Sunday, September 01, 2013

Y4K

3. கண்டுபிடித்தேன்

”உன்னோட செய்திகளைப் பார்த்தால், பிராடு வேலையாக தெரிகிறதே”, என்று அவள் கூறிக் கொண்டிருந்த போதே ஸ்கிரீனில் தெரிந்த முதல் செய்தியை கிளிக்கினேன்.

நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த மகளிர் மசோதா, எதிர் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் ராஜா ஜகன்னாதன் அறிவித்துள்ளார். அனைத்து கட்சி கூட்டம் முடிந்து வெளிவந்ததும் இந்த தகவலை அவர் நிருபர்களிடம் கூறினார்.

”இந்த செய்தியே உன் ஆணாதிக்கத்தை காட்டுகிறது, சதீஷ். உன்னுடைய மிஷினே போலி. நீயே உருவாக்கியுள்ள கற்பனை செய்திகளைத் தான் அது காட்டுகிறது.”, என்று ரேகா கோபமாக கூறினாள்.

“ஏன் அப்படி கூறுகிறாய்?”.

“மகளிர் மசோதா, நிச்சயம் அடுத்த மாதத்தில் பாஸாகி விடும். மேலும் பெட்ரோல் விலை, இப்போது லிட்டருக்கு ரூ.370/- தான் உள்ளது. இன்னும் 100 வருடத்தில் அது 150 மடங்கு அதிகரிக்கும் என்பதையும் என்னால் நம்ப முடியவில்லை”.

எனக்கும் குழப்பமாகவே இருந்தது, மற்ற செய்திகளையும் மேலோட்டமாய் பார்த்தேன். எல்லாமே இப்போது பேப்பரில் வரும் செய்திகளைப் போலவே இருந்தன. நாலாவது செய்தியை கிளிக்கினேன்.

குன்னூரை சேர்ந்த எழில் என்ற 35 வயது பெண்மணிக்கு இரண்டு இதயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருடைய உறவுக்கார டாக்டர் பெண் தற்செயலாய் இதை கண்டுபிடித்தார். எழிலுக்கு இதுவரை உடல் நலக் குறைவு ஏற்பட்டதே இல்லை. அவர் ஆஸ்பத்திரிக்கே சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் மருத்துவ உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சுற்று வட்டார கிராமங்களிலிருந்து பல பேர் குன்னூருக்கு வந்து, இவரைப் பார்த்து, சென்று கொண்டிருக்கின்றனர்...

“இதுவும் வழக்கமான இரண்டு தலை ஆடு, ஆறு விரல் மனிதன் போன்ற அப்நார்மல் கேஸ் செய்தி. அடுத்த செய்தியைப் பார்ப்போம்”.

பிரபல கிரிக்கெட் வீரர் ரஞ்சன் ரண்டேக்கர், அடுத்த உலக கோப்பை போட்டிகள் வரை விளையாட தனக்கு உடல் தகுதியும், திறமையும் உள்ளதாக பேட்டி அளித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 89 சதங்கள், T-20 போட்டிகளில் 68 சதங்களையும் குவித்துள்ள ரண்டேக்கர், 100-100 சதங்கள் அடிப்பதே தன்னுடைய லட்சியம் என்று கூறியுள்ளார். சமீபத்தில் அறிமுகமாகியுள்ள 50 பந்து போட்டிகளால் கிரிக்கெட்டுக்கு பயனே இல்லை என்று காட்டமாக விமர்சித்து உள்ளார். சமீபத்தில் தான், இவர் 20,000 கோடி விளம்பர காண்ட்ராக்டில் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“போடா..உன்னுடைய டி.சி. ஒரு கப்சா பொட்டி உன் சொந்த கற்பனைகள் தான் செய்தியாக வருகிறது. இதை நான் நம்ப போவதில்லை”, என்று கூறி வேகமாய் எழுந்தாள்.

“ஏய், ரேகா. இது நிச்சயமாய் 2150 ம் வருட செய்திகள் தான். டி.சி. சர்க்கியூட் விபரங்களை உனக்கு விவரிக்கிறேன். அப்போது தான் நீ நம்புவாய்”.

“உன் வெட்டிப் பேச்சு எதையும் நான் கேட்க விரும்பவில்லை. யோசிப்பதற்கு உனக்கு ஒரு வாரம் டைம் தருகிறேன். நெக்ஸ்ட் வீக், வெட்னஸ்டே, நான் Y4K போகப் போவது உறுதி. நீ என்னை லவ் பண்ணுவது நிஜம் என்றால், என்னுடன் கண்டிப்பாக வருவாய். ஓகே?”, என்று படபடவென்று கூறிவிட்டு, எனக்கு பதில் கூறக் கூட வாய்ப்பு கொடுக்காமல் எழுந்து சென்று விட்டாள்.

அன்று முழுவதும் எனக்கு வேறு வேலையே ஓடவில்லை. பயங்கர பயங்கர எண்ணங்கள் என்னை பயமுறுத்தின. கால்கள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. இது விஷயமாய் மீண்டும் அவளிடம் பேச்சை ஆரம்பித்தால், கோபப்படுவாள். நாளை வரை ஒத்திப் போடுவோம். ஆபீஸுக்கு போய் அவளை கன்வின்ஸ் பண்ண வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அடுத்தநாள் ஆபீஸுக்கு போனவுடன் ரேகாவின் கேபினுக்குத்தான் சென்றேன். ரேகா அங்கு இல்லை. விசாரித்ததில், நேற்றே அவள் லீவு சொல்லி விட்டாளாம். அவள் செல்லுக்கு போன் போட்டேன். தொடர்பு எல்லைக்குள் இல்லை என்று பதில் வந்தது. வீட்டு போனில் கூப்பிட்டால், வாய்ஸ் ரெக்கார்டர் பதில் சொன்னது.

எங்கே போயிருப்பாள்? நான் Y4Kக்கு வரமாட்டேன் என்று நினைத்து, அவள் காலேஜ்மேட் கிருஷ்ணனை துணைக்கு அழைக்க பெங்களூர் சென்றிருப்பாளோ? அந்த எண்ணமே எனக்குள் பொறாமையை ஏற்படுத்தியது. வீட்டிற்கு வந்து டி.சி.யில் கவனம் செலுத்த முயற்சித்தேன். தலை வலித்தது. மூளை சூடானது. என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. தூக்கமும் வரவில்லை. இரவு 2 மணிக்கு மேல்தான் தூங்கினேன்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு காலிங்பெல் ஓசை என்னை எழுப்பியது. கதவைத் திறந்தேன். ரேகா நின்று கொண்டிருந்தாள்.

“ஹேய், ரேகா, நேற்று முழுவதும் எங்கே போயிருந்தாய்?”, என்று கேட்டேன்.

“நம்புகிறேன், சதீஷ் நம்புகிறேன்.”

“என்ன சொல்ற?”

“நேற்று என்னுடைய டைம் மிஷினில் 05-08-2150க்கு சென்று, இரண்டு இதயம் உள்ள குன்னூர் எழிலைப் பார்த்தேன். உன் செய்திகள் அனைத்தும் சரிதான். டி.சி. வேலை செய்கிறது, சதீஷ். இதோ அடுத்த நாள் பேப்பரையும் வாங்கி வந்துள்ளேன்”, என்று கூறி, 2150ம் வருடம், ஆகஸ்ட் 6ம் தேதி பேப்பரை என்னிடம் நீட்டினாள். நானும் அதை வாசித்துப் பார்த்தேன்.

“ஒரு வார்த்தை கூட மாறாமல், அதே செய்திகள், அப்படியே வந்துள்ளது பார்”, என்று உற்சாகமாய் கூறினாள். அவளின் உற்சாகம் எனக்கும் தொற்றிக் கொண்டது. எனக்கு காலை உணவை ரெடி பண்ணிக் கொடுத்தாள்.. இரண்டு பேரும் சாப்பிட்டு முடித்த பிறகு, என்னிடம் கூறினாள்,

“ஸீ... சதீஷ். டி.சி.யை Y4K வரை எக்ஸ்டெண்ட் பண்ணி விடு. உன்னால் கண்டிப்பாக முடியும்.”

“ஆனால்...அதில் சில டெக்னிக்கல் பிரச்சனைகள் உள்ளனவே”

“அப்படி என்ன பிரச்சனை? சொல்லு. என்னால் ஹெல்ப் பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்.”

“முதலில், ஃபார்மட்-வடிவமைப்பு. ஏஜன்சிக்கள் மூலம் செய்திகள் பேப்பருக்கு செல்வதும், அச்சு பிரிண்டிங் முறையும் மறைந்து விட்டது என்று நினைக்கிறேன். இ-பேப்பர் முறை வந்திருக்கலாம்.”

“அதாவது, ஒரே டி.வீ.யில் பல சேனல்கள் வருவது போல, செய்தி பேப்பர் வடிவ மின் ஸ்கிரீனில், பல பேப்பர்களின் செய்திகள் வருவதுதான் இ-பேப்பர். சரியா? ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பொது செய்தி ஏஜன்சி இருக்கும். அதன் மூலமாய், எல்லா செய்தி நிறுவனங்களும், இ-பேப்பருக்கு செய்தி அனுப்பும். இதன் மூலம் ஒரே பேப்பரில், எல்லா நிறுவன செய்திகளும் கிடைத்து விடும். சரியா?”

“எக்ஸாக்ட்லி. அதற்கு தக்கபடி என் ஸெண்டிங் யூனிட்டை மாற்றி வடிவமைக்க வேண்டும். அது கூட அவ்வளவு சிக்கலில்லை. மற்றொரு பிரச்சனை-அலைவரிசை. ரேடியோ அலைக்கதிர்களில் எனக்கு ரிப்ளை கிடைக்க மாட்டேன்கிறது. அவர்களின் கேரியர், வேறு அலைவரிசைக்கு மாறியுள்ளது. அதை, தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் தலைவலி பிடித்த வேலை”

சிறிது நேர யோசனைக்குப் பின் ரேகா கேட்டாள்.

“நீ ஏன் IRல் டிரை பண்ணக் கூடாது?”

“என்ன திடீர்னு IR?"

”ஏதோ தோனுகிறது. அவர்கள் IR கதிர்களுக்கு மாறியிருப்பார்களோ என்று. டிரை பண்ணிப் பார் சதீஷ். நீ ஒரு கம்யூனிகேஷன் எக்ஸ்பர்ட்!” என்றாள்.

“முந்தா நாள்தான் என்னை கம்யூனிகேஷன் திருடன் என்று திட்டியதாக ஞாபகம்!”

“அதை மறந்து விடு. டி.சி.யில் மட்டும் கவனம் செலுத்து. நிச்சயம் IR கதிர்கள்தான். இரைச்சலின்மை. நீண்ட தூரம் போன்றவை அதில்தான் கிடைக்கும். நிச்சயம் சக்ஸஸ் ஆகும். ஆல் தி பெஸ்ட்”, என்று சொல்லிவிட்டு, அருகில் வந்து, என் கன்னத்தில் முத்தமிட்டாள்.

நான் ஷாக்காகி நிற்க, என்னிடம் கேட்டாள்,

“ஏய், ஏன் இப்படி இருக்கிற?”

“திடீர்னு கிடைத்த இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டேன்!”

“நீ மட்டும் Y4K தகவலை கொண்டு வந்து விடு. இதை விட இன்ப அதிர்ச்சிகள் எல்லாம் கிடைக்கும்!”, என்று கூறி கண்ணடித்து விட்டுச் சென்றாள்.

ஒரு மனிதனை உற்சாகப்படுத்த இதைவிட வேறென்ன வேண்டும். ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று இதனால்தான் சொல்கிறார்களோ?

ஆபீஸுக்கு ஒரு வாரம் லீவு போட்டேன். பகல் இரவு தெரியாமல், அறைக்குள்ளேயே முடங்கி கிடந்து டி.சி. ஹார்ட்வேரை மாற்றினேன். இ-பேப்பருக்கு தக்கபடி சர்க்கியூட்டுகளை வடிவமைத்தேன். இதற்கே இரண்டு நாட்கள் சென்று விட்டன. அலைவரிசையை கண்டுபிடிக்க, மாதக் கணக்கில் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இருந்தாலும் ரேகா கூறியபடி முதலில் IRல் முயற்சி பண்ணுவது என்று முடிவு செய்தேன். IR பிரிக்குவன்சி ரேஞ்ச் 10 டெரா ஹெர்ட்ஸிலிருந்து 400 டெரா ஹெர்ட்ஸ் வரை உள்ளது. இதனை 10 பெரிய ரேஞ்சாகவும், ஒவ்வொன்றையும் 100 உப ரேஞ்ச்களாகவும், ஆக மொத்தம் 1000 சிறு சிறு ரேஞ்ச்களாக பிரித்தேன். ஒவ்வொரு ரேஞ்சிலும் தேட ஆரம்பித்தேன். மேலும் 4 நாட்கள் சென்று விட்டன. இதுவரை இரண்டு பெரிய ரேஞ்ச்கள் மட்டுமே முடிந்துள்ளன. அடுத்த நாள், மூன்றாவது ரேஞ்சில், 128.4 டெரா ஹெர்ட்ஸில், டி.சி. கதிர்கள் திரும்பி வந்தன!

வாவ்! டி.சி. வேலை செய்கிறது! கதிர்கள் 100 வருடத்திற்கு பிறகு உள்ள செய்தி கேந்திரத்தை சென்றடைகின்றது. ரேகா வாழ்க! அவளின் IR ஐடியா வாழ்க!

உடனே, ஸெண்டிங் யூனிட்டில், Y4K தகவலைத் தேடி, கதிர்களை அனுப்பினேன். கிடைத்த ரிப்ளை எனக்கு புரிபடவே இல்லை. படிப்படியாக சென்றால்தான் புரியுமோ என்று நினைத்தேன். எனவே, 2700ம் வருடத் தகவல்களை எடுத்தேன்.

வழக்கம் போல, அதே கொலை, கொள்ளை, அரசியல், மோசடி, சவடால் செய்திகள்தான் இருந்தன. ஆனால், அதிலும் ஒரிரு செய்திகள் எனக்கு வித்தியாசமாகப்பட்டன.  இதுதான் பிரச்சனையின் ஆரம்பக்கட்டமாக இருக்குமோ? மேலும் இருநூறு வருடம் கழித்து 2900ம் வருடத் தகவலை எடுத்தேன். என் சந்தேகம் அதிகரித்தது. 3000 வருடத் தகவல்களில் அது உறுதியானது. நெஞ்சம் படபடத்தது. கைகள் நடுங்கின. 3500க்கு சென்றேன். 3800, 3900, 3960, 3990, கடைசியாக 3997ம் வருட நவம்பரில் உள்ள செய்திகள் என்னை திகைப்புக்கு உள்ளாக்கியது. காரணம் என்னவென்று எனக்கு விளங்கி விட்டது. பயத்தில் உறைந்து போனேன். சிறிது நேரத்திற்கு பின்பு, சுதாரித்துக் கொண்டு ரேகாவுக்கு போன் போட்டேன்.

“ரேகா, Y4K பிரச்சனை என்னவென்று கண்டுபிடித்து விட்டேன். நீயோ நானோ எதிர்பார்க்காத விஷயம். ரொம்ப சீரியஸ். உடனே வா”, என்றேன்.

Y4K பிரச்சனை அடுத்த அத்தியாயத்தில்...

1 comment:

varsha hiran mahi said...

Poga poga thrilling aahitte irukku. Problem ennannu ithulaye sonna thaan enna?