Monday, November 19, 2007

மர்டர் மிஸ்ட்ரி - அத்தியாயம் ஆ


காலமித்ரா அமைதியாய் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தது. அதன் ஸ்கிரீனில் "இலக்கை அடைந்து விட்டோம்" என்று டிஸ்பிளே மினுமினுத்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன். தென்னை மரங்களும், பாக்கு மரங்களும் அடர்த்தியாய் வளர்ந்திருந்த ஒரு தோப்பின் நடுவே, காலமித்ரா நிலையாய் நின்று கொண்டிருந்தது. தொலைவிலோ, பச்சை பசேல் வயல்வெளிகளும் வாழைத் தோட்டங்களும், கண்ணைக் கவரும் வண்ணம் செழிப்பாக இருந்தது.

"இது என்ன இடமாக இருக்கும்?" என்று எனக்குள் எண்ணிக் கொண்டே, காலமித்ரா லொக்கேஷன் ஸ்கிரீனை பார்க்க, அது "அரிசிலாற்றங்கரை" என்று காட்டிக் கொண்டிருந்தது.

காலமித்ரா கதவை திறந்து கொண்டு, சோழ மண்ணில் குதித்தேன். உடல் முழுவதும் சிலிர்ப்பு ஏற்பட்டது. தொலைவில் நீர் பிரவாக ஓசை கேட்க, அத்திசையில் நடந்தேன்.

"ஆஹா! என்னவொரு ரம்மியமான காட்சி!" காவிரியின் கிளை நதியான அரிசிலாறு, சலசலவென்று வளைந்து நெளிந்து முழு வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது.

நம்முடைய காலத்திலோ, காவேரித் தண்ணீரை கண்ணால் பார்த்து ஐந்து வருடத்திற்கு மேல் ஆகிறது. நடுவர் மன்றம் என்றார்கள், இந்திய இறையாண்மைக் குழு என்றார்கள், பஞ்சாயத்து மன்றம் என்றார்கள். ஒவ்வொருவரும் ஒரு டி.எம்.சி. அளவை குறிப்பிட்டு, அதை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்றார்கள். எனினும், கர்நாடகா அசைந்து கொடுக்க வேண்டுமே?! "இந்த காவேரி பிரச்சனை எப்போதுதான் தீருமோ?" என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, "வீல்" என்று ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது.

ஏதோ ஒரு சோழர் குலப் பெண் ஆபத்தில் சிக்கியிருக்க வேண்டும். ஆற்று நீர் இழுத்துக் கொண்டு செல்கிறதா? என்றெல்லாம் பலவித சிந்தனை செய்து கொண்டே சத்தம் கேட்ட திசையை நோக்கி வேகமாகச் சென்றேன். ஆற்றங்கரையை ஒட்டி ஓங்கி வளர்ந்த ஒரு அடர்த்தியான மரத்தின் கீழே, சில பெண்கள் இருப்பதை கண்டேன். அவர்கள் முன் ஒரு இளைஞன், குதிரையோடு நின்று கொண்டிருந்தான். அவன், அந்த பெண்களை கலாட்டா ஏதும் செய்கிறானா? இல்லை, வேறு ஏதும் பிரச்சனையா? நானும் ஒரு மரத்தின் பின்னே மறைந்து கொண்டு அவர்களை கவனித்தேன்.

இப்போது பெண்களோ சிரித்துக் கொண்டிருந்தார்கள். இளைஞனோ ஏமாற்றமடைந்த முகத்தோடு இருந்தான். அந்தப் பெண்கள்தான், இளைஞனை கலாட்டா செய்கிறார்களா? அவர்கள் உற்சாக மிகுதியால் கத்தியதுதான் எனக்கு அலறல் சத்தமாய் கேட்டதா?

மொத்தம் ஆறு பெண்கள் அங்கு இருந்தார்கள். அவர்களின் நடுவே, ஆடம்பர உடைகள், ஆபரணங்களுடன் இரு பெண்கள் இருந்தனர். அதில் ஒரு பெண் மிகுந்த அழகுடன் இருந்தாள். இவள்தான் சோழர் குல இளவரசி குந்தவை தேவியாக இருக்குமோ?

காதை தீட்டி கொண்டு, அவர்கள் பேசுவதை கேட்க ஆரம்பித்தேன். அரைகுறையாய் காதில் விழுந்த வார்த்தைகளை வைத்து, அவள் குந்தவை என்றும், மற்றொரு ஆடம்பர உடை பெண், கொடும்பாளூர் இளவரசி வானதி என்றும், மற்ற பெண்கள் இவர்களின் தோழிகள் என்றும் அறிந்து கொண்டேன்.

குந்தவையின் அழகு என்னை பிரமிக்க வைத்தது. பொன் போன்று ஜொலிக்கும் நிறம், வட்ட வடிவ முகம், அகன்ற மையிட்ட கண்கள், குறும்புச் சிரிப்பு கலந்த பவளச் செவ்வாய், நீண்ட கருங்கூந்தல், கம்பீரத் தோற்றம். ஆஹா! குந்தவையின் அழகை மணியனோ, பத்மவாசனோ முழுமையாக காண்பிக்கவில்லை!

அப்படியென்றால் எதிரே உள்ள இளைஞன்தான் வந்தியத்தேவன் போலும். இவன் தான் குந்தவையின் காதலனாகி கரம் பிடிக்கப் போகும் அதிர்ஷ்டசாலியா? வந்தியத்தேவனை பார்த்தேன். அப்படியொன்றும் இவன் பிரமாதமாக இல்லையே. என்னையும் அவனையும் கம்பேர் பண்ணி பார்த்தேன்.

நானோ முடியை ஏற்றி சீவி, கலர் ஷேடிங் பண்ணி, நடுவில் சிறு பின்னல் போட்டு, லேட்டஸ்ட் ஸ்டைலில் இருந்தேன். அவனோ, வகிடு எடுத்து, முடியை இறக்கிவிட்டு சீவியிருந்தான். சொட்டை இருக்குமோ என்னவோ! என்னிடம் ரே-பென் கூலிங்கிளாஸ் உள்ளது. அவனிடம் பிளாட்பாரம் கிளாஸ் கூட கிடையாது. இரண்டு காதிலும், பாட்டியின் பாம்படம் போல ஏதோ ஒன்றை தொங்க விட்டிருந்தான். பேகி பேண்ட், டீ-ஷர்ட் சகிதம் நான் இருக்க, அவனோ அரைப் பாவாடை போட்டிருந்தான்! என் இடுப்பில், "நேனோ ஸிம்ப்யூட்டர் கம் டீவீ அட்டாச்டு" லேட்டஸ்ட் செல்போன் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் இடுப்பிலோ, ஒரு பழங்கால வாள் தொங்கிக் கொண்டிருந்தது. இத்தாலியன் லெதர் பூட்ஸை நான் போட்டிருக்க, அவனோ மரத்தால் ஆன செருப்பு போன்ற ஒன்றை போட்டிருந்தான்.

மொத்தத்தில் அவன் டொங்கல் போல் இருந்தான். இவனைப் போயா குந்தவை லவ் பண்ணப் போகிறாள். எந்தவிதத்திலும் இவன் எனக்கு சமானம் கிடையாது. நானே குந்தவையை டிரை பண்ணலாமோ, என்று யோசித்தேன்.

அப்போது விசா ஆபீஸரின் எச்சரிக்கை ஞாபகம் வந்தது.

"நீங்கள் செல்லும் காலத்தின் சம்பவங்களிலோ, நபர்களிடமோ இடையூறு செய்யக் கூடாது..."

உடனே என் மனதை மாற்றிக் கொண்டேன். நாம் வந்த வேலையை மட்டும் கவனிப்போம். குந்தவை, வந்தியத்தேவனை லவ் பண்ணுகிறாள் என்றால், அது அவள் தலைவிதி. அதற்கு நாம் என்ன செய்வது? பாவம் குந்தவை!! என்று பரிதாபப்பட்டுக் கொண்டேன்.

அப்போது வந்தியத்தேவன் கோபமாய் குதிரையில் ஏறிச் சென்றான். ஏதோ ஊடல் போலும். அவன் கண்ணில் பட்டுவிடாமல், மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டேன்.

இவர்களுக்கிடையே நடந்த பேச்சுக்களை கவனித்ததில், இப்போதுதான் இருவரும் அறிமுகம் ஆகிறார்கள். இனி இவர்கள் நண்பர்களாகி, காதலர்களாகி, அருள்மொழியை வந்தியத்தேவன் சந்தித்து, அதித்த கரிகாலன் கடம்பூர் சென்று, கொல்லப்பட எப்படியும் மூன்று மாதங்கள் ஆகும் என்று நினைக்கிறேன். அதுவரை என்ன செய்வது?

எனக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, இந்த வந்தியத்தேவன் எங்கு செல்கிறான் என்று பின் தொடர்ந்து, ஏதும் சதி செய்கிறானா என்று பார்க்கலாம். எனக்கு என்னவோ இவன்தான் ஆதித்த கரிகாலரை கொன்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது! இளவரசரின் தம்பி அருள்மொழிவர்மனுடன் கூட்டு சதி செய்து, கொலை செய்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இல்லையேல், இவன் உத்தமச் சோழரின் கையாளாக இருக்கலாம். இவனை பின் தொடர்ந்து சென்றால் ஏதும் விஷயம் தெரியும். எனினும், ஆதித்த கரிகாலர் கொலை நடக்க இரண்டு மூன்று மாதங்கள் ஆகும். அதுவரை நானும் இங்கேயே இருந்தால், எனக்கு ஒதுக்கப்பட்ட டைம் முடிந்து விடும். நானோ, உரிய நேரத்தில் காலமித்ராவை திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

இரண்டாவது வழி, காலமித்ராவிலேயே மூன்று மாதம் எதிர்காலத்தில் சென்று, ஆதித்த கரிகாலர் கொலை செய்யப்பட்ட நாளுக்கு சென்று பார்ப்பது. நான் இரண்டாவது வழியையே தேர்ந்தெடுத்தேன்.

காலமித்ராவிற்கு அருகில் சென்று, கதவை திறந்து, ஏறி அமர்ந்தேன். அது இன்னும் டைம் மோடில்தான் இருந்தது. அதன் 'தேதி இன்புட்'டில் மாற்றம் செய்தேன். காலமித்ரா பயணிக்க தயாரானதும், 'கோ' பட்டனை அழுத்த என் கை நகர்ந்தது. அப்போதுதான் தேதியை கவனிக்க, செல்ல வேண்டிய வருடத்தை நூறு வருடம் முன்பாக, '869' என்று தவறுதலாக டைப் செய்துள்ளது தெரிய வர, அதனை திருத்த வேண்டும் என்று நினைப்பதற்குள், கை தன்னிச்சையாக 'கோ' பட்டனை அழுத்த...

விர்ரூரூம்...


- எழுதிக் கொண்டிருப்பவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928

2 comments:

காஞ்சனை said...

இரண்டாவது அத்தியாயமும் நல்லா வந்திருக்கு. கதையை தொடர்ந்து பதிவிடுங்கள் படிக்க ஆவலாய் உள்ளேன்.

- சகாரா.

Anonymous said...

sridevikku ponniyin selvan kathaiai thavira vera onnum theriyatha?