Saturday, July 07, 2007

யார் நான்

பிரவீன் சிறிது நேரம் இருவரையும் பார்த்தான். அவனால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிவது மட்டும் நிற்கவில்லை.

சிறிது நேரம் கழித்து புதியவள், "பிரவீன், பூர்ணா. இப்படியே உட்கார்ந்திருக்கிறதுல அர்த்தமேயில்லை. ஏதோ தப்பு நடந்திருக்கு. அது என்ன தப்புன்னு கண்டுபிடிச்சா, நிலைமையை சரி பண்ண முடியுமாங்கிறதைப் பத்தி யோசிக்கலாம். நாமெல்லாம் விஞ்ஞானிகள். எவ்வள்வு சீக்கிரம் சரி பண்ண முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இதை பண்றது நல்லதுன்னு எனக்கு தோனுது. ஒரு வேளை, சரி செய்யவே முடியலைன்னா..." என்று இழுத்தபடி அழுதுகொண்டிருந்த பூர்ணாவை பார்த்தாள். பிரவீனும் அவளைப் பார்த்தான்.

"முதல்ல சரி பண்ண முடியுமான்னு பார்ப்போம். கம்யூனிகேஷன் சேனல்தான் நேத்து ஒரு வினாடி படுத்துச்சு. முதல்ல அதை செக் பண்ணுவோம்." என்றபடி பிரவீன் கணிணித் திரையின் அருகே போனான். பேச்சு கொஞ்சம் திசைமாறியதில், ஒரு சின்ன ஆசுவாசம் அவனுக்கு.

கம்யூனிகேஷன் சானலின் 'Log'ஐ திறந்து நேற்றிரவு 9:30க்கு அருகிலிருந்து பார்க்க ஆரம்பித்தான்

'9:36:28'க்கு தொடர்பு அறுந்திருந்தது. ஆனால் அடுத்த வினாடியே அது சரியாகியும் இருந்தது. புதிதாய் உருவானவள் 'Log'ஐ கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

"ஒரு வினாடி கம்யூனிகேஷன் கட்டாகியிருக்கு. ஆனா அடுத்த வினாடியே சரியாயிருச்சே. அப்ப பிரச்சனை இருக்க கூடாதே..?!" பிரவீன் உதட்டைப் பிதுக்கினான்.

புதியவள், "பிரவீன்! இங்க பாரு. '9:36:27'க்கு எல்லா தகவலும் வந்துருச்சு. ஆனா அதுக்குரிய அக்னால்ட்ஜ்மென்ட், தொடர்பு மறுபடி சரியான பிறகு திரும்ப போன மாதிரி தெரியலை. "

உண்மைதான் அக்னாலட்ஜ்மென்ட் போனதற்கான அறிகுறி எதுவும் Logல் தெரியவில்லை. அந்த அக்னாலட்ஜ்மென்ட் இங்கிருந்து ஸென்டிங் எண்டிற்கு போய் சேர்ந்தால்தான் டெஸ்ட்ராயர் வேலை செய்யும்.

மூவருக்கும் கொஞ்சம் ஆயாசமாக இருந்தது. இது முழுக்க முழுக்க தற்செயலான ஒரு விபத்து. இதனால் ஏற்பட்ட விளைவை, இந்த தத்துவத்திலேயே இவ்வளவு தாமதமாக சரி செய்ய முடியாது. உடனே கவனித்திருந்தாலாவது சரி செய்திருக்கலாம். ஆனால் இப்பொழுது...?

பழைய பூர்ணா இன்னும் லேசாக விம்மிக் கொண்டிருந்தாள். பிரவீன் தீவிர யோசனையிலிருந்தான். புதிய பூர்ணாவோ கம்யூனிகேஷன் லைன்கள் அனைத்தையும் சோதித்துக் கொண்டிருந்தாள்.

பிரவீனின் முகம் திடீரென்று கொஞ்சம் பிரகாசமடைந்தது. ஒரு காகிதத்தை எடுத்து சில படங்கள், கணக்குகள் என்று போட்டு பார்த்தான். அரை மணி நேரத்துக்குப் பின், காகிதத்திலிருந்து கண்களை உயர்த்தி, பூர்ணாக்களை பார்த்தவனின் முகத்தில் கொஞ்சம் புன்முறுவல் தெரிந்தது. புதியவள் தன் சோதனைகளை முடித்து விட்டிருந்தாள்.

"பூர்ணா.." கொஞ்சம் உற்சாகமாகவே அழைத்தான். இருவரும் அவனை பார்த்தனர். இருவரையும் சிறிது நேரம் பார்த்தவன், "பூர்ணா! உனக்கு... உங்களுக்கு எம்மேல நம்பிக்கையிருக்கா?"

பூர்ணா தலையை ஆட்டினாள். விம்மி கொண்டிருந்தவள், சிறிது நேரம் அவனை ஒரு குற்றவாளியைப் போல் பார்த்துவிட்டு, மெதுவாக "ம்ம்." என்றாள்.

"அப்படின்னா என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. இது வொர்க் ஆகும்னுதான் நினைக்கிறேன்."

"என்ன ஐடியா?"

"அது... இப்ப வேணாம். ஏன்னா எனக்கு கொஞ்சம் சந்தேகமும் இருக்கு. 99 பர்ஸன்ட் இது வொர்க் ஆகும்."

"மீதி 1 பர்ஸன்ட்?" விம்மியவள் வினவினாள்.

"அது நீங்க எம்மேல வச்சிருக்கிற நம்பிக்கையை பொறுத்ததுதான். ஆனா வேற வழி ஏதும் இருக்கிறதா தெரியலை. பூர்ணா ப்ளீஸ். என்னை நம்பு! நீங்க ரெண்டு பேரும் ஒத்துழைச்சாத்தான் இதை செய்ய முடியும்"

"என்ன ஐடியான்னு இன்னும் நீ சொல்லலை."

"அதை இப்ப கேட்காதீங்க. நான் சொல்றதை மட்டும் ரெண்டு பேரும் செய்ங்க ப்ளீஸ்!" என்றான்.

ஒரு மாதிரியாக இருவரும், ஒரே மாதிரி தலையசைத்து சரி சொன்னனர்.

பிரவீன் உடனே காரியத்தில் இறங்கினான்.

ரிசீவிங் எண்ட் மெஷினின் சில பாகங்களை திறந்து சின்ன சின்ன வேலைகள் செய்தான். கணிணியில் ஒரு ப்ரோக்ராமை விரித்து வைத்து கொண்டு சிறிது நேரம் நோண்டினான். பினனர் எல்லாவற்றையும் இருமுறை சரியாக இருக்கின்றனவா என்று சோதித்தான். சரியாகவே இருந்தன.

"பூர்ணா, இப்ப உங்க வீட்டுக்கு போகனும்"

"யாரெல்லாம்?"

"மூனு பேரும்தான்"

காலையில் பூர்ணா வந்த வாகனத்திலேயே மூவரும் கிளம்பி பூர்ணாவின் வீட்டை அடைந்தனர்.

ஸென்டிங் எண்ட் இருந்த அறை கந்தல்கோலமாக இருந்தது. பிரவீன் பூர்ணாவை பார்த்தான்.

"நேத்து ராத்திரி டெஸ்ட்ராயர் வொர்க் ஆகாததால, எல்லாத்தையும் செக் பண்ணேன். அதான் இப்படியிருக்கு." என்றாள்.

பிரவீன் இந்த மெஷினையும் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக சோதனை செய்தான். பின்னர்...

"பூர்ணா! இப்ப ரெண்டு பேரும் கேபினுக்குள்ள போங்க"

இருவருமே அவனை பயங்கர வியப்போடு பார்த்தனர்.
"பிரவீன், உனக்கென்ன பைத்தியமா?"

"இதுதான் உன்னோட ஐடியாவா?"

"இதனால இப்ப இருக்கிற பிரச்சனை எப்படி ஸால்வ் ஆகும்?.."

இருவரும் மாறி மாறி கேட்ட கேள்விகளை மறித்து, "பூர்ணா, ப்ளீஸ். என்னை நம்புங்க! ரெண்டு பேரும் உள்ள போங்க ப்ளீஸ்!" கெஞ்சினான்.

இருவரும் வெற்றாக கேபினுக்குள் நுழைந்தனர். பிரவீன் கேபினின் கதவை மூடினான். சில வினாடிகள் கழித்து கதவுகளின் விளிம்பில் ஒளி கற்றை இறங்குவது தெரிந்தது. கணிணித் திரையை பார்த்தான்.

"1.824062e+3798 Packets Sent" என்றது. ஒரு வினாடி கழித்து "Destroying..." என்று ஓடி, உடனே "Destroyed Successfully." என்று மின்னியது.

அவன் செல்ஃபோன் அதிர்ந்தது. பூர்ணாதான்!

"ஹலோ! பூர்ணா பேசறேன்."

"அது தெரியுது. எத்தனை பேர்? அதை முதல்ல சொல்லு." பரபரத்தான்.

"இங்க இப்ப நான் ஒருத்திதான் இருக்கேன்!" அவள் குரலில் ஆச்சர்யம்!!!
- தொடரும்

4 comments:

நளாயினி said...

ammaaaaaaaaaaaaaaaa

யோசிப்பவர் said...

//ammaaaaaaaaaaaaaaaa //
கவலைப்படாதீர்கள்! அடுத்த அத்தியாயத்தோடு முடித்து விடுகிறேன்!!!;-)

வெட்டிப்பயல் said...

superaa poayitu iruku...

யோசிப்பவர் said...

நன்றி வெட்டிப்பயல்!!!:-)