Wednesday, February 15, 2006

கதை

“என்னத்த ப்ரூஃப் பாக்கிறானுவ. ஜூன் 15 ,2006ன்னு அடிக்கிறதுக்கு ஐ¥ன் 15, 2006ன்னு அடிசிருக்கான். ஓரு பயலும் கவனிக்கல” மனதில் திட்டிக் கொண்டிருந்தபொழுது, நடேசன் உள்ளே வந்தார்.

“என்ன நடேசன்! உங்க கண்லகூட இந்த தப்பு மாட்டலியா?”, ப்ரூஃபை அவரிடம் தள்ளினார்.

“நான் இன்னைக்கு ப்ரூஃப் பாக்கவே இல்ல ஸார்! நாகராஜ்தான் பார்த்தார். நான் வந்ததே வேற விஷயம்”

“என்ன?”

“ஸார் குணானு ஒரு ஆளு கதை அனுப்பியிருக்கான்.”

“சசசரிரி” என்று ராகம் பாடினார்.

“இது அந்தாள் நமக்கு அனுப்புற பதினாறாவது கதை. ஓன்ன கூட நாம பிரசுரிக்கலன்னாலும் தொடர்ந்து அனுப்பிட்டிருக்கான்.”

“என்ன மாதிரி கதைங்க?”

“எல்லாமே ஸைன்ஸ் பிக் ஷன் ரகம்தான். அதான், நம்ம பத்திரிகைக்கு இந்த மாதிரி கதையெல்லம் ஒத்து வராதுன்னு சொல்லி அந்தாளுக்கு எற்கெனவே மூனுதடவை லெட்டர் போட்டேன். ஆனா, எல்லாமே அட்ரஸ் இல்லைன்னு ரிடர்ன் ஆயிருச்சு.”

“எங்க, இப்ப வந்த கதையை கொடுங்க”, நடேசன் கவரை அவரிடம் நீட்டினார்.

“இந்தாளு வேற எந்தப் பத்திரிகைலயும் எழுதின மாதிரியும், ஒன்னுந்தெரியலை. ஏன், பிரசுரிக்க மாட்டோம்னு தெரிஞ்சும் நமக்கு, திருப்பி திருப்பி அனுப்பறான்னு தெரியலை.”

“கதை நல்லாத்தானிருக்கு நடேசன். ஆனா நம்ம பத்திரிகைக்கு ஒத்து வராது. எதுக்கும் இன்னோரு தடவை பதில் எழுதிப் போடுங்க. பாவம்! வேற பத்திரிகைக்காவது அனுப்பட்டும்.” என்றபடி கவரை நீட்டியவர் கண்களில் அந்த போஸ்ட் ஆபீஸ் மார்க் பட்டது.

“12-10-2055”