Thursday, June 28, 2007

யார் நான்இரு வாரங்களுக்கு பின் ஒரு இனிய இரவு. சுவரில் மாட்டியிருந்த டிஜிட்டல் கடிகாரம் "21:34" என்று துடித்துக் கொண்டிருந்தது. இருபத்தி இரண்டுக்கு இருபது அடி சதுரமாகயிருந்த அந்த அறையை, கிட்டத்தட்ட பாதிக்குமேல் அந்த இயந்திரம் ஆக்கிரமித்திருந்தது. அது உலகின் முதல் டெலிபோர்டிங் இயந்திரத்தின் ஸென்டிங் எண்ட், அதாவது அனுப்பும் முனை. அதன் ஓரத்திலிருந்த டெஸ்ட்ராயர் மாட்யூலின் பக்கங்களிலிருந்த எலக்ட்ரான் கன்களின் கண்களுக்குள், பூர்ணா தனது கண்களால் ஆராய்ந்து கொண்டிருந்தாள். சிறிது நேரத்திற்கு பின், எலக்ட்ரான் கன்களின் வயர்களை, கன்ட்ரோல் பேனலுடன் இணைக்க ஆரம்பித்தாள். அவளுடைய கணக்கின்படி இன்னும் பத்து நிமிஷத்தில் வேலை முடிந்து விடும். ஏற்கெனவே பிரவீன் தனது வீட்டிலிருந்த ரிசீவிங் எண்ட் (சேரும் முனை) இயந்திரத்தை தயார் செய்து முடித்து விட்டான். இவளுடைய வேலை மட்டும்தான் பாக்கி.

இவர்களது டெலிபோர்டிங் இயந்திரத்தின் தத்துவம் எளிமையானதுதான். நமது வீட்டு டெலிஃபோன்களும், செல்ஃபொன்களும் செயல்படும் அதே முறையில்தான் இந்த டெலிபோர்டிங் இயந்திரமும் செயல்படுகிறது. ஃபோனில் குரல் மட்டுமே கடத்தப்படுகிறது. ஆனால் இந்த இயந்திரம் உயிர் உள்ள/இல்லாத எந்த பொருளையும் கடத்தும்.

எல்லா பொருள்களின் அடிப்படை விஷயம் இரு வகையான துகள்கள்தான்(Particles). க்வார்க்(Quark), லெப்டான்(lepton) என்ற இந்த இருவகையான துகள்களால்தான் இந்த மாபெரும் அண்டத்திலிருக்கும் எல்லா பொருள்களுமே உருவாகியிருக்கின்றன. இந்த துகள்கள் அணுவிலிருக்கும் ப்ரோட்டான், எலக்ட்ரான்களையும் நுணுக்கிப் பார்த்தால் கிடைப்பவை. இந்த துகள்களில் சில உட்பிரிவுகளும் உண்டு.

கடத்தப்பட வேண்டிய பொருளிலிருக்கும், இந்த எல்லா துகள்களின் குணாதிசியங்களையும் பிரதியெடுத்து, அவற்றை மின்னனு அலைகள் மூலம் ஸென்டிங் எண்டிலிருந்து, ரிசீவிங் எண்டுக்கு அனுப்பி, ரிசீவிங் எண்டில், கிடைத்த தகவல்களின் படி, க்வார்க்குகளையும் லெப்டான்களையும் கொண்டு மீண்டும் பொருளை உருவாக்கியபின், ஸென்டிங் எண்டுக்கு தகவல் அனுப்பி, டெஸ்ட்ராயர் மூலம் மூலப்பொருளை அழிப்பதுதான், பூர்ணாவும் பிரவீனும் கண்டுபிடித்துள்ள டெலிபோர்டிங் இயந்திரத்தின் ஒன் லைன் தத்துவம்.

இணைப்புகளை பொருத்தி முடித்ததும், கன்ட்ரோல் பேனலில் எலட்ரான் பீமின் தாக்கத்தை, தனது உடலுக்கு ஏற்ற அளவுக்கு செட் செய்தாள். எல்லாம் சரியாக இருக்கிறதா என்று மீண்டுமொருமுறை சரி பார்த்தாள்.

பிரவீனின் செல்ஃபோனை அழைத்தாள்.

"ஹாய் டா! உன்னோட காலுக்காகத்தான் வெய்ட் பண்ணிட்டிருந்தேன். வேலை முடிஞ்சுதா?" பிரவீன் உற்சாகமாக கேட்டான்.

"ம்ம்" என்றாள் கொஞ்சம் நடுக்கத்துடனே.

"எல்லாத்தையும் ஒரு தடவை ரீ செக் பண்ணியா?"

"ம்ம்"

"என்ன, பயமாயிருக்கா? வேனும்னா முதல் தடவை நான் மெஷின் மூலமா வரட்டுமா"

"சே, சே! பயமெல்லாம் இல்லை. ஆனாலும் கொஞ்சம் நெர்வஸா இருக்கு. நானே வரேன். நீ அங்கே எல்லாம் ரெடி பண்ணிட்டியா?"

"ம்! எல்லாம் பக்காவா இருக்கு. மெத்தை மேல பூ தூவி வச்சிருக்கேன். பெட் ரூமை கூட ரூம் ஃபிராக்ரென்டெல்லாம் அடிச்சி வாசமா வச்சிருக்கேன். வெய்டிங் ஃபார் யூ!!" சொல்லிவிட்டு குறும்பாக சிரித்தான்.

"ச்சீ! அதில்லைடா. மெஷின் ரெடியா இருக்கா?"

"ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடிதானே அந்த குரங்கு குட்டியை கடத்தினோம். ரெடியாதான் இருக்கு."

"மெஷினை ஆன் பண்ணு."

"ம். பண்ணியாச்சு."

"கம்யூனிகேஷன் சானல் ஆன்லைன்ல இருக்கா?"

"இங்கே ஆன்லைன்லதான் இருக்கு."

பூர்ணா, தனது அறையிலிருந்த இயந்திரத்தை, கம்யூனிகேஷன் சானலை உயிர்ப்பித்து ரிசீவிங் எண்டோடு இணைப்பை ஏற்படுத்தினாள்.

"ம்ம். உன்னோடதும் இப்ப ஆன்லைன்ல வந்திருச்சு.", தனது கன்ட்ரோல் பேனலை பார்த்தவாறு பிரவீன், "பூர்ணா, எலக்ட்ரான் பீமோட இன்டென்ஸிட்டியை சரியா செட் பண்ணிட்டியா?" என்று கேட்டான்.

"ம். பண்ணிட்டேன். நான் இப்ப மெஷினொட கேபினுக்குள்ள போறேன். ஃபோனை வச்சுடறேன். ஸீ யூ தேர்!" சொல்லிவிட்டு செல்ஃபோனை கட் செய்தாள்.

பிரவீன் கண்ட்ரோல் பேனலின் திரையையே பார்த்துக் கொண்டிருந்தான். அதில் மஞ்சள் நிறத்தில் "Listening..." என்று மினுங்கி கொண்டிருந்தது. சரியாக இருபது வினாடி கழித்து "9.12031 e+3792 Packets received" என்று பச்சை நிறத்தில் மின்னியது. அடுத்த வினாடி கம்யூனிகேஷன் சானல் ஒரு முறை சிகப்படித்தது. ஒரு வினாடி கழித்து மீண்டும் பச்சையாக உயிர்ப்பித்து கொண்டது.

ஆனால் அந்த ஒரு வினாடி சிகப்பு பிரவீனை நிறையவே கலவரப்படுத்தியது. ரிசீவிங் சேம்பரை பயத்துடன் பார்த்தான்.

ரிசீவிங் சேம்பரின் இடுக்குகளில் வெள்ளை ஒளி மேலிருந்து கீழாக ஒரு முறை இறங்கியது. அடுத்த வினாடி சேம்பரின் கதவு திறந்தது.

பரவசமான ஒரு நிலையில் அவன் முன்னே, பூர்ணா முழுதாக நின்று கொண்டிருந்தாள். "பிரவீவீவீன்!!!"
- தொடரும்

4 comments:

நளாயினி said...

ஓ நோ ரைம் பிறகு வந்து வாசிக்கிறன்.

நளாயினி said...

காட்டுhன் பிளே பண்ணிறீங்களா பண்ணுங்க பண்ணுங்க.

யோசிப்பவர் said...

//காட்டுhன் பிளே பண்ணிறீங்களா பண்ணுங்க பண்ணுங்க.
//

புரியவில்லையே!! காட்டுhனா?

நளாயினி said...

mm.