Tuesday, November 27, 2007

மர்டர் மிஸ்ட்ரி - அத்தியாயம் ஈ

நல்லவேளை. காலமித்ரா இந்தமுறை லேண்ட் ஆன இடம் ஆள் அரவமற்று அமைதியாக இருந்தது. லொக்கேஷன் ஸ்கிரீன் "கடம்பூர்" என்று மினுக்கியது. காலமித்ராவை, ஒரு புதரின் பின்னே மறைவாக பார்க் பண்ணினேன். பின்பு அதிலிருந்து இறங்கி, நான் வந்துள்ள இடத்தை சுற்றி பார்த்தேன்.

கடம்பூர் நகர், சம்பூவரையர் என்னும் சிற்றரசர்கள் ஆட்சி செய்த இடம். சோழ நாட்டிற்கு கீழே, கடம்பூர் எல்லைக்குள் மட்டும், வரி வசூலித்து, ஆட்சி நிர்வாகம் செய்ய அனுமதி உடைய சிற்றரசு. தொலைவில் அரண்மனை கோட்டைச் சுவர் நீண்டு, உயர்ந்து இருந்தது. அதற்கு உள்ளே புலிக்கொடி பறந்தது. கோட்டை மதிலுக்கு வெளியே அகலமான அகழி இருக்க, அதனுள்ளே சேறும், நீறும், முதலையும் இருந்தது.

அகழியை ஒட்டி சிறிது தூரம் நடந்தேன். அரண்மனைக்கு உள்ளே எப்படி செல்வது? முகப்பு வாயில் வழியே நுழைந்தால், காவலனின் பல கேள்விகளுக்கு பதில் கூற வேண்டியது வரும். அது ரிஸ்க். காலமித்ராவில் அட்சரேகை டிகிரி செகண்டில் சிறிது மாற்றம் ஏற்படுத்தி உள்ளே செல்லலாம். எனினும், காலமித்ராவை அரண்மனைக்கு உள்ளே பாதுகாப்பாய் மறைத்து வைப்பது எளிதல்ல. என்ன செய்யலாம்? யோசித்துக் கொண்டே நடந்தேன்.

ஒரு பாழடைந்த அய்யனார் கோவில் தென்பட்டது. அந்த இடத்தில் ஒரு கோவில் இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் அருகில் யாரும் வசிப்பது போலவே தெரியவில்லை. மக்கள் உபயோகிக்கும் வழிப்பாதை கூட அருகில் எதுவும் இல்லை. இத்தகைய இடத்தில், ஒரு கோயில் இருந்தால் இவ்வாறு பாழடைந்துதான் இருக்கும்.

கடவுளை நம்பினோர் கை விடப்படார். அரண்மனைக்கு உள்ளே செல்ல ஒரு மார்க்கம் வேண்டும் என்று மனதில் அய்யனாரிடம் வேண்டினேன். பின்பு அய்யனார் சிலையை இடமிருந்து வலமாய் சுற்றி வந்தேன். அப்போது, சிலையின் கையில் உள்ள வாள் எனக்கு வித்தியாசமாகப்பட்டது. அருகில் சென்று பார்த்தேன். அதன் வாள் பிடி பித்தளையில் செய்திருக்க, கைப்பிடியையும், வாளையும் இறுக்கிப் பிடிக்கும் செம்புக் குமிழ் பெரிய அளவில் வித்தியாசமாய் இருந்தது. குமிழை என் விரல்களால் பற்றினேன். அதில் சிறிது ஆட்டம் இருந்தது. ஏதோ உந்துதலில், அந்தக் குமிழை ஒரு சுழற்று சுழற்றினேன்.

ர்...ர்...ர்...

ஒரு கதவு நகரும் ஓசை கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தேன். கோவில் அருகில் உயர்ந்து வளர்ந்துள்ள ஒரு ஆலமரத்தின் அடியில், கீழ்தரை விலகிக் கொண்டிருந்தது. ஆச்சர்யம் மேலிட அதன் அருகில் சென்று பார்த்தேன். உள்ளே ஒரு படிக்கட்டு கீழ் நோக்கி இறங்கியது.

இதயம் படபடக்க, அதனுள் இறங்கினேன். பத்து படிகள் இறங்கியதும், வாளில் உள்ள குமிழ் போன்று, ஒரு செம்புக் குமிழ் சுவரில் இருந்தது. அதனை சுழற்ற, மேல் கதவு மூடிக் கொண்டது! கும்மிருட்டாய் ஆனது.

என் பென் டார்ச்சை எடுத்து ஆன் செய்தேன். பாதையோ மேலும் இறங்கிக் கொண்டே சென்றது. நானும் சத்தமே எழுப்பாமல் இறங்கினேன். ஓரிடத்தில் படிகள் நின்று போய், நேர்பாதையாக செல்ல ஆரம்பித்தது. இது நிச்சயம் அரண்மனைக்குள் செல்லும் சுரங்கப் பாதையாகத் தான் இருக்கும். அய்யனார் நமக்கு சரியானபடி வழி காட்டியுள்ளார் என்று எண்ணிக் கொண்டே நடந்தேன். பத்து நிமிடம் நடந்ததும் நேர்பாதை முடிவுக்கு வந்தது. மீண்டும் படிகள் மேல் நோக்கி ஏறியது. என் கால்களில் மெதுவான நடுக்கத்துடன் மேலே ஏறினேன். இந்த பாதை எங்கு முடிவுறும்? இதன் வாசல் எந்த அறையில் இருக்கும்? சம்புவரையர் அறையிலா? அல்லது அவரது மகள், மணிமேகலையின் அறையிலா?

ஏறிச் சென்ற படிகள் ஒரு இருட்டு அறையில் முடிந்தது. அந்த அறை பழைய உபயோகமில்லாத சாமான்களால் நிரம்பியிருந்தது. இந்த சுரங்கப் பாதை வாசல் எளிதில் தெரியாமலிருக்க ஒரு ஓவியம் மூலம் மறைத்திருந்தது. அதனை சிறிது நகர்த்தி வைத்தேன். அந்த அறையை மேலும் ஒருமுறை நன்கு பார்த்து விட்டு, பின்பு டார்ச்சை அணைத்தேன்.

அந்த அறையோடு சேர்ந்த மற்றொரு அறையில் வெளிச்சம் தெரிந்தது. அதன் வாசல் ஒரு திரையால் மூடப்பட்டு இருந்தது. நான் மெதுவாக பூனை போல நடந்து அந்த வாசலை அடைந்தேன். திரையை சிறிது விலக்கி எட்டிப்பார்த்தேன். உள்ளே, இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு இருந்தனர். தலையை உடனே உள்ளே இழுத்துக் கொண்டேன். வேறு வழியில் அந்த அறைக்கு செல்லலாமா என்று பார்த்தேன். அந்த அறைக்கு மேலும் ஒரு வாசல் இருந்தது. அதற்கும் திரை இருந்தது. அந்த வாசல் உள்ள இடத்தை, அறையில் உள்ள உடை மாற்றும் நிலைக் கண்ணாடி மூலம் மறைத்து வைத்திருந்தனர்.

நான் திரையை விலக்கி, நிலைக் கண்ணாடியின் பின்புறம் ஒளிந்து கொண்டேன். பின்பு கண்ணாடி பிரேமில் உள்ள டிசைன் இடைவெளி வழியாக அறையை கவனித்தேன்.

ஒரு மிகப்பெரிய படுக்கை அறை. விஸ்தாரமாய், அதே சமயம் அழகாகவும் இருந்தது. அறையின் நடுவே, யானை தந்தங்களினால் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு உயர்ரக கட்டில் இருந்தது. அதன்மீது மெத்தையும், விலையுயர்ந்த விரிப்பும் விரிக்கப் பட்டிருந்தன. சுவரில் வேட்டையாடி பதப்படுத்தப்பட்ட மிருகங்களின் தலைகள் இருந்தன. சுவர்கள், அழகிய ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிலைக் கண்ணாடி, மேஜை, நாற்காலி என பலவித பர்னீச்சர்களும் ஆடம்பரமாக இருந்தன. ஆங்காங்கே அழகிய விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

கட்டிலின் மீது அமர்ந்து கொண்டு இரு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். பகட்டான உடைகள், அணிகலன்களால் இருவருமே ஜொலித்துக் கொண்டிருந்தனர். ஒருத்தி பழுவேட்டையர் என்ற சிற்றரசரின் மனைவி நந்தினி. மற்றொருத்தி இந்த அரண்மனையின் செல்லப் பெண், சம்புவரையரின் மகள் மணிமேகலை. இவர்களில் யாரேனும் ஒருவர் கூட கொலைக் குற்றவாளிகளாக இருக்கலாம். ஏனென்றால், இந்த சிற்றரசர் குலத்தினர், ஆதித்த கரிகாலரிடம் வெறுப்பு காட்டியே வந்துள்ளனர்.

அப்போது வெளியே தடதடவென்று மதயானை நடந்து வருவது போல சத்தம் கேட்டது. உடனே மணிமேகலை அவசர அவசரமாய் அந்த அறையினுள் இருந்த ஒரு மறைவிடத்தில் மறைந்து கொண்டாள். கதவை திறந்து கொண்டு ஒரு வாலிபன் கம்பீரமாக நுழைந்தான்.

அட.. இது நம் ஹீரோ அதித்த கரிகாலர்! இவர் கடம்பூர் அரண்மனைக்குள் இருக்கிறார் என்றால்... இன்றுதான் சம்பவம் நடக்கப் போகிறதா?

எனக்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டது. முகம் குப்பென்று வியர்த்தது. உள்ளே நுழைந்த கரிகாலர், நந்தினியுடன் அமைதியாகவே பேசிக் கொண்டிருந்தார். எனினும் அவர் கையில் ஒரு வாள் இருந்தது. இந்த வாள்தான் அவர் உயிரை குடிக்கப் போகிறதா?

மணிமேகலையைப் பார்த்தேன். அவளோ தன் மறைவிடத்தில் இருந்து சிறிதும் வெளிக்காட்டாமல் இருந்தாள். அப்போது பின்புறம் லேசான சத்தம் கேட்க, திரையை விலக்கிப் பார்த்தேன். 'திக்'கென்று இருந்தது. சுரங்கப்பாதை வாசல் அருகே ஒருவன் நின்று கொண்டிருந்தான். ஆதித்த கரிகாலரும், நந்தினியும் பேசுவதை அவன் ஒட்டு கேட்டுக் கொண்டிருந்தான். யாரிவன்? எப்படி இங்கு வந்தான்? அவனை நன்றாக உற்றுபார்த்தேன். எனக்கு அவனை அடையாளம் தெரிந்தது. வந்தியத் தேவன். குந்தவையின் காதலன். ஆக, இவன்தான் ஆதித்த கரிகாலரை கொல்லப் போகிறானா?

நான் வந்த சுரங்கப் பாதை வழியாகத்தான் வந்தியத்தேவனும் வந்திருக்க வேண்டும். அடேய் வந்தியத்தேவா! நான் சந்தேகப்பட்டது சரியாகத்தான் உள்ளது. நீதான் கொலைகாரனா? ஆனால்... நீ யார் கையாள்? கரிகாலரின் தம்பி அருள்மொழி வர்மனுக்கா? அல்லது கரிகாலரின் சித்தப்பா உத்தமச் சோழருக்கா? இல்லை பழுவேட்டையர்களுக்கா? யாருக்காக நீ இந்த துரோகத்தை செய்யப் போகிறாய்?

இதற்கிடையே கரிகாலரின் பேச்சில் வேகம் கூட ஆரம்பித்தது. உச்சஸ்தாயில் கோபமாக பேசினார். நந்தினி ஏதோ சொல்ல முற்பட்டும், அதனை கவனிக்காமல், வெறித்தனமாய் பேசினார்.. போகப் போக நந்தினியும் கோபமடைய ஆரம்பித்தாள். இருவர் பேச்சிலும் பொறி பறந்தது.

நந்தினியா? வந்தியத்தேவனா? யாரந்த கருப்பு ஆடு? யாருடைய கை கொலை செய்யப் போகிறது? இருவரையும் மாறி மாறி கவனித்தேன்.

திடீரென்று சுரங்கப்பாதை வழியே மற்றொரு ஆஜானுபாகு உருவம் தோன்றியது. அந்த உருவம் வந்தியத்தேவன் பின்புறம் வந்து, இடது கையால், அவன் கழுத்தை சுற்றி இறுக்கியது.

இவர்... இவர்... பழுவேட்டையர் அல்லவா? பழுவூர் குலத்தின் அரசர் அல்லவா? அப்படியென்றால் பழுவேட்டையர்தான் கொலையாளியா? வந்தியத்தேவன் நல்லவன்தானா?

பழுவேட்டையர் குலத்தினர், விஜயாலயச் சோழர் காலத்தில் இருந்தே, சோழ பேரரசிடம் நெருக்கமாக இருந்தனர். விஜயாலயர், ராஜாதித்தர், அரிஞ்சயர், கண்டராதித்தர், சுந்தரச்சோழர் என அனைவர் காலத்திலும், பழுவேட்டையர்கள் உயர்ந்த பதவியில் அமர்த்தப்பட்டு, மரியாதையாக நடத்தப்பட்டனர். சோழ சிம்மாசனத்தை யார் அலங்கரித்தாலும், அவர்களுக்கு அடுத்த ஸ்தானத்தை உடையவர் பழுவூர் குலத்தினராகவே இருந்தனர்.

ஆனால், ஆதித்த கரிகாலர் இளவரசு பட்டத்தை அடைந்ததும், அவருக்கும், அப்போதைய பழுவேட்டையருக்கும் சிறுசிறு உரசல்கள், மனஸ்தாபங்கள் தோன்றின. அதனை பேசி தீர்ப்பதற்கு பதில், இருவருமே அதை மேலும் மேலும் வளர்த்தனர். பழுவேட்டையர், அளவுக்கு அதிகமாய் சோழப் பேரரசில் ஆதிக்கம் செலுத்துவதாய் கரிகாலர் எண்ணினார். நேற்று முளைத்த சிறு பையன் தன்னை மரியாதைக் குறைவாய் நடுத்துவதாக பழுவேட்டையர் எண்ணினார்.

இந்த ஆதிக்க போராட்டம் கொலை வரை இட்டுச் செல்வது ஒன்றும் அதிசயமில்லை.

வந்தியத்தேவன் தன் மீது தொடுக்கப்பட்ட திடீர் தாக்குதலால், முதலில் தடுமாறி நிலை குலைந்தான். பின்பு ஒருவாறு சமாளித்து அவர் பிடியை விலக்க போராடினான். என்ன நடக்கப் போகிறதோ? இருட்டு அறையில் நடப்பதை நன்கு கவனிக்க இரண்டு அடி முன்னே வந்ததும்தான் என் தவறை உணர்ந்தேன். உணர்ச்சிவசப்பட்டு, கண்ணாடி மறைவிலிருந்து வெளியே வர, என் மீது வெளிச்சம் பட்டது.

"ஏய்... யார் நீ?" ஆவேசத்துடன் என்னைப் பார்த்து கேட்டார் கரிகாலர்.

"நான்... நான்..." பதில் வராமல் தடுமாறினேன். பாண்டிய நாட்டு எதிரியாக இருப்பேனோ என்று நினைத்த அவர், என் மீது பாய்ந்து, தன் வலது கையால் என் கழுத்தைப் பிடித்து சுவற்றோடு அமுக்கினார். அவரின் வஜ்ர கைகளில் இருந்து என்னால் நகர முடியவில்லை. அவர் என்னை அப்படியே தூக்கினார். ஹக்... ஹக்... முச்சு திணறினேன். நெஞ்சை அடைத்தது. கண்கள் இருண்டன. எப்படியாவது தப்பிக்க வேண்டும்.. என்ன செய்வது? எப்படி தப்பிப்பது?

தற்பாதுகாப்புக்காக, என் இடுப்பில் இருந்த விஜயாலயர் கத்தியை உருவினேன். ஆதித்த கரிகாலர் இடது மார்பை நோக்கி வேகமாய் பாய்ச்சினேன். கரிகாலர் தன் பிடியை விட்டுவிட்டு, கண நேரத்தில் துடிதுடித்து என் கண் முன்னே இறந்து விழுந்தார். அதிர்ந்து போனேன் நான்.

நடந்த சம்பவங்களை கண்டு நந்தினியும் அதிர்ச்சியடைந்து இருக்க, மணிமேகலையோ நடந்ததே அறியாமல் தன்னிடத்தில் முடங்கி இருக்க, வந்தியத்தேவனும் கீழே மயங்கி கிடந்ததை கவனித்தேன்.

ஆனால், பழுவேட்டையரோ என்னை கவனிக்காமல், நந்தினியை நோக்கி, "அடிபாதகி, உன் கொலைப் பழியை நிறைவேற்றி விட்டாயே..." என்று கத்திக் கொண்டே வந்தார்.

பழுவேட்டையரின் எதிர்பாராத விஜயத்தால், மேலும் குழப்பமடைந்த நந்தினி திணறி நிற்க, நான் சத்தமில்லாமல் நகன்று, வந்த வழியே திரும்பி ஓடி வந்து, காலமித்ராவில் ஏறி 'ரிட்டன்' பட்டனை தட்டி 2058க்கு திரும்பி வந்தேன்.

ஆதித்த கரிகாலரின் சூடான ரத்தம் வழிந்து கொண்டிருந்த கத்தியை, நேப்பியர் பாலத்திற்கு கீழே, கூவத்தில் வீசி எறிந்து விட்டு, காலமித்ராவை TTOவில் ஒப்படைத்து விட்டு, என் வீட்டுக்கு வந்தும், என்னுடைய நடுக்கம் மட்டும் குறையவே இல்லை.

ஹலோ! சரித்திர ஆய்வாளர்களே! கரிகாலரை கொன்ற கத்தியை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று கூவத்தை கிளறி, என்னை மாட்டிவிட்டு விடாதீர்கள்.

- எழுதியவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928

12 comments:

சகாரா said...

அடடா! கதை நல்லா போய்ட்டு இருந்துச்சி. கடைசில இப்படி முடிச்சிட்டீங்களே :(
நல்லாயிருக்கு.
எழுதிய ஸ்ரீதேவிக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.

ஆனா, கதை ஆரம்பித்தது '2053ம் வருடம் நவம்பர் மாதம் 18ம் தேதி...'. "காலமித்ரா"வை மூன்று மாதங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்பது விதிமுறை.

இது இப்படி இருக்க, கதை முடிவுற்றது 2058 ஆம் வருடம் என்றிருக்கிறதே.

//...'ரிட்டன்' பட்டனை தட்டி 2058க்கு திரும்பி வந்தேன்.//

சற்றே குழப்பமாக இருக்கிறது. இது என் புரிதலில் தவறா என்று தெரியவில்லை. சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு நல்ல கதையை சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்ததற்கு நன்றி. :)

- சகாரா.

யோசிப்பவர் said...

சகாரா,
என்னுடைய தவறுதான். 2058தான் சரி. தட்டச்சும்பொழுது முதல் அத்தியாயத்தில் தவறு நேர்ந்திருக்கிறது. இப்பொழுது சரி செய்து விட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி!!;-)

நிலாரசிகன் said...

கதையின் நடை மிகவும் அழகு யோசிப்பவரே.

எழுதியவருக்கு என் பாராட்டுக்கள்.

gundumama said...

Amazing! never expected this kinda twist in the story. Writing story on undefined line that was created by another author is very diffcult. You are too good in writing.

Kudos to you :)

Keep Writing!

ராஜா முஹம்மது said...

ரொம்ப நல்லா இருந்தது.

ராஜா முஹம்மது

sarav said...

இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் ஒரு ஆங்கில படம் பார்த்தேன் TimeLine.
அதை பார்த்ததிலிருந்து Time machine வைத்து ஒரு கதை எழுத என்னிஇருந்தேன். ஆதித்ய கரிகாலன் கொலை சம்பவத்தை கருவாக கொண்டு எழுத திட்டமிட்டு இருந்தேன்.
நீங்கள் முந்திவிடீர். எனினும் கதையும் அதன் நடையும் மிக அருமை...
வாழ்த்துக்கள்

யோசிப்பவர் said...

//Writing story on undefined line that was created by another author is very diffcult. You are too good in writing.
//

//நீங்கள் முந்திவிடீர். //

gundumama, sarav,
இந்தக் கதையை எழுதியவர் ஸ்ரீதேவி. தட்டச்சியது மட்டுமே நான். உங்கள் பாராட்டுக்களை அவரிடம் தெரிவித்து விடுகிறேன்! ;-))

Nithya A.C.Palayam said...

ஒரு நல்ல வரலாறு சம்பந்தமான கதை.

வெண்பூ said...

நல்ல கதை மற்றும் நல்ல நடை. ஆனால் Micheal Cricton's Timeline நாவல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. நீங்கள் அதை படித்ததில்லை என்றால் "You are really really great. You are at par with Micheal Cricton"

யோசிப்பவர் said...

வெண்பூ,
நானும் படித்ததில்லை. இந்த கதையை எழுதியவரும் படித்ததில்லை. தகவலுக்கு நன்றி

manju said...

story narration is superb!!!!!!

Anonymous said...

நல்ல கதை மற்றும் நல்ல நடை. ஆனால் Micheal Cricton's Timeline நாவல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. நீங்கள் அதை படித்ததில்லை என்றால் "You are really really great. You are at par with Micheal Cricton"

neengal kuriya story mattumalla... so many stories including simbudevan's "ki.mu.vil somu" varai same method of narration is used. only the story platform changes.thank you.

- sri devi