Tuesday, September 03, 2013

Y4K

5. ரேகாவின் கடிதங்கள்

“உன்னோட ஐடியா என்ன ரேகா”

“டி.சி. மூலமாக, 4000ல் உள்ள செய்தி கேந்திரத்திற்கு உன்னால் ஒரு தகவலை அனுப்ப முடியுமா?” என்று என்னிடம் எதிர் கேள்வி கேட்டாள்.

“உன் மைண்டில் என்ன ஓடுது?”

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடா”

“முடியும்”

“அப்படியானால், நான் கொடுக்கும் கடிதத்தை அங்கு அனுப்பு!”

“யாருக்கு கடிதம் எழுதப் போகிறாய்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“இந்திய நாட்டு தலைவிக்கு! அவர்களின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து எழுதப் போகிறேன். ஒரு உயிரை அழிக்க, அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை, சதீஷ்”, என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினாள்.

சிறிது நேரம் பேசாமல் இருந்த நான், பின்பு அவளிடம் கூறினேன்.

“இது ஒர்க் அவுட் ஆகாது, ரேகா. அவர்களை பொறுத்தவரையில் நாம் கீழான பிறவிகள்.”

“முயற்சி செய்து பார்ப்போம்”, என்று கூறிவிட்டு ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு, தனியே சென்று விட்டாள். நானும் அவளை தொந்திரவு செய்யவில்லை.

பலமுறை வார்த்தைகளை யோசித்து எழுதினாள். அடித்தல், திருத்தல் பின்பு மீண்டும் யோசித்தல் என்று இரண்டு மணி நேரத்திற்கு மேல் அதற்கு செலவிட்டாள். ஒருவழியாய், அவளுக்கு திருப்தி அளிக்கக் கூடிய வகையில் அமைந்த ஒரு மூன்று பக்க கடிதத்தை, என்னிடம் காட்டினாள்.

சும்மா சொல்லக் கூடாது. ரேகா, மிகவும் திறமையாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கடிதத்தை எழுதியுள்ளாள். ’ரேகாவின் கண்ணீர் கடிதம்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ள அந்தக் கடிதம், நிச்சயமாக ஜீனிஸுக்களிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது.

மனித உயிர்களின் பாதுகாப்பில்லாத, பயம் நிறைந்த வாழ்க்கையை உருக்கத்தோடு எழுதியிருந்தாள். ஜீனிஸுக்களின் கோபத்தை தூண்டாதவாறு, அவர்களை நாசுக்காக கண்டித்து இருந்தாள். பெண்கள் என்றாலே பொறுமைசாலிகள், இரக்கம் உள்ளவர்கள் என்ற பொதுவான கருத்தையே அழித்து விட்டீர்கள் என்று அங்கலாய்த்து இருந்தாள். ஒரு தனி நபரின் பாவபுண்ணிய பலன்கள், அவரின் குழந்தைகளுக்கு செல்வது போல, ஒரு நாட்டுத் தலைவியின் பாவ புண்ணிய பலன்கள், அந்த நாட்டு பிரஜைகளை போய் சேரும் என்று கூறி, ஜீனிஸ் பிரஜைகளையும் சாடியிருந்தாள்.

இந்தக் கடிதத்தை ஒரு வார்த்தை கூட மாற்றாமல் அப்படியே Y4Kக்கு அனுப்பினேன். ரேகாவின் கடிதம் சென்ற சில மணி நேரங்களிலேயே, அங்கு பரபரப்பு ஏற்பட ஆரம்பித்தது. ஜீனிஸ் பிரஜைகளுக்கு, அப்போதுதான் மனிதக் கொலைகள் நடந்து கொண்டிருந்தது தெரிந்தது. அது அவர்களிடையே கோபத்தை உண்டு பண்ணியது. அரசாங்கம் செய்து கொண்டிருந்த வேட்டையை உடனே நிறுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவைகள் நடக்க ஆரம்பித்தன. மனித இன பாதுகாப்பு இயக்கம், உயிர்வதை எதிர்ப்பு இயக்கம் என்று பல இயக்கங்கள் உருவாகி, ஜீனிஸ் மக்களை, அரசுக்கு எதிராக ஒருங்கிணைத்தன. பொது ஜீனிஸின் திடீர் எதிர்ப்பால் கலங்கிப் போன இந்திய அரசு, இது குறித்து உயர்மட்ட கூட்டம் போட்டு, நல்ல முடிவு எடுப்பதாய் உறுதி அளித்தது.

ரேகா, தன்னுடைய இரண்டாவது கடிதத்தை அனுப்பினாள். இந்தியாவின் வரலாறு, பாரம்பரியம், அஹிம்சா சக்தி முதலியவைகளை சுட்டிக் காட்டி, நம்முடைய உயரிய பண்புகளை சிதைத்து விட வேண்டாம் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்து இருந்தாள்.

ஜீனிஸ் மத்தியில் ரேகாவின் புகழ் அதிகரித்தது. ரே.க.க. பல இடங்களில் பேசப்பட்டது. இதனால் அரசாங்க நிலையிலும் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. மனித வேட்டை முடிவு உலகளாவிய முடிவு என்றும், உலக நாட்டுத் தலைவிகளுடன் இந்தியா தொடர்பு கொண்டுள்ளது என்றும் அரசு அறிவித்தது. ரேகாவின் கருத்தை கருணையோடு பரிசீலித்து கொண்டிருப்பதாய் உறுதி அளித்தது.

ரேகா, தன்னுடைய அடுத்த கடிதத்தில், இந்தியா தன் முடிவை தானாக எடுக்க வேண்டும் என்றும், மற்ற நாடுகளின் நிர்பந்தத்திற்கு பணியக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தாள். இந்தியாவின் இறையாண்மையை பலி போட்டு விடக் கூடாது என்று வலியுறுத்தினாள்.

இவ்வாறு ரேகா, மொத்தம் எட்டு கடிதங்கள் அனுப்பினாள். அரசாங்கமும் அவளின் கோரிகையில் உள்ள நியாயத்தை உணர்ந்தது. தன்னுடைய இரண்டு வருட செயல்களை கண்டு வெட்கம் அடைந்தது. இதை அரசின் செய்தி குறிப்பில் குறிப்பிட்டு, மனித வேட்டைகள் இனி நடக்காது என்றும், இந்திய எல்லைக்குள், மனிதர்கள், பயமில்லாமல், பாதுகாப்பாக தங்களின் உரிமைகளை அனுபவித்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது.

அந்த அறிவிப்பைக் கண்டதும் எங்களின் உற்சாகம் பீறிட்டது.

“சக்ஸஸ்!”, என்று சின்னக் குழந்தை போல ரேகா குதித்தாள். “நாம் சாதித்து விட்டோம், சதீஷ், சாதித்து விட்டோம்.”

“இதை நாம் கொண்டாட வேண்டும்”, என்று கூறினேன்.

“ஆம், கண்டிப்பாக கொண்டாட வேண்டும். சினிமா, டின்னர் என்று ஒரு ரவுண்டு போவோம். அதற்கு முன்பு, அவர்களுக்கு ஒரு நன்றிக் கடிதம் அனுப்பிவிட்டு வருகிறேன்.”

ரேகாவின் நன்றி என்று தலைப்பிட்டு, தன்னுடைய நன்றியை ஒரு அருமையான கடிதமாய் அனுப்பினாள்.

பின்பு மெரினா பீச் சென்று, கடலில் காலை நனைத்துக் கொண்டே, இரண்டு மணி நேரம் நடந்தோம். உற்சாகத்தில் நேரம் போனதே தெரியவில்லை.ரிப்போர்ட் எப்படி தயாரிக்க வேண்டும் என்பதைக் குறித்து யோசித்தோம். எங்களுக்கு கிடைக்கப் போகும் புகழைப் பற்றி பேசினோம். பின்னர் ஒரு சைனீஷ் ரெஸ்டாரண்டில் நன்கு சாப்பிட்டோம். அதன் பின்பு நைட்ஷோ சினிமாவிற்கு சென்றோம். இரவு இரண்டு மணிக்கு, தாஸ்பிரகாஷில் இரண்டு இரண்டு ஐஸ்கிரீம்கள் சாப்பிட்டோம். மூன்று மணிக்கு மேல்தான் தூங்கப் போனோம்.

அடுத்த நாள், எங்களின் ரிப்போர்ட்டை தயாரித்துக் கொண்டிருந்தபோது, டி.சி. மூலம் Y4K தகவல்களை தற்செயலாய் பார்க்க, அதில் உள்ள ஒரு செய்தி எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

“தொடர்ந்து பல கடிதங்கள் எழுதி, எங்களை மனமாற்றம் செய்ய வைத்த ரேகாவிற்கு, இந்திய அரசு நன்றி தெரிவிப்பதோடு, நம் நாட்டின் உயரிய விருதான ’பாரத ராணி - 4000’ விருதை அவருக்கு அளித்து கௌரவப்படுத்த விரும்புகிறோம். ரேகா எங்கு இருந்தாலும், இங்கு வந்து, என்னை சந்தித்து, விருதை பெற்றுக் கொள்ளவும். ஒப்பம், இந்திய அரசின் தலைவி.” என்று எழுதி கையொப்பமிட்டு இருந்தது.

“இதற்கு என்ன அர்த்தம்?”, என்று கேட்டேன்.

“அதுதான் தெளிவாக கூறியுள்ளதே மடையா”, என்று உற்சாகத்துடன் கூறிய ரேகா, “வாவ்! என்ன ஒரு நல்ல வாய்ப்பு! நம்மை விட உயர் பிறவிகளான ஜீனிஸ் கைகளால் விருது. அதுவும் அவர்கள் நாட்டின் உயரிய விருது. நம்முடைய ரிப்போர்ட்டோடு சேர்த்து, இந்த விருது சர்டிபிகேட்டையும் இணைத்து சமர்ப்பித்தால், உலகமே வாயில் விரலை வைக்காது?” என்று குதூகலித்தாள்.

நான் உடனடியாக பதில் பேசவில்லை. சிறிது நேரம் அமைதியாய் இருந்தேன். அதற்குள் ரேகா ஏதேதோ உற்சாகம் பீறிட பேசிக் கொண்டே இருந்தாள். பிறகு, சட்டென்று நிறுத்தி,
“ஏய், ஏன் அமைதியாக இருக்கிறே?”, என்று கேட்டாள்.

“இந்த விருதை வாங்க நீ Y4Kக்கு போகப் போகிறாயா?”

“போகப் போகிறோம், சதீஷ், போகப் போகிறோம்.”

“ஆர் யூ ஷ்யூர்? இதற்காக Y4kக்கு நேரில் செல்லத்தான் வேண்டுமா?”

“உனக்கு, இன்னமும் ஜீனிஸ் மீது நம்பிக்கை வரவில்லையா?”

“அதில்லை... இருந்தாலும்...” என்று இழுத்தேன்.

“ஷட் அப் சதீஷ். முதலில் உன்னுடைய டி.சி.யை நம்புகிறாயா, இல்லையா?”

“நம்புகிறேன்.”

“அது சரியான தகவலைத்தான் கொண்டு வருகிறது என்பதில் சந்தேகமில்லையே?”

“நிச்சயமாய் இல்லை”

“தென்?”

“என்ன இருந்தாலும், இது யுத்த பூமிக்கு உள்ளே செல்வது போல் அல்லவா?”

“யுத்தம் முடிந்து விட்டது. அவர்கள் மாறிவிட்டார்கள். அவர்கள் கூற்றில் உனக்கு உண்மை தெரியவில்லையா? நேற்றுதான் நம்முடைய வெற்றியை உற்சாகமாய் கொண்டாடினோம். அதற்குள்ளாக மாறி விட்டாயே”, என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.

சிறிது நேர யோசனைக்குப் பின், தயக்கத்துடன் ஓகே சொன்னேன்.

ரேகாவின் முகம் மீண்டும் மலர்ந்தது. என் கையை குலுக்கினாள். “குட் சதீஷ், தைரியமாக ஒரு முடிவை எடுத்துள்ளாய்”, என்று கூறி விட்டு, என்னை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

அங்கு ஒரு மூலையில் டைம் மிஷின் இருந்தது. அதன் கதவைத் திறந்து கொண்டு, உள்ளே இருந்த இருக்கையில் அமர்ந்தோம். செகண்ட் ஹேண்ட் வண்டியாக இருந்தாலும், பிரமாதமாய் இருந்தது. உள்ளே அமர்ந்ததும், டோர் லாக் பட்டனை அழுத்த, கதவு இறுகப் பூட்டிக் கொண்டது. பின்பு செல்ல வேண்டிய தேதி, வருடத்தை டைம் மிஷின் கேட்க, அதை ரேகா டைம் செய்தாள். செல்ல வேண்டிய லொக்கேஷனுக்கு, “எங்கு?” என்று என்னிடம் கேட்டாள். “பிஸி சிட்டி வேண்டாம். சென்னைக்கு அவுட்டரிலேயே போய் இறங்குவோம்”, என்றேன். உடனே, அதற்கு தக்கபடி அட்சரேகை, தீர்க்கரேகை டிகிரிகளை டைப் செய்தாள். பிறகு, சிறுசிறு டேட்டாக்களை ஒவ்வொன்றாக எண்டர் பண்ணினாள். டைம் மிஷின் ஸ்கிரீனில், “மிஷின் தயார் நிலையில் உள்ளது. கோ பட்டனை அழுத்தவும்” என்று வந்தது.

“போகலாமா?”, என்று ரேகா கேட்டாள்.

“எதற்கும் ஒருமுறை நன்றாக யோ...” என்று நான் வாக்கியத்தை கூறி முடிப்பதற்குள், ரேகா ’கோ’ பட்டனை அழுத்தி விட்டாள்.

அடுத்து Y4K...

No comments: