Monday, September 02, 2013

Y4K

4.ஹோமோ ஜீனியஸ்


நான் போன் பேசி முடித்த பத்து நிமிடங்களுக்குள் ரேகா என் வீட்டிற்கு வந்து விட்டாள். Y4K விஷயத்தை சொல்லு என்று அவசரப்படுத்தினாள்.

“ஹோமோ ஜீனியஸ் தான் காரணம்”, என்றேன்.

“அப்படி என்றால்?”

“முதல்ல அமைதியாக இரு. அதை ஒரு கதை போல சொல்ல வேண்டும்.”

ஆனால், அவளோ பொறுமையில்லாமல், டி.சி. மிஷின் அருகே சென்று, பிரிண்டரில் இருந்து வந்த பேப்பர்களில், 4000ம் வருட பிரிண்ட் அவுட்டை எடுத்து பார்த்தாள். எனக்கு போலவே, அவளுக்கும் எதுவும் புரியவில்லை போலும். அவள் முகமே அதைக் காட்டியது.

“நான் தெளிவாக்குகிறேன், ரேகா. அதற்கு முன்பு உன்னிடம் ஒரு கேள்வி. உனக்கு பரிணாம வளர்ச்சி தத்துவம் தெரியுமா?”

“டார்வின் தியரிதானே? நன்றாகத் தெரியும்.”

“தென், உயிரினங்கள் தோன்றிய வரலாறை கூறு பார்ப்போம்.”

ரேகா சொல்ல ஆரம்பித்தாள்.

“சுமார் முன்னூறு கோடி வருடங்களுக்கு முன்பு, பூமியில் உயிரினமே கிடையாது. ஹைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன், நைட்ரஜன் போன்ற எளிமையான தனிமங்கள் மட்டுமே இருந்தன. அப்போது ஏதோ ஒரு அதிர்வினால் அல்லது மின்னல் தாக்குதலால், இந்த தனிமங்கள் ஒன்று சேர்ந்து, கொழகொழவென்ற ஒரு வஸ்துவாக, கடலில், தற்செயலாய் உருவானது. அதுதான் உலகின் முதல் உயிர். அதற்கு லூக்கா என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளார்கள்.

சூழ்நிலை காரணங்களால், அந்த உயிரினங்கள், தனக்குத் தானே உறுப்புக்களை உருவாக்க ஆரம்பித்தன. இடம் பெயர செதில்கள், வாய், காது போன்றவைகள் உருவாயின. கடல் பாசி, பூஞ்சை, முதுகெலும்பில்லாத கடல் உயிரினங்கள், மீன்கள் போன்றவைகள் பல்வேறு காலத்தில் தோன்றியது.”

"குட், ஒரு கட்டத்தில் இந்த நீர்வாழ் உயிரினங்கள் கடலிலிருந்து சுதந்திரம் அடைந்து, நிலத்திற்கு செல்ல விரும்பியது. அப்போது ஒரு பெரிய பரிணாம மாற்றம் ஏற்பட்டு, அம்ஃபிபியன்கள் எனப்படும் கடல்-நில வாழ் உயிரினங்கள் தோன்றியன”

“தவளை, முதலை போன்றவைகள், இல்லையா?”

“ஆமாம், அவைகள் மேலும் பரிணாம வளர்ச்சி அடைந்ததால், பறவைகள், பூச்சிகள், டைனசர்கள், விலங்குகள் போன்றவை பலப்பல கால கட்டங்களில் உருவாயின”

“அந்த விலங்கினத்தில் உள்ள குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றினான், இல்லையா?”, என்று ரேகா கேட்டாள்.

“எக்ஸாக்ட்லி! அனால் அந்த மாற்றம் உடனடி நிகழ்வாய் நடக்கவில்லை. சிம்பன்ஸி, ஏப் முதலிய உயர்ரக குரங்குகள், மரங்களை விட்டு விட்டு, நிலத்தில் வசிக்க பழகியன. அதுதான் குரங்கு மனிதன். பின்பு, அவன் இரண்டு கால்களால் நடக்க ஆரம்பித்தான். ’ஹோமோ எரக்டஸ்’ என்று அழைக்கப்படும் அந்த ஆதிகால மனிதனின் பிரதான தன்மையே நிமிர்ந்த நடைதான். அதனால், அவன் முன்னங்கால்கள் சுதந்திரமடைந்து, வேறு வேலைகளுக்கு பயன்பட ஆரம்பித்தன. அதேசமயம், மற்றொரு பரிணாம மாற்றமும் அவனுள் நிகழ்ந்தது. அதுதான் மூளையின் அளவு அதிகரிப்பு. இதனால், அவனின் புத்திசாலித்தனமும் பெருக பெருக ’ஹோமோ சப்பியன்ஸ்’ எனப்படும் நாகரீக மனிதர்களான நாம் உருவானோம். அந்த புத்திசாலித்தனத்தில் தோன்றியதுதான், நெருப்பு, சக்கரம் முதலிய ஆதிகால கண்டுபிடிப்புகளிலிருந்து, கம்ப்யூட்டர், டைம் மிஷின் போன்ற இந்த கால கண்டுபிடிப்பு வரை!”

“இதெல்லாம் எல்லோரும் அறிந்த விஷயம்தானே?”

சிறிது நேர மௌனத்திற்கு பின்பு அவளிடம் கேட்டேன்.

“வெல், ஹோமோ சப்பியன்ஸ் என்று அழைக்கப்படும் நம்முடைய மனித இனம், மேலும் பரிணாம வளர்ச்சி அடைந்தால் எத்தகைய உயிரினம் தோன்றும்?”

என்னுடைய கேள்வியை உடனடியாக ரேகா மறுத்துக் கூறினாள்.

”நாம்தான் சுப்பீரியர் உயிரினம்! நாம் பரிணாம வளர்ச்சி அடைய அவசியமே இல்லை!”

“இங்குதான் நீ தவறிழைக்கிறாய், ரேகா. பரிணாம மாற்றம் என்பது, நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தானே வந்துவிடும். யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதில்தான் கடவுளின் செயல் வெளிப்படுகிறது!”

நான் தத்துவம் பேசுவதாக நினைத்தாளோ என்னவோ? ரேகா பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

“இன்னும் நூறு வருடங்களில், நம்மை விட இரண்டு மடங்கு மூளை, பத்து மடங்கு புத்திசாலித்தனத்தோடு உள்ள உயிரினம் தோன்றப் போகிறது!”

“தோன்றப் போகிறதா!”, வியப்புடன் கேட்டாள் ரேகா.

“யெஸ். குன்னூரில் நீ போய் பார்த்தாயே, எழில், அவள்தான் அந்த இனத்தின் முதல் உயிர். அதிக மூளை, அதிக நோய் எதிர்ப்பு சக்தி உடைய குள்ள மனிதர்கள் இனம்... தெளிவாகக் கூறினால், குள்ளப் பெண்கள் இனம் உருவாகப் போகிறது. பலவித இயந்திரங்கள், ஆயுதங்கள் முதலியவற்றை தயார் செய்து, அதன் உதவியோடு பூமியையே ஆட்சி செய்யப் போகும் அவர்கள், தங்களை ‘ஹோமோ ஜீனியஸ்’ அல்லது ‘ஜீனிஸ்’ இனமாகக் கூறிக் கொள்வார்கள்!”

“எனக்கு இன்னமும் தெளிவாகவில்லை”

மேஜையில் கிடந்த பிரிண்ட் அவுட்டில் ஒன்றை எடுத்து காண்பித்துக் கொண்டே, “இதோ பார். இந்த 2700ம் வருட செய்திகளைப் பார். குள்ளப் பெண்கள் பற்றிய செய்திகள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் இருப்பதைப் பார். அந்த காலகட்டத்தில், உலக மக்கள் தொகையில், வெறும் ஒன்பது சதவீதத்தினராகவே அவர்கள் இருப்பார்கள். என்றாலும் அவர்களிடம் உள்ள அதீத நோய் எதிர்ப்பு சக்தியால், அவர்களின் சராசரி ஆயுட்காலம் 180 வருடங்களாய் இருக்கும். மேலும், அந்த ஜீனிஸ் இனத்தில், பெண்கள்தான் எண்பது சதவீதம் இருப்பார்கள். இதனால், அவர்களின் எண்ணிக்கை படுவேகமாய் அதிகரிக்கும்.”

“ஆண் ஜீனிஸ்?”

“ஆண் ஜீனிஸுக்கள், பெண்களைப் போல, அதிக புத்தியுடையவர்களாக இல்லை. பெண் ஜீனிஸுக்கள், அவர்களை உடல் உழைப்புக்கும், இனவிருத்திக்கும் மட்டுமே பயன்படுத்துவார்கள்.”

“பெண்களுக்கு புத்திசாலித்தனம் அதிகம் என்பது தெரிந்த விஷயம்தானே!”, என்று ரேகா கூறினாள்.

“நீ உன் புராணத்தை ஆரம்பிக்காதே. இந்த ஜீனிஸ் பெண்களால்தான் Y4K பிரச்சனை பூதாகரமாய் ஆகியுள்ளது.”

“எப்படி?”, என்று கேட்டாள்.

“கி.பி. 3000ம் வருடத்தில் ஜீனிஸின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 17 சதவீதம். இதோ, இந்த பேப்பரில் உள்ள புள்ளிவிபரத்தை பார். ஆனால், அடுத்த முப்பது வருடங்களில் நிலைமை தலைகீழாய் மாறிவிடும். அந்த சமயம், உலகம் முழுவதும் பரவவிருக்கும் ஒரு கொடிய வைரஸ் நோயால், மனித இனமே கொத்து கொத்தாய் மடிந்து விடும். அதே சமயம், ஜீனிஸுக்களை, இந்த நோய் தாக்கப் போவதில்லை. 3050ம் வருட செய்தியைப் பார். அப்போது இந்தியா, மக்கள் தொகையில், உலகில் 86ம் இடத்தில் இருக்கிறது.”

“.......”

“பிறகு, 3100ம் வருடத்தில், ஜீனிஸ் தொகை, நம்மைவிட அதிகமாகி விடும். ஆட்சி, அதிகாரம், தொழில், நிதி, வேலை வாய்ப்பு, விவசாயம், பாதுகாப்பு என்று அனைத்துமே அவர்கள் கைக்கு மாறிவிடும். நம்மவர்கள் இரண்டாம் பட்ச குடிமக்களாக மாறி விடுவர். இந்த நிலை மேலும் உக்கிரமடைந்து, 3500ம் வருடத்தில், நம் மனித இனத்தினர், அடிமை வேலை செய்தால்தான் பிழைக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுவர். அடிமை வியாபாரத்திற்கென்றே பல கம்பெனிகள் விளம்பரம் செய்திருப்பதை, இந்த பேப்பரில் பார்”, என்று அவளுக்கு 3508ம் வருட செய்தித் தாளை நீட்டினேன்.

அவள் முகத்தில், இப்போது பய ரேகை தெரிந்தது. திகைத்துப் போய் இருந்தாள். நான் மீண்டும் தொடர்ந்தேன்.

“3997ம் வருடம், ஒரு ஜீனிஸ் புண்ணியவதி, ஒரு ஆராய்ச்சி பேப்பர் சமர்ப்பிப்பார். ‘மனித இனத்தில் இருந்துதான் உயர் ரக இனமான ஜீனிஸ் தோன்றியுள்ளது. இதே மனித இனத்தில் இருந்து, மற்றொரு கிளை இனம் பிரிந்து, ஜீனிஸை விட புத்திசாலித்தனம், வலிமை அதிகமான இனம், பரிணாம வளர்ச்சியால் உருவாக வாய்ப்புள்ளது. எனவே ஜீனிஸ் நன்மைக்காக, மனித இனத்தை பூண்டோடு அழிப்பது நல்லது’ என்று அர்த்தம் தொனிக்கும் வகையில், அந்த ஆராய்ச்சி இருக்கும். அதற்காக, அந்த புண்ணியவதிக்கு நம்மூர் நோபெல் பரிசு போன்றதொரு உயரிய விருதான ‘ஜெனிபெல்’ விருது கிடைக்கும்.

அதோடு, அது நின்று விட்டால் பரவாயில்லை. அதே ஆண்டு நவம்பர் கடைசியில், உலக நாட்டு தலைவிகள் அனைவரும், பாரீஸில் ஒன்று கூடி, ஒரு ரகசிய முடிவு எடுப்பார்கள். ‘மனித இனத்தை முழுமையாக வேட்டையாடிக் கொல்ல வேண்டும்’ என்பதே அது. அந்த முடிவு பகிரங்கமாக அறிவிக்கப்படாமல், மேல மட்டத்தில் மட்டும் தெரிவிக்கப்பட்டு ராணுவம், போலீஸ் உதவியுடன் மனித வேட்டை முழுவீச்சில் நடை பெறப் போகிறது. 3998ம் வருட ஆரம்பத்தில், உலகம் முழுவதும் எண்பது கோடி இருந்த மனித இனம், இரண்டே வருடத்தில், வெறும் ஆயிரக் கணக்கில் குறுகிவிடப் போகிறது!

ஆம்... 4000ம் வருடத்தில், இந்தியாவில் வெறும் 500 மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள். அவர்களும் மலைக் குகைகளிலும், காடுகளிலும் புதர்களிலும், பதுங்கி ஒளிந்து வாழ்வார்கள். Y4K நிலை இவ்வாறுதான் இருக்கப் போகிறது”, என்று கூறி நிறுத்தினேன்.

“அப்படியென்றால் இங்கிருந்து டைம் மிஷினில் சென்றவர்கள் எல்லாம்....”, என்று நடுங்கிய குரலில் இழுத்தாள்.

“கொல்லப்பட்டிருப்பார்கள். சந்தேகமில்லை.”

அவள் மௌனமாகி விட்டாள். நானும் அமைதியாக இருந்தேன். ரேகா, டி.சி. மிஷின் அருகில் சென்று , அதில் இருந்து வந்த பிரிண்டிங் செய்திகளை ஒன்று விடாமல் வாசித்துப் பார்த்தாள். அவள் முகம் வெளிறிப் போய் இருந்தது. நீண்ட நேர நிசப்தத்திற்கு பின்பு என்னிடம் கேட்டாள்.

“ஜீனிஸ் ஏன் குள்ளமாக உள்ளனர்?”

“அதற்கும் மூளைதான் காரணம். மூளையின் எடை அதிகமாக அதிகமாக, உயரம் குறிப்பிட்ட அளவில் நின்று விட்டது. ஜீனிஸுக்களின் சராசரி உயரம் நான்கடிதான். புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கும் மூளை, உடல் அளவு விகிதத்தை, அவர்களின் குள்ளத்தன்மை மேலும் அதிகரித்து விடுகிறது.”

“அவர்களின் டெக்னிக்கல் முன்னேற்றங்கள்?”

“பல விதத்தில் முன்னேறி விடுவார்கள். பக்கத்து நட்சத்திர மண்டலமான ஆண்ட்ருமீடாவிற்கு ராக்கெட் அனுப்புவார்கள். வினாடிக்கு 1,00,000 கி.மீ. செல்லக் கூடிய ஊர்திகள் கண்டுபிடிக்கப்படும். உணவுகள், மாத்திரைகளாய் தான் சாப்பிடுவார்கள். நாக்கு ருசிக்கென்று, உடலை பாதிக்காத உணவுகள் தனியாக கண்டுபிடிப்பார்கள். லேசர் துப்பாக்கிகள், பயோமீட்டர்கள், பயோ சென்சார்கள் என்று பல உபகரணங்களை கண்டுபிடிப்பார்கள். ஒரு நாட்டிற்குள், அந்நியர்கள் யார் நுழைந்தாலும், அந்நாட்டு தலைவிக்கு நேனோ செகண்ட் நேரத்தில் தெரிந்து, அடுத்த நேனோ செகண்டில் தாக்கப்படுவார்கள். சுருக்கமாய் கூறினால், நம்மை விட ஆயிரம் மடங்கு முன்னேறி இருப்பார்கள்.”

ரேகா, அவளுடைய நகத்தை கடித்துக் கொண்டிருந்தாள். அப்படியென்றால், அவள் தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தாள் என்று அர்த்தம். பிறகு என்னிடம் கேட்டாள்.

“இனி, Y4K விஷயத்தில் என்ன செய்யலாம், சதீஷ்?”

“நாம் கண்டுபிடித்ததை, ஒரு பேப்பராக அரசாங்கத்திடம் சமர்ப்பிப்போம்.”

“நோ, சதீஷ், நோ... அதற்கு முன்பு, அவர்களின் மனித வேட்டையை நிறுத்த, நாம் முயற்சி எடுக்க வேண்டும்.”

“நம்மால் என்ன செய்ய முடியும், ரேகா. ஜீனிஸ் நம்மை விட ஆயுத வலிமை, புத்தி வலிமை அதிகம் உடையவர்கள். அவர்களை எப்படித் தடுக்க முடியும்?”, என்று கேட்டேன்.

“அதற்கு ஒரு வழி உள்ளது”, என்று ரேகா கூறினாள்.

தொடரும்...

No comments: