Saturday, July 21, 2007

யார் நான்"நிஜமாவா?" பிரவீனுக்கும் கொஞ்சம் பிரமிப்பு!

"நிஜமாதான். ஆனா இது எப்படி பிரவீன்? எனக்கு..."

"பூர்ணா!, நான் உடனே அங்கே வர்ரேன். நேர்ல பேசலாம்"

"ஆனா, எனக்கு ரொம்ப குழப்பமாயிருக்கு."

"பூர்ணா1 கிம்மீ ஹாஃப் அன் ஆர். ஐ'ல் பி தேர்" சொல்லிவிட்டு பூர்ணாவின் வாகனத்தில் புறப்பட்டான். போய் கொண்டிருக்கும் பொழுது அவனுக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் முளைத்து கொண்டிருந்தன. வீட்டை அடைந்ததும் வெளியே பூட்டியிருந்த கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.

"பூர்ணா!"

கணிணியை நோண்டி கொண்டிருந்தவள், திரும்பி பார்த்தாள். அவளை மேலிருந்து கீழாக நிதானமாக பார்த்தான். சின்ன தவறு கூட இல்லாமல் வந்து சேர்ந்திருந்தாள்.

"பிரவீன் எப்படியிது? ரொம்ப ஆச்சர்யமாயிருக்கு. எப்படி ரெண்டு ஒன்னாச்சு?"

"சொல்றேன். அதுக்கு முன்னாடி, நீ எப்படி ஃபீல் பண்றே? உடல் ரீதியா, மனரீதியா?"

"மன ரீதியாதான் ரொம்ப குழப்பமாயிருக்கு. நேத்து நைட் வரைக்கும் உள்ள நினைவுகள்ள பிரச்சனையில்லை. அதுக்கப்புறம்தான், ரொம்ப குழப்பமாயிருக்கு."

"அதுக்கப்புறம் எதுவும் ஞாபகம் இல்லையா?"

"அப்படியில்லை. ரெண்டு நினைவுகளுமே ஞாபகம் இருக்கு. நேத்து நான் என்னோட வீட்டில் எல்லாதையும் பிரிச்சு போட்டு செக் பண்ணதும் ஞாபகம் இருக்கு. இங்கே உன்கூட இருந்ததும் ஞாபகம் இருக்கு."

"நிஜமாவா? இங்கே நடந்ததும் ஞாபகமிருக்கா?"

"இறுக்கி அணைக்கும்
போதெல்லாம்
பற்றி எரிகிறது
மோகத் திரியில்
காமத் தீ
"

"ஃபென்டாஸ்டிக்! உடல் ரீதியா?"

"ரெண்டு விதமா களைப்பாயிருக்கு. ஒரு வித சந்தோஷம், ஒரு வித ஏமாற்றம். ரெண்டும்!!! பிரவீன் என்ன பண்ணின?"

"பூர்ணா! கான்செப்ட் ரொம்ப சின்னதுதான். இப்ப நம்ம ரிசிவிங் எண்டுக்கு, ஒரே விதமான தகவல் ஒரு முறைக்கு மேல் வந்தால் என்ன நடக்கும்?"

"அப்படிப்பட்ட தகவல் 30%க்கு மேலவந்தா, ரிசிவிங் எண்ட்ல "Redundant Data" அப்படின்னு எரர் வரும். ரிசீவிங் எண்ட்ல புதிய பொருள் உருவாகாது. அதனால ஸென்டிங் எண்ட்லயும் பழைய பொருள் அழியாது."

"சரிதான். நான் என்ன பண்ணினேனா, ஒரே மாதிரி தகவல் ஒரு முறைக்கு மேல வந்திச்சினா, அதை கணக்கில் எடுத்துக்காம தகவல்களை பதிந்து கொள்றதுமாதிரி ப்ரோக்ராம் எழுதினேன். அதுனால ஒரே மாதிரி தகவல் இப்ப ரெண்டு முறை வந்தப்போ ஒரு தடவை மட்டுமே பதிவாகியிருக்கு. அந்த தகவல்களை வச்சு உன்னை உருவாக்கியிருக்கு. ஆனா நேத்து நைட்டுக்கப்புறம் நினைவுகள் ரெண்டு வெவ்வேறு இடத்தில் பதிவாகியிருக்கு. அதனால அதுக்குண்டான நினைவு செல்கள் ஒரே மாதிரி தகவல்களை இப்ப அனுப்பியிருக்க முடியாது. அந்த ரெண்டு நினைவு செல்களையுமே இப்ப ரிசீவிங் எண்ட் உருவாக்கியிருகிறதால, உனக்கு ரெண்டுமே ஞாபகமிருக்கு. நான் பண்ணியதெல்லாம், எரர் வரக்கூடிய அந்த ப்ரொக்ராமை மாத்தியெழுதுனதுதான். ஆனா இந்த நினைவுகளை பத்தி அப்ப எனக்குத் தோனலை. ரொம்ப கஷ்டமாயிருக்கா?"

"கஷ்டமில்லை. குழப்பமாயிருந்தது. ஆனா, இப்ப விளக்கம் கிடைச்சுட்டதால, கொஞ்ச நேரத்தில சரியாய்டும்னு நினைக்கிறேன்."

பேச்சை மாற்ற விரும்பி, "பூர்ணா, இப்ப இதை என்ன பண்றது? டிக்ளேர் பண்ணிரலாமா?" மெஷினை சுட்டிக் காட்டினான்.

பூர்ணா கொஞ்ச நேரம் அமைதியாக அந்த மெஷினையே பார்த்தவாறு யோசித்து கொண்டிருந்தாள்.

மெதுவாக, "பிரவீன்! ஒன்னு கவனிச்சியா? நம்மோட கண்டுபிடிப்போட அடிப்படை தத்துவமே தப்பாயிருக்கு. அதுனாலதன் இந்த பிரச்சனையெல்லாம்."

"என்ன சொல்றே?"

"நம்மோட கண்டுபிடிப்பு டெலிபோர்டிங் மெஷின்னு நாம சொல்றோம். ஆனா, இது உண்மைலேயே டெலிபோர்ட்டிங் மெஷினா? டெலிபோர்ட்டிங் மெஷின்னா, எந்தவொரு பொருளையும், அதுல இருக்கிற அதே துகள்களோட ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஒளி வேகத்துல கடத்தனும். ஆனா, நம்ம மெஷின் அந்த பொருளையே கடத்தறதில்லை. அந்த பொருளோட தகவல்களை மட்டும்தான் கடத்துது. அடுத்த முனையில அந்த பொருளே உருவாகறதில்லை. அந்த பொருளோட ஒரு பிரதிதான் உருவாகுது. இது தான் இப்ப பிரச்சனை. அப்படி உண்மையில் பொருளையே கடத்துற டெலிபோர்ட்டிங் மெஷினை கண்டுபிக்கிறதுல நாம ஈடுபடலாம். இதை டிக்ளேர் பண்ண வேண்டாம். ஆனா இதை வச்சு உண்மையான டெலிபோர்ட்டிங் மெஷினை கண்டுபிடிக்க முயற்சி பண்ணுவோம்."

பிரவீன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். "இந்த தத்துவம் தப்புன்னு எனக்கும் முன்னாடியே தெரியும். ஆனா, ஒரு பொருளின் துகள்களை அப்படியே கடத்துறங்கறது அவ்வளவு ஈஸியில்லை. ஒருவேளை சாத்தியமில்லாமல் கூட போகலாம். அதுனாலதான் இதைப் பத்தி உன்கிட்டே நான் அப்பவே விவாதிக்கலை."

"ஏன்? அப்பவே விவாதிக்கிறதுக்கென்ன?"

"சாத்தியமில்லைன்னு தெரிஞ்சுதுன்னா உன் மனசு கஷ்டப்படுமே. அதான்!"

"நான் ஏன் மனசு கஷ்டப்படக்கூடாது?" அவள் குரலில் பொய்யான கோபம்.

"ஏன்னா.... ஏன்னா, நான் உன்ன காதலிக்கிறேன்!!!"

அவள் அவன் கண்களுக்குள் பார்த்தாள். கண்ணிலிருந்து ஒரு துளி எட்டிப்பார்த்து கன்னங்களை நனைக்கலாமா என்று யோசித்தது. சிறிதாக, மிக சிறிதாக அவள் இதழ்கள் புன்னகைக்க, அவனும் அதில் இணைந்து கொண்டான்.

"கவிதை தேடித்தேடி
களைத்து போயிருந்தேன்
கடைசியாக இன்று
கிடைத்தே விட்டாய்
"

- முழுவதும் படித்த ஒன்றிரண்டு பேருக்கு

-------------------------------------- நன்றி!!!! --------------------------------------

கவிதைகள் (படபடக்கும், இறுக்கி) : நிலாரசிகன்

14 comments:

வெட்டிப்பயல் said...

ரொம்ப அருமையா இருந்துச்சுங்க...

யோசிப்பவர் said...

வெட்டிப்பயல்,

ஏற்கெனவே சொன்ன மாதிரி, முழுவதும் படித்ததற்கு நன்றி!!!;-)

vanchinathan at gmail dot com said...

அழகான கதை; துகள்களைக் கடத்துவதும், தகவல்களைக் கடத்துவதும் வெவ்வேறு என்ற அறிவியல் சங்தியை மெதுவாக வாசகர்களுக்குக் கடத்தி வெற்றி கண்டு விட்டீர்கள். அதே சமயம் பிரவீன் குறைபாட்டைத் தெரிந்தும் பூர்ணாவுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டது
காதலினால் என்று அறிவியல் கதையில் கொஞ்சம் அதிகமாக உணர்வுகளைப் புகுத்தி விட்டீர்கள். உங்களுடைய தவளை போன்ற வேற்று கிரக மனிதன் கதை, பிறக்கும் குழந்தை பற்றிய கதை எல்லாம் இன்னமும் கச்சிதமாகவும் நல்ல கருத்தைக் கொண்டதாகவும் கருதுகிறேன்.
(வேறோரிடத்தில் பெரல்மானின் புத்தகத்தைப் பற்றி எழுதியது நீங்களென்று புரிந்து கொள்ளாமல் சுரேஷ் என்று குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும்.)
இன்னமும் யோசித்துக் கோண்டே நிறைய கதைகளை எழுத வேண்டுகிறேன்

யோசிப்பவர் said...

விரிவான பின்னூட்டமிட்டதற்கு ரொம்ப நன்றி வாஞ்சிநாதன்.

//வாசகர்களுக்குக் கடத்தி வெற்றி கண்டு விட்டீர்கள்.//
வாசகர்களா? வெட்டிப்பயலும், நீங்களும் மட்டும்தான் இதற்கு வாசகர்கள் என்று நினைக்கிறேன்!!


//அதே சமயம் பிரவீன் குறைபாட்டைத் தெரிந்தும் பூர்ணாவுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டது
காதலினால் என்று அறிவியல் கதையில் கொஞ்சம் அதிகமாக உணர்வுகளைப் புகுத்தி விட்டீர்கள்//
உணர்வுகள் அதிகமாக போய்விட்டதாக ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் இது போன்ற ஆண்கள் இன்றும் இருக்கிறார்கள்தான்!!

//வேறோரிடத்தில் பெரல்மானின் புத்தகத்தைப் பற்றி எழுதியது நீங்களென்று புரிந்து கொள்ளாமல் சுரேஷ் என்று குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும்.)//
பரவாயில்லை.

இன்று நீங்கள் என்னை பட்டறையில் தேடியதாக ஐகாரஸ் பிரகாஷ் சொன்னார். முடிந்தால் எனக்கு ஒரு தனி மடலிடுங்கள்.

பொன்ஸ்~~Poorna said...

இப்படி ஒரு கதை எழுதிருக்கீங்கன்னு ராம் இன்னிக்கு தான் சொன்னார்.. நல்லா இருக்கு.

ஆனா ஏனோ அவங்க இந்த ஆராய்ச்சியை விளக்கிய போதே இப்படி எல்லாம் தான் நடக்கும் என்று ஊகித்தேன்..

உயிரை எப்படி துகள்களா பிரிக்கிறீங்க என்பது தான் புரியலை..

யோசிப்பவர் said...

பொன்ஸ்,

//இப்படி ஒரு கதை எழுதிருக்கீங்கன்னு//
நான் அடுத்த கதையையும் எழுதிவிட்டேன்!!;-)

//ஆனா ஏனோ அவங்க இந்த ஆராய்ச்சியை விளக்கிய போதே இப்படி எல்லாம் தான் நடக்கும் என்று ஊகித்தேன்..//
இந்தக் கதையை, சஸ்பென்ஸ் அவ்வளவாக இல்லாமல் எழுத வேண்டும் என்று நினைத்தே எழுதினேன். அனாலும் இப்படியெல்லாம்தான் நடக்கும் என்று முன்பே ஊகித்த நீங்கள் உண்மையில் அறிவாளிதான்(;-)). ஏனென்றால், பெரும்பாலான என் நண்பர்கள் ஊகிக்கவில்லை

//உயிரை எப்படி துகள்களா பிரிக்கிறீங்க என்பது தான் புரியலை//
சயின்ஸ் ஃபிக்ஷன் எழுதும்பொழுது, நமக்கு வசதியில்லாதவற்றை விட்டு விடுவது மரபு!!;-)

சகாரா said...

கதை முழுவதும் வாசித்தேன். அருமையான படைப்பு. நல்ல கற்பனை. தொடர்ந்து இது போல் வித்தியாசமாக "யோசித்து" கதைகள் எழுத வாழ்த்துக்கள். நிறைய "யோசிங்க"... வித்தியாசமா எழுதுங்க...

கவிதைகளுடன்,
சகாரா.

யோசிப்பவர் said...

நன்றி சகாரா!

velumani1 said...

I like your stories 'Mr.Yosippavar'
. The flow and speed, which is present all over your stories were like writer Mr.Sujatha.
Any keep it up and write more....

ராஜா முஹம்மது said...

அருமையான படைப்பு. இதைப்போல நிறைய எழுதுங்கள் ...

ரொம்ப விரும்பி படித்தேன்

யோசிப்பவர் said...

Thanks Mr.Velumani and Raja Mohammad!
;-)

சரவணன் said...

Chanceless....
Really amazing...

தமிழில் இது போன்ற கதைகள் வருவது மிக மிக ஆரோக்யமான விஷயம்...
கதையின் ஒவொரு வரியையும் மிகவும் ரசித்து படித்தேன்....
அருமையான கற்பனை, தரமான எழுத்துக்கள்...
மிக்க நன்றி...
வாழ்த்துக்கள்.

இலவசக்கொத்தனார் said...

எப்படியோ மிஸ் பண்ணிட்டேன். ஒரே மூச்சில் உட்கார்ந்து எல்லா பாகத்தையும் படிச்சாச்சு. வாசகர் லிஸ்டில் என்னையும் சேர்த்துக்குங்க. :)

யோசிப்பவர் said...

கொத்ஸ்,

நீங்க இல்லாமலா? நீங்கல்லாம் Default ஆச்சே!!;-))