Tuesday, July 15, 2008

14-10-2015

முந்தாநாள் காலையில் கண்விழித்ததும் தவழ்ந்த அமைதி வியப்பாக இருந்தது.

சீக்கிரமாய் விழித்து விட்டேனா? மணி பார்த்தேன். 7:28.

“சாரு! காபிம்மாஆஆ...", என்று மனைவிக்கு குரல் கொடுத்துவிட்டு, பாத்ரூமுக்குள் நுழைந்தேன். பல்விளக்கிவிட்டு வெளியே வந்தபொழுது, டி.வி. ஓடிக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி ஒன்றுமில்லாமல் டி.வி. ஓடிக் கொண்டிருந்தது வியப்பாக இருந்தது.

“சாரு! காபி கேட்டனே?"

பதிலில்லை. என்ன பண்ணுகிறாள்? சமையலறைக்குள் எட்டிப் பார்த்தால், அங்கே அவள் இல்லை. மற்ற அறைகளிலும் தேடிப் பார்த்தேன். எங்கேயும் காணோம். கடைக்கு எங்காவது போயிருப்பாளோ?

வெளியே வந்தேன். ரோட்டில் ஒருவரும் இல்லை. முக்குக் கடை திறந்திருந்தது. ஆனால் கடைக்காரனைக் காணவில்லை.

தெருவில் இறங்கி நடந்தேன். சில கடைகள் மூடியிருந்தன. சில திறந்திருந்தன. ஆனால் கடைகளில் யாருமில்லை.

எனக்கு அதிசயமாகப் போய்விட்டது. எல்லாரும் எங்கே போய்ட்டாங்க? மனதில் எழுந்த கேள்வியுடன், பாக்கெட்டில் கைவிட்டு செல்போனை எடுத்தேன். என் நண்பன் ஒருவனை அழைத்தேன். ரிங் போய்ய்ய்ய்க்கொண்டே இருந்தது. என் போன் புக்கில் உள்ள எல்லோருக்கும் ட்ரை பண்ணினேன். பலனில்லை.

மனதில் எழுந்த வியப்பு பெரும் கலக்கமாக உருமாறியது. ஏதோ தப்பா நடந்திருக்கு! ஆனால் என்ன நடந்தது என்று புரியாத கலக்கமும், ஒரு இனந்தெரியாத துக்கமும் நெஞ்சை அடைத்தது.

வீட்டுக்குத் திரும்பிவந்து வண்டியை எடுத்துக் கொண்டு ஆஃபீஸுக்கு விரைந்தேன். வழியிலும் எவரும் கண்ணில் அகப்படவில்லை. ஆஃபீஸ் திறந்திருந்தது. வாட்ச்மேனைக் காணோம். உள்ளே ஷிப்ட் பார்ப்பவர்களையும் காணோம்.

ஒரு மாதிரியாக எனக்கு புரிந்தது. எல்லோரும் எங்கேயோ காணாமல் போய்விட்டார்கள்! ஆனால் எவ்வளவு பேர்? எங்கே போனார்கள்? எதற்கும் ஊருக்கு ஒரு போன் போடலாம். போட்டேன். அங்கும் எவரும் எடுக்கவில்லை.

ஆஃபீஸ் வாசலில் அப்படியே உட்கார்ந்து விட்டேன். எனக்கு அழக்கூடத் தோன்றவில்லை. என்ன செய்வது என்றே புரியாத நிலை. பத்து நிமிடத்தில், கண்களில் தாரை தாரையாய் வழிய ஆரம்பித்தது. சுமார் மூன்று மணிநேரம் அப்படி உட்கார்ந்து அழுதிருப்பேன். அப்புறம் மெதுவாக எழுந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். படுக்கையில் விழுந்து அழுது கொண்டிருந்தவன் அப்படியே தூங்கிப் போனேன்.

மறுபடி கண்விழித்தபோது, நேற்று நடந்ததெல்லாம் கனவாக இருக்குமோ என்று எண்ணினேன். ஆனால் அப்படியில்லை என்று என் கையிலிருந்த கடிகாரம் காட்டியது.

இப்பொழுது கொஞ்சம் தெளிவாக சிந்திக்க முடிந்தது. எல்லோரும் இறந்து போயிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இறந்த உடல்கள் எங்கே? இல்லை கடத்தப்பட்டார்கள் என்று வைத்துக் கொண்டால், அவ்வளவு பேரைக் கடத்தி எங்கே வைத்திருப்பார்கள்? யார் கடத்தினார்கள்? கேள்வி கேட்க முடிந்ததே தவிர பதில் கிடைக்கவில்லை. ஒன்று மட்டும் புரிந்தது. நான் பிழைக்க வேண்டுமானால், என்ன நடந்தது என்று கண்டுபிடிப்பதுதான் என் முதல் வேலை என்று புரிந்தது.

அன்றைய தினத்துக்கு முந்தின இரவு என்னென்ன நடந்தது என்று யோசித்தேன்.

எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கப் போய்விட்டேன். சாரு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள். வெளியே மெலிதாக மழை தூறிக்கொண்டிருந்தது. அடிக்கடி மின்னல் வெட்டிக் கொண்டிருந்ததால், முகத்தில் தலையணையைப் புதைத்துக் கொண்டு படுத்து தூங்கினேன். ஒரு வேளை இந்த சூழ்நிலைக்கு மழையும் மின்னலும் காரணமா?

அவ்வளவு பெரிய மழை பெய்யவில்லையே? அப்படியேயானாலும் எனக்கு மட்டும் ஏன் ஒன்றும் ஆகவில்லை?

இப்படியே யோசித்துக் கொண்டிருந்தேன். இரவு சுமார் எட்டு மணிக்கு ஒரு யோசனை தோன்றியது. எல்லோருக்கும் ஏதோ நடந்திருக்கிறது. டி.வி. ஸ்டேஷன்களில் இருந்தவர்கள் உட்பட; அதனால்தான் டிவியிலும் நிகழ்ச்சி ஒன்றும் இல்லை. எல்லோரும் காணாமல் போன அந்த நேரம் கண்டிப்பாய், எல்லா டி.வி. ஸ்டேஷன்களிலும் ஒரு கேமராவாவது ஓடிக் கொண்டிருந்திருக்கும். அந்த கேமராவில் பதிவானதைப் பார்த்தால் என்ன நடந்தது என்று புரியும். நாளை விடிந்ததும் டி.வி. ஸ்டேஷன்களில் போய்ப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இன்று காலையில், ஒரு டி.வி. ஸ்டேஷனுக்குப் போய்ப் பார்த்தேன். வழக்கம் போல யாருமே இல்லை. அங்கே ஐந்தாவது அறையில் ஒரு கேமரா இருந்தது. அதை அப்படியே எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து எனது டி.வி.யுடன் இணைத்து ஓட விட்டேன்.

ஏதோ ஒரு சீரியலின் படப்பிடிப்பு நடந்திருக்கும் போல; சீரியல் விளம்பரம் இல்லாமல், தலைவலி தரும் பின்னனி இசை இல்லாமல் ஓட ஆரம்பித்தது. அப்பொழுதுதான் இதை எழுத வேண்டும் என்று ஏனோ தோன்றியது. பேப்பர் பேனா எடுத்து எழுத ஆரம்பித்தேன். இதுவரை எழுதிவிட்டேன்.

இன்னும் சீரியல் முடியவில்லை. மூன்று நான்கு எடிட் செய்யாத எபிசோட்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. திடீரென்று நடித்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு பக்கமாக பார்க்கிறார்கள். கேமராவும் அந்தப் பக்கம் திரும்புகிறது.

டி.விக்கு உள்ளே ஒரு டி.வி.யில் ஒரு வழுக்கைத் தலை மனிதன் தெரிகின்றான். அவன் கண்களில் ஏதோ இழுக்கிறது. அவன் ஏதோ பேசுகிறான். சத்தம் சரியாக கேட்கவில்லை. அந்த வழுக்கைத் தலை தன் நெற்றியில் கையை வைத்து பட்டன் போல் எதையோ அழுத்துகிறான்.

இப்பொழுது டி.வி.யிலிருந்து மெல்லியதாக, மிக மெல்லியதாக ஏதோ சத்தம் கேட்கிறது. உஸ்ஸ்ஸ்ஸ்....

ஐயையோ! என் உடல் காற்றில் கரைகிறதே. சீக்கிரம் சீக்கிரம்! ஏனோ எழுதுவதை மட்டும் நிறுத்தவில்லை. என் பேனா என் கையிலிருந்

6 comments:

யோசிப்பவர் said...

2005ம் வருடம், மரத்தடி யாஹூ குழுமமும், திண்ணை.காமும் இணைந்து நடத்திய அறிவியல் புனைக்கதைப் போட்டியில் கலந்து கொண்ட எனது கதை. "எதிர்காலம் என்ற ஒன்று" புத்தகத்தில் பிரசுரமானது(பழைய சரக்கு). சிறு சிறு மாற்றங்களுடன் இங்கே வெளியிட்டிருக்கிறேன்.

சகாராதென்றல் said...

நல்லாருக்குங்க. கதையை முடித்தவிதம் பிடிச்சிருக்கு

rapp said...

நிஜமாகவே ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது, ரொம்ப ரொம்ப நல்லாவும் இருக்கு

யோசிப்பவர் said...

சகாராதென்றல், rapp,

பதிவை பதிந்த உடனேயே வாசித்து உற்சாகப்படுத்தியதற்கு நன்றி!!

Prakash said...

போட்டிக்கு வந்த கதைகளில், உங்களுது ஒண்ணுதான் உருப்படி.

விமர்சனம் பண்ணலாமோ?

இந்தக் கதை, இன்னைய தேதியிலே நடந்தாதான் அதுக்கு அறிபுனை கலர் வருது. இன்னும் பத்து வருஷத்துல இதை விட மோசமா நிஜத்துலயே நடக்க வாய்ப்பு இருக்கு இல்லையா?

யோசிப்பவர் said...

Prakash,
//போட்டிக்கு வந்த கதைகளில், உங்களுது ஒண்ணுதான் உருப்படி.//

இப்போதைய போட்டியில் நான் கலந்து கொள்வதாக இல்லை. இது இப்போதைய போட்டிக்காக எழுதப்பட்ட கதையும் அல்ல!!;-)

//விமர்சனம் பண்ணலாமோ?//
தாராளமாய்!!


//இந்தக் கதை, இன்னைய தேதியிலே நடந்தாதான் அதுக்கு அறிபுனை கலர் வருது. இன்னும் பத்து வருஷத்துல இதை விட மோசமா நிஜத்துலயே நடக்க வாய்ப்பு இருக்கு இல்லையா?
//
நடக்கலாம். யார் கண்டது?;-)