Wednesday, September 11, 2013

செல்வ மகன்

Sender :- விச்சு 9949426488
Receiver :- அப்பா 9949426466
Time :- 11.00am

பிரியமுள்ள அப்பா,
நம் வீட்டில் உள்ள வீடியோ கேம்ஸ் ரிப்பேராகி விட்டது. கேஸட்டுகளும் பழையதாக உள்ளது. ஆபீஸ் விட்டு வரும்போது, புது பிளேயரும், கேஸட்டுகளும் வாங்கி வாருங்கள்.Sender :- அப்பா 9949426466
Receiver :- விச்சு 9949426488
Time :- 11.05am

செல்வ மகனே!
இரண்டு மாதத்திற்குள் மூன்றாவது பிளேயரை காலி பண்ணிவிட்டாய்! பனிரெண்டு கேஸட்டுகளுமா சரியில்லை? இருப்பதை வைத்து அட்ஜஸ்ட் பண்ணு. ஆபீஸில் ஒரு பிரச்சனை. அப்பா பிஸியாக இருக்கிறேன். டிஸ்டர்ப் பண்ணாதே.Sender :- விச்சு 9949426488
Receiver :- அப்பா 9949426466
Time :- 11.10am

கஞ்சூஸ் டாடி,
உங்கள் சக ஆபீஸர் வீட்டில் கழித்த ஓசிக் கேஸட்டுகள்தான் நம் வீட்டில் உள்ளன. மார்க்கெட்டில் புதியது நிறைய வந்துள்ளன. ஸோ, பிளேயர் & கேஸட்டுகள் அவசரம்!Sender :- அப்பா 9949426466
Receiver :- விச்சு 9949426488
Time :- 11.15am

அதிகபிரசங்கி விச்சு,
அவை ஒன்றும் ஓ.சி.யில் கிடைக்கவில்லை....நீ பேசாமல் டி.வி.யில் பவர் ரேஞ்சரோ, ஜாக்கிசானோ பார். இங்கு ஆபீஸில் ஸ்டாக் ரிப்போர்ட் டேலி ஆகவில்லை. ஜீ.எம். என் தலையை உருட்டுகிறார். ரெண்டு நாளில் ஷேர் ஹோல்டர்ஸ் மீட்டிங். அதற்குள் பலவித ரிப்போர்ட்டுகள் ரெடி பண்ண வேண்டும். இன்னமும் ஸடாக்கே closeஆக மாட்டேன்குது. டோன்ட் டிஸ்டர்ப் மீ. உன் பிரச்சனைகளை அம்மாவிடம் கூறு.Sender :- விச்சு 9949426488
Receiver :- அப்பா 9949426466
Time :- 12.05pm

டாட்,
அம்மாவிற்கும், எனக்கும் டி.வீ. பார்ப்பதில் ஒரே போராட்டம். டி.வி.யை மெகா சீரியலுக்கும், ஜெட்டிக்ஸுக்கும் மாற்றியதில் ரிமோட் பட்டன் உடைந்து விட்டது. ஆபீஸில் இருந்து வரும் போது ஸோனி மாடலுக்கு உரிய ரிமோட் ஒன்று வாங்கி வரவும்! எனக்கு ரொம்ப போரடிக்குது.Sender :- அப்பா 9949426466
Receiver :- விச்சு 9949426488
Time :- 12.20pm

சன்,
பிளே பிரிக் கேம்.Sender :- விச்சு 9949426488
Receiver :- அப்பா 9949426466
Time :- 12.30pm

ஞாபகமறதி டாடி,
பிரிக் கேம் உடைந்து போய் ஒரு மாதம் ஆகி விட்டது! நீங்கள் வரும்போது அதிலும் ஒன்று வாங்கி வாருங்கள்! மேலும், என் பிரண்டு பிரதீப் வீட்டில் உள்ளது போல ஒரு லேப்டாப்பும், பிராட்பேண்ட் கனெக்ஷனும் வாங்கிக் கொடுத்து விட்டால், உங்களை ஒரி பண்ணாமல், சமர்த்தாக இருப்பேன்!Sender :- அப்பா 9949426466
Receiver :- விச்சு 9949426488
Time :- 12.32pm

பேராசைக்கார பையா,
பெரிய பட்ஜெட்டாக இழுத்து விடாதே! பிரிக் கேமே வாங்கி வருகிறேன்! அது சரி. எப்போதும் எலக்ட்ரானிக்ஸ் சாதன சகவாசம்தானா? வெளியே போய் கிரிக்கெட், புட்பால் விளையாடலாமே?Sender :- விச்சு 9949426488
Receiver :- அப்பா 9949426466
Time :- 3.00pm

சாரி டாடி,
நீங்கள் சொன்னபடி கிரிக்கெட் ஆடியதால் ஒரு பிரச்சனை. என் பேட்டிங் திறமையால், எதிர் வீட்டு ஜன்னலில் கீறல் விழுந்து விட்டது. சதீஷ் அங்கிள் திட்டிக் கொண்டிருக்கிறார். என்ன செய்ய?Sender :- அப்பா 9949426466
Receiver :- விச்சு 9949426488
Time :- 3.05pm

சேட்டைக்கார விச்சு,
இங்கேயோ பேலன்ஸ் டேலி ஆகாமல் நான் அவதிப்படுகிறேன். நீ வேறு பல பிரச்சனைகளை கொண்டு வருகிறாய். நான், உன் பிரச்சனையை கவனிக்கவா? இல்லை, ஆபீஸ் பிரச்சனையை கவனிக்கவா? இங்கி பிங்கி பாங்கி போட்டுத்தான் பார்க்க வேண்டும்!Sender :- விச்சு 9949426488
Receiver :- அப்பா 9949426466
Time :- 3.30pm

அதிர்ஷ்டக்கார அப்பா!
சதீஷ் அங்கிள் வீட்டுப் பிரச்சனை சால்வ்டு. அந்த ஜன்னலில் ஏற்கனவே கீறல் உண்டாம்! இருந்தாலும் அவர் கிரிக்கெட் பாலை பிடுங்கி வைத்துக் கொண்டார். வரும்போது ஒரு பால் வாங்கி வரவும்.Sender :- அப்பா 9949426466
Receiver :- விச்சு 9949426488
Time :- 3.40pm

விச்,
உனக்கு இனி பதில் அனுப்பப் போவதில்லை. இன்னமும் ரிப்போர்ட் ரெடியாகவில்லை. ஜி.எம். காச் மூச் என்று கத்துகிறார். நைட் வீட்டிற்கு வருவதே கஷ்டம். நீ கீபோர்டு கிளாஸுக்கு போ. நாளை பார்ப்போம்.Sender :- விச்சு 9949426488
Receiver :- அப்பா 9949426466
Time :- 3.50pm

அப்ஸ்,
நல்லவேளை...ஞாபகப்படுத்தினீர்கள். போன கிளாஸில் என் கீபோர்டின் அடாப்டர் உடைந்து விட்டது. எனக்கு அது உடனே வேண்டும்.Sender :- விச்சு 9949426488
Receiver :- அப்பா 9949426466
Time :- 3.52pm

அப்ஸ்,
நல்லவேளை...ஞாபகப்படுத்தினீர்கள். போன கிளாஸில் என் கீபோர்டின் அடாப்டர் உடைந்து விட்டது. எனக்கு அது உடனே வேண்டும்.Sender :- அப்பா 9949426466
Receiver :- விச்சு 9949426488
Time :- 3.55pm

சிறிது நேரம் தொந்திரவு பண்ணாமல் இருக்க மாட்டாயா? ஒரே மெசேஜை இரண்டு முறை வேறு அனுப்பி இருக்கிறாய்.Sender :- விச்சு 9949426488
Receiver :- அப்பா 9949426466
Time :- 4.00pm

சாரி டாடி,
தவறுதலாய் இரண்டு முறை சென்ட் பட்டனை அழுத்தி விட்டேன். வெரி சாரி. அடாப்டரை மறந்து விடாதீர்கள்.Sender :- அப்பா 9949426466
Receiver :- விச்சு 9949426488
Time :- 4.45pm

பெருமைக்குரிய விச்சு!,
உன்னுடைய டபுள் மெசேஜ்தான், ஆபீஸ் பிரச்சனையை தீர்த்து விட்டது! யெஸ்.. ஒரு ஸ்டாக் என்ட்ரி இரண்டு முறை எண்டர் ஆகியிருந்தது. அதை சரி செய்து விட்டோம். கம்பெனி லாபம் அமோகம். டைரக்டர் உற்சாக மிகுதியில், எல்லோருக்கும் போனஸ் அறிவித்து இருக்கிறார். பிரச்சனையை சால்வ் பண்ணியதற்கு எனக்கு சிறப்பு போனஸ்! இன்னும் இரண்டு நாட்களில், நாம் உன் அயிட்டங்களை வாங்கி விடுவோம்!

Sender :- xxx 9842252132
Receiver :- அப்பா 9949426466
Time :- 4.55pm

சந்தோஷ அப்பா!
உங்கள் விச்சுதான். பக்கத்து வீட்டு அண்ணா செல்லில் இருந்து அனுப்புகிறேன். உங்கள் மெசேஜை படித்ததும், குஷியில் துள்ளிக் குதித்தேன். அப்போது என் கையில் இருந்து செல்போன் நழுவி தண்ணீர் வாளிக்குள் விழுந்து விட்டது. அது இனி உபயோகப்படாது என்றே எண்ணுகிறேன். எனவே, என் லிஸ்டில் ஒரு கேமிரா செல்போனையும் சேர்த்து விடுங்கள்!

** மணிமேகலை பிரசுரம் “என் பள்ளிக்கூடத்திற்கு வந்த ரோபோ” சிறுகதை தொகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற கதை**

No comments: