Tuesday, August 12, 2008

ரசனைகள்

ஒரு நாள் பால்கனியில் கதை எழுதும் எண்ணத்தோடு அமர்ந்த எனக்கு கதைக் கரு எதுவும் கிடைக்கவில்லை. எனவே யோசித்தபடியே கண்மூடி ஈஸிசேரில் சாய்ந்தேன். கற்பனை குதிரையை தட்டி விட்டேன்.

வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, எனது பெரும்பாலான நேரங்களை பால்கனியிலும், பேப்பரிலும், நூலகத்திலும்தான் செலவிடுகிறேன். அவ்வப்போது சிறுகதைகள், துணுக்குகள் என பத்திரிக்கைக்கு அனுப்புவதும் உண்டு. எப்படியும் பத்தில் நான்கு பிரசுரமாகி விடும்.

ஆனால் என் மனைவி எனக்கு நேரெதிர். அதனால்தான் எனக்கு மனைவியானாளோ என்னவோ? அவளுக்கு டி.வி. நடிகைகளின் அழுகையும், அவர்களுக்காக வருத்தப்படவும்தான் தெரியும். அதில் செய்திகள்கூட பார்க்கமாட்டாள். தாயில்லாக் குழந்தை என்பார்கள், ஆனால் அவள் தாயாகா குழந்தை. எனவே நானும் அவளை ஒன்றும் சொல்வதில்லை.

முன் ஒருமுறை நான் எழுதிய, கதை வந்துள்ள பத்திரிக்கை ஒன்றை அவளிடம் காண்பித்தேன். அதற்கு அவள்,
”என்ன, ஒரு கதைதான் வந்திருக்கு? நீங்க நாலு கதை அனுப்புனீங்களே!?”

“எல்லா கதையையும் ஒரே புத்தகத்துலயா போட முடியும்? அடுத்த வாரம் வந்தாலும் வரும், இல்ல, வராம கூடப் போகும்.”

“என்ன எழவு பத்திரிக்கையோ? என்ன கதையோ? நீங்கதான் மெச்சிக்கனும். அந்தக் கதை எழுதின பேப்பருக்கு ஒரு சோத்துக் கரண்டி வாங்கியிருக்கலாம். அதை விட்டுட்டு என்னமோ பெரிசா கதை எழுதறாராம், கதை.”

அதன் பின் என் கதைகள் பிரசுரமானால் கூட நான் அவளிடம் காட்டுவதில்லை. கதை என்றில்லை, பல விஷயங்களில் அவள் அப்படித்தான். எனக்கு சாதாரண கோழிமுட்டை கூட அதிசயமாகத் தெரியும். அவளுக்கு அதை ஆம்லெட் போடத்தான் தெரியும். ஆனால் இத்தனை வருடங்களில் என்னை கவனித்துக் கொண்டதில் அவளுக்கு நிகர் அவள்தான்.

கற்பனைக் குதிரையில் பயணித்த நான் சட்டென கண் திறந்தேன். ஏதோ ஓர் உந்துதலில், கீழே பார்த்தேன். அங்கே கருப்பாக ஒருவன் வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் பார்வைகளில் பயமா அல்லது திருட்டுத்தனமா எனத் தெரியவில்லை. கூர்ந்து கவனித்தேன். வேகமாக நடப்பதும், ஒரு நொடி நின்று சுற்றிலும் ஒரு பார்வை பார்ப்பதுமாக போய்க் கொண்டிருந்தான். நான் சிறிது அசைந்தாலும் உஷாராகி விடுவான் என அசையாமல் உட்கார்ந்திருந்தேன். அவன் யாரையோ தேடிக் கொண்டிருந்தது போலிருந்தது.

சட்டென ஒரு யோசனை உதித்தது எனக்கு. 'ஏன் இதையே ஒரு கதையாக எழுதக் கூடாது' என, அவன் நடவடிக்கைகளை தீவிரமாக கவனித்தேன். அப்போது என் மனைவி அங்கு வந்தாள். வந்தவள், “நேத்துதான் பொடி போட்டு இந்த எறும்பெல்லாம் ஒழிச்சேன். அதுக்குள்ள எங்கருந்துதான் வருமோ? சே!” என்று அலுத்தவாறே நான் பார்த்துக் கொண்டிருந்த அந்த அழகான எறும்பை, விளக்குமாறு கொண்டு வெளியே தள்ளினாள்.

‘அந்த ஒரு எறும்பு உன்ன என்ன செஞ்சிடப் போவுது' என கேட்க நினைத்தும் ஊமையாக நின்றேன். ஏனென்றால் அவள் அப்படி நடந்து கொள்வதால்தான் நான் அவளைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. என்னைப் பற்றியும்தான்.

‘ரசனைகள் வேறாக இருந்தால்தான் வாழ்க்கையும் ரசனையாக இருக்குமோ?' என்று எண்ணியவாறே, சுவற்றில் அசையாமல் நின்று கொண்டிருந்த பல்லி ஒன்றை, நானும் அசையாமல் ரசிக்க ஆரம்பித்தேன்.


-எழுதியவர் மீனு

அவனைத் தேடி...

நாங்கள் மூன்று பேரும் ஒருவனை தேடிச் சென்று கொண்டிருந்தோம். தலைவி உத்தரவு.
எங்கள் மூவரைத் தவிர இன்னும் பலர் வெவ்வேறு திசைகளில் சென்றிருந்தனர். தலைவியின் சொல் மீறி நாங்கள் ஒரு முறை கூட நடந்து கொண்டதில்லை.

நாங்கள் தேடிக் கொண்டிருப்பவன் சரக்கு இருக்குமிடம் அறிந்து வரப் போனவன். போனவன், போனவன்தான். திரும்பி வரவில்லை. எங்களுக்குத் தெரியும்; வராமல் இருப்பவன் எப்போதுமே வரமாட்டான் என்று. ஆனாலும் இது எங்கள் கடமை. எனவே தேடினோம்.

சரக்கு நிலையாக ஒரு இடத்தில் இராது. குறிப்பிட்ட ஐந்தாறு இடங்களில் 2 அல்லது 3 இடங்களில் தான் கிடைக்கும். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அதிகமாக கிடைக்கும். ஆனால் அதில் ஆபத்து அதிகம்.

அவர்களிடம் சிக்காமல் சரக்கெடுப்பது மிக கடினம்.

நாங்கள் இதுவரை தேடிய இடங்களில் அவனும் இல்லை, சரக்கும் இல்லை. முடிவில் வேறு வழியில்லாமல், ஆபத்தான பகுதிக்குச் சென்று தேட ஆரம்பித்தோம். ஆனால் அங்கு, நாங்கள் நடக்கக்கூடாது என்று நினைத்திருந்தது, நடந்திருந்தது. ஆம், அவன் சடலமாகிக் கிடந்தான். சிறிதேனும் உயிர் இருக்காதா என்ற ஆவலுடன் வேகமாக அவனை நோக்கிச் சென்றோம். ஆனால் அவன் இறந்து வெகு நேரம் ஆகிவிட்டது.

அவர்கள் உயர்ஜாதியினராவே இருக்கட்டும். அதற்காக, நாங்கள் திருடுகிறோம் என்ற ஒன்றிற்காக, இப்படி கண்மண் தெரியாமல் நடந்து கொள்ளவேண்டிய அவசியம் என்ன? வந்த கோபத்தில் அவனை கொன்றவர்களை அப்படியே கடித்துக் குதற வேண்டும் போல் இருந்தது. ஆனால் அப்படி செய்வதால் என்ன பயன்?

நாங்களும் அவன் கதிக்கு ஆளாக வேண்டியது தான்.

அடுத்தகட்ட நடவடிக்கையாக, மூவரும் சேர்ந்து அவனை புதைப்பதற்காக தூக்கிச் சென்றோம். யாரும் பார்க்காத வண்ணம் கொண்டு சென்று அவனைப் புதைத்தோம். பின் தலைவியிடம் சென்று விஷயத்தைக் கூறினோம். எங்களுக்காக வருத்தபடுவதற்கு அவருக்கு நேரமில்லை. அவன் வேலைக்கு வேறு ஒருவனை நியமித்து விட்டார்.

ஆனால் அவனும் திரும்பி வருவான் என்பது நிச்சயமல்ல. எங்கள் வாழ்க்கை அப்படி. ஏனெனில் நாங்கள் சாதாரண கட்டெறும்புகள் தானே!

-எழுதியவர் மீனு