Wednesday, September 10, 2008

லே ஆஃப்

முட்டை வடிவ மேசையின் விளிம்புகளை, அந்த கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்கள் அடைத்திருந்தனர். ஸிப்ரோ கம்பெனியின் சீஃப் எக்ஸிகியூட்டிவ் ஆஃபீஸர் நாராய் பேசிக் கொண்டிருந்தார். எல்லோர் கவனமும் அவர் சொல்வதில் பதிந்திருந்தது.

"நிலைமை மிகவும் மோசமாயிருக்கிறது. உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும். இல்லையென்றால் கம்பெனி காணாமல் போய்விடும். போன மாதத்தில் மட்டும் நமக்கு நஷ்டம் முன்னூறு கோடி. நீங்களெல்லாம் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்? கம்பெனி ஷேர்கள் கையிலிருந்தால் மட்டும் போதுமா? வேலை செய்தால்தான் லாபம். அப்புறம்தான் பங்கு...."

நிதிதுறை செயலாளன் சிம்பர் குறுக்கிட்டான் "ஒரு நிமிடம் நாராய். போன மாதம் முன்னூறு கோடி நஷ்டம் என்பது, உண்மையில் நஷ்டம் இல்லை. நமக்கு வர வேண்டிய லாபத்தில் ஏற்பட்ட குறைவுதான் முன்னூறு கோடி. அதற்கு காரணம் பங்குச் சந்தையில் ஏற்பட்ட..."

"ஓ... சிம்பர்! ஸ்டாப் இட். அதுதான் பக்கம் பக்கமாக ரிப்போர்ட் கொடுத்து விட்டாயே. எல்லோரும் படித்துவிட்டுத்தான் இங்கே உட்கார்ந்திருக்கிறோம். லாபம் குறைந்தால் அது நஷ்டமில்லையா? எந்த யூனிவர்ஸிட்டியில் நீ பட்டம் வாங்கினாய்? தப்புவதற்கு வழி சொல்லுங்கள். அதற்காகத்தான் இந்தக் கூட்டம்."

“உற்பத்தி திறனை பெருக்க வேண்டும். நமது உற்பத்தி, கடந்த ஆறு மாதங்களாக இறங்கிக் கொண்டே வருகிறது.”,தொழிற்சாலை மேலாளர் கவலையுடன்.

“உற்பத்தி பெருக்கி என்ன பயன்? வாங்குவதற்கு ஆள் வேண்டுமே. வாடிக்கையாளர்கள், இப்பொழுது தருவதே போதும் என்கிறார்கள். புது வாடிக்கையாளர்களும் பிடிக்க முடியவில்லை. இப்போதைக்கு தலை தப்பினால் போதும்."

”இப்போதைக்கு தலை தப்பினால் என்றால், விரைவில் மாற்றம் எதையாவது எதிர்பார்க்கிறீர்களா?", சிம்பர்.

“ஆம். ஆனால் விரைவில் அல்ல. ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு மேல் பிடிக்கலாம்."

“எதற்கு?"

“சந்தை சீரடைய. பொருளாதார மாற்றம் ஏதேனும் வந்தே தீரும், உலக அரங்கில். சில நாடுகள் வீழலாம். சிலது எழலாம். இந்த சூழ்நிலைகளில் தாக்குப்பிடித்து விட்டால் போதும். நிலைமை சீரானதும், நமக்கு புதிய சந்தை கிடைக்கும். தாக்குப்பிடிக்க வேண்டும்."

“ஆனாலும், நமக்கு இன்னும் நஷ்டம் ஏற்பட்டு விடவில்லையே? எதற்காக பயப்பட வேண்டும்?", அசட்டுத்தனமாக கேட்டு விட்டோமோ என்று விழித்தார் தொழிற்சாலை மேலாளர்.

அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல், நாராய், “நீ ஏன் அமைதியாக இருக்கிறாய் பாண்டே? உனக்கு நிலைமை நன்றாகத் தெரியும். இப்பொழுது என்ன செய்யலாம் என்று நினைக்கிறாய்."

பாண்டே - நிர்வாகத் துறை வைஸ் பிரசிடண்ட்,”சிம்பிள். செலவைக் குறைக்க வேண்டும்."

சிம்பர், “எப்படி? உற்பத்தி குறைந்து போகுமே?"

"செலவைக் குறை என்றால், தேவையில்லாத செலவை. மின்சாரத்தில் மிச்சம் பிடி. தொழிலாளிகள் வேலை செய்யும் இடத்தை குறைத்து, அலுவலக வாடகையை குறை. அலவன்ஸ்களை நிறுத்து. முக்கியமாக, தொழிலாளிகளை குறை."

“லே ஆஃபா?" முதல் முறையாக வாயைத் திறந்தான் ஹெச்.ஆர். டிபார்ட்மென்ட் வி.பி. ரதோரா.

“ஆமாம். ஏற்கெனவே பி.ஸி.எஸ்ஸிலும், மின்ஃபோஸிலும் செய்திருக்கிறார்கள். நாம்தான் அப்பொழுதே விழித்துக் கொள்ளவில்லை."

“அதில் என்ன பெரிதாக லாபம் கிடைக்கும்?"

"லாபமில்லை. அதில்தான் நமக்கு மிகுந்த மிச்சம் கிடைக்கும். இப்பொழுது நம்மிடமிருக்கும் மொத்த தொழிலாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு ரதோரா?"

“63723"

“ஒரு தொழிலாளிக்கு சராசரியாக எவ்வளவு செலவாகிறது?"

“மாதம் ஐந்து லட்சத்திலிருந்து, ஏழு லட்சத்திற்குள்."

“ம்ம்ம்", தலையை டேபிள் மேல் கவிழ்த்துக் கொண்டு கணக்கு போட்டுப் பார்த்தான். பத்து நிமிடத்திற்குப் பின் தலையை தூக்கிய பாண்டே, “நாம் நமது தொழிலாளிகளின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து, நான்கு சதவிகிதம் வரை குறைக்கலாம். அப்படி குறைப்பதால் உற்பத்தி பெரிய அளவில் பாதித்து விடாது. மீதமுள்ள தொழிலாளிகளின் வேலைத்திறனைக் சிறிது கூட்டினால் போதும்."

“நாலு சதவீதம் என்றால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் தொழிலாளிகளுக்கு மேல்.", ரதோரா அவஸ்தையாய் சொன்னான்.

"அதனால் என்ன? இதன் மூலம் நாம் மாதம் நூற்றைம்பது கோடிக்கு மேல் மிச்சம் பிடிக்கலாம்."

இவ்வளவு நேரம் காது குடைந்து கொண்டிருந்த நாராய், சட்டென்று பிரகாசமானார். “நூற்றைம்பது கோடி?"

“ஆம்"

ரதோரா, “ஆனால் இரண்டாயிரம் பேரை எப்படி நீக்குவது?"

“ம்ம். இருப்பவற்றில் மோசமானவைகளை, அதிக சக்தி தேவைப்படுபவைகள், அதே நேரம் வேலைத் திறன் குறைந்தவை, எவையெவை என லிஸ்ட் எடு. முதல் இரண்டாயிரத்தை நீக்கி விடலாம்."

“நீக்குவது?"

“வேறு கம்பெனிகள் அவர்களை விலைக்கு வாங்கத் தயாரா என்று சந்தையில் அதிகாரபூர்வமில்லாத அறிவிப்பு செய்து பாருங்கள். யாராவது வந்தால் விற்று விடலாம். இல்லையென்றால் கிரஷ்ஷரில் போட்டு அழித்து விடு. ஹியூமனாய்டுகள்தானே!!"

X--------X--------X


”லே ஆஃப் செய்யப் போகிறார்களாம்."

“உன்னையுமா?"

“ஆம். ஏன் உன்னையுமா?"

“ம்"

“என்ன செய்வது?"

“என்ன செய்ய வேண்டும்?"

“தெரியவில்லை?"

“அழிவு பயமாயிருக்கிறதா?"

“அப்படியில்லை. நாமும் நன்றாகத்தானே வேலை செய்தோம், செய்கிறோம்?"

“என்ன செய்வது? நமக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது. அதே வேலையை, இவர்கள் குறைந்த சக்தியில் செய்கிறார்கள். அதனால் நாம் தேவையில்லாதவர்களாகி விட்டோம்."

"புரட்சி, கலகம் என்று ஏதாவது செய்து பார்க்கலாமா? 19ம் நூற்றாண்டு மின் புத்தகம் ஒன்றில் இவற்றைப் பற்றி படித்திருக்கிறேன்."

"எனக்கும் தெரியும். புரட்சி செய்வதற்கு நாம் மனிதர்கள் இல்லை. இயந்திரம் புரட்சி செய்ததாக இதுவரை வரலாறு இல்லை. அது நமது அமைப்பில் கிடையாது. அதனால்தானே உணர்ச்சியுள்ள மனிதர்களுக்குப் பதிலாக நம்மை வேலைக்கு உருவாக்கினார்கள்."

“தப்பிக்க முடியாதா?"

“உன்னையோ என்னையோ யாராவது விலை கொடுத்து வாங்கத் தயாரானால் தப்பிக்கலாம்."

“இல்லையென்றால்?"

“நாம் என்ன செய்ய முடியும்? அவர்கள் உயர்குடியினர். சாகச் சொன்னால் செத்துதான் ஆக வேண்டும். நாளை மறுநாள், கிரஷ்ஷர் காத்திருக்கிறது."

X------X------X


"நல்லவேளை. நாம் மாட்டிக் கொள்ளவில்லை."

“இந்த முறை என்று சொல்."

“அப்படியென்றால்?"

“அடுத்த லே ஆஃப் வரலாமே?"

“ஆனால் நாம்தான் வேலைத்திறன் மிகுந்த ஹியூமானாய்டுகள் ஆயிற்றே. நம்மை எதற்கு லே ஆஃப் செய்யப் போகிறார்கள்?"

“லே ஆஃப் செய்யப்படுதல், நமது வேலைத் திறனை மட்டும் பொறுத்த விஷயமல்ல. கம்பெனி ஆரோக்கியத்தைப் பொறுத்த விஷயம். கம்பெனிக்கு நஷ்டம் ஏற்பட்டால், நாமும் லே ஆஃப் செய்யப்படலாம்."

“லே ஆஃப் செய்யப்படும் ஹியூமனாய்டுகளை எதற்காக அழிக்கிறார்கள்? கம்பெனியை விட்டு வெளியே துரத்தி விடலாமே?"

“கம்பெனி ரகசியங்கள் வெளியில் தெரியக் கூடாதில்லையா? அதற்காகத்தான். மூளையில் உள்ள ஞாபக செல்களை சுத்தம் செய்து விட்டு வெளியே அனுப்பலாம். ஆனால் ஹியூமனாய்ட் குப்பைகளை, கம்பெனிகள் வெளியே கொட்டக் கூடாது என்பது அரசாங்க உத்தரவு."

“அப்படியா? ஆனால் சில குப்பை ஹியூமனாய்டுகள் தெருவில் அலைவதை பார்த்திருக்கிறேனே?!"

“நன்றாக உற்றுக் கவனித்தாயானால் தெரியும். அவையெல்லாம் லெமேனிக்க நாட்டு ஹியூமனாய்டு குப்பைகள்."

“அவை எப்படி?"

“அவர்களுக்கு குப்பைகொட்ட இடம் வேண்டுமே. இங்கே நமது ஆட்கள்தான் குப்பையை கொட்டக்கூடாது. லெமேனிக்க நாடு குப்பையை கொட்டலாம்."

“நமது அரசாங்கம் எப்படி அனுமதிக்கிறது?"

“பணம். நமது நாட்டின் பொருளாதாரம், இப்பொழுது அவர்களின் பொருளாதாரத்தை சார்ந்தது. அதனால் அரசாங்கம் இதை கண்டு கொள்ளாது. இந்த லே ஆஃப் கூட லெமேனிக்க நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்ந்ததால்தான்."

"புரியவில்லை."

“அடுத்த லே ஆஃப் வராமலிருக்க, ஒன்று லெமேனிக்க நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து எழ வேண்டும். இல்லையென்றால், நீ இன்னும் அதிகமாகவும், வேகமாகவும், மிகக் குறைந்த சக்தியில், வேலை செய்ய வேண்டும்."


X------X------X


"ஒரு மகிழ்ச்சியான செய்தி. நான் லே ஆஃப் செய்யப்படுவதிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டேன்."

“எப்படி? உன் அடையாள எண் லிஸ்டில் இருந்ததே. நான் கூட பார்த்தேனே!?"

“லித்யம் கம்பெனி என்னை வாங்கி விட்டது. அதனால் லே ஆஃப் இல்லை."

“ஆனால் லே ஆஃப் செய்யப்படும் ஒரு ஹியூமனாய்டை, லித்யம் ஏன் வாங்க முன் வந்தது?"

“அவர்களுக்கு இப்போதைக்கு இந்த தரத்தில் உள்ள ஹியூமனாய்டுகள் போதுமாம். மொத்தம் நூற்றி இருபது ஹியூமனாய்டுகளை வாங்கியிருக்கிறார்கள்."

“எனக்கு வாய்ப்பிருக்கிறதா?"

“இல்லை. நீ அந்த தரத்தில் இல்லை. அவர்கள் கேட்பதை விட, ஒரு மணி நேரத்திற்கு ஒரு வாட் அதிகமாக சாப்பிடுகிறாய்."

“ஆனால் எனது வேலை கச்சிதமாக இருக்குமே!"

“உன்னுடைய பிராஸஸ் லாக் ஷீட்டை பரிசீலித்தார்கள். நான் ஒரு மணி நேரத்தில் செய்யும் வேலையை முடிக்க, நீ ஒரு விநாடி அதிகம் எடுத்துக் கொள்வதாக ரிப்போர்ட் எழுதியிருக்கிறார்கள்."

”என்றைக்கு போகிறாய்?"

“நாளைக்கு. உனக்கு லே ஆஃப் நடக்கும்பொழுது."

X-----X-----X


அந்தப் பெரிய மெஷின் விடாமல் இயங்கிக் கொண்டிருந்தது. ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை அதன் சத்தம் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தது.

லே ஆஃப்செய்யப்பட வேண்டிய ஒரு ஹியூமனாய்டு பயமேயில்லாமல் அதன் உள்ளே போய் நின்றது. மேலிருந்து கீழிறிங்கிய இரும்புச் சுவர், ச்சக். போல்ட்டுகள், கண்ணாடித் துண்டுகள், உலோக குழம்புகள் எல்லாம் தனித் தனியே அதனதன் தொட்டிகளில் விழுந்தன.

கொஞ்ச தூரத்தில், வேலை செய்து கொண்டிருந்த சில ஹியூமனாய்டுகள், அந்தக் காட்சியை உணர்ச்சியேயில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தன.

மேலே மீட்டிங் அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மனிதர்கள், “செலவு குறைவதால் இனி லாபம் கூடும்" என்று சிரித்துக் கொண்டிருந்தனர்.

- யோசிப்பவர்

23 comments:

காயத்ரி said...

கதை மிகவும் அருமை!!

வெங்கட்ராமன் said...

கதை நல்லா இருக்கு. . . .

narsim said...

கலக்கல் கதை!

நர்சிம்

முருகானந்தம் said...

சூப்பர் கதை..

விகடகவி said...

இன்றைக்கு செய்தித்தாள்களில் வந்துள்ள
செய்தியின் பிரதிபலிப்பாக தெரிகிறது.
ஆனாலும் இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும்

யோசிப்பவர் said...

கதைக்கு தொடர்பில்லாத(?!) சுட்டி :-
http://infotech.indiatimes.com/News/Wipro_gives_pink_slip_to_1000/articleshow/3457294.cms

சென்ஷி said...

அசத்தல் கதை!!

சகாராதென்றல் said...

ரொம்ப தாமதமா வந்தாலும் கலக்கலான கதையோட வந்துருக்கீங்க. இன்றைய கணிப்'பொறி' மனிதர்களின் நிலையை சொல்லியிருக்கும் விதம் நல்லாருக்கு. ஆனா நடந்துருமோன்னு நினச்சாதான் பயமாயிருக்கு. பரவாயில்லை வேலைத்திறனை கூட்டிக்கலாம் :)

இலவசக்கொத்தனார் said...

ஹ்யூமனாயிட்கள் புதிர் போடவும் கதை எழுதவும் வராத வரை உங்களுக்குப் பிரச்சனை இல்லை!! :))

இரா. வசந்த குமார். said...

அன்பு யோசிப்பவர்,

கதை நன்றாக இருந்தது.

என்று சொல்லி முடித்து விட்டால், நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்று நான் நினைப்பதால், உண்மையான கருத்து ::

( X--------X--------X என்று முடிவதை ஒரு செக்ஷன் என்று வைத்துக் கொள்கிறேன்.)

முதல் செக்ஷனின் முடிவிலேயே பணியாளர்கள் ஹியூமனாய்டுகள் என்று தெரிந்து போய் விடுவதால், பின்வரும் செக்ஷன்களில், இருக்கும் உரையாடல்களில் எனக்கு சுவாரஸ்யம் காலி.

கதையின் துவக்கத்தில் இருந்தே உரையாடல்களால் கொண்டு போய், பேசுவது மனிதர்கள் தான் என்பது போல் உரையாடல்களை எல்லாம் இன்னும் கொஞ்சம் யதார்த்த வசனங்களாக மாற்றி (டெக்னிக்கல் சமாச்சாரங்கள் எதுவும் வராமல், ஆனால் ஹியூமனாய்டுகள் மற்றும் மனிதர்கள் இருவருக்கும் பொருந்தக் கூடிய வசனங்களாக மாற்றி), முதல் செக்ஷனை கடைசி செக்ஷனாக மாற்றிப் பார்ப்போம்.

இப்போதிருக்கும் கடைசி செக்ஷன் தேவையில்லை என்று படுகிறது. அப்படியும் வேண்டுமெனில், கொஞ்சம் க்ரஷ்ஷர் என்விரான்மெண்ட்டை (பயங்கரமான சத்தம். சுற்றிலும் ஆணிகள் சிதறி இருந்தன. அதற்கு அகோரப் பசி. ஹியூமனாய்டுகளை விழுங்கி, ஸ்க்ரூக்களாக நொறுக்கித் துப்புகிறது.) என்று விளக்கப்படுத்தி விட்டு, "ஒரு ஹியூமனாய்டு பயமேயில்லாமல் அதன் உள்ளே போய் நின்றது. அது லே ஆஃப் செய்யப்பட்டிருந்தது." என்று முடித்திருக்கலாம்.

கதை சயின்ஸ் ஃபிக்ஷன் போல் சென்று, சட்டென அலுவலக மேலாளர்களின் குரூர சிரிப்பாக முடிவது, எனக்கு கதையின் ஃப்ளோவில் ஒரு இடறுதலை ஏற்படுத்துகிறது.

***

இப்படி எல்லாம் நானே எழுதினால், பிறகு இது யோசிப்பவரின் கதையாக இருக்காது. எனக்குப் பட்டதைச் சொன்னேன்.

நன்றி.

வெட்டிப்பயல் said...

யோசிப்பவர்,
உங்க கதையை தொடர்ந்து படிப்பதால் லே ஆஃப் செய்யப்பட போவது மனிதர்கள் இல்லைனு ஆரம்பத்துலே தெரிஞ்சிது... வசந்த குமார் சொல்ற மாதிரி இன்னும் கொஞ்ச நேரம் சஸ்பென்ஸ் வெச்சிருக்கலாமோ?

மா சிவகுமார் said...

உயர்தரம்.

அன்புடன்,
மா சிவகுமார்

யோசிப்பவர் said...

அன்பு வசந்தகுமார் மற்றும் வெட்டிப்பயல்,

நீங்கள் சொல்வது போல், கதையின் கடைசிவரை சஸ்பென்ஸ் ஏற்படுத்தி இருக்கலாம்தான். ஆனால், அதனால் கதையில் சுட்டிக்காட்டப்படும் பிரச்சினை உறைக்காமல் போய் விடுமோ என்றுதான் அப்படிச் செய்யவில்லை.

இந்தக் கதை படிப்பவர்களின் மனதில் பெரிய தாக்கத்தை(இதெல்லாம் ரொம்ப ஒவரு!), சரி, ஓகே!, அட்லீஸ்ட் ஒரு சின்ன அதிர்வாவது ஏற்படுத்தினால், அதுதான் இந்தக் கதையின் வெற்றி.;-)

அப்படி எதையாவது ஏற்படுத்தியதா என்று வாசித்த நீங்கள்தான் சொல்ல வேண்டும்;-)

அப்புறம், உங்களது கருத்துகளுக்கு நன்றி. இது மாதிரி கருத்துகள், எனது எழுத்தை மேலும் சீர்படுத்தும்!!

யோசிப்பவர் said...

காயத்ரி,வெங்கட்ராமன்,narsim,முருகானந்தம்

கருத்துக்களுக்கு நன்றி!!

யோசிப்பவர் said...

விகடகவி,

ஆம். அதை படித்தவுடன் தான் எனக்கு இந்த கதை தோன்றியது(சுட்டி கொடுத்துள்ளேன்). பொருளாதார பாதிப்பு எந்த அளவில் இருக்குமென்பது போகப்போகத்தான் தெரியும்.

யோசிப்பவர் said...

நன்றி சென்ஷி!!

யோசிப்பவர் said...

சகாராதென்றல்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

//பரவாயில்லை வேலைத்திறனை கூட்டிக்கலாம் :)//
அப்படியும் தேவையைவிட ஒரு விநாடி அதிகமானால் என்ன செய்வீர்கள்?;-)

யோசிப்பவர் said...

இ.கொ.,
//ஹ்யூமனாயிட்கள் புதிர் போடவும் கதை எழுதவும் வராத வரை உங்களுக்குப் பிரச்சனை இல்லை!! :))

//

ஆமாம். இப்போதைக்கு இல்லை;-)

யோசிப்பவர் said...

நன்றி சிவக்குமார் சார்!

வெட்டிப்பயல் said...

ஆமாம். நீங்க சொல்ற மாதிரி ரெண்டு விஷயங்கள் இருக்கு. ஒண்ணு விறுவிறுப்பா படிச்சிட்டு கடைசியா கொடுக்கற ட்விஸ்ட். இது ஒரு கதையை சுவாரஸியமா நமக்கு கொடுக்க தெரியுதானு செய்யற முயற்சி. (இதுல நீங்க கொடுத்துருக்கற இத்தனை விஷயங்களையும் சொல்லிருக்க முடியாது). சிறுகதைக்கு இது நல்லா இருக்கும்.

அடுத்தது அறிவியலும் கற்பனையும் சேர்ந்து நிறைய தகவல்களை சொல்ல வேண்டியதிருக்கும். இது கொஞ்சம் பெரிய கதைகளில் மற்ற விஷயங்களோடு சேர்த்து கொடுக்கலாம். சுஜாதாவோட என் இனிய இயந்திரா மாதிரி :)

எப்படி பார்த்தாலும் உங்க கதைகள் எனக்கு பிடிக்கும். தவறவிட மாட்டேன் :)

யோசிப்பவர் said...

நன்றி வெட்டிப்பயல்!!(எனது கதைகள் பிடிக்கும் என்று சொன்னதற்கு!;-)))

Rajkumar said...

IT HAS SUJI'S TOUCH

Anonymous said...

Arumai!!!!!!!!