Wednesday, August 28, 2013

என் பள்ளிக்கூடத்திற்கு வந்த ரோபோ


விச்சுவிற்கு மட்டும் ஏன் தான் பிரச்சனைகளாக வருகிறதோ? தெரியவில்லை. நண்பர்கள் அனைவரும் கவலையில்லாமல் களிப்போடு இருக்கும்போது, அவன் மட்டும் கடுப்பில் இருந்தான். எல்லாம் அவன் ஸ்கூலினால் வரும் பிரச்சனைதான்.

விச்சுவின் பள்ளியை வெறுமனே ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ள நர்சரி பள்ளி தானே என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள். காலேஜ் நடத்துவது போல அவர்கள் பண்ணும் அல்டாப்பிற்கு அளவே இல்லாமல் இருக்கும். இப்படிதான் இரண்டு வருடத்திற்கு முன்பு, ஸ்போர்ட்ஸ் டேவிற்கு கபில்தேவை சிறப்பு விருந்தினராக அழைத்து ஊரையே தடபுடலாக்கி விட்டனர். வரப்போகும் ஆண்டு விழாவிற்கு அப்துல் கலாமை கூப்பிட்டு இருப்பதாகவும், இசைவு கிடைத்து விடும் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

விச்சு ஐந்தாம் வகுப்பு மாணவன். சூப்பர் சீனியராடா என்று கேட்டால் ஒத்துக் கொள்ள மாட்டான். அல்டிமேட் சீனியராம்! அவன் தான் SPLம் கூட!   ஸ்கூல் டே, ஸ்போட்ஸ் டே, கல்ச்சுரல் டே, எக்ஸ்போ என்று அனைத்திற்கும் SPL தான் பிரதானமாக நிற்க வேண்டும். மாநகராட்சி மேயர் போல ஸ்பெஷல் ஓவர் கோட் காஸ்ட்யூம் கூட உண்டு. எனவே SPL போஸ்ட்ற்கு மாணவர்களிடையே வெளியே தெரியாத போட்டியே நடக்கும். படிப்பு, விளையாட்டு, ஜி.கே., மியூசிக் என்று அனைத்திலும் விச்சுவிற்கு போட்டியாக சுதாகர் வந்திருந்தாலும், தேவையான சில மிஸ்களுக்கு சோப்பும், மற்ற மிஸ்களுக்கு ஐஸ்ஸும், பிரின்சிக்கு இரண்டையும் போட்டிருந்ததால், SPL பதவி விச்சுவிற்கு எளிதில் கிடைத்திருந்தது.

அப்படியிருந்தும் விச்சுவின் கடுப்பிற்கு காரணம்? சரோ! சரோ யார்? விச்சு தான் SPL என்று பள்ளியில் அறிவிப்பு செய்யும் நேரத்தில், பிரின்சி வேறொரு விஷயத்தையும் அறிவித்தார்.

“ஏற்கனவே தமிழக அளவில் பிரபலமடைந்துள்ள(?) நம் பள்ளியின் தரத்தை மேலும் உயர்த்துவதற்காக ‘சரோ’ என்ற ஜப்பான் தயாரிப்பு கல்வி ரோபோ ஒன்றை நம் பள்ளி வாங்கியுள்ளது. ஒவ்வொரு வகுப்பிற்கும் குறைந்த பட்சம் ஒரு பாடமாவது சரோ நடத்தும். ஆவரேஜ் மாணவர்களை சிறந்த மாணவர்களாகவும், புத்திசாலி மாணவர்களை அதி புத்திசாலிகளாகவும் சரோ மாற்றும்! ‘சரோ’வை உங்கள் முன் அறிமுகப்படுத்துவதில் சந்தோஷமடைகிறேன்”, என்று கூறி மேடையில் உள்ள ஸ்கிரீனை விலக்க, ஒரு எந்திர மனிதன் கையசைத்து நின்று கொண்டிருந்தான்.

பள்ளி முழுவதும் கரகோஷம் எழும்பியது. தனக்கு கிடைக்க வேண்டிய கைத்தட்டலை இவன் தட்டிச் சென்று விட்டானே என்று விச்சு எரிச்சலடைந்தான். ஒரு நாலு நாள் கழித்து இவனை அறிமுகப்படுத்தி இருக்கலாமே என்று ஆதங்கப்பட்டான்.

ஆனால் பிரின்சியோ படு வேகமாய் செயல்பட்டார். அடுத்த நாளே சரோவைப் பற்றி பேப்பர்களில் விளம்பரங்கள் வந்தன. இந்திய பள்ளிகள் வரலாற்றில் முதல்முறையாக ரோபோவை அறிமுகப்படுத்தும் ஒரே பள்ளி எங்கள் பாரத் நர்சரி தான் என்று செய்தி தாள்களும், கேபிள் சேனல்களும் அலறின! எங்கு திரும்பினாலும் ரோபோ டீச்சிங், ஹைடெக் ஸ்கூல் என்ற பேச்சு தான் விச்சு காதில் கேட்டது.

“வேறு ஸ்கூல்களிலிருந்து அட்மிஷன் கேட்டு க்யூவில் நிற்கிறார்கள்” என்ற ஆசிரியர்களின் புகழாரமும், “இயர்லி ஃபீஸ் இனி 75000 ரூபாய். சிட்டியிலேயே பாரத்தில்தான் அதிகம்!”, என்ற பெற்றோர்களின் பந்தாவும் விச்சுவின் காதில் நாராசமாய் விழுந்தன!

எஜிகேஷனல் ரோபோவாம் ... ரோபோ. அறிவேயில்லாத ஒரு மிஷின் பாடம் நடத்தி நாங்களெல்லாம் உருப்படவா? விச்சுவின் பொருமலை யாரும் கவனிக்கக் கூட இல்லை!

டில்லியிலிருந்து போன் போட்ட மாமா,” என்னடா விச்சு, உன் ஸ்கூல், 'ரோபோ கல்வி'யில் கலக்குகிறார்களாமே ... வாழ்த்துக்கள்”, என்று கூறினாரே ஒழிய, SPL ஆனதற்கு வாழ்த்தவில்லை.

“ச்சே... ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது. பத்து வயசு பையனுக்கு இப்படி ஒரு வில்லனா!”

அன்று ஸ்கூல் இன்ஸ்பெக்‌ஷன். முந்தைய நாளே கிளாஸ் மிஸ் கூறிவிட்டார்கள்.

“கேள்விகள் அனைத்தும் உன்னிடம் தான் கேட்பேன், விஷால். நல்ல பெயர் வாங்க வேண்டும்!”

ஆனால், விச்சுவிடம் கேள்வியை ஆரம்பித்த இன்ஸ்பெக்டரின் கவனமோ அந்த அறையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரோவிடம் சென்றது.

“ஓ ... இதுதான் புது ரோபோவா? இங்கு இருக்கிறதே? ஆபிஸில் இருக்கும் என்றல்லவா நினைத்தேன்?”

”கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தது”, என்று பிரின்சி பெருமிதமாய் பதில் கூறினார்.

“ஓ ... பிரில்லியண்ட்!”

அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அனைத்தும் ரோபோவை சுற்றியே இருக்க, விச்சு தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான்!

இவையனைத்தையும் மிஞ்சும் விதமாய் ஸ்போர்ட்ஸ் டே அமைந்தது. வழக்கமாக ஸ்போர்ட்ஸ் டே அன்று ஒலிம்பிக் டார்ச்சை SPL ஏற்றுவதுதான் பள்ளியின் வழக்கம். இந்த ஒரு விஷயத்திற்காகவே விச்சு SPL பதவிக்கு ஆசைப்பட்டான். ஆனால் இந்த வருடம் விச்சு, டார்ச்சை சரோவிடம் கொடுக்க அது தீபத்தை ஏற்றுவதாக திட்டமிட்டு விட்டார்கள்.

விச்சு கடுங்கோபம் அடைந்தான். இந்த அநியாயத்தை எப்படியும் நிறுத்தியாக வேண்டும் என்று நினைத்தான். ஆனால் எப்படி?

யோசிடா ... விச்சு ...  யோசி ...

காட் இட்.

ஆனால் ... மாட்டிக்கிட்டால் ... கிரிமினல் ஐடியா அல்லவா? என்றாலும் விச்சு துணிந்து விட்டான்.

பிளான் எளியது. ரோபோவின் பவர் சப்ளையை ஷார்ட் பண்ணி விடுவது தான் ஐடியா! அதையும் ஸ்போர்ட்ஸ் டே அன்று தான் செய்ய வேண்டும். அவர்களுக்கு சரி செய்ய டைம் கொடுக்கக் கூடாது.

ஸ்போர்ட்ஸ் டே அன்று காலை 7 மணிக்கே ஸ்கூலுக்கு வந்து விட்டான். ஃபங்சன் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாலும், சரியான சமயத்திற்காக விச்சு காத்திருந்தான்.

மனம் திக் திக் என்றிருந்தது. வியர்வை குற்றால அருவியாய் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. என்றாலும் சந்தர்ப்பம் பிரச்சனை செய்யாமல் தேடி வந்தது.

“விஷால், சீஃப் கெஸ்ட்க்குரிய சந்தன மாலை இது. பிரின்சி ரூமில் வைத்து விட்டு வா”

ஆஹா! ஆபீஸ் செல்ல வேண்டும். வில்லன் அங்கு தான் இருக்கிறான்.

ஆபீஸ் உள்ளே சென்ற விச்சு சுற்றும் முற்றும் பார்த்தான். யாருமே இல்லை. இதுதான் சரியான டைம். சரோ மூலையில் நின்று முழித்துக் கொண்டிருந்தான். அதன் பார்வை புலத்தில் படாமல் சைடுபுறமாக வந்து நெருங்கினான். அதன் பார்வை கோணம் 150 டிகிரி தான் என்பது விச்சுவுக்கு தெரியும்.

சரோ அருகில் நின்று, அதன் இதயப் பகுதியை கழற்றினான். உள்ளே இருந்த ஸ்விட்சை ஆஃப் மோடுக்கு மாற்றினான். பேட்டரியை வெளியே எடுத்து, அதன் ப்ளஸ், மைனஸை தன்னிடம் உள்ள சிறு வயர் துண்டால் இணைத்தான். மீண்டும் பேட்டரியை அதன் இருப்பிடத்திலேயே மாட்டினான்.

இப்போது ஸ்விட்சை ஆன் பண்ணினால், ரோபோ செயலிழந்து விடும்.

எதற்கும் சேஃப்டியாக இருக்கட்டுமே என்று, ஒரு கட்டையை வைத்து ஸ்விட்சை ஆன் பண்ணினான்.

உடனே சரோ மண்டையில் உள்ள சிவப்பு விளக்கு அணைந்து அணைந்து எரிந்தது. வயிற்று மானிட்டரில் செக் பாட்டரி செக் பாட்டரி என்று எச்சரிக்கை வந்தது. மானிட்டர் வேலை செய்ய கூடாதே என்று விச்சு யோசித்துக் கொண்டிருந்த போது, ஸ்விட்சிங் டு ஸ்டாண்ட்பை பேட்டரி என்ற வாசகம் ஸ்கிரினில் வந்தது. தலை விளக்கு பச்சைக்கு மாறியது. பிறகு, சரோ தன்னுடைய மெயின் பேட்டரியை கழற்றி, ஷார்ட் பண்ணியிருந்த வயரை எடுத்து கீழே போட்டு விட்டு, மீண்டும் பேட்டரியை மாட்டிக் கொண்டது. இப்போது, வயிற்று மானிட்டர் ஷிஃப்டிங் டூ மெயின் பேட்டரி. எவ்ரிதிங் நார்மல் என்ற வாசகத்தை காட்டியது.

ச்சே ... இந்த மடையன் தன்னை தானே சரி செய்து கொண்டானே .... இனி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, பிரின்சி கார் சத்தம் கேட்டது. விச்சு அரவம் இல்லாமல் நழுவி வெளியே வந்து விட்டான்.

சரோவை செயலிழக்க வைக்க விச்சுவுக்கு வேறு ஐடியாவும் தோன்றவில்லை. சந்தர்ப்பமும் அமையவில்லை.

கடைசியில்,  ஓலிம்பிக் டார்ச்சோடு கிரவுண்டை மாங்கு மாங்குவென்று சுற்றி வந்த விச்சு, டார்ச்சை சரோவிடம் கொடுக்க அதுவோ நோகாமல் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றியது. விச்சுவின் காதுகளில் புகை கிளம்பியது!

அசெம்பிளி பாடலா ... ? சரோவை கூப்பிடு!

பாடத்தில் சந்தேகமா ... ? சரோவை கேளு!

போட்டியா ... ? சரோவிடம் உதவி கேள்!

சரோ ... சரோ ... சரோ ...

ஆண்டு விழாவிற்கும் சரோவைத்தான் முன்னிலை படுத்துவார்கள். முட்டாள் ரோபோவிற்கு தான் மரியாதை கிட்டப் போகிறது. விச்சு ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.

அடுத்த நாள் காலை விச்சுவின் அம்மாவிற்கு பிரின்சி போன் வந்தது. என்னவோ ஏதோவென்று பதறி அடித்துக் கொண்டு அம்மா ஸ்கூலுக்கு சென்றார்கள்.

“உங்க பையன் டி.சி. கேட்கிறான், மேடம்!”

“என்ன!”, வியப்புடன் கேட்ட அம்மா, “உண்மையாகவா விச்சு?”

ஆமாம் என்று தலையசைத்தான்.

“காரணம் சொல்ல மாட்டேன்கிறான். வீட்டில் ஏதும் பிரச்சனையா, மேடம்?”

“அவனுக்கு பிரச்சனை வீட்டில் இல்லை”, என்ற அம்மா, தயங்கி தயங்கி, சரோவின் வருகையால் ஏற்பட்ட அவனின் மனச்சோர்வை விவரித்தார்.

பிரின்சிக்கு ஆச்சர்யமாக இருந்தது. சரோவால் விஷால் காயப்பட்டுள்ளானா? அவரால் நம்பவே முடியவில்லை.

“நீ பெருமைப்பட வேண்டும், விஷால். இவ்வளவு வாய்ப்புகளை, வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பள்ளியில் மாணவனாக இருக்க பெருமைப்பட வேண்டும். இந்த ரோபோ உன் அறிவை மேலும் மேலும் செதுக்கத்தான் செய்யும்”

”அது ஒன்றும் அவ்வளவு புத்திசாலி இல்லை, மேடம்”, விச்சு அழுத்தமாக கூறினான்.

“வாட் ...  கம் அகெய்ன்”

“இயந்திரங்கள் எப்பொழுதுமே முட்டாள்கள் தான், மேடம்! நாம், அதனிடம் பாடம் கற்க வேண்டிய அவசியமேயில்லை!”

பிரின்சி ஷாக்காகி விட்டார்கள். இத்தனை தீவிரமான கருத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தார். அங்கு ஒரு வேண்டாத அமைதி நிலவியது. சில நிமிடங்களுக்கு பிறகு, “ப்ரூவ் இட் விஷால்!”, என்றார்.

விச்சு கேள்விக்குறியாய் பிரின்சியைப் பார்த்தான்.

“நீ புத்திசாலின்னு எனக்கு நன்றாகவே தெரியும், விஷால். இண்டர் ஸ்கூல் ஜி.கே. போட்டியில் தொடர்ந்து இரண்டு முறையாக நம் பள்ளிக்கு பரிசு கொண்டு வந்துள்ளாய். உன்னை நான் குறைத்து மதிப்பிடவில்லை. உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். சரோவிடம் நீ பத்து கேள்விகள் கேட்கலாம். எனி டாப்பிக்! ஏதேனும் ஒரு கேள்விக்கு, சரோ தவறான விடையளித்து விட்டாலும், உன் வாதத்தை ஒப்புக் கொள்கிறேன்.சரோவை பாடம் சொல்லிக் கொடுக்க பயன் படுத்த மாட்டேன். அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர் வைக்க, சாக்பீஸ் வைக்க என்று ஆபீஸ் வேலைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கிறேன். ஓ.கே.வா?”

சில வினாடிகள் யோசனைக்கு பின்பு விச்சு, ”கேள்விகள் ரெடி பண்ண ஒருநாள் டைம் கொடுங்க, மேடம்”

“நாளை மாலை நான்கு முப்பது மணிக்கு!”

ஆபீஸ் ரேச்சல் மிஸ் மூலம், அத்தனை டீச்சர்களுக்கும் விஷயம் தெரிந்து விட்டது. அன்று முழுவதும், அவர்களுக்குள் அதே பேச்சுதான். ஃபார் விச்சு, அகைன்ஸ்ட் விச்சு என்று இரண்டு அணிகள் வேறு உருவாகிவிட்டன. பள்ளியே பரபரப்பாகி விட்டது.

அடுத்த நாள் பல பெற்றோர்கள் ஆபீஸிற்கு வந்து போட்டியைப் பார்க்க தாங்களும் வரலாமா எனக் கேட்டனர். லோக்கல் கேபிள் சேனல்களிலிருந்து போன் போட்டு போட்டி நேரத்தை உறுதி செய்து கொண்டார்கள். எதிர்பாராமல் வந்த இந்த பிரபல்யத்தை பிரின்சியே எதிர்பார்க்கவில்லை. எனவே விஷால் - சரோ போட்டியை ஆடிட்டோரியத்தில் விமர்சையாக நடத்த அவர் முடிவு செய்து விட்டார்.

சரோவை விற்பனை செய்த குடோஸ் கம்பெனி மார்கெட்டிங் மேனேஜர் நந்தகுமாருக்கும் அழைப்பு சென்றது.

“பத்து வயது பையனாவது ரோபோவை தோற்கடிப்பதாவது! சான்சே இல்லை! தோல்வியால் அந்த சிறுவன் மேலும் துவண்டு விடக் கூடாது மேடம்”

நந்தகுமாரின் ஆலோசனையை ஏற்கும் முடிவிலேயே பிரின்சி இல்லை.

“நீங்கள் அவசியம் வரவேண்டும் மி.நந்தகுமார். உங்கள் கம்பெனிக்கும் இது விளம்பரம் தானே...!”

தன்னை சுற்றி நடந்து கொண்டிருக்கும் இந்த களேபரங்கள் எதையும் விச்சு கவனிக்கவில்லை. முந்தைய நாள் மாலையிலிருந்தே பலவித ஜி.கே. புத்தகங்களையும், அறிவியல் கட்டுரைகளையும் வாசிப்பதிலேயே நேரத்தை செலவழித்தான். ஒவ்வொரு சப்ஜக்டிலேயும் பத்து கேள்விகள் வரை குறித்துக் கொண்டான். எதை எதை கேட்பது, எந்த வரிசையில் கேட்பது என்று மட்டும் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

போட்டி நேரம் வந்து விட்டது. பிரின்சி விச்சுவை புகழ்ந்து சில வார்த்தைகள் பேசினார்.

“என்னுடைய மாணவன் ரோபோவிற்கு சவால் விடும் அளவிற்கு இருப்பதைக் கண்டு பெருமிதம் அடைகிறேன். இதனை ஆரோக்கியமான போட்டியாகவே அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். பத்து கேள்விகள் கேட்கலாம் என்ற வரையறை வைத்திருந்தேன். என்றாலும் விஷால் விரும்பும் எண்ணிக்கையில் கேள்விகள் கேட்கலாம்! ஆல் தி பெஸ்ட்!”

விச்சுவால் ஜெயிக்க முடியாது என்ற எண்ணம் தான் பிரின்சியின் பேச்சில் தொனித்தது.

“பத்து கேள்விகள் மட்டும் போதும், மேடம்!”

சரோ ஒரு புறம் நிற்க விச்சு அதன் எதிரில் உள்ள சேரில் அமர்ந்தான். இருவருக்கும் மைக் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. முன் வரிசையில் பிரின்சியும், அடுத்து நந்தகுமாரும் உட்கார்ந்திருந்தனர். அடுத்தடுத்த வரிசைகளில் டீச்சர்களும் பெற்றோர்களும், மாணவர்களும் குழுமி இருந்தனர். உட்கார இடம் கிடைக்காமல் வெளியே வரை நின்று கொண்டிருந்தனர். மூன்று சேனல்களிலிருந்து கேமிரா குழுவினர் வந்திருந்தனர்.

ஆரம்பிக்கலாம் என்று பிரின்சி கண்ணசைக்க, முதல் கேள்வியை விச்சு கேட்டான்.

"புவியியலிருந்து கேள்வி. இந்திய நாட்டின் தென் கோடி முனை எது?”

“கன்னியாகுமரின்னு சொல்லுடா முட்டாளே...” என்று மனதிற்குள் விச்சு ப்ரே பண்ணினான்.

எளிதாக கேட்கிறானே என்று ஆசிரியர்கள் முணுமுணுத்தனர்.

“நிக்கோபார் தீவில் உள்ள இந்திரா பாயிண்ட்,  6.75N 93.83E”

சரோ தவறு செய்து விட்டது என்று மாண்வர்கள் அனைவரும் உற்சாக குரல் எழுப்பினர். நந்தகுமாரும் நெற்றியை சுருக்கினார்.

விச்சுவோ, “விடை சரிதான்! இரண்டாவது கேள்வி கணிதத்தில் இருந்து! ...  நான்கு ஒன்றுக்களை வைத்து எழுதக்கூடிய மிகப் பெரிய எண் எது?”

சரோ இதிலாவது சிக்குமா? 1111 என்ற பதில் வருமா என விச்சு எதிர்பார்த்தான்.

“11 இன் அடுக்கு 11!”

ப்ச்... சலித்துக் கொண்டான் விச்சு.

“நெக்ஸ்ட் அறிவியல்! உலர் பனிக்கட்டியின் மூலக்கூறு ஃபார்முலா என்ன?”

“திட கார்பன் டை ஆக்சைடு - CO2”

வரலாறு, உயிரியல், வானவியல் என்று துறைகளை மாற்றி மாற்றி கிடுக்குபிடி போட்டுப் பார்த்தான். ஆனால் விச்சுவின் வலையில் சரோ சிக்கவில்லை. ஒன்பது கேள்விகள் முடிந்து விட்டன!

இன்னும் ஒரே ஒரு கேள்வி! விச்சு டென்ஷனில் இருந்தான். மாணவர்கள் அனைவரும் ஏமாற்றத்தில் இருந்தனர். விச்சுவின் தோல்வி நிச்சயம் என்று புரிந்து கொண்டனர். ஆசிரியர்கள் தங்களுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டனர். விஷாலின் கேள்விகள் புத்திசாலித்தனமாக இருந்தது என்றும் சரோவை ஏமாற்ற நன்றாகவே முயன்றான் என்றும் சிலாகித்துக் கொண்டனர்.

“விஷால், இன்னொரு கேள்வியையும் கேட்க விரும்புகிறாயா? இல்லை போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறாயா?”

“கேட்கிறேன் மேடம். சப்ஜக்ட் தமிழ்!”

“தமிழிலா...! சரோவிற்கு 15 வருடமாய் தமிழ் மொழி சகவாசம் உண்டு. புதுக்கவிதையும் எழுதும்! வெண்பாவும் எழுதும்!”, என்று நந்தகுமார் அலட்டிக் கொண்டிருந்தார்.

“தமிழ் மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள்?”

என்ன ... இவ்வளவு எளிதான கேள்வி கேட்டு விட்டானே ... அனைவரும் ஏமாற்றத்துடன் முணுமுணுத்தனர். மாணவர்கள் சலசலப்போடு எழுந்தனர். நந்தகுமார் நக்கலாக சிரித்துக்கொண்டிருந்தார். பிரின்சி முகத்தில் கூட வருத்த ரேகை தென்பட்டது.

விச்சுவோ எதிலும் சலனமடையவில்லை. சரோவின் பதிலை மட்டும் டென்ஷனோடு கவனித்துக் கொண்டிருந்தான்.

“120”

“வாவ்!...ஜெயிச்சிட்டேன்!....ஜெயிச்சிட்டேன்!!” இரண்டு கைகளையும் உயர்த்திக் கொண்டு விச்சு குதித்தான்.

எப்படி?..... எப்படி?

அனைவர் முகத்திலும் ஆச்சர்யமும் அவநம்பிக்கையும் தென்பட்டன. விச்சுவின் அடுத்தடுத்த கேள்விகளில் ரோபோவின் நிலைமை கவலைக்கிடமானது.

தமிழ் என்ற வார்த்தையில் எத்தனை எழுத்துக்கள்?”

“ஐந்து”

“சரோ?”

”மூன்று”

“ஐந்தொகை?”

“ஏழு”

“மி. நந்தகுமார், ஏன் இப்படி தப்பு தப்பாக சொல்கிறது?”

“புரியவில்லை மேடம். விஷாலை காப்பாற்ற பொய் சொல்கிறதோ?”

“ரோபோவுக்கு பொய் சொல்ல தெரியாது மிஸ்டர். நீங்கள்தான் பொய் சொல்லி இதை எங்கள் தலையில் கட்டி விட்டீர்கள்!”

அதற்குள் மாணவர்கள் அனைவரும் மேடையில் ஏறி விச்சுவை தோள் மேல் தூக்கி வைத்து பள்ளியை வலம் வர ஆரம்பித்தனர். ஒரு மாணவன் தான் கொண்டு வந்திருந்த டென் தவுசண்ட் வாலாவை வெடித்து கலக்கினான். பள்ளியே அல்லோலகப்பட்டது.

ஆசிரியர்கள் அனைவரும் விச்சுவை வாழ்த்தினர். எப்படி? என்ற கேள்விக்கு, “அது ஒரு முட்டாள்”, என்று மட்டும் பதில் கூறினான். பிரின்சியும் விச்சுவை கை குலுக்கினார். சேனல்கள் விச்சுவை பேட்டி எடுத்தன.

ஓவர் நைட்டில் விச்சு பெரும் புகழ் அடைந்ததையும், ரீபண்டு கேட்டு நந்தகுமாருக்கு பிரின்சி நோட்டீஸ் விட்டதையும் இனி விவரிக்க வேண்டிய அவசியமேயில்லை.

வீட்டிற்கு வந்ததும் விச்சுவிடம் அம்மா கேட்டார்.

“சாதாரண கேள்விகளுக்கு கூட ரோபோ தப்பு பண்ணியதே? பேட்டரி கோல்மால் மாதிரி இதிலும் ஏதாவது பண்ணினாயா, விச்சு?”

”கோல்மாலெல்லாம் ஒன்னுமில்லைமா. ஒரு ஆர்ட்டிக்கிள் வாசித்தேன். தமிழ் சாப்ட்வேர்களுக்கு கம்ப்யூட்டர் கேரக்டர் மேப்பில் 120 இடங்கள் மட்டுமே ஒதுக்கியுள்ளார்கள் என்று! இந்த 120 கேரக்டர்களை வைத்துக் கொண்டு 247 தமிழ் எழுத்துக்களையும், வட மொழி எழுத்துக்களையும், அது சமாளிக்க வேண்டுமாம். அதனால், உயிர் மெய் எழுத்துக்களை எல்லாம் இரண்டு எழுத்துக்களின் கூட்டாக அது எடுத்துக் கொள்கிறது. அதனை ஒரே எழுத்தாக நமக்கு காண்பிக்க, சிறு சிறு புரோகிராம்கள் ஓடிக் கொண்டு இருப்பதால், கம்ப்யூட்டரில் கால விரயம் நடந்து கொண்டிருக்கிறது. Y2K பிரச்சனை மாதிரி பிற்காலத்தில் இதுவும் ஒரு பிரச்சனையாக வளருமாம்! இந்த அடிப்படை விஷயத்தை சரி செய்ங்கடா என்று கூறினால், தமிழ் எழுத்துக்களை சீர்திருத்தம் செய்வோம் ... உயிர் மெய் எழுத்துக்களை ஒழித்து விட்டு கம்ப்யூட்டருக்கு தகுந்தபடி நம் மொழியை மாற்றிக் கொள்வோம் என்று கூட சில புத்திசாலிகள் ஐடியா கொடுக்கிறார்களாம்! செருப்புக்கு தகுந்தபடி காலை வெட்டிக் கொள்வோம் என்று! அது ஞாபகம் வந்தது. கேள்வியை கேட்டுப் பார்த்தேன். ரோபோ மச்சான் மாட்டிக்கிட்டான்!”, உற்சாகமாக பேசிக் கொண்டிருந்த விச்சுவின் தோளில் தட்டிக் கொடுத்தார் அம்மா!

**வடக்கு வாசல் இதழிலும், மணிமேகலை பிரசுரம் “என் பள்ளிக்கூடத்திற்கு வந்த ரோபோ” என்ற சிறுகதை தொகுப்பு புத்தகத்திலும் வெளிவந்த கதை**


1 comment:

varsha hiran mahi said...

vichu's characterisation is very nice.this theme is really a need for the time now.comedys are also very enjoyable. congrats!