Thursday, November 15, 2007

மர்டர் மிஸ்ட்ரி - அத்தியாயம் அ

2058ம் வருடம் நவம்பர் மாதம் 18ம் தேதி, நீண்ட க்யூவில் மூன்று மணி நேரமாய் நின்று கொண்டிருக்கும் நான்(பெயர் வேண்டாமே!), அலுத்துப் போயிருக்கும் போது, ஒரு வழியாய் என் முறை வர, கையில் உள்ள அப்ளிகேஷனை, டேபிளில் உட்கார்ந்திருந்த ஆபீஸரிடம் நீட்டினேன். அதனை வாங்கி அவர், கவனமாக வாசிக்கத் தொடங்கினார்.

ச்சே. இந்த க்யூவிற்கு மட்டும் எங்கும் குறைவில்லை. ரேஷனிற்கும், தண்ணீருக்கும்தான் க்யூ என்றால், இதற்குமா? காலத்தில் பயணம் என்பது சமீபகால கண்டுபிடிப்புதான் என்றாலும், இதற்கு விசா வாங்குவதற்கு, இத்தனை பேர் காத்திருக்கிறார்கள். கால இயந்திரம் - கதையிலும் கற்பனையிலும் மட்டுமே வலம் வந்து கொண்டிருந்த டைம் மிஷினை, இரண்டு வருடத்திற்கு முன்பு நெதர்லாந்து விஞ்ஞானி டேரல் ஹாக் கண்டுபிடித்ததும், உலகமே வியப்பில் ஆழ்ந்தது. இந்த மிஷின் மூலம் நாம் விரும்பும் எந்த காலத்திற்கும் பயணம் செய்யலாம். கால இயந்திரத்தில் நாம் செல்ல விரும்பும் தேதி மற்றும் 1000km சுற்றளவிற்குள் உள்ள இடம், இவற்றை கூறிவிட்டு, 'கோ' பட்டனை அழுத்தினால், உடனேயே, வினாடி நேரத்தில், அந்த காலத்தில், அந்த இடத்தில் இருப்போம்.

கிளியோபாட்ரா நிஜமாகவே அழகுதானா என்பதை நேரிலே பார்க்கலாம்! ஹிட்லரின் சிறுவயது வாழ்க்கையை அருகில் இருந்து பார்க்கலாம்! திப்பு சுல்தானின் வீரத்தை வீடியோவில் ஷூட் பண்ணலாம்! எதிர்கால விஞ்ஞான முன்னேற்றங்களை இன்றே பார்க்கலாம். இந்த இயந்திரத்தால் ஏற்பட்டுள்ள நன்மைகள் அளவிட முடியாதது.

எனினும் இதில் பயணம் செல்வதோ, ஓட்டுவதோ அந்தந்த நாடுகளின் அரசாங்க கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அப்ளிகேஷன், புரொசீஜர், மாமூல் என்றுதான் காரியத்தை சாதிக்க வேண்டியுள்ளது. டைம் மிஷினை ஓட்டுவதற்கு ஆறு மாதமாய் பயிற்சி எடுத்து, ஒரு வழியாய், போன வாரம்தான் T.T.O ஆபிஸில் லைசென்ஸ் பெற்றேன். லைசென்ஸ் பெறுவதற்கு ஃ போட வேண்டும். அதாவது, அவர்கள் குறிப்பிடும் இரண்டு எதிர்காலத்திற்கு சென்று அங்குள்ள T.T.O ஆபிஸில் கையெழுத்து மற்றும் ஆபீஸரின் புகைப்படம் முதலியவற்றை பெற்றுக் கொண்டு, நம்முடைய காலத்திற்கு திரும்பி வர வேண்டும். இவை எதிர்கால T.T.O ஆபீஸர்களின் பயோ டேட்டா ஃபைலுடன் ஒப்பிடப்பட்டு, சரியாக இருந்தால் மட்டுமே லைசென்ஸ் கிடைக்கும். வெற்றிகரமாக ஃ போட்டாலும், வழக்கமான மாமூல் கொடுத்துதான் ஆக வேண்டும்.

அடுத்து விசா பெற வேண்டும். அதற்கான அனுமதிக்கு தான், காலையிலேயிருந்து கால் கடுக்க க்யூவில் நின்று, இப்போது ஆபீஸரிடம் அப்ளிகேஷனை கொடுத்து உள்ளேன். விசாவிலும் மூன்று வகைகள் உள்ளன.

"எந்த காலத்திற்கு செல்கிறீர்கள் என்பது தெளிவாக இல்லையே" என்ற ஆபீஸரின் கனத்த குரல், என் சிந்தனை ஓட்டத்தை தடை செய்தது.

"சோழர்களின் காலம் என்று எழுதியுள்ளேனே சார்"

"சங்க காலத்திலும் சோழர்கள் உள்ளனர்! விஜயாலயர் காலமும் சோழர் காலம்தான்!"

"லேட்டர் சோழாஸ்" என்றேன்.

"காரணம்?"

"தஞ்சை கோயிலை கட்டிய ராஜராஜ சோழரையும், கடாரம் வென்ற ராஜேந்திரரையும், குலோத்துங்க சோழரையும் நேரில் பார்க்க யாருக்குதான் ஆசை இருக்காது?"

"டூரிஸ்ட் விசா கேட்டுள்ளீர்கள் இல்லையா?"

"ஆம்" என்றேன்.

விசாவிலும் மூன்று வகைகள் உள்ளன. டூரிஸ்ட், ஸ்டடி மற்றும் ரிசர்ச். பின்னது இரண்டும் பெறுவதற்கு, நிறைய கண்டிஷன்கள் உள்ளன. குறிப்பாக, எக்ஸ்டர்னல் கைடு என்ற பெயரில் ஒரு சோடாபுட்டி பேராசிரியரை உடன் அழைத்துச் செல்ல வேண்டும். இது என்னுடைய நோக்கத்திற்கு இடையூறாக இருக்கும். நான் சோழர்கள் காலத்திற்கு, பயணம் செய்வதற்கு முக்கிய காரணம் சுற்றுலா நோக்கம் அல்ல. சுந்தரச் சோழர் காலத்தின் பட்டத்து இளவரசர், அவரின் மூத்த மகன், ஆதித்த கரிகாலர், கடம்பூர் அரண்மனையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்தது யார் என்று அறிந்து கொள்ள ஆசைப்பட்டுதான் சோழர் காலத்திற்கு செல்ல விரும்புகிறேன்.

ஆதித்த கரிகாலரின் மரணம் மர்மம் நிறைந்தது. அன்றிருந்த சிற்றரசர்களுக்குள் உட்பூசல் நிறையவே உண்டு. பழுவேட்டையர்கள், சம்புவரையர்கள் போன்றோர், ஆதித்த காரிகாலரை எதிர்த்து உட்கலகம் செய்தனர். மேலும் வீரபாண்டியன் மரணத்திற்கு பழிக்கு பழி வாங்க பாண்டிய நாட்டு படையினர் முயற்சித்து வந்தனர். எனவே ஆதித்த கரிகாலரை கொலை செய்தது பழுவேட்டையர்களா? சம்புவரையர்களா? பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளா? அல்லது சுந்தர சோழருக்கு அடுத்து பட்டத்திற்கு வந்த உத்தமச் சோழரா? இதை தெரிந்து கொள்வதே என்னுடைய உண்மையான நோக்கம்.

எனினும் இந்த காரணம் ஆராய்ச்சி வகையைச் சேர்ந்தது என்பதால், இதனை மறைத்து, டூரிஸ்ட் என்று குறிப்பிட்டுள்ளேன்.

"டூரிஸ்ட்டாக செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் அனைத்தும் தெரியுமல்லவா?" என்று என்னிடம் கேட்டார் ஆபீஸர்.

"நன்கு தெரியும் சார்"

"நீங்கள் அங்குள்ள நபர்களையோ, சம்பவங்களையோ இடையூறு செய்யக் கூடாது. வெறுமனே பார்வையாளராக மட்டும்தான் செல்கிறீர்கள் என்பதை எந்நேரமும் கவனத்தில் கொள்ள வேண்டும். O.K.?"

"O.K."

"வெல், உங்கள் விசாவை ஒன்பதாவது கவுண்டரில் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய வெகிக்கிள் எண் 34. பெயர் காலமித்ரா. நீங்கள் செல்லும் காலம் கி.பி. 800ல் இருந்து 1300 வரை செட் செய்யப்பட்டுள்ளது. இன்றிலிருந்து மூன்று மாதம் உங்களுக்கு டைம். அதற்குள் நீங்கள் திரும்பி வந்து "காலமித்ரா"வை ஒப்படைக்க வேண்டும். நீங்கள் உங்கள் சுற்றுலா காலத்தில் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளை மீண்டும் ஒருமுறை வாசித்துக் கொள்ளுங்கள். தவறு ஏதும் நிகழ்ந்தால், கடும் தண்டனை கிடைக்கும் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். யூ கேன் கோ நௌ", என்ற வழக்கமான எச்சரிக்கைகளை கூறிவிட்டு என்னை அனுப்பினார்.

விசாவை பெற்றுக் கொண்ட பின்பு, 34ம் எண்ணுடைய "காலமித்ரா" அருகில் சென்றேன். விசா கார்டை, காலமித்ரா கதவில் தேய்க்க, அதன் கதவு திறந்து கொண்டது. அதன் உள்ளே ஏறி அமர்ந்தேன்.

காலமித்ரா மிக அருமையான வாகனம். ஒரு நபர் மட்டுமே உட்கார வசதி உடையது என்றாலும், மிகவும் சொகுசான குஷன் மற்றும் லேட்டஸ்ட் வசதிகளுடன் இருந்தது. நான் பயிற்சி மேற்கொண்டதோ, ஒரு பழைய காயலான் கடை வாகனம்.

கால மித்ராவில் இரண்டு மோடு இருந்தது. ஒன்று ஆர்டினரி மோடு, மற்றொன்று டைம் மோடு. ஆர்டினரி மோடில், இது சாதாரண கார் போன்றே இருக்கும். டைம் மோடில் மட்டுமே காலத்தில் பயணிக்க முடியும்.

காலமித்ராவை ஆர்டினரி மோடில் வைத்துக் கொண்டு, நகரின் மிகப் பெரிய "T.T. மால்"க்கு சென்றேன். அங்குள்ள "ஆல் இன் ஒன் ஷப்" என்ற பிரம்மாண்ட கடைக்குள் நுழைந்தேன். இங்கு டைம் டிராவலுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவு கேன்கள், பிஸ்கட்டுகள் தண்ணீர் ம்தலியவை தாராளமாக வாங்கிக் கொண்டேன். முடிந்தவரை அந்த காலத்திய மனிதர்களை டிஸ்டர்ப் செய்யாமல் இருப்பதே நல்லது. மேலும் உடை செக்ஷனுக்கு சென்று சோழர் காலத்திய உடைகள் மூன்று செட் எடுத்துக் கொண்டேன். அன்றைய தமிழ் சொற்களுக்குரிய புத்தகம் ஒன்று வாங்கிக் கொண்டேன். மேலும் சிற்சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு, என் முதல் காலப் பயணத்திற்குத் தயாரானேன்.

காலமித்ராவில் ஏறி அமர்ந்து, கதவை சாத்தினேன். டைம் மோடிற்கு மாற்றியதும், காலமித்ரா காலத்தில் பயணிக்கத் தயாரானது. செல்ல வேண்டிய தேதியை கேட்க, 20.08.0969 என்று டைப் செய்தேன். அட்சரேகை, தீர்க்க ரேகை கேட்க, தஞ்சாவூருக்கு அருகில் உத்தேசமாய் டிகிரிகளை டைப் செய்தேன். மேலும் சில பட்டன்கள் மற்றும் கட்டளைகளை கூற, காலமித்ரா தயாராகி, "கோ பட்டனை அழுத்தவும்" என்று ஸ்கிரீனில் காண்பித்தது. இதயம் படபடக்க, முதுகு தண்டில் மெல்லிய சிலிர்ப்பு ஏற்பட, என் ஆள்காட்டி விரலை "கோ" பட்டனில் வைத்து அழுத்தினேன்.

விர்ரூரூம்...


- எழுதிக் கொண்டிருப்பவர் ஸ்ரீதேவி
எழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928

4 comments:

Anonymous said...

அருமை...

கடைசி வரிவரைக்கும் ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது...

அடுத்த பாகம் வரும்போது தவறாம மெயில் அனுப்புங்கன்னாவ்...

யோசிப்பவர் said...

ரவி,

மெய்ல் அனுப்புவது கடினம். அடுத்த பகுதியை வருகிற திங்கட்கிழமை பதியலாம் என்றிருக்கிறேன்.

உங்கள் பாராட்டுகளை எழுதியவரிடம் தெரிவித்து விடுகிறேன்!!!;-)

காஞ்சனை said...

அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்.

- சகாரா.

யோசிப்பவர் said...

சகாரா,
திங்கட்கிழமை!!;-)