அவன் வித்தியாசமானவன். நிஜமாகத்தான். கொஞ்சமோ, ரொம்பவோ வித்தியாசமானவன்.
ரயிலில் போய் கொண்டிருக்கும் பொழுது, பக்கத்து டிராக்கில் இன்னொரு ரயில் எதிராகவோ, இணையாகவோ போகும் பொழுது, சாதாரணமாக நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
1) தியரி ஆஃப் ரிலேட்டிவிடி?!
2) அழகான பெண் யாராவது தெரிகிறாளா?
3) ஏதோ ஒரு ரயில்!
நீங்கள் மூன்றாவதை தேர்ந்தெடுத்தால் கதையை தொடர்ந்து படிப்பதை இப்பொழுதே நிறுத்தி விடலாம். ஏனென்றால் இவன் முதல் ரகம். சரி, இதில் என்ன பெரிய வித்தியாசம்? நிறைய பேருக்கு தோன்றுவதுதானே என்கிறீர்களா? இது சாம்பிள்தான். இன்னும் நிறைய இருக்கிறது வித்தியாசம்!
ஒரு தடவை இப்படித்தான், பத்தாவது வீட்டில் சிக்கன் நஜ்ஜட்ஸ் சமைத்தார்கள். இங்கிருந்தே 28 சதவீத சிக்கன் அழுகிவிட்டது, வாசனையிலேயே இவனுக்கு தெரிந்தது. அவர்கள் வீட்டில் போய் ஒரு நல்லெண்ணத்தோடு சொல்ல, அவர்களுக்கு இவனை யாரென்றே தெரியாததால், திட்டி அனுப்பி விட்டனர். அதற்கப்புறம் அவர்கள் குடும்பத்திற்கே வயிறு வலி வந்து, சூனியம் வைத்து விட்டார்கள் என்று, ஏதோ ஒரு நம்பூதிரியை போய் பார்த்ததெல்லாம் தனிக் கதை. அது நமக்குத் தேவையில்லை.
என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? ஆங், வித்தியாசமானவன். போன வருடம், 8.3 ரிக்டர் அளவில், நம்மூரில் பூமியதிர்ச்சி பதிவானது உங்களுக்கு நினைவிருக்கலாம். அது நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே, நம்மாளுக்கு எங்கே மணியடித்ததோ தெரியவில்லை. ரயிலேறி சொந்த ஊருக்கு போய் Safeகிவிட்டான். பாம்புகளும் எலிகளும் தான், இன்ஃப்ரா ஸோனிக் சப்த அலைகளின் எச்சரிக்கை உணர்வால், 3 நாட்களுக்கு முன்பே வளையிலிருந்து வெளியேறி, வேறிடம் போயின, என்று நிலநடுக்கத்துக்கு அடுத்த நாள் பேப்பரில் செய்தி வந்தது. ஏனோ நம்மாள் பெயர் வரவில்லை. அதற்காக வித்தியாசமானவன் இல்லை என்று சொல்லி விட முடியுமா?
இரவில் வானம் பார்ப்பது அவன் பொழுது போக்கு. பெரும்பாலான நட்சத்திரங்களின் பெயர்களைக்கூட, அடையாளம் காட்டிச் சொல்லுவான். நமக்குத்தான் அவன் சொல்வது சரியா தப்பா என்று தெரியாது. அன்று அப்படித்தான், புதிதாக ஒரு நட்சத்திரம் தெரிகிறதே, அது தெரியும் இடத்தில் இருக்கும் நட்சத்திரத்தின் பெயர் என்ன என்று நெட்டில் தேடி 'ஃபோட்டோஜெனிக்' என்று அறிந்து கொண்டான்; அது ஒரு நட்சத்திரமே அல்ல, பக்கத்து சூரிய குடுமபத்தின் ஒரு கோள் என்ற உபரித் தகவலோடு. ஆனால், சூரிய குடும்பக் கோள்களைத் தவிர வேறெந்தக் கோளையும், வெறுங்கண்களால் பார்க்க முடியாது என்பது அவனுக்கு தெரியுமா, என்று நமக்குத் தெரியாது.
அவன் இந்த சில வித்தியாசங்களை சமீப காலமாகத்தான் உணர்கிறான். அவனது வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால், இந்த இருபத்தி இரண்டு வயது வரை, வழக்கம் போல் இருபது வயதில் மூன்றாவது முறை காதலித்து, வழக்கம் போல் பதினெட்டு வயதில் சிகரெட் பிடித்து, வழக்கம் போல் பதினைந்து வயதில் பொதுத் தேர்வுக்கு விடிய விடிய படித்து, வழக்கம் போல் பத்து வயதில் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்து, வழக்கம் போல் ஆறு வயதில் சாக்பீஸும் குச்சியும் தின்று, வழக்கம் போல் 276 நாட்கள் அம்மாவின் கருவிலிருந்து என்று எல்லாமே, எல்லாமே வழக்கம் போல்தான் நடந்திருந்தன. இப்பொழுது சில மாதங்களாய்தான் வித்தியாசமாய் உணர்ந்தான்.
'என்ன இதெல்லாம்? நான் உண்மையிலேயே வித்தியாசமானவன்தானா? ஏன் இப்படி இருக்கிறேன்? ஏதாவது டாக்டரை பார்க்கலாமா?' என்றெல்லாம் அவன் மனம் குழம்ப ஆரம்பித்தது. 'ராமிடம் கேட்கலாம். அவன்தான் சரியான ஆள். பிரச்சனையை புரிந்து கொள்வான். அப்புறம் வேண்டுமானால் டாக்டரைப் பார்க்கலாம்'. ராம் அவனது நண்பன். கொஞ்சம் புத்திசாலி என்று நம்பப்படுபவன்.
ஆனால் ராமிடம் கேட்டபொழுது, "நீ சொல்றதெல்லாம் வச்சு பார்க்கும்பொழுது, அப்படியொன்னும் நீ வித்தியாசமானவன்னு எனக்குத் தோனலை.", அப்படின்னு சாதாரணமா சொல்லிட்டான்.
"என்னடா சொல்றே? இதெல்லாம் வித்தியாசமா ஒனக்குத் தோனலையா?"
ராம் அவனை நிதானமாக பார்த்துவிட்டு "இங்கே பாரு. இந்த ஒலகத்தில எல்லாரும் ஒரு விதத்துல வித்தியாசமானவங்கதான். சில பேரு பாம்பு பல்லியெல்லாம் வாய் வழியா விட்டு, மூக்கு வழியா வெளியே எடுப்பாங்க. சில பேர் கண்ணாடித் துண்டு, பிளேடுன்னு சாப்பிடுவாங்க. ஒரு சிலருக்கு 10 மாடி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்தாலும் ஒன்னுமே ஆகாது. சிலர் பத்து நிமிஷத்துக்கு மேல கூட மூச்ச அடக்கி இருப்பாங்க.
சில பேருக்கு பயிற்சி. சில பேருக்கு இயற்கையாவே அமைஞ்ச உடல்வாகு, சுற்றுச் சூழல். ஆனா, அதுக்காக அவங்களையெல்லாம் வித்தியாசமானவங்கன்னு சொல்ல முடியாது. அவங்களும் நார்மாலான மனுஷங்கதான்."
"ஆனா அவங்களும் நானும் ஒன்னா?"
"நீயும் அவங்கள மாதிரிதான். ஒன்னோட சில புலன்கள், கொஞ்சம் அதிகமா வேலை செய்யுது. அதுக்கு, ஒன்னோட உடல்வாகு, உணவு பழக்க வழக்கங்கள், சுற்றுச் சூழல்னு பல காரணங்கள் இருக்கலாம். இதுல ஏதாவது ஒன்னு மாறிச்சினாவோ, குறைஞ்சிச்சுன்னாவோ கூட, உன்னோட இந்த அதிகப்படி உணர்வுகள் குறைஞ்சு போய்டும். அதனால, வீணா அலட்டிக்காதே."
"இல்ல ராம். எனக்கென்னவோ இன்னும் 'நான் வித்தியாசமானவன்' அப்படின்னுதான் தோனுது"
"இப்ப நான் என்ன பண்ணினா, நீ நம்புவே? ம்ம்ம். சரி. இப்ப ஒனக்கு இந்த வித்தியாசமான புலனுணர்வு இருக்கிற மாதிரி, எனக்கும் ஒன்னு ரென்டு வித்தியாசமான விஷயங்கள் செய்ய முடியும். அப்படி என்னால செய்ய முடியறத, உன்னால செய்ய முடியாத பட்சத்திலயாவது, நான் சொல்றத ஒத்துக்குவியா?"
"ம்ம். சரி." அரை மனதாக தலையாட்டினான் அவன்.
ராம், "ஒகே. அங்க அந்த ட்ராயர்ல, ஸ்டெதஸ்கோப் இருக்கும். எடுத்துட்டு வா". வந்தான். "அதை உன் காதில் மாட்டிகிட்டு, செஸ்ட் பீஸை, என் நெஞ்சில் வை". வைத்தான்.
"எத்தனை கேட்கிறது?"
"பத்து செகண்டுக்கு பத்து துடிப்பு"
"தொடர்ந்து கேட்டுகிட்டேயிரு" என்று சொல்லிவிட்டு, ராம் மெதுவாக கண்களை மூடினான். முதலில் ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை. இரண்டு நிமிடம் கழித்துதான் துடிப்புகளின் எண்ணிக்கை மெதுவாக குறைவதை உணர்ந்தான். பத்துக்கு பத்து துடித்து கொண்டிருந்தது, மெதுவாக பத்துக்கு எட்டு, பத்துக்கு ஆறு என்று குறைந்து கொண்டிருந்தது. ஏழாவது நிமிடத்தில் பத்துக்கு ஒரு துடிப்பு கூட கேட்கவில்லை. இருபதுக்கு ஒன்றுதான் கேட்டது. பின்னர் சிறிது சிறிதாக மறுபடி துடிப்புகள் அதிகரிக்க, பத்துக்கு இரண்டு, நான்கு, எட்டு, பத்து, ராம் கண்ணைத் திறந்தான்.
அவனுக்கு பயங்கர ஆச்சர்யம். "டேய் ராம். எப்படிறா?"
"கடுமையான யோகா. கொஞ்சம் கொஞ்சமா பயிற்சி பண்ணிகிட்டேன். ஆனாலும் எட்டு நிமிஷம்தான் அதிகம். அதுக்கு மேல என்னால் முடியலை. இப்ப சொல்லு ஒன்னால இப்படி பண்ண முடியுமா?"
"முடியாதுதான்."
"உன்னை விடு. இதுவரைக்கும், இந்த மாதிரி பண்ணக்கூடியவங்க எண்ணிக்கை ஒத்தைப் படையை தாண்டினதில்லை. அதுக்காக நான் என்ன வித்தியாசமானவனா?"
"இல்லை சாதாரணமானவன்தான்."
"அதே மாதிரிதான். ஒனக்கு ஒன்னும் கொம்பு முளைக்கலை. நீயும் சாதாரணமானவன்தான்."
"ம்ம்ம். அப்படித்தான் தோனுது"
"போய் நல்லா ரெஸ்ட் எடு. மனசை வீணா அலட்டிக்காதே."
வீட்டுக்குத் திரும்பி மொட்டைமாடியில் படுத்திருந்தவனின் மனதில் கேள்விகள், கேள்விகள். 'அப்படின்னா இந்த உலகத்தில் எல்லோருமே வித்தியாசமானவர்கள்தானா? கீழ் வீட்டில் செத்துப் போன எறும்பின் வாடையை நான் உணர்வது போல், வேறு யாராவதும் உணர்வார்களா? பக்கத்து மாடியில் பறக்கும் கொசுவின் சத்தம் எனக்குக் கேடபது போல் இன்னும் சில பேருக்கும் கேட்குமோ? அதோ, 'ஃபோட்டோஜெனிக்' கோளை நான் பார்த்துக் கொண்டிருப்பது போல், வேறு யாரும் கூட பார்த்துக் கொண்டிருப்பார்களோ' கேள்விகளின் அலுப்பில் அப்படியே தூங்கிப் போனான்.
தூங்கிக் கொண்டிருந்தவனின் தலையிலிருந்து, கொம்பு போல அந்த ஆண்டெனா முளைத்து, ஃபோட்டோஜெனிக்கை நோக்கித் திரும்பி, தன் வெளிச்சமில்லாத அலைகளை அனுப்பத் தொடங்கியது.
எல்லாம் சரிதான். அவன் தூங்கிய பிறகு நடந்ததெல்லாம் கூட, உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? எனென்றால், நான் வித்தியாசமானவன்.
Friday, April 04, 2008
வித்தியாசம்
Wednesday, March 05, 2008
C11699770B
என்று காற்றுத் திரையில் மிதந்து கொண்டிருந்த அந்த செவ்வக பெட்டிக்குள் எழுதி, அதே திரையில், பக்கத்தில் இருந்த 'விவரம்' என்றதை தொட்டேன்.
'In-Transit : Despatched from Delhi' என்பது 489வது தடவையாக என் கண்களில் எரிச்சலூட்டியது.
பொறுமை செத்துப் போய் எனது இன்டர்காமை இயக்கினேன்.
"சொல்லுங்க சார்" என்றது எதிர்முனை.
"உடனே என் கேபினுக்கு வா" சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்த 52வது செகண்டில் என் கேபினுக்கு வந்து விட்டான்.
"வா அன்பு. ஒரு பார்சல் அனுப்பினேன். இன்னும் போய்ச் சேரலை. அதான் உன்னைக் கூப்பிட்டேன்.". அன்பு - எங்கள் கம்பெனியின் கூரியர் டிபார்ட்மென்ட் இன்சார்ஜ்.
"எதுல அனுப்புனீங்க?"
"நேனோவிங்ஸ்"
"கொஞ்சம் பொறுங்க. நேனோவிங்ஸ் ஆளைப் பிடிக்கலாம்" என்றபடியே தன் 'அட்ரஸ்பாட்'ஐ விரித்து எதையோ தேடினான்.
மூலையில் இருந்த என் ஃபோனை அணுகி ஒரு நம்பரை ஒற்றி, தொடர்புக்கு காத்திருக்கையில்,
"நீங்க மைக்ரோ ஃபிளைட்ஸில் அனுப்பியிருக்கலாமே. எந்த ஊருக்கு அனுப்புனீங்க?"
"பணங்குடி. திருநெல்வேலிக்கு பக்கத்தில...."
"அங்க அவனுங்களுக்கு சர்வீஸ் இருக்காதோ?"
இதற்கு நான் பதில் சொல்ல வேண்டுமா என்று யோசித்து கொண்டிருக்கையில் தொடர்பு கிடைத்துவிட்டது.
"ஹலோ, நான் VEல இருந்து அன்பு பேசறேன். ஒரு பார்சல் அனுப்புனது, இன்னும் போய் சேரலை. என்னாச்சுன்னு தெரியனும்."
"பி.ஓ.டி நம்பரா? ஒன் செகண்ட்", அன்பு என்னைப் பார்க்குமுன் அந்தக் காகிதத்தை அவன் கண்களுக்கு நேராகப் பிடித்தேன்.
"C..டபிள் ஒன்.. சிக்ஸ்.. டபிள் நைன் டபிள் செவன் ஸீரோ.. B"
"அப்படியா? எப்ப போய் சேரும்?"
"என்ன சார் இப்படி பதில் சொல்றீங்க? யார்ட்ட கேட்டாத் தெரியும்?"
"நம்பர் கொடுங்க. நான் பேசறேன்." மறுமுனையில் கேட்ட எண்ணை குறித்து கொண்டான்.
"இவன் என்ன சொல்றான்னா, டெல்லில இருந்து அனுப்பியாச்சாம். அங்க எப்பப் போய்ச் சேரும்னு தெரியாதாம். அதான் யார்ட்ட கேட்டா தெரியும்னு கேட்டேன். ஒரு நம்பர் குடுத்து அவர்கிட்ட கேளுங்கன்றான்."
"டெல்லில இருந்து அனுப்பியாச்சுங்கறது, எனக்கு நீ சொல்லித்தான் தெரியனுமா? அதான் அவன் 'ஸைட்'லயே போட்டிருக்கானே, டெஸ்பாட்ச்ட் ஃப்ரம் டெல்லின்னு. அனுப்பி இவ்வளவு நேரமாகியும் அங்க போய் சேரலைன்னுதானே உன்னைக் கூப்பிட்டேன்." எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது.
நான் சொன்ன பிறகுதான் திரையை பார்த்தான். "பாரு எப்ப டெஸ்பாட்ச் ஆயிருக்கு? இன்னும் போய் சேரலை!"
"என்ன அனுப்பினீங்க? ஏதாவது முக்கியமானதா?"
"அது.... இன்னைக்கு என் வைஃபோட பர்த்டே. இப்போ ஊர்ல இருக்கா. அதான் அவளுக்கு ஒரு கிஃப்ட் அனுப்பினேன். ஆனா கூரியர்காரன் இப்படி சொதப்புறான்."
"அடப் பாவமே! நீங்க எங்கிட்ட குடுத்திருந்தீங்கன்னா, நான் மைக்ரோ ஃபிளைட்ஸ்ல அனுப்பியிருப்பேனே! மைக்ரோ ஃபிளைட்ஸ்னா, நமக்கு நிறைய ஆள் இருக்கு. நம்ம கம்பெனியோட சர்வீஸ் பூரா அவுங்கதானே பாக்கிறாங்க. அதுனால, ஏதாவது அனுப்புனா, அது எங்க இருந்தாலும் ட்ராக் பண்ணிரலாம். நேனோ விங்ஸ்ல அவ்வளவா பழக்கம் இல்லை. இனிமே எதாவது அனுப்புறதா இருந்தா எங்கிட்ட குடுங்க."
"சரி. இப்ப இதுக்கு என்ன பண்றது? ஏன் இவ்வளவு லேட் ஆகுது?"
"இருங்க. இந்த நம்பருக்கு ட்ரை பண்ணலாம்" என்றபடியே அதை ஒற்றினான்.
மீண்டும் அதே வழக்கமான ஆரம்ப உரையாடல்கள். அதற்கப்புறம்,
"டெல்லில இருந்து டெஸ்பாட்ச் ஆய்ருச்சு சார். அது எனக்கு உங்க சைட்லயே தெரியுது. இப்ப பார்சல் எங்கே இருக்கு? இவ்வளவு நேரமா அங்க ரிசீவ் ஆகுறதுக்கு?"
"ஓ!"
"அப்படியா?"
"இன்னும் எவ்வளவு நேரத்துல எக்ஸ்பெக்ட் பண்ணலாம்? ஏன்னா, கொஞ்சம் அர்ஜெண்ட்."
"ஓகே. நான் இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல கூப்பிடறேன்." தொடர்பை துண்டித்தான்.
"என்ன சொல்றான்னா, அவங்களுக்கு பணங்குடிக்கு சர்வீஸ் கிடையாதாம்..."
"என்னது? ஆனா நான் இதுக்கு முன்னாடி நிறைய தடவை அனுப்பியிருக்கேனே?!"
"அதான், அவனுக்கு சர்வீஸ் கிடையாதாம். திருநெல்வேலிக்குத்தான் சர்வீஸாம். பார்சல் இப்ப திருநெல்வேலிலதான் இருக்காம். அங்க(இ)ருந்து இவன் மைக்ரோ ஃபிளைட்ஸ்லதான் பணங்குடிக்கு அனுப்புவானாம். இவன் ஆஃபீஸ்லயிருந்து, மைக்ரோ ஃபிளைட்ஸ் ஆஃபீஸுக்கு போறதுக்குத்தான் இப்ப லேட் ஆவுது. அதான் அர்ஜெண்ட்னு சொன்னேன். பத்து நிமிஷத்துல அனுப்பிற்றேன்னு சொன்னார். ஒரு பதினைஞ்சு நிமிஷம் பார்ப்போம்." என்று சொல்லிவிட்டு அவன் வேலையை பார்க்கப் போனான்.
கொஞ்சம் எரிச்சலாயிருந்தது. இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை நேனோவிங்ஸின் வலைத்தளத்தை புதுப்பித்தேன். கொஞ்சம் முன்னேற்றமாய் 'Arrived at Tirunelveli - Route' என்பதும் நேரத்தோடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
எட்டாவது நிமிடம் - என் மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது.
எடுத்ததுமே, "தாங்க்யூ செல்லம்." சிணுங்கினாள்.
"வந்துருச்சா?"
"ம்ம். இப்பத்தான் வந்தது. பிரிக்கக் கூட இல்லை. முதல்ல உங்களுக்கு போன் பண்ணிரலாம்னு........" அரை மணி நேரம் பேசிவிட்டு லைனை கட் செய்தேன்.
இன்னும் எனது திரையில் நேனோவிங்ஸின் தளம்தான் விரிந்திருந்தது. ஒருமுறை அதை புதுப்பித்தேன். இப்பொழுது டெலிவரி விவரங்களும் அதில் வந்து விட்டன. எல்லா விவரங்களின் நேரத்தையும் பார்த்தேன்.
'In-Transit : Despatched from Delhi _______________________29-Feb-2080 11:18 am'
'Arrived at Tirunelveli - Route____________________________ 29-Feb-2080 11:23 am'
'Sent to Link Courier Service - No Direct Service ____________29-Feb-2080 11:25 am'
'Despatched from Link Courier __________________________29-Feb-2080 11:28 am'
'Consignment Delivered - Recd. Ackt. from Link Courier ______29-Feb-2080 11:33 am'
"சே! ஒரு பார்சலை அனுப்ப இந்த கூரியர்காரங்களுக்கு இவ்வளவு நேரமா?"
Tuesday, November 27, 2007
மர்டர் மிஸ்ட்ரி - அத்தியாயம் ஈ
கடம்பூர் நகர், சம்பூவரையர் என்னும் சிற்றரசர்கள் ஆட்சி செய்த இடம். சோழ நாட்டிற்கு கீழே, கடம்பூர் எல்லைக்குள் மட்டும், வரி வசூலித்து, ஆட்சி நிர்வாகம் செய்ய அனுமதி உடைய சிற்றரசு. தொலைவில் அரண்மனை கோட்டைச் சுவர் நீண்டு, உயர்ந்து இருந்தது. அதற்கு உள்ளே புலிக்கொடி பறந்தது. கோட்டை மதிலுக்கு வெளியே அகலமான அகழி இருக்க, அதனுள்ளே சேறும், நீறும், முதலையும் இருந்தது.
அகழியை ஒட்டி சிறிது தூரம் நடந்தேன். அரண்மனைக்கு உள்ளே எப்படி செல்வது? முகப்பு வாயில் வழியே நுழைந்தால், காவலனின் பல கேள்விகளுக்கு பதில் கூற வேண்டியது வரும். அது ரிஸ்க். காலமித்ராவில் அட்சரேகை டிகிரி செகண்டில் சிறிது மாற்றம் ஏற்படுத்தி உள்ளே செல்லலாம். எனினும், காலமித்ராவை அரண்மனைக்கு உள்ளே பாதுகாப்பாய் மறைத்து வைப்பது எளிதல்ல. என்ன செய்யலாம்? யோசித்துக் கொண்டே நடந்தேன்.
ஒரு பாழடைந்த அய்யனார் கோவில் தென்பட்டது. அந்த இடத்தில் ஒரு கோவில் இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் அருகில் யாரும் வசிப்பது போலவே தெரியவில்லை. மக்கள் உபயோகிக்கும் வழிப்பாதை கூட அருகில் எதுவும் இல்லை. இத்தகைய இடத்தில், ஒரு கோயில் இருந்தால் இவ்வாறு பாழடைந்துதான் இருக்கும்.
கடவுளை நம்பினோர் கை விடப்படார். அரண்மனைக்கு உள்ளே செல்ல ஒரு மார்க்கம் வேண்டும் என்று மனதில் அய்யனாரிடம் வேண்டினேன். பின்பு அய்யனார் சிலையை இடமிருந்து வலமாய் சுற்றி வந்தேன். அப்போது, சிலையின் கையில் உள்ள வாள் எனக்கு வித்தியாசமாகப்பட்டது. அருகில் சென்று பார்த்தேன். அதன் வாள் பிடி பித்தளையில் செய்திருக்க, கைப்பிடியையும், வாளையும் இறுக்கிப் பிடிக்கும் செம்புக் குமிழ் பெரிய அளவில் வித்தியாசமாய் இருந்தது. குமிழை என் விரல்களால் பற்றினேன். அதில் சிறிது ஆட்டம் இருந்தது. ஏதோ உந்துதலில், அந்தக் குமிழை ஒரு சுழற்று சுழற்றினேன்.
ர்...ர்...ர்...
ஒரு கதவு நகரும் ஓசை கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தேன். கோவில் அருகில் உயர்ந்து வளர்ந்துள்ள ஒரு ஆலமரத்தின் அடியில், கீழ்தரை விலகிக் கொண்டிருந்தது. ஆச்சர்யம் மேலிட அதன் அருகில் சென்று பார்த்தேன். உள்ளே ஒரு படிக்கட்டு கீழ் நோக்கி இறங்கியது.
இதயம் படபடக்க, அதனுள் இறங்கினேன். பத்து படிகள் இறங்கியதும், வாளில் உள்ள குமிழ் போன்று, ஒரு செம்புக் குமிழ் சுவரில் இருந்தது. அதனை சுழற்ற, மேல் கதவு மூடிக் கொண்டது! கும்மிருட்டாய் ஆனது.
என் பென் டார்ச்சை எடுத்து ஆன் செய்தேன். பாதையோ மேலும் இறங்கிக் கொண்டே சென்றது. நானும் சத்தமே எழுப்பாமல் இறங்கினேன். ஓரிடத்தில் படிகள் நின்று போய், நேர்பாதையாக செல்ல ஆரம்பித்தது. இது நிச்சயம் அரண்மனைக்குள் செல்லும் சுரங்கப் பாதையாகத் தான் இருக்கும். அய்யனார் நமக்கு சரியானபடி வழி காட்டியுள்ளார் என்று எண்ணிக் கொண்டே நடந்தேன். பத்து நிமிடம் நடந்ததும் நேர்பாதை முடிவுக்கு வந்தது. மீண்டும் படிகள் மேல் நோக்கி ஏறியது. என் கால்களில் மெதுவான நடுக்கத்துடன் மேலே ஏறினேன். இந்த பாதை எங்கு முடிவுறும்? இதன் வாசல் எந்த அறையில் இருக்கும்? சம்புவரையர் அறையிலா? அல்லது அவரது மகள், மணிமேகலையின் அறையிலா?
ஏறிச் சென்ற படிகள் ஒரு இருட்டு அறையில் முடிந்தது. அந்த அறை பழைய உபயோகமில்லாத சாமான்களால் நிரம்பியிருந்தது. இந்த சுரங்கப் பாதை வாசல் எளிதில் தெரியாமலிருக்க ஒரு ஓவியம் மூலம் மறைத்திருந்தது. அதனை சிறிது நகர்த்தி வைத்தேன். அந்த அறையை மேலும் ஒருமுறை நன்கு பார்த்து விட்டு, பின்பு டார்ச்சை அணைத்தேன்.
அந்த அறையோடு சேர்ந்த மற்றொரு அறையில் வெளிச்சம் தெரிந்தது. அதன் வாசல் ஒரு திரையால் மூடப்பட்டு இருந்தது. நான் மெதுவாக பூனை போல நடந்து அந்த வாசலை அடைந்தேன். திரையை சிறிது விலக்கி எட்டிப்பார்த்தேன். உள்ளே, இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு இருந்தனர். தலையை உடனே உள்ளே இழுத்துக் கொண்டேன். வேறு வழியில் அந்த அறைக்கு செல்லலாமா என்று பார்த்தேன். அந்த அறைக்கு மேலும் ஒரு வாசல் இருந்தது. அதற்கும் திரை இருந்தது. அந்த வாசல் உள்ள இடத்தை, அறையில் உள்ள உடை மாற்றும் நிலைக் கண்ணாடி மூலம் மறைத்து வைத்திருந்தனர்.
நான் திரையை விலக்கி, நிலைக் கண்ணாடியின் பின்புறம் ஒளிந்து கொண்டேன். பின்பு கண்ணாடி பிரேமில் உள்ள டிசைன் இடைவெளி வழியாக அறையை கவனித்தேன்.
ஒரு மிகப்பெரிய படுக்கை அறை. விஸ்தாரமாய், அதே சமயம் அழகாகவும் இருந்தது. அறையின் நடுவே, யானை தந்தங்களினால் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு உயர்ரக கட்டில் இருந்தது. அதன்மீது மெத்தையும், விலையுயர்ந்த விரிப்பும் விரிக்கப் பட்டிருந்தன. சுவரில் வேட்டையாடி பதப்படுத்தப்பட்ட மிருகங்களின் தலைகள் இருந்தன. சுவர்கள், அழகிய ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிலைக் கண்ணாடி, மேஜை, நாற்காலி என பலவித பர்னீச்சர்களும் ஆடம்பரமாக இருந்தன. ஆங்காங்கே அழகிய விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
கட்டிலின் மீது அமர்ந்து கொண்டு இரு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். பகட்டான உடைகள், அணிகலன்களால் இருவருமே ஜொலித்துக் கொண்டிருந்தனர். ஒருத்தி பழுவேட்டையர் என்ற சிற்றரசரின் மனைவி நந்தினி. மற்றொருத்தி இந்த அரண்மனையின் செல்லப் பெண், சம்புவரையரின் மகள் மணிமேகலை. இவர்களில் யாரேனும் ஒருவர் கூட கொலைக் குற்றவாளிகளாக இருக்கலாம். ஏனென்றால், இந்த சிற்றரசர் குலத்தினர், ஆதித்த கரிகாலரிடம் வெறுப்பு காட்டியே வந்துள்ளனர்.
அப்போது வெளியே தடதடவென்று மதயானை நடந்து வருவது போல சத்தம் கேட்டது. உடனே மணிமேகலை அவசர அவசரமாய் அந்த அறையினுள் இருந்த ஒரு மறைவிடத்தில் மறைந்து கொண்டாள். கதவை திறந்து கொண்டு ஒரு வாலிபன் கம்பீரமாக நுழைந்தான்.
அட.. இது நம் ஹீரோ அதித்த கரிகாலர்! இவர் கடம்பூர் அரண்மனைக்குள் இருக்கிறார் என்றால்... இன்றுதான் சம்பவம் நடக்கப் போகிறதா?
எனக்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டது. முகம் குப்பென்று வியர்த்தது. உள்ளே நுழைந்த கரிகாலர், நந்தினியுடன் அமைதியாகவே பேசிக் கொண்டிருந்தார். எனினும் அவர் கையில் ஒரு வாள் இருந்தது. இந்த வாள்தான் அவர் உயிரை குடிக்கப் போகிறதா?
மணிமேகலையைப் பார்த்தேன். அவளோ தன் மறைவிடத்தில் இருந்து சிறிதும் வெளிக்காட்டாமல் இருந்தாள். அப்போது பின்புறம் லேசான சத்தம் கேட்க, திரையை விலக்கிப் பார்த்தேன். 'திக்'கென்று இருந்தது. சுரங்கப்பாதை வாசல் அருகே ஒருவன் நின்று கொண்டிருந்தான். ஆதித்த கரிகாலரும், நந்தினியும் பேசுவதை அவன் ஒட்டு கேட்டுக் கொண்டிருந்தான். யாரிவன்? எப்படி இங்கு வந்தான்? அவனை நன்றாக உற்றுபார்த்தேன். எனக்கு அவனை அடையாளம் தெரிந்தது. வந்தியத் தேவன். குந்தவையின் காதலன். ஆக, இவன்தான் ஆதித்த கரிகாலரை கொல்லப் போகிறானா?
நான் வந்த சுரங்கப் பாதை வழியாகத்தான் வந்தியத்தேவனும் வந்திருக்க வேண்டும். அடேய் வந்தியத்தேவா! நான் சந்தேகப்பட்டது சரியாகத்தான் உள்ளது. நீதான் கொலைகாரனா? ஆனால்... நீ யார் கையாள்? கரிகாலரின் தம்பி அருள்மொழி வர்மனுக்கா? அல்லது கரிகாலரின் சித்தப்பா உத்தமச் சோழருக்கா? இல்லை பழுவேட்டையர்களுக்கா? யாருக்காக நீ இந்த துரோகத்தை செய்யப் போகிறாய்?
இதற்கிடையே கரிகாலரின் பேச்சில் வேகம் கூட ஆரம்பித்தது. உச்சஸ்தாயில் கோபமாக பேசினார். நந்தினி ஏதோ சொல்ல முற்பட்டும், அதனை கவனிக்காமல், வெறித்தனமாய் பேசினார்.. போகப் போக நந்தினியும் கோபமடைய ஆரம்பித்தாள். இருவர் பேச்சிலும் பொறி பறந்தது.
நந்தினியா? வந்தியத்தேவனா? யாரந்த கருப்பு ஆடு? யாருடைய கை கொலை செய்யப் போகிறது? இருவரையும் மாறி மாறி கவனித்தேன்.
திடீரென்று சுரங்கப்பாதை வழியே மற்றொரு ஆஜானுபாகு உருவம் தோன்றியது. அந்த உருவம் வந்தியத்தேவன் பின்புறம் வந்து, இடது கையால், அவன் கழுத்தை சுற்றி இறுக்கியது.
இவர்... இவர்... பழுவேட்டையர் அல்லவா? பழுவூர் குலத்தின் அரசர் அல்லவா? அப்படியென்றால் பழுவேட்டையர்தான் கொலையாளியா? வந்தியத்தேவன் நல்லவன்தானா?
பழுவேட்டையர் குலத்தினர், விஜயாலயச் சோழர் காலத்தில் இருந்தே, சோழ பேரரசிடம் நெருக்கமாக இருந்தனர். விஜயாலயர், ராஜாதித்தர், அரிஞ்சயர், கண்டராதித்தர், சுந்தரச்சோழர் என அனைவர் காலத்திலும், பழுவேட்டையர்கள் உயர்ந்த பதவியில் அமர்த்தப்பட்டு, மரியாதையாக நடத்தப்பட்டனர். சோழ சிம்மாசனத்தை யார் அலங்கரித்தாலும், அவர்களுக்கு அடுத்த ஸ்தானத்தை உடையவர் பழுவூர் குலத்தினராகவே இருந்தனர்.
ஆனால், ஆதித்த கரிகாலர் இளவரசு பட்டத்தை அடைந்ததும், அவருக்கும், அப்போதைய பழுவேட்டையருக்கும் சிறுசிறு உரசல்கள், மனஸ்தாபங்கள் தோன்றின. அதனை பேசி தீர்ப்பதற்கு பதில், இருவருமே அதை மேலும் மேலும் வளர்த்தனர். பழுவேட்டையர், அளவுக்கு அதிகமாய் சோழப் பேரரசில் ஆதிக்கம் செலுத்துவதாய் கரிகாலர் எண்ணினார். நேற்று முளைத்த சிறு பையன் தன்னை மரியாதைக் குறைவாய் நடுத்துவதாக பழுவேட்டையர் எண்ணினார்.
இந்த ஆதிக்க போராட்டம் கொலை வரை இட்டுச் செல்வது ஒன்றும் அதிசயமில்லை.
வந்தியத்தேவன் தன் மீது தொடுக்கப்பட்ட திடீர் தாக்குதலால், முதலில் தடுமாறி நிலை குலைந்தான். பின்பு ஒருவாறு சமாளித்து அவர் பிடியை விலக்க போராடினான். என்ன நடக்கப் போகிறதோ? இருட்டு அறையில் நடப்பதை நன்கு கவனிக்க இரண்டு அடி முன்னே வந்ததும்தான் என் தவறை உணர்ந்தேன். உணர்ச்சிவசப்பட்டு, கண்ணாடி மறைவிலிருந்து வெளியே வர, என் மீது வெளிச்சம் பட்டது.
"ஏய்... யார் நீ?" ஆவேசத்துடன் என்னைப் பார்த்து கேட்டார் கரிகாலர்.
"நான்... நான்..." பதில் வராமல் தடுமாறினேன். பாண்டிய நாட்டு எதிரியாக இருப்பேனோ என்று நினைத்த அவர், என் மீது பாய்ந்து, தன் வலது கையால் என் கழுத்தைப் பிடித்து சுவற்றோடு அமுக்கினார். அவரின் வஜ்ர கைகளில் இருந்து என்னால் நகர முடியவில்லை. அவர் என்னை அப்படியே தூக்கினார். ஹக்... ஹக்... முச்சு திணறினேன். நெஞ்சை அடைத்தது. கண்கள் இருண்டன. எப்படியாவது தப்பிக்க வேண்டும்.. என்ன செய்வது? எப்படி தப்பிப்பது?
தற்பாதுகாப்புக்காக, என் இடுப்பில் இருந்த விஜயாலயர் கத்தியை உருவினேன். ஆதித்த கரிகாலர் இடது மார்பை நோக்கி வேகமாய் பாய்ச்சினேன். கரிகாலர் தன் பிடியை விட்டுவிட்டு, கண நேரத்தில் துடிதுடித்து என் கண் முன்னே இறந்து விழுந்தார். அதிர்ந்து போனேன் நான்.
நடந்த சம்பவங்களை கண்டு நந்தினியும் அதிர்ச்சியடைந்து இருக்க, மணிமேகலையோ நடந்ததே அறியாமல் தன்னிடத்தில் முடங்கி இருக்க, வந்தியத்தேவனும் கீழே மயங்கி கிடந்ததை கவனித்தேன்.
ஆனால், பழுவேட்டையரோ என்னை கவனிக்காமல், நந்தினியை நோக்கி, "அடிபாதகி, உன் கொலைப் பழியை நிறைவேற்றி விட்டாயே..." என்று கத்திக் கொண்டே வந்தார்.
பழுவேட்டையரின் எதிர்பாராத விஜயத்தால், மேலும் குழப்பமடைந்த நந்தினி திணறி நிற்க, நான் சத்தமில்லாமல் நகன்று, வந்த வழியே திரும்பி ஓடி வந்து, காலமித்ராவில் ஏறி 'ரிட்டன்' பட்டனை தட்டி 2058க்கு திரும்பி வந்தேன்.
ஆதித்த கரிகாலரின் சூடான ரத்தம் வழிந்து கொண்டிருந்த கத்தியை, நேப்பியர் பாலத்திற்கு கீழே, கூவத்தில் வீசி எறிந்து விட்டு, காலமித்ராவை TTOவில் ஒப்படைத்து விட்டு, என் வீட்டுக்கு வந்தும், என்னுடைய நடுக்கம் மட்டும் குறையவே இல்லை.
ஹலோ! சரித்திர ஆய்வாளர்களே! கரிகாலரை கொன்ற கத்தியை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று கூவத்தை கிளறி, என்னை மாட்டிவிட்டு விடாதீர்கள்.
- எழுதியவர் ஸ்ரீதேவி
Friday, November 23, 2007
மர்டர் மிஸ்ட்ரி - அத்தியாயம் இ
லொக்கேஷன் ஸ்கிரீன் "திருப்புறம்பயம்" என்று காட்டியதை பார்த்ததும், எனக்கு அனைத்தும் விளங்கியது. அடடா! திருப்புறம்பயம் போரின் நடுவே அல்லவா வந்துள்ளேன்! காலமித்ரா காற்றைக் கிழித்துக் கொண்டு இக்களத்தில் தோன்றியதால், மிகப் பெரிய சலசலப்பு ஏற்பட்டது. அதனை விவரிக்கும் முன், இங்கு நடைபெற்று முடிந்த நிகழ்வுகளை விளக்குவது மிக அவசியம்.
லேட்டர் சோழாஸ் என்று அழைக்கப்படும் பிற்காலத்திய சோழர் பரம்பரையின், பிரசித்தி பெற்ற முதல் மன்னர் விஜயாலயச் சோழர். கிபி ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், வடக்கே பல்லவர்களும், தெற்கே பாண்டியர்களும் கோலோச்சி இருந்தனர். சோழ நாடு மிகச் சிறிய அரசாய் அப்போது இருந்தது.
பாண்டியர்களுக்கும், பல்லவர்களுக்கும், சிறு சிறு பிரச்சனைகளில் அடிக்கடி போர் மூள்வது வழக்கம். அதேபோல் இம்முறையும் , பாண்டிய மன்னர் வரகுண வர்மனுக்கும், பல்லவ மன்னர் அபராஜித வர்மனுக்கும், திருப்புறம்பயம் என்னும் கிராமத்தில் போர் நடந்தது. சோழர் குலம் தழைத்தோங்குவதற்கு, பாண்டியர்கள் தோல்வி அடைவது அவசியம் என்பதை உணர்ந்த விஜயாலயர், இந்தப் போரில் பல்லவர்களுக்கு உதவியாய் களம் இறங்கினார். விஜயாலயச் சோழரின் வீரத்தினால்தான் இப்போரில் பல்லவர்களுக்கு வெற்றி கிட்டியது என்பது வரலாறு. இப்போருக்கு பின்பு சோழர்கள் தங்கள் எல்லையை விரிவுபடுத்தி, மேலும் இரண்டு தலைமுறைக்குள் பெரிய சாம்ராஜ்யத்தையே தோற்றுவித்தனர். நானூறு வருடத்திற்கும் மேலாக நீடித்த இந்த சாம்ராஜ்யத்திற்கு அடித்தளமாய் அமைந்ததே திருப்புறம்பயம் போர் வெற்றிதான்.
இத்தகைய பிரசித்தி பெற்ற போரின் நடுவேதான் காலமித்ராவுடன் நான் வந்துள்ளேன். இரண்டு நாட்கள் முடிந்து, மூன்றாவது நாளாக, இப்போது போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்களாய் நடந்த போரில், பல்லவர்களுக்கும், சோழர்களுக்கும்தான் சேதம் அதிகமாக இருந்தது. பல்லவர்களின் பிரதான தளபதிகள் கடுமையாக தாக்கப்பட்டு பாசறையில் முடங்கிக் கிடந்தனர். வீரத்திலும், எண்ணிக்கையிலும் பாண்டியர்களின் கையே ஓங்கி இருந்தது. மூன்று நாள் போர் களைப்பே தெரியாமல், மீன் படையினர் பல்லவர்களை துவம்சம் செய்து கொண்டிருந்தனர். பாண்டிய நாட்டுத் தளபதிகளும், தங்களுடைய படை வீரர்களை கட்டுக் கோப்பாக நடத்திச் சென்று, சோழர்களை நொறுக்கிக் கொண்டிருந்தனர். எஞ்சியிருந்த சோழர்களும், பல்லவர்களும் தோல்வி முகத்தில், பின்வாங்க தயாராய் இருந்தனர். பாண்டியர்களுக்கு வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருந்த அந்தக் கடைசி நேரத்தில்தான், நானும் காலமித்ராவும் திருப்புறம்பயம் போர்க்களத்தில் திடீரென்று தோன்றினோம்.
என்னுடைய திடீர் வருகையால், போர்க்களத்தில் குழப்பமும், சலசலப்பும் தோன்றியது. இவன் பேயா, பிசாசா, தேவனா, மனிதனா என்று பயந்தனர். இது என்ன ரதம்! வித்தியாசமாக இருக்கிறதே! இவன் அணிந்திருக்கும் உடையும் வித்தியாசமாக இருக்கிறதே என்றெல்லாம் பாண்டியப் படையினர் என்னைப் பார்த்து குழம்பினர்! திகைத்தனர்! மிரண்டனர்!
சோழர்களுக்கு உதவ, கடவுளே மனித ரூபத்தில் வந்துள்ளார் என்கிற அளவில் அங்கு பீதி கிளம்பியது. பாண்டியப் படையினர் பின்வாங்கி, பதறி, சிதறி ஓடினர். பலவித வதந்திகளும், கற்பனைக் கதைகளும் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவ, மொத்த பாண்டிய படையினரும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியது. எஞ்சி நின்ற சிற்சில வீரர்களையும், சோழப் படையினர் விரட்ட, நிமிட நேரத்திற்குள் நிலைமை தலைகீழானது. பாண்டியப் படைக்கு தோல்வி! சோழர் படைக்கு வெற்றி! ஆஹா! திருப்புறம்பயம் போர் வெற்றிக்கு, நானும் அல்லவா ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளேன்! நினைக்கவே திரில்லாக இருந்தது.
அதற்குள் சோழ வீரர்கள் என்னை சூழ, காலமித்ராவில் இருந்து இறங்கி, அதன் கதவை பூட்டினேன். காலமித்ரா லாக் ஆகி இருக்கும்வரை, அதற்கு யாராலும் சேதம் விளைவிக்க முடியாது. நான் இறங்கியதும், சுற்றியுள்ள வீரர்களில் தலைவன் போல் இருந்தவன் என்னை அணுகி, தங்கள் அரசர் என்னை அழைப்பதாய் கூறினான்.
விஜயாலயர் என்னை அழைக்கிறார். அவரை நேரில் சந்திக்கப் போகிறேன். போர் வெற்றிக் களிப்பில், எனக்கு பரிசு ஏதும் கொடுப்பாரோ? என்றெல்லாம் யோசித்துக் கொண்டே சோழர் பாசறைக்கு நடந்தேன்.
போரில் தொண்ணூற்றாறு விழுப்புண்களை விஜயாலயர் பெற்றார் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. தொண்ணூற்றி ஆறு இருக்குமா என்று தெரியவில்லை. எனினும் கடுமையான காயங்கள் பல அவர் உடலில் இருக்க, மருத்துவர்கள் குழு, அவருக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தது.
கை கூப்பி விஜயாலரை வணங்கினேன். ஆனால், அவரோ என் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் கண்களில் கோபம் கொப்பளித்தது. வார்த்தைகளில் நெருப்பின் சீற்றம் இருந்தது.
"யாரடா நீ?" என்று கேட்டார்.
"ஒரு வழிப் போக்கன்" என்றேன்.
"வழிப் போக்கனுக்கு போர்க்களத்தில் என்ன வேலை?"
"வேடிக்கை பார்க்க வந்தேன்!"
"போர் என்ன வேடிக்கை விஷயமா? எங்களுடைய வாள் பலத்தையும், புஜபலத்தையும் காட்டி வெல்ல வேண்டிய போர் அல்லவா இது? நீ ஏதோ சித்து வேலைகள் செய்து, பயமுறுத்தி அவர்களை விரட்டி விட்டாயே? மாய மந்திரத்தில் வெற்றி பெற்றார்கள் சோழர்கள் என்ற அவச்சொல் வரக் காரணமாக இருந்து விட்டாயே! துரோகி!" என்று கோபத்தில் வெடித்தார் விஜயாலயர்.
எனக்கு உதறல் எடுத்தது. பயத்தில் நடுங்கினேன். வியர்வை ஆறாய் ஓட ஆரம்பித்தது.
"நீ எந்த நாடு?"
"இந்திய நாடு"
"அது எங்கே இருக்கிறது? பல்லவ நாட்டிற்கு அருகிலா?"
"இல்லை. இந்திய நாட்டிற்குள்தான் பல்லவ நாடும், சோழ நாடும் உள்ளது!" என்று நான் கூறியதும், விஜயாலயருக்கு கோபம் தலைக்கேறியது.
"இவன் நிச்சயம் வேற்று நாட்டு ஒற்றன்தான். மாறு வேடத்தில், நம் புகழை கெடுக்க வந்துள்ளான். மந்திரங்கள் கற்றவனாகவும் உள்ளான். இவனை சும்மா விடக்கூடாது. இந்த அதிகப்பிரசங்கியை சிரச்சேதம் செய்யுங்கள்!" என்று தன் வீரர்களுக்கு கட்டளையிட்டார்.
விஜயாலயச் சோழரின் ஆவேசக் கட்டளையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான், "ஐயா, நான் ஏதோ உளறியதை, பெரிய மனது பண்ணி மன்னிக்க வேண்டும். நான் ஒரு சாதாரண பயணிதான். ஒற்றன் அல்ல. பல்லவத் தலைநகரம் காஞ்சி மாநகருக்கு அருகே உள்ள சென்னை என்னும் குக்கிராமத்தில்தான் நான் வசிக்கிறேன்! நான் செய்த பிழைகளை தயவு கூர்ந்து பொறுத்து அருள வேண்டும்!" என்று மன்னிப்பு கேட்டதும், விஜயாலயச் சோழர் சிறிது நேரம் சிந்தித்தார்.
தன் தொண்டையை செருமிக் கொண்டு, "நீ ஒற்றன் அல்ல என்று ஒப்புக் கொள்கிறேன். எனினும், மாய மந்திரத்தில் சோழன் வெற்றி பெற்றான் என்ற அவச்சொல் வருவதில் எனக்கு விருப்பமில்லை. உனக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன். என்னுடைய வீரன் ஒருவனுடன் நீ கத்திச் சண்டை போட வேண்டும்! நீ வெற்றி பெற்றால் உன்னை உயிருடன் விட்டு விடுகிறேன். இல்லையேல், உன்னை வென்று, எங்கள் மீது வரும் அவச்சொல்லை போக்கி விடுகிறேன்." என்று உரத்த குரலில் முழக்கமிட்டு, வஜ்ரவேலன் என்ற ஒரு வீரனை அழைத்தார்.
என்னடா இது! பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் மாறி விட்டது. தண்டனையில் இருந்து தப்பிக்க வழி தேடினால், சிக்கல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல, பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. எப்படியாவது இங்கிருந்து தப்பி, காலமித்ராவிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, என் கையில் கத்தி ஒன்று திணிக்கப்பட்டது.
என்னுடன் கத்திச் சண்டை போட வஜ்ரவேலன் தயாரானான். வேறு வழியில்லை. நானும் கத்தியைச் சுழற்றி அவனுடன் சண்டை போட ஆரம்பித்தேன். ஒண்டிக்கு ஒண்டி என்பதால் எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. நானும் சம்மர் கோர்ஸில் சிலம்பம், டேக்வாண்டோ, கராத்தே போன்றவை பயின்றுள்ளேன். எனவே என்னால் முடிந்தவரை நன்றாகவே சண்டை போட்டேன். எனினும் வஜ்ரவேலன்ம் வித்தை தெரிந்தவனாக இருந்ததால், அவன் கையே ஓங்கியிருக்க, நான் தற்காப்பு மட்டுமே பண்ணினேன். பழங்கால எம்ஜியார் பட... இல்லை, இல்லை. எதிர்காலத்தில் வர இருக்கும் எம்ஜியார் பட வாள் சண்டைகள் என் நினைவுக்கு வர, சிறிது ஆக்ரோஷமாக சண்டையிட்டேன்.
நேரம் ஆக ஆக என் வேகம் குறைய ஆரம்பித்தது. இயற்