ருந்து இவன் மைக்ரோ ஃபிளைட்ஸ்லதான் பணங்குடிக்கு அனுப்புவானாம். இவன் ஆஃபீஸ்லயிருந்து, மைக்ரோ ஃபிளைட்ஸ் ஆஃபீஸுக்கு போறதுக்குத்தான் இப்ப லேட் ஆவுது. அதான் அர்ஜெண்ட்னு சொன்னேன். பத்து நிமிஷத்துல அனுப்பிற்றேன்னு சொன்னார். ஒரு பதினைஞ்சு நிமிஷம் பார்ப்போம்." என்று சொல்லிவிட்டு அவன் வேலையை பார்க்கப் போனான்.

கொஞ்சம் எரிச்சலாயிருந்தது. இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை நேனோவிங்ஸின் வலைத்தளத்தை புதுப்பித்தேன். கொஞ்சம் முன்னேற்றமாய் 'Arrived at Tirunelveli - Route' என்பதும் நேரத்தோடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

எட்டாவது நிமிடம் - என் மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது.

எடுத்ததுமே, "தாங்க்யூ செல்லம்." சிணுங்கினாள்.

"வந்துருச்சா?"

"ம்ம். இப்பத்தான் வந்தது. பிரிக்கக் கூட இல்லை. முதல்ல உங்களுக்கு போன் பண்ணிரலாம்னு........" அரை மணி நேரம் பேசிவிட்டு லைனை கட் செய்தேன்.

இன்னும் எனது திரையில் நேனோவிங்ஸின் தளம்தான் விரிந்திருந்தது. ஒருமுறை அதை புதுப்பித்தேன். இப்பொழுது டெலிவரி விவரங்களும் அதில் வந்து விட்டன. எல்லா விவரங்களின் நேரத்தையும் பார்த்தேன்.

'In-Transit : Despatched from Delhi _______________________29-Feb-2080 11:18 am'
'Arrived at Tirunelveli - Route____________________________ 29-Feb-2080 11:23 am'
'Sent to Link Courier Service - No Direct Service ____________29-Feb-2080 11:25 am'
'Despatched from Link Courier __________________________29-Feb-2080 11:28 am'
'Consignment Delivered - Recd. Ackt. from Link Courier ______29-Feb-2080 11:33 am'


"சே! ஒரு பார்சலை அனுப்ப இந்த கூரியர்காரங்களுக்கு இவ்வளவு நேரமா?"