Sunday, June 24, 2007

யார் நான்

அத்தியாயம் ஒன்று


"உன் கண்ணாடியின்
வழியே தெரியும்
உலகம்
அது சின்னஞ் சிறியது
அதில் எப்பொழுது சிறை வைத்தாய்
என்னை?
"

"நான் கண்ணாடி போட்டிருக்கிறதை கிண்டல் பண்றியா?", பிரவீனை கோபமாக முறைத்தாள்.

"ஐயையோ!!! பூர்ணா, நான் அப்படி சொல்லலை. வந்து அது கூட அழகாயிருக்குன்னுதான் சொல்ல வந்தேன்."

"அப்ப, நான் அழகாயில்லை. அப்படித்தானே."

"நீ அழகாயில்லைன்னு சொன்னா எனக்கு கண்ணு அவிஞ்சு போச்சுன்னு அர்த்தம். இப்ப பாரு. ம்ம்ம். ஆங்!

படபடக்கும் உன் விழிகள் கண்டு
பூக்களெல்லாம் இதழ் விரிக்கின்றன
பட்டாம்பூச்சி வந்து விட்டெதென்று!

இது எப்படியிருக்கு?"

"நான் ஏற்கெனவே நிலாரசிகனையெல்லாம் படிச்சு முடிச்சுட்டேன். வீணா கடன் வாங்கி கஷ்டப்படாதே! சொந்தமா யோசிக்கவே மாட்டியா?"

"அப்ப நான் திங்க் பண்றதேயில்லையா?", பிரவீனின் முகம் தொங்கி போனது.

"ஏய்! ச்சும்மா ஜாலிக்கு சொன்னேன்பா. நீ எவ்ளோ பெரிய விஞ்ஞானி? எவ்ளோ பெரிய ஆராய்ச்சியில ஈடுபட்டிருக்க!"

"நானா, நீயா? நீதானே அந்த ஆராய்ச்சிக்குத் தலைவி. நீ அதைப் பண்றதாலேதானே நானும் அதை பண்ணிட்டிருக்கேன்"

"அப்ப உனக்கு இதுல இன்ட்ரெஸ்ட் இல்லையா?"

"இருக்கு. ஆனா அதைவிட பல மடங்கு உன்மேலதான் இருக்கு. அது உனக்கு புரியாததுதான் எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு."

"புரியுதுப்பா!!!"

"அப்ப ஏன் எப்ப கல்யாண பேச்செடுத்தாலும் தள்ளிப் போடற?"

பூர்ணா ஒரு நீளமான பெருமூச்சு விட்டாள். "பிரவீன்! நாமளும் எல்லாரையும் மாதிரி கல்யாணம் பண்ணிக்கத்தான் வேணுமா?"

"ஏய்! என்ன சொல்ற?" வேகமாக கேட்டான்.

"அதில்லை. அதாவது வாழறதுக்கு கல்யாணம்ங்கறது என்ன அவசியம்? இப்ப நம்ம ரெண்டு பேரோட ஆசையென்ன? கடைசி வரைக்கும் நீயும் நானும் சேர்ந்து வாழனும்ங்கிறது. இதுக்கு கல்யாணம் அவசியமா?"

"அவசியமில்லையா?"

"எனக்கு உன்மேல நம்பிக்கையிருக்கு. நீ கடைசிவரைக்கும் எனக்கு துரோகம் பண்ணமாட்டேன்னு முழுமையா நம்பறேன். உனக்கும் என்னைப் பத்தி அதேதான். அப்புறம் எதுக்கு கல்யாணம்? நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாமே, கல்யாணம் பண்ணிக்காம"

மீசையை வருடிக்கொண்டே சிறிது நேரம் யோசித்தான். "பூர்ணா! யோசிச்சுப் பார்த்தா நீ சொல்றது சரின்னு தோனலைன்னாலும், தப்பில்லைன்னு தோனுது. எனக்கு நீதான் முக்கியமேயொழிய கல்யாணமில்லை. நாம நமக்காகத்தான் வாழனுமேயொழிய, அடுத்தவங்களுக்காக இல்லை. நீ சொன்னபடியே சேர்ந்து வாழலாம். நாள் நட்சத்திரம் கூட பார்க்க வேணாம். இன்னைக்கே ஆரம்பிக்கலாம்."

"அவசரப்படாதே! ஆனா அதுக்கும் நேரங்காலமெல்லாம் இருக்கு. நம்ம ஆராய்ச்சி வெற்றிகரமா முடியற கட்டத்துல இருக்கு. அது வெற்றியடைஞ்சதும் நாம் சேரலாம்."

"ஆனா, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். அது எப்படியும் வெற்றியடையற பிராஜக்ட். சக்ஸஸ் ரேட் 98%. அதுக்காக இதையேன் தள்ளிப் போடனும்?"

"ப்ளீஸ். இன்னும் கொஞ்ச நாள்தானே? மாசக் கணக்கு கூட இல்லை. நாள் கணக்குதான். ஒரு வாரமோ இரண்டு வாரமோ? அது வரை பொறுக்க மாட்டியா? இந்த நேரத்தில் நாம அவசரப்பட்டால் டைவர்ட் ஆயிடுவோம். ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்காத கதையாய்டும். அதுனாலதான் சொல்றேன். ப்ளீஸ்! புரிஞ்சுக்க! இது என்னோட லட்சியக் கனவு!!!"

"நீ இப்படி சொல்வேன்னு எதிர்பார்த்தேன். சரி, இன்னும் ரெண்டு வாரம்தானே. பொறுக்கலாம். இன்னும் நமக்கு டெஸ்ட்ராயர் மாட்யூல்லயும், கம்யூனிக்கேஷன் ரிசீவர்லயும்தான் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கு. இப்பவே முயலை கடத்தியாச்சு. ரிசீவர் எண்ட் பிரச்சனைகளை நான் பார்த்துக்குறேன். அதுக்கு என்கிட்ட சில ஐடியாஸ் இருக்கு. டெஸ்ட்ராயரை நீ கவனிக்க முடியுமான்னு பாரு. இல்லைன்னாலும் ரிசீவர் வேலைகள் முடிஞ்சதும், ரெண்டு பேரும் சேர்ந்து அதை கவனிக்கலாம்"

"ம்ம். சரி! ஆனா டெஸ்ட்ராயர்ல மனித உடம்பை பிரிச்சு விடும்போது வலி தெரியாம இருக்கிறதுங்கறது சின்ன பிரச்சனைதான். என்கிட்ட அதுக்கு ஒரு சொல்யூஷன் இருக்கு. அது வொர்க் அவுட் ஆகும்னு நினைக்குறேன். அப்படி வொர்க் ஆகலைன்ன வேற வழி யோசிக்கனும்"

"எது? முன்னாடி பூனையை கடத்தும்பொழுது உபயோகப்படுத்துனோமே. அந்த மெத்தடா?"

"ஆமாம். ஆனா அதுலேயே எலக்ட்ரான் பீமின் தாக்கத்தை கூட்டி கொடுக்கனும். இன்னும் 15 மடங்கு."

"நல்ல ஐடியாதான். அது வொர்க் ஆகும்"

"பிரவீன்! கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா? மனிதனை சக்ஸஸ்ஃபுல்லா கடத்துனத்துக்கப்புறம், இந்த உலகம் முழுக்க நம்மை பத்திதான் பேசுவாங்க! புக் போடுவாங்க!! பேட்டி எடுப்பாங்க!! இதைப்பத்தி இன்னும் ஆராய்ச்சி பண்ணுவாங்க!!!"

"பூர்ணா! பொதுவா நான் எப்பவுமே காரியத்தை முடிச்சதுக்கப்புறம், நமக்கு என்ன கிடைக்கும்னு யோசிக்கிறதில்லை. உனக்கே தெரியும். அப்பதான் அந்த காரியத்தை ஒழுங்கா பண்ணி முடிக்க முடியும். ஆனாலும், இதுல இன்னும் சில விஷயங்களை நீ யோசிக்க விட்டுட்டே. நாம கண்டுபிடிச்சிருக்கிறது முதல் டெலிபோர்ட்டிங் மெஷின். இது வரைக்கும் ஒளியைத் தவிர ஒரு அஃறினை பொருளை கூட ஓளி வேகத்தில் ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு கடத்த முடியாது. ஆனா நாம கண்டுபிடிச்சிருக்கிறதுல மனுஷனையே ஒளி வேகத்துல ஒரு இடத்துலயிருந்து இன்னொரு இடத்துக்கு கடத்தலாம், உயிரோட!! இப்படியொரு கண்டுபிடிப்பு உலகத்துல நிகழ்ந்ததுக்கப்புறம் என்னெல்லாம் நடக்கும்? நீ இங்கயிருந்து அமெரிக்காவுக்கு கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள போய்ட்டு வரலாம். உண்மையில அதவிட கம்மியான நேரத்துல! இப்ப இருக்குற பயண விதிமுறைகளெல்லாம் இதனால வருங்காலத்துல மாறிப்போகும். இதுக்கு தனியா பாஸ்போர்ட், விசா எல்லாம் கொண்டு வந்தாலும் வருவாங்க. நிலாவுக்கு கூட அதிகபட்சம் ஒன்றரை வினாடில போயிரலாம். முக்கியமா, நீ உங்க வீட்டுலயிருந்து என் வீட்டுக்கு உடனடியா வந்துரலாம்"

"என்னது?!", என்று முறைத்தாள்

"நம்ம டெலிபோர்ட்டிங் மெஷின் மூலமா சொன்னேன்மா. இப்பவே வரச் சொன்னா, அதான் வர மாட்டேன்னுட்டியே!!"


-தொடரும்

8 comments:

வல்லிசிம்ஹன் said...

பாஸ்போர்ட், விசா எல்லாம் கொண்டு வந்தாலும் வருவாங்க. நிலாவுக்கு கூட அதிகபட்சம் ஒன்றரை வினாடில போயிரலாம். முக்கியமா, நீ உங்க வீட்டுலயிருந்து என் வீட்டுக்கு உடனடியா வந்துரலாம்"
இது ரொம்ப நல்ல விஷயமா இருக்கே.
சயன்ஸ்ஃபிக்ஷன்லியும் (யோசிச்சு எழுதிட்டீங்க.:-)

வல்லிசிம்ஹன் said...

உங்க பேரையும் நான் பதிவிட்ட 8 விளையாட்டில் குறிப்பிட்டிருக்கிறேன்.
உங்களுக்கும் எழுத நேரம் இருக்கும் என்று நம்புகிறேன்.

யோசிப்பவர் said...

வல்லியம்மா,

நாச்சியாரோடு நீங்கள் ஸைன்ஸ் ஃபிக்ஷன்களையும் ரசிப்பது, எனக்கு ஆச்சர்யமாயிருக்கிறது!!

நளாயினி said...

அடடா அடடாh. அற்புதம். இதை தான் சொல்லுறதோ கண்கட்டி வித்தை எண்டு.
நிறையத்தான் இசக்கு பிசக்கா சிந்திப்பீங்களோ?

யோசிப்பவர் said...

//இதை தான் சொல்லுறதோ கண்கட்டி வித்தை எண்டு.
//

இதில் கண்கட்டி வித்தை எங்கே இருக்கிறது என்று புரியவில்லை!!!;-(

நளாயினி said...

கண்கட்டி வித்தை எண்டா என்னெண்டு தெரியாமல் சும்மா கதைக்க குhடாது. கண்கட்டி வித்தை எண்டா தெரியுமோ.

யோசிப்பவர் said...

//கண்கட்டி வித்தை எண்டா தெரியுமோ.
//
முதலில் புரியவில்லை. இப்பொழுது புரிகிறது. ஆனால் இது கண்கட்டி வித்தை இல்லை. சாத்தியமாக வாய்ப்புள்ள ஒரு வித்தை!!!;-)

நளாயினி said...

oo... appadeja. eppave ellarum suthu maathu. peraku solla thevai ellai.