Friday, April 04, 2008

வித்தியாசம்

அவன் வித்தியாசமானவன். நிஜமாகத்தான். கொஞ்சமோ, ரொம்பவோ வித்தியாசமானவன்.

ரயிலில் போய் கொண்டிருக்கும் பொழுது, பக்கத்து டிராக்கில் இன்னொரு ரயில் எதிராகவோ, இணையாகவோ போகும் பொழுது, சாதாரணமாக நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

1) தியரி ஆஃப் ரிலேட்டிவிடி?!
2) அழகான பெண் யாராவது தெரிகிறாளா?
3) ஏதோ ஒரு ரயில்!

நீங்கள் மூன்றாவதை தேர்ந்தெடுத்தால் கதையை தொடர்ந்து படிப்பதை இப்பொழுதே நிறுத்தி விடலாம். ஏனென்றால் இவன் முதல் ரகம். சரி, இதில் என்ன பெரிய வித்தியாசம்? நிறைய பேருக்கு தோன்றுவதுதானே என்கிறீர்களா? இது சாம்பிள்தான். இன்னும் நிறைய இருக்கிறது வித்தியாசம்!

ஒரு தடவை இப்படித்தான், பத்தாவது வீட்டில் சிக்கன் நஜ்ஜட்ஸ் சமைத்தார்கள். இங்கிருந்தே 28 சதவீத சிக்கன் அழுகிவிட்டது, வாசனையிலேயே இவனுக்கு தெரிந்தது. அவர்கள் வீட்டில் போய் ஒரு நல்லெண்ணத்தோடு சொல்ல, அவர்களுக்கு இவனை யாரென்றே தெரியாததால், திட்டி அனுப்பி விட்டனர். அதற்கப்புறம் அவர்கள் குடும்பத்திற்கே வயிறு வலி வந்து, சூனியம் வைத்து விட்டார்கள் என்று, ஏதோ ஒரு நம்பூதிரியை போய் பார்த்ததெல்லாம் தனிக் கதை. அது நமக்குத் தேவையில்லை.


என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? ஆங், வித்தியாசமானவன். போன வருடம், 8.3 ரிக்டர் அளவில், நம்மூரில் பூமியதிர்ச்சி பதிவானது உங்களுக்கு நினைவிருக்கலாம். அது நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே, நம்மாளுக்கு எங்கே மணியடித்ததோ தெரியவில்லை. ரயிலேறி சொந்த ஊருக்கு போய் Safeகிவிட்டான். பாம்புகளும் எலிகளும் தான், இன்ஃப்ரா ஸோனிக் சப்த அலைகளின் எச்சரிக்கை உணர்வால், 3 நாட்களுக்கு முன்பே வளையிலிருந்து வெளியேறி, வேறிடம் போயின, என்று நிலநடுக்கத்துக்கு அடுத்த நாள் பேப்பரில் செய்தி வந்தது. ஏனோ நம்மாள் பெயர் வரவில்லை. அதற்காக வித்தியாசமானவன் இல்லை என்று சொல்லி விட முடியுமா?

இரவில் வானம் பார்ப்பது அவன் பொழுது போக்கு. பெரும்பாலான நட்சத்திரங்களின் பெயர்களைக்கூட, அடையாளம் காட்டிச் சொல்லுவான். நமக்குத்தான் அவன் சொல்வது சரியா தப்பா என்று தெரியாது. அன்று அப்படித்தான், புதிதாக ஒரு நட்சத்திரம் தெரிகிறதே, அது தெரியும் இடத்தில் இருக்கும் நட்சத்திரத்தின் பெயர் என்ன என்று நெட்டில் தேடி 'ஃபோட்டோஜெனிக்' என்று அறிந்து கொண்டான்; அது ஒரு நட்சத்திரமே அல்ல, பக்கத்து சூரிய குடும்பத்தின் ஒரு கோள் என்ற உபரித் தகவலோடு. ஆனால், சூரிய குடும்பக் கோள்களைத் தவிர வேறெந்தக் கோளையும், வெறுங்கண்களால் பார்க்க முடியாது என்பது அவனுக்கு தெரியுமா, என்று நமக்குத் தெரியாது.

அவன் இந்த சில வித்தியாசங்களை சமீப காலமாகத்தான் உணர்கிறான். அவனது வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால், இந்த இருபத்தி இரண்டு வயது வரை, வழக்கம் போல் இருபது வயதில் மூன்றாவது முறை காதலித்து, வழக்கம் போல் பதினெட்டு வயதில் சிகரெட் பிடித்து, வழக்கம் போல் பதினைந்து வயதில் பொதுத் தேர்வுக்கு விடிய விடிய படித்து, வழக்கம் போல் பத்து வயதில் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்து, வழக்கம் போல் ஆறு வயதில் சாக்பீஸும் குச்சியும் தின்று, வழக்கம் போல் 276 நாட்கள் அம்மாவின் கருவிலிருந்து என்று எல்லாமே, எல்லாமே வழக்கம் போல்தான் நடந்திருந்தன. இப்பொழுது சில மாதங்களாய்தான் வித்தியாசமாய் உணர்ந்தான்.

'என்ன இதெல்லாம்? நான் உண்மையிலேயே வித்தியாசமானவன்தானா? ஏன் இப்படி இருக்கிறேன்? ஏதாவது டாக்டரை பார்க்கலாமா?' என்றெல்லாம் அவன் மனம் குழம்ப ஆரம்பித்தது. 'ராமிடம் கேட்கலாம். அவன்தான் சரியான ஆள். பிரச்சனையை புரிந்து கொள்வான். அப்புறம் வேண்டுமானால் டாக்டரைப் பார்க்கலாம்'. ராம் அவனது நண்பன். கொஞ்சம் புத்திசாலி என்று நம்பப்படுபவன்.

ஆனால் ராமிடம் கேட்டபொழுது, "நீ சொல்றதெல்லாம் வச்சு பார்க்கும்பொழுது, அப்படியொன்னும் நீ வித்தியாசமானவன்னு எனக்குத் தோனலை.", அப்படின்னு சாதாரணமா சொல்லிட்டான்.

"என்னடா சொல்றே? இதெல்லாம் வித்தியாசமா ஒனக்குத் தோனலையா?"

ராம் அவனை நிதானமாக பார்த்துவிட்டு "இங்கே பாரு. இந்த ஒலகத்தில எல்லாரும் ஒரு விதத்துல வித்தியாசமானவங்கதான். சில பேரு பாம்பு பல்லியெல்லாம் வாய் வழியா விட்டு, மூக்கு வழியா வெளியே எடுப்பாங்க. சில பேர் கண்ணாடித் துண்டு, பிளேடுன்னு சாப்பிடுவாங்க. ஒரு சிலருக்கு 10 மாடி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்தாலும் ஒன்னுமே ஆகாது. சிலர் பத்து நிமிஷத்துக்கு மேல கூட மூச்ச அடக்கி இருப்பாங்க.

சில பேருக்கு பயிற்சி. சில பேருக்கு இயற்கையாவே அமைஞ்ச உடல்வாகு, சுற்றுச் சூழல். ஆனா, அதுக்காக அவங்களையெல்லாம் வித்தியாசமானவங்கன்னு சொல்ல முடியாது. அவங்களும் நார்மாலான மனுஷங்கதான்."

"ஆனா அவங்களும் நானும் ஒன்னா?"

"நீயும் அவங்கள மாதிரிதான். ஒன்னோட சில புலன்கள், கொஞ்சம் அதிகமா வேலை செய்யுது. அதுக்கு, ஒன்னோட உடல்வாகு, உணவு பழக்க வழக்கங்கள், சுற்றுச் சூழல்னு பல காரணங்கள் இருக்கலாம். இதுல ஏதாவது ஒன்னு மாறிச்சினாவோ, குறைஞ்சிச்சுன்னாவோ கூட, உன்னோட இந்த அதிகப்படி உணர்வுகள் குறைஞ்சு போய்டும். அதனால, வீணா அலட்டிக்காதே."

"இல்ல ராம். எனக்கென்னவோ இன்னும் 'நான் வித்தியாசமானவன்' அப்படின்னுதான் தோனுது"

"இப்ப நான் என்ன பண்ணினா, நீ நம்புவே? ம்ம்ம். சரி. இப்ப ஒனக்கு இந்த வித்தியாசமான புலனுணர்வு இருக்கிற மாதிரி, எனக்கும் ஒன்னு ரெண்டு வித்தியாசமான விஷயங்கள் செய்ய முடியும். அப்படி என்னால செய்ய முடியறத, உன்னால செய்ய முடியாத பட்சத்திலயாவது, நான் சொல்றத ஒத்துக்குவியா?"

"ம்ம். சரி." அரை மனதாக தலையாட்டினான் அவன்.

ராம், "ஒகே. அங்க அந்த ட்ராயர்ல, ஸ்டெதஸ்கோப் இருக்கும். எடுத்துட்டு வா". வந்தான். "அதை உன் காதில் மாட்டிகிட்டு, செஸ்ட் பீஸை, என் நெஞ்சில் வை". வைத்தான்.

"எத்தனை கேட்கிறது?"

"பத்து செகண்டுக்கு பத்து துடிப்பு"

"தொடர்ந்து கேட்டுகிட்டேயிரு" என்று சொல்லிவிட்டு, ராம் மெதுவாக கண்களை மூடினான். முதலில் ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை. இரண்டு நிமிடம் கழித்துதான் துடிப்புகளின் எண்ணிக்கை மெதுவாக குறைவதை உணர்ந்தான். பத்துக்கு பத்து துடித்து கொண்டிருந்தது, மெதுவாக பத்துக்கு எட்டு, பத்துக்கு ஆறு என்று குறைந்து கொண்டிருந்தது. ஏழாவது நிமிடத்தில் பத்துக்கு ஒரு துடிப்பு கூட கேட்கவில்லை. இருபதுக்கு ஒன்றுதான் கேட்டது. பின்னர் சிறிது சிறிதாக மறுபடி துடிப்புகள் அதிகரிக்க, பத்துக்கு இரண்டு, நான்கு, எட்டு, பத்து, ராம் கண்ணைத் திறந்தான்.

அவனுக்கு பயங்கர ஆச்சர்யம். "டேய் ராம். எப்படிறா?"

"கடுமையான யோகா. கொஞ்சம் கொஞ்சமா பயிற்சி பண்ணிகிட்டேன். ஆனாலும் எட்டு நிமிஷம்தான் அதிகம். அதுக்கு மேல என்னால் முடியலை. இப்ப சொல்லு ஒன்னால இப்படி பண்ண முடியுமா?"

"முடியாதுதான்."

"உன்னை விடு. இதுவரைக்கும், இந்த மாதிரி பண்ணக்கூடியவங்க எண்ணிக்கை ஒத்தைப் படையை தாண்டினதில்லை. அதுக்காக நான் என்ன வித்தியாசமானவனா?"

"இல்லை சாதாரணமானவன்தான்."

"அதே மாதிரிதான். ஒனக்கு ஒன்னும் கொம்பு முளைக்கலை. நீயும் சாதாரணமானவன்தான்."

"ம்ம்ம். அப்படித்தான் தோனுது"

"போய் நல்லா ரெஸ்ட் எடு. மனசை வீணா அலட்டிக்காதே."

வீட்டுக்குத் திரும்பி மொட்டைமாடியில் படுத்திருந்தவனின் மனதில் கேள்விகள், கேள்விகள். 'அப்படின்னா இந்த உலகத்தில் எல்லோருமே வித்தியாசமானவர்கள்தானா? கீழ் வீட்டில் செத்துப் போன எறும்பின் வாடையை நான் உணர்வது போல், வேறு யாராவதும் உணர்வார்களா? பக்கத்து மாடியில் பறக்கும் கொசுவின் சத்தம் எனக்குக் கேடபது போல் இன்னும் சில பேருக்கும் கேட்குமோ? அதோ, 'ஃபோட்டோஜெனிக்' கோளை நான் பார்த்துக் கொண்டிருப்பது போல், வேறு யாரும் கூட பார்த்துக் கொண்டிருப்பார்களோ' கேள்விகளின் அலுப்பில் அப்படியே தூங்கிப் போனான்.

தூங்கிக் கொண்டிருந்தவனின் தலையிலிருந்து, கொம்பு போல அந்த ஆண்டெனா முளைத்து, ஃபோட்டோஜெனிக்கை நோக்கித் திரும்பி, தன் வெளிச்சமில்லாத அலைகளை அனுப்பத் தொடங்கியது.








எல்லாம் சரிதான். அவன் தூங்கிய பிறகு நடந்ததெல்லாம் கூட, உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? எனென்றால், நான் வித்தியாசமானவன்.