Wednesday, September 20, 2006

எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?

==================================
முன்கதை - ஒன்று, இரண்டு, மூன்று
==================================
நல்ல வேளையாக ஏற்றி கொண்டாள். உள்ளே நுழைந்ததுமே முக்கால்வாசி இளகிவிட்ட ஃபில்டரை பிய்த்து வெளியே எறிந்து விட்டேன். அவள் என்னை பரிதாபமாக பார்த்துக் கொண்டே, பேசி கொண்டு வந்தாள்.

------------------------><---------------------

நுங்கம்பக்கம். என் வீட்டிற்குள் நுழைந்து எனது கம்ப்யூட்டரை கழட்டி வெளியே பால்கனியில் வைத்தேன். ஆராய்ச்சி குறிப்புகள் அத்தனையும் பொறுக்கி கம்ப்யூட்டர் அருகில் போட்டேன். கம்ப்யூட்டரை சுற்றி மலை மலையாக காகிதம். என்னுடைய ஃபெராரியின் பெட்ரோல் ட்யூபை உருவி, கேனை நிரப்பி, சுற்றிலும் ஊற்றி, தீ வைத்தேன்.

பத்து வருட உழைப்பு கண் முன்னால் எரிவதை பார்த்து கொண்டே யோசித்தேன்.

'ராஜீவ்! தெரிந்து செய்வானா? தெரியாமல் செய்வானா? எனது குறிப்புகளை ஏற்கெனவே திருடியிருப்பானோ? அப்படியே எனது குறிப்புகளை திருடியிருந்தாலும் எதற்காக அறுபத்தி மூன்று வரை அதை செய்ய வில்லை? எனது ஆராய்ச்சி சம்பதப்பட்ட சில பாகங்களின் டிஸைன்கள் ராஜீவிடம் இருக்கின்றன. அவற்றையும் அழிக்க வேண்டும். தேவையென்றால் ராஜீவை கொல்லவும் தயங்க கூடாது. முதலில் ராஜீவை போய் பார்க்கலாம்.'

முழுதும் எரிந்து முடித்தது. சின்ன துண்டுகாகிதம் கூட மிஞ்சவில்லை. ராஜீவ் நம்பருக்கு அழைத்தேன். எடுக்கவேயில்லை. அவன் கம்பெனிக்கு ஃபோன் போட்டேன்.

"ஹலோ"

"ஹலோ! நான் சந்தோஷ் பேசறேன். அங்க ராஜீவ் இருக்கானா?"

"அவர் இல்லையே சார்! செல்லுக்கு பண்ணினாலும் எடுக்க மாட்டேங்கறார். நானும் அவரைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்."

"அப்படியா? சரி நான் இப்ப அங்கே வர்றேன். அவன் வந்தா அங்கேயே இருக்க சொல்லுங்க."

"சரி சார்!"

நான் அங்கே போனபோதும் ராஜீவ் அங்கேயில்லை. 'எங்கே போயிருப்பான்?'. அவன் அறையிலிருந்த அவன் கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். 'எனது டிஸைன்களை எங்கே வைத்திருக்கிறான்?' 'Search' ஆன் செய்ததும், மேனேஜர் உள்ளே வந்தார்.

"ராஜீவ் எங்கே கண்ணன்?"

"தெரியலை சார்! நான் உங்களை கேக்கனும்னு நினைச்சேன்"

"என்னையா?"

"உங்க ஷெட்ல ஒரு கார் வச்சிருந்தீங்களே! அதுலதான் ஒருத்தர் வந்து கூட்டிட்டு போனார்."

"என்னது!!! அந்த காரிலா??? எப்போ வந்தார்?"

"சுமாரா ரெண்டரைக்கு வந்து கூட்டிட்டு போனார்?"

"ஆள் பார்க்க எப்படியிருந்தான்?"

"கொஞ்சம் குள்ளமா, வழுக்கை தலை. டைட்டா டிரெஸ் பண்ணிருந்தார். ஏன் சார் எதாவது பிரச்சனையா?"

"தெரியலை. ராஜீவ்டயிருந்து ஃபோன் வந்தா உடனே எனக்கு கூப்பிட சொல்லுங்க."

"சரி சார்!" குழப்பமான முகத்துடன் வெளியேறினார்.

கம்ப்யூட்டர் திரையை பார்த்தேன்.

'அடப்பாவி!!!'

மொத்த குறிப்புகளும் அவன் கணினியிலிருந்தன!!! 'எப்பொழுது எடுத்தான்?' பயங்கரமாக கோபம் வந்தது.

ஒவ்வொன்றாக அழித்து கொண்டிருக்க நேரமில்லை!

'DEMOLISH SYSTEM' என்று அடித்து 'Enter' தட்டினேன். இனிமேல் இந்த கம்ப்யூட்டர் யாருக்கும் உபயோகப்படாது.

'ராஜீவ் எங்கே போனான்? அவனை கூட்டி போனவன் யார்? என்னுடைய கார்... ஒருவேளை அவனாயிருக்குமோ? ஆனால் எதற்கு?' யோசித்து யோசித்து எனக்கு மூளையே வெடித்து விடும் போலிருந்தது. யோசித்துவாறே நடக்க ஆரம்பித்தேன்.

'எனக்கு சதி செய்வது யாரென்றே புரியவில்லை? ராஜீவா? என்னிடம் லிஃப்ட் கேட்டவனா? இல்லை இவன் வேறொருவனா?'

விடை வராத கேள்விகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

'எனது காரில் கடத்தி போயிருந்தால், கண்டிப்பாக ராஜீவ் வேறு ஏதோ ஒரு வருடத்துக்குதான் போயிருக்க வேண்டும். எந்த வருடம் 1963ஆ? 3000மா? தேடிப் பார்க்க எனக்கு ஒரு வண்டி வேண்டும். ராஜீவின் உதவியில்லாமல் அதை மீண்டும் உருவாக்கவும் முடியாது! என்ன செய்வது? இந்த காலத்தில்ருந்து லிஃப்ட் கொடுக்க கூட வண்டி கிடைக்காதே!!'

'அட வர்ஷிதா! இவள் எதற்கு இங்கே நிற்கிறாள்?' சுற்றிலும் பார்த்தபொழுது சாலிகிராமம் என்று புரிந்தது. 'இவள் என்னை இறக்கி விட்டு
போகவில்லையா? ஒருவேளை இவள்தான் ராஜீவை?..'

"ஹாய்! என்ன இங்கே நின்னுகிட்டு இருக்கீங்க? பதினெட்டு இருபத்தி மூனுக்கு போகலை?"

அவள் பதில் கூறாமல் என்னையே கூர்ந்து பார்த்தாள்.

"எதுக்கு அப்படி பாக்கறீங்க?"

"நீங்கள்தானே டைம் டிராவல் வண்டியை கண்டுபிடித்த சந்தோஷ்? முன்பே ஏன் சொல்லவில்லை?"

"தேவையில்லைன்னு நினைச்சேன்"

அவள் ஏதோ யோசித்துவிட்டு பெரிதாக சிரிக்க ஆரம்பித்தாள்.

"எதுக்கு சிரிக்கிறீங்க?" எரிச்சலாக கேட்டேன்.

"இல்லை! 'விதி வழி மதி செல்லும்'னு ஒரு பழமொழி உண்டு, கேள்விபட்டிருக்கீங்களா?"

"அதுக்கென்ன இப்போ?"

"உங்கள் அராய்ச்சி குறிப்பையெல்லாம் அழித்திருப்பீர்களே?"

எனக்கு சந்தேகம் அதிகமானது. "உங்களுக்கு எப்படி தெரியும்?"

"உங்கள் நண்பர் ராஜீவ் காணாமல் போயிருப்பாரே? உங்கள் வண்டியும் தொலைந்து போயிருக்கனுமே!"
"ராஜீவ் எங்கே இருக்கான்னு உங்களுக்கு தெரியுமா?"

"தெரியும். இருபது ஐம்பத்தியெட்டிலிருக்கிறார்."

"அமபத்தி எட்டா? எதுக்கு?"

"சரி! சரி! ரொம்ப குழம்பாதீர்கள்! எல்லாவற்றையும் விளக்கமாக சொல்கிறேன்."
"உங்கள் வண்டியை திருடியவந்தான், ராஜீவையும் கடத்திருக்கிறான். கடத்தி ஐம்பத்தி எட்டுக்கு கொண்டுபொய் விட்டு விட்டான்."

"அம்பத்தி எட்டுக்கு எதுக்கு?"

"'டைம் டிராவல் மெஷின்' என்ற ஒரு கண்டுபிடிப்பே இல்லாமல் போக அவன் விரும்பவில்லை. அதற்கு நீங்கள் ஒத்துழைக்க மாட்டீர்கள் என்று அவனுக்கு நன்றாக தெரியும். அதனால் ராஜீவை தேர்ந்தெடுத்தான். ராஜீவ் கையில் உங்கள் ஆராய்ச்சி குறிப்புகள் அத்தனையும் கொடுத்திருக்கிறான். அதை வைத்து இருபது அறுபத்தி மூன்றில் ராஜீவ் டைம் டிராவல் மெஷினை உருவாக்கி காட்டுவார். உலகம் ராஜீவை கொண்டாடும்."

"அதற்கு அம்பத்தி எட்டு வரைக்கும் ஏன் போக வேண்டும்?"

"ஏனென்றால் ஐம்பத்தி ஏழு வரைதான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள். ஐம்பத்தி எட்டு உங்களால் எட்ட முடியாத வருடம்."

ஒரு நிமிடம் மூளையில் அறைந்தது போலிருந்தது.

"யார் அவன்? அவனுக்கு இதனால என்ன லாபம்?"

"அவனுக்குத்தான் எல்ல லாபமும். ராஜீவை கடத்தியது வேறு யாருமில்லை. கார்கோ! கார்கோவை தெரியுமில்லையா? டைம் டிராவல் மெஷின் உருவானால்தானே, பிற்காலத்தில் அவனால் அதில் மாற்றம் செய்ய முடியும்."

எனக்கு சகலமும் இப்பொழுது புரிந்தது, ஒன்றை தவிர.

"உங்களுக்கு எப்படி எல்லா விஷயமும் தெரியும்?"

"நான் தான் ஏற்கெனவே உங்களிடம் சொன்னேனே, எனக்கு இந்த மாதிரி பழைய விஷயங்களையெல்லாம் தோண்டி பார்ப்பதில் இடெரெஸ்ட்ன்னு. அப்படி தோண்டியதில் கார்கோவின் டைரிகள் எனக்கு கிடைத்தன. அதில் எல்லாவற்றையுமே அவன் எழுதிருந்தான். அதை படித்ததுமே உங்களுக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் வந்தேன்."

"அதுக்கெதுக்கு பதினெட்டு இருபத்தி மூனுக்கு போனீங்க?"

"எனக்கு உங்களை பற்றி அதிகமாக தெரியாது. உங்கள் பெயர் தெரியும். பதினெட்டு இருபத்தி மூன்றில் உங்களது வம்சாவழி திரு.பொன்சாமுவேல் என்பவர் கலப்பு மணம் செய்ததால் மாறிப்போனது என்ற குறிப்பு மட்டும் கார்கோவின் டைரியில் கிடைத்தது. அதனால் பதினெட்டு இருபத்தி மூன்றிலிருந்து உங்கள் வம்சாவளியை பிடித்து கொண்டு வந்தேன். அப்படி வந்த பொழுது இருபது ஒன்பதில், உங்களது சிறு வயது புகைப்படம் கிடைத்தது. அதை வைத்துதான் உங்களை கண்டு பிடித்தேன். முதலிலேயே நீங்கள்தான் அந்த கண்டு பிடிப்பாளர் என்று சொல்லியிருந்தால், இந்நேரம் எல்லாவற்றையுமே தடுத்திருக்கலாம்!! அதனால்தான் சொன்னேன், 'விதி வழி மதி செல்லும்'னு"

"எனக்காக ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறீர்கள். ரொம்ப நன்றி. நாம உடனே ராஜீவ்ட்ட இருக்கிற அந்த குறிப்புகளையும் அழிக்கனும்."

"எப்படி அழிப்பீர்கள்?" அவள் கேள்வியில் கிண்டல் தொனித்தது.

"நீங்க உதவ மாட்டீங்களா? இருபது அம்பத்தி எட்டுக்கு உங்க வண்டியில் கொஞ்சம் லிஃப்ட் கொடுக்க முடியுமா, ப்ளீஸ்!"

அவள் ஒருமாதிரி புன்னகைத்து கொண்டே, ஃப்யூவல் கம்பஸ்ஸன் சேம்பரை நோக்கி கை காட்டினாள். பார்த்தேன்.

'ZRD அனலைஸர்' சுத்தமாக எரிந்து போயிருந்தது. அப்படியே தலையில் கைவைத்து ரோட்டில் உட்கார்ந்து விட்டேன்.

"எழுந்திருங்கள்! நடக்க இருப்பதை யாராலும் மாற்ற முடியாது.". என்னை தூக்கி விட்டு, அந்த பக்கமாக வந்த ஒரு காரை கை காட்டி நிறுத்தினாள்.

"எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? நுங்கம்பாக்கம் போக வேண்டும்."


- பொறுமையாக படித்தவர்களுக்கு நன்றி.

12 comments:

Anonymous said...

சூப்பர் Sci-Fi கதை. ஒரு நாலு லைன்ல மனசில பட்டதை சொல்லிருக்கேன். பாருங்க...

கொஞ்சம் கலாட்டா தான் பண்ணியிருக்கேன். சும்மா சிரிச்சு வையுங்க. கதை கலக்கல்.. :-)

கோழை said...

நல்லா இருந்தது...... பார்ப்போமே

Anonymous said...

"எக்ஸ்கியூஸ் மீ! நான் அப்பவே சொன்னேன் இல்லை.. எங்க இருந்தாலும் டைம் டிராவல் பண்ணி இங்க வந்திடுங்க.. பரிசுகள் அறிவிச்சாச்சு..!"

யோசிப்பவரே, தேன்கூடு போட்டியில் வெற்றி பெற்றதிற்கு வாழ்த்துக்கள் !

இன்பா (Inbaa) said...

வாழ்த்துக்கள், இன்னும் நிறைய யோசியுங்கள்.

பொன்ஸ்~~Poorna said...

நல்லா வந்திருக்கு யோசி, நல்ல கதை.

பரிசுக்கும் வாழ்த்துக்கள்.

வர்ஷிதா எப்படி திரும்பி அவள் காலத்துக்குப் போனாள்? இல்லை போகவே இல்லையா?

Prabu Raja said...

வாழ்த்துக்கள்.

PPattian said...

கதை அருமை.. ரசித்து படித்தேன். ஒவ்வொரு அத்தியாயமும் தலைப்பிலேயே முடிவது அற்புதமான Idea. ஒரே ஒரு கேள்வி, நீங்கள் 3000 க்கு போக முடியும்போது, 2058க்கு போய் ராஜீவை தடுக்க முடியாதென்பது கொஞ்சம் இடிக்கிறது.

கதையில் வெரும் Technical சமாச்சாரங்கள் எல்லாம் (ZRD, HF312, EL245 etc.) உண்மையானவையா? கற்பனையா?

என்ன பரிசு கிடைத்தது? வாழ்த்துக்க்கள்.

யோசிப்பவர் said...

PPattian,

//ஒரே ஒரு கேள்வி//
மூன்று கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள்!!!!;-)

//நீங்கள் 3000 க்கு போக முடியும்போது, 2058க்கு போய் ராஜீவை தடுக்க முடியாதென்பது கொஞ்சம் இடிக்கிறது.
//
விதி வழி மதி செல்லும். மதி மட்டுமல்ல, கால வாகனமும்!!!;-)

//கதையில் வெரும் Technical சமாச்சாரங்கள் எல்லாம் (ZRD, HF312, EL245 etc.) //
லேசான உண்மை கலந்த மிகப் பெரிய கற்பனைகள். XRD என்ற ஒன்று இப்பொழுதே இருக்கிறது என்று கேள்வி!

//என்ன பரிசு கிடைத்தது?//
இங்கே கிளிக் செய்து பார்க்கவும்!!!

PPattian said...

நன்றி.. உங்க Voting Technique ஐயும் படித்தேன். Anyways, எனக்கு கதை பிடித்திருந்தது. வாழ்த்துக்கள்..

உண்மை said...

சூப்பர் கதை.

சோ.மஹாலெட்சுமி said...

யோசிப்பவரே,

இப்ப தான் உங்களோட கதைகளை படிக்கும் வாய்ப்பு கிட்டியது..
உங்களோட கதையை படிச்சு ரெண்டு நாளாகுது..
உடனே Comment எழுதணும்னு நினைத்தேன்.. ஆனால் முடியலை..மற்றும் கதையும், கதையை நினைத்து எனக்குள் தோன்றிய கேள்விக்கனைகளும் எனக்குள் தலை சுற்றலையும் ஒரு மலைப்பையும் ஏற்படுத்திவிட்டன..

இப்பவெல்லாம் எங்கேயாவது 'யோசி'ங்கிற வார்த்தையைக் கேட்டா உடனே என் கண்முன்னாடி கானல்நீராக வந்து போபவைகள் பச்சை நிறத்தில் ஒளிரும் உங்கள் முகமும், இந்த கதையும் தான்..

தெரியாமதான் கேட்குறேன்... உங்களுக்கு கொஞ்சம் கூட கூச்ச, நாச்சமே கிடையாதா...
ஏன்.?... ஏன்...இப்ப‌டியெல்லாம் யோசிக்கிறீங்க..?.
நீங்களும் என்னை மாதிரி மனுஷ ஜென்மம் தானே..?... ஏன் என்னை மாதிரி யோசிக்காம இருக்கக்கூடாது.??.
என்னை மாதிரி யோசிக்காம இருக்க முயற்சி பண்ணவேணாம் at least யோசிச்சாவது பாருங்களேன்..

முடியலீங்க... உங்களோட இந்தக் கதையை படிச்சுட்டு, என் ரெண்டு கன்னத்தையும் என் இரு உள்ளங்கைகள் அழுத்தி, என் முகத்தை ஆதங்க முகமாக, பெருமூச்சு விடும் முகமாக மாற்றி, ஏன் நீ மட்டும் இப்படியெல்லாம் யோசிக்கமாட்டேங்கிற என்று எனைப் பார்த்து கேட்டன உங்கள் கதையை படித்த என் பொறாமைக் கண்கள்..

இப்படி over-a யோசிக்கிறவரோட கதைகளை படிச்சு சூடுதாங்காம எதாவது ஆகிவிடப் போகிறது உன் மூளைக்கு.. எதற்கும் உஷாராய் இரு என்று எச்சரிக்கிறது என் ஒரு மனது..

வேண்டாம்பா.. இவுங்கள மாதிரி ஆளுங்க சகவாசம் நமக்கு.. என்று எனைக் கட்டி அணைக்கிறது உங்கள் கதையை படித்து உதடு பிதட்டி, மலைத்து, கூனிக் குறுகி நிற்கும் என் பரிதாப நிலையைக் கண்ட என் இன்னொரு மனது.

Finally, Hats Off to you.!.
Very Good Keep it up!..
இனி கதையைச் சார்ந்த எனது commentsக்கு போலாம் வாங்க..

1. வீணடிக்கக்கூடாத காலத்தையே கடக்க கூடிய மிகப்பெரிய கண்டிபிடிப்பான Time Travel machine-i கண்டிபிடிச்ச சந்தோஷ், அதனோடு Lock and Key control-ஐ இணைக்க மறந்ததை நினைத்தால் தான் ரொம்ப வருத்தமா இருக்கு.. அவன் காரை Lock பண்ணியிருந்தா பிரச்சனையே இல்ல..இல்லீங்க...
..ம்..ஆனைக்கும் அடி சறுக்குமென்று சும்மாவா சொல்லி இருக்காங்க.. என்ன ஆனைக்கு அடி சறுக்கினா அந்த இடம்தான் அதிரும், ஆனா இங்க இவன் செஞ்ச ஒரு சின்ன தப்பால உலகமே கிட்டத்தட்ட 3200ல் அழியப்போகுதுன்னு நினைக்கும் போதுதான் பொறுக்க முடியல.. மனசு ரொம்ப வலிக்குதுங்கோ..

2. கதையில சந்தோஷ் அந்த ரிசப்ஷனிஸ்ட் கிட்ட ஏன் வெப்பமா இருக்குன்னு கேட்குறப்ப, அந்த பொண்ணு விளக்குறப்ப என் முந்திரிக்கொட்டை மூளை வெப்பத்த தணிச்சிக்கிறதுக்கு ஏதாவது cooler மாதிரி set பண்ண ஒரு ஆடையோ அல்லது machine-O சொல்லும்னு நினைத்தேன்.. ஆனா அந்த பொண்ணு கொஞ்சம் மாறுபட்டு ஒரு Different-ஆ filter-னு சொல்லிடுச்சு.. அங்க என் முந்திரிக் கொட்டை மூளை ஏமாந்துடுச்சுங்கோ..

3. அவசரக்காரனுக்கு புத்தி மட்டுங்க..
இந்த சந்தோஷ் பையனதானுங்க சொல்றேன்..
அவன் இருக்குறது 3000ல ... அப்படின்னா அந்த காலம் வரையிலும் நடந்துருக்குற விஷயமெல்லாம் நடந்துருச்சு.. அதனால தானே அவனோட பெயரும் கண்டுபிடிப்பும் கல்வெட்டா 3000லயும் நிலைத்து நிற்குதான்னு பார்க்க வந்தான்..
முட்டாள் பய.. இவனையெல்லாம் வச்சுகிட்டு என்ன பண்ணுறதுன்னு என் மனசு கடந்து சுடுதண்ணிய ஊத்திகிட்ட காலாட்டம் பல்ல கடிச்சுகிட்டு துடிக்குதுங்க..
சரி, நடந்ததை மாத்துறதுங்கிறது கடினம்.. ஒழுங்கா இந்த 3000ல இருக்கிற மனுஷங்க கிட்ட போயி "அய்யாக்களே, அம்மாக்களே Time Travel Car-i கண்டிபிடிச்சது நான் தான் .. ஆனால் அத திருடி இந்த ராஜீவ் பயல் அவனோடதுன்னுட்டான்.. நடந்ததுக்காக உங்க கிட்ட நான் நியாயம் வாங்கித்தாங்கன்னு கேட்க வரலை, இப்ப இருக்குற Time travel car ரொம்ப ரேடியோ ஆக்டிவ் தனிமத்தை வெளியில கக்குது..அதனால தான் பூமி இவ்வளவு வெப்பமாகுது.. நீங்க உதவினா அத நான் வேறு விதமா, பழைய படி வடிவமைத்து தாரேன்.. இந்த உலகத்தை இன்னும் இரு நூற்றாண்டுல அழிய விடாம பல நூற்றாண்டுகள் வாழ வைப்போம் வாருங்கள்.. please..." அப்படின்னு கொஞ்சம் புத்திசாலித்தன முடிவெடுத்துருக்கலாமுல்ல..
..ம்.. கடவுளே, காசிநாதா.. நான் மட்டும் கடந்து தவிச்சு என்ன பண்ணுறது..

.. நடந்தது நடந்து போச்சு...ம்.. என்ன சொல்லி என்ன ஆகப்போகுது...

4. ஏனுங்க இந்த கார்கோ பய என்ன கடவுளுங்களா.. அவனுக்கு எப்படிங்க எல்லாம் தெரிஞ்சுது.. இந்த சந்தோஷப் பத்தின வம்சா வலியெல்லாம் அவன் டைரியில எழுதி வச்சுருக்கான், சந்தோஷ் பயலுக்கு உண்மை தெரிஞ்சா கார்‍ஐ கண்டிப்பா அழிச்சிருவான்னு தெரிஞ்சு வச்சுருக்கான்.. சந்தோஷோட friend தான் ராஜீவ்னு தெரிஞ்சு வச்சுருக்கான்.. 3000ல இருக்குறவன் Time travel carல் travel பண்ணாதவன் எப்படிங்க 2016ல் என்ன நடக்குது.. 2063ல் என்ன நடக்கணும் எல்லாம் தீர்மானிச்சுருக்கான்... பெரிய ஆளுங்க அந்த மொட்டையன்..

5. இந்த பொய் படம் பார்த்துருக்கீங்களா.. ஒரு கதாநாயகனை அறிமுகம் செஞ்சு அவனை பத்தி சொல்லி, அவனுக்குன்னு பிரச்சனைகளை உருவாக்கி, அவனை நாடு கடத்தி, அவனுக்குள் காதலை வரவைத்து, அந்த காதலில் பிரச்சனையை உருவாக்கி, பின் ஜெயிக்க வைத்து, கடைசியில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் விளையாட்டாய் கூறிய ஒரு குட்டி பொய்யினால் அந்த காதல் ஜோடியை அழித்துவிட்டு கதையை அவ்வளவு நேரம் உக்காந்து பார்த்த நமக்குன்னு விதியா வந்த பிரகாஷ்ராஜீ சொல்லுவாரு "தீதும் நன்றும் பிறர் தர வாரா"ன்னு..
அந்த மாதிரி இருக்கு உங்க "விதி வழி மதி"..!!!.

6. ஏனுங்க 2016ல் இருக்குற ஒருத்தன் 3000ல் enterஆகுறதுக்கு எதுவும் gate pass வேணாமுங்களா..
ஒருத்தன் Time Travel car மூலியமா 2016லிருந்து 3000க்கு போயிட்டு திரும்புறான்னா, அப்ப நம்ப எதிர்காலம் என்பது நிகழ்காலமாகவும், நமது நிகழ்காலம் இறந்தகாலமாகவும் ஓடிக்கொண்டுள்ளது .. இல்லீங்களா..
இவையெல்லாம் நடந்து கொண்டிருப்பது பூமின்னு சொல்ல முடியாது இல்லீங்க..ஏன்னா நம்ப தான் ஏற்கனவே பூமியை சுத்தி வந்து கூறு போட்டு நாடுகளாவும், கண்டங்களாவும், இன்னும் பலவாவும் பிரிச்சுட்டோமே..
So நம்ப பூமி மாதிரியே பல பூமிக்கள் வெவ்வேறு காலங்களில் இயங்கிக்கொண்டு உள்ளனவோ.. அப்ப நம்பளோட clonings பல ஒவ்வொரு பூமியிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, செத்துக் கொண்டிருக்கின்றன.. அப்படி தானுங்களே..
அடேங்கப்பா நினைத்தாலே ரொம்ப ஆச்சர்யமா இருக்குங்க..

ஆனாலும் இது சம்பந்தமா எனக்குள்ள பல கேள்விகள்ங்க .. நல்ல காலம், நீங்க என் பக்கத்தில் இல்லாம போயிட்டீங்க.. இல்லனா கேனத்தனமா நான் கேட்குற கேள்வில வெறுத்து போயி ஏன்டா இந்த கதையை எழுதினோம்னு நினைச்சுருப்பீங்க..

உங்களோட இந்த அறிவியல் பூர்வமான இந்த கதை நன்றாக இருப்பினும், பிற்காலத்தில் இது போன்ற உண்மைகள் நடப்பதிற்கான முன் எதிரொலியாக உங்கள் கதையை நினைக்கத் தோன்றினாலும், எனக்குள் உருத்திக் கொண்டிருப்பதும், என்னை நிந்திப்பதும் "கேப்பையில நெய் வடியிதுன்னா கேப்பாருக்கு எங்க போச்சு புத்தி" என்பதே...

யோசிப்பவர் said...

மஹாலட்சுமி,

//இப்ப தான் உங்களோட கதைகளை படிக்கும் வாய்ப்பு கிட்டியது..
//

கதைகளைப் பொறுமையாக படித்ததற்கு நன்றி. எல்லா கதைகளையும் படித்துவிட்டீர்களா?


//கண்முன்னாடி கானல்நீராக வந்து போபவைகள் பச்சை நிறத்தில் ஒளிரும் உங்கள் முகமும், இந்த கதையும் தான்..
//

இங்கே கிளிக் செய்து பாருங்கள். ரோஸ் நிறத்தில் ஒளிரும் முகம் தெரியும்!!!;-))


// ஏன் என்னை மாதிரி யோசிக்காம இருக்கக்கூடாது.??.
என்னை மாதிரி யோசிக்காம இருக்க முயற்சி பண்ணவேணாம் at least யோசிச்சாவது பாருங்களேன்..//

முடியலையே!!;-))


//எதற்கும் உஷாராய் இரு என்று எச்சரிக்கிறது என் ஒரு மனது..//

உங்களுக்கு எத்தனை மனது?!?!;-))

//அதனோடு Lock and Key control-ஐ இணைக்க மறந்ததை நினைத்தால் தான் ரொம்ப வருத்தமா இருக்கு.//
Lock and Key control சமாச்சாரங்களெல்லாம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ். ஒரு கண்டுபிடிப்பின் முதல் மாடலிலேயே, இவையெல்லாம் இருப்பதில்லை.


// ஒழுங்கா இந்த 3000ல இருக்கிற மனுஷங்க கிட்ட போயி "அய்யாக்களே, அம்மாக்களே Time Travel Car-i கண்டிபிடிச்சது நான் தான் .. ஆனால் அத திருடி இந்த ராஜீவ் பயல் அவனோடதுன்னுட்டான்.. நடந்ததுக்காக உங்க கிட்ட நான் நியாயம் வாங்கித்தாங்கன்னு கேட்க வரலை, இப்ப இருக்குற Time travel car ரொம்ப ரேடியோ ஆக்டிவ் தனிமத்தை வெளியில கக்குது..அதனால தான் பூமி இவ்வளவு வெப்பமாகுது.. நீங்க உதவினா அத நான் வேறு விதமா, பழைய படி வடிவமைத்து தாரேன்.. இந்த உலகத்தை இன்னும் இரு நூற்றாண்டுல அழிய விடாம பல நூற்றாண்டுகள் வாழ வைப்போம் வாருங்கள்.. please..." அப்படின்னு கொஞ்சம் புத்திசாலித்தன முடிவெடுத்துருக்கலாமுல்ல..
//

அப்படியெல்லாம் சொன்னா, அவனை ஒரு பைத்தியக்காரனை பார்ப்பது போல்தான் பார்த்திருப்பார்கள்!!


//Time travel carல் travel பண்ணாதவன் எப்படிங்க 2016ல் என்ன நடக்குது.. 2063ல் என்ன நடக்கணும் எல்லாம் தீர்மானிச்சுருக்கான்... பெரிய ஆளுங்க அந்த மொட்டையன்..
//

அவன் டைம் டிராவல் பண்ணாதவன் என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்? அவன் தான், அந்த கண்டுபிடிப்பில் மாறுதலை உண்டு பண்ணியவன். அப்படியிருக்கும்பொழுது, அவன் ஏன் டைம் டிராவல் பண்ணியிருக்க கூடாது?


//5. இந்த பொய் படம் பார்த்துருக்கீங்களா.. //
நான் பார்க்கவில்லை.


//உங்களோட இந்த அறிவியல் பூர்வமான இந்த கதை நன்றாக இருப்பினும், பிற்காலத்தில் இது போன்ற உண்மைகள் நடப்பதிற்கான முன் எதிரொலியாக உங்கள் கதையை நினைக்கத் தோன்றினாலும், எனக்குள் உருத்திக் கொண்டிருப்பதும், என்னை நிந்திப்பதும்//

கால இயந்திரம் என்ற ஒன்று சாத்தியமானால், இதுவும் சாத்தியம்தான்.


//"கேப்பையில நெய் வடியிதுன்னா கேப்பாருக்கு எங்க போச்சு புத்தி" என்பதே...//
//
கேப்பையில் நெய் வடியும்! நீங்கள் பார்த்ததில்லையா!!;-)))