Thursday, September 07, 2006

எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?

"இந்த வண்டியிலா?", அவள் கண்களை அகல விரித்து கேட்டாள்.

"ஆமாம். இந்த வண்டியில்தான் வேண்டும்."

"நான் பதினெட்டு இருபத்திமூன்றுக்கு போய் கொண்டிருக்கிறேனே..."

"என்னை கொஞ்சம் இருபது பதினாறில் இறக்கி விட்டு விடுங்களேன், ப்ளீஸ்!"

ஒரு கணம் யோசித்தாள். "சரி வாருங்கள்."

'அப்பாடா' என்று ஏறிக் கொண்டேன்.

"உங்கள் பெயர்?"

"சந்தோஷ்"

"உங்களுடைய நிகழ்காலமே இருபது பதினாறுதானா?"

"ஆமாம்."

"உங்களுக்கு ஒன்று தெரியுமா? அதே இருபது பதினாறில்தான், இந்த டைம் டிராவல் வண்டி கண்டு பிடிக்கப்பட்டது. ஆனா ஸ்கூல்ஸிலெல்லாம் இருபது அறுபத்தி முன்றுன்னுதான் சொல்லி தருவாங்க." நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

"இருபது பதினாறுன்னு உங்களுக்கு மட்டும் எப்படி தெரியும்?", மெதுவாக கொக்கி போட்டேன்.

"எனக்கு இந்த மாதிரி பழைய விஷயங்களை தோண்டி பார்ப்பதில் ரொம்ப இன்ட்ரெஸ்ட். எனக்கு மட்டுமில்லை, இன்னும் சில பேருக்கும் தெரியும். இப்பக் கூட.."

"வார்ம் ஹோல் நெருங்கி விட்டது. டைமரை செட் பண்ணுங்க. செப்டம்பர் ஆறு, மதியம் இரண்டரை"
"உங்க பெயரை சொல்லவே இல்லையே?”

"வர்ஷிதா"

"உங்களோட நிகழ்காலத்தில் இந்த பெயர் ரொம்பத் தேவைதான்."

ஒரு வினாடி என்னை நிமிர்ந்து பார்த்தவள், "அதற்கு காரணம் உங்களுக்கு தெரியுமா?"

"தெரியும்."

வார்ம் ஹோலுக்குள் வண்டி நுழைந்தது.

"நன்றி. லிஃப்ட் கொடுத்ததற்கு."

"பரவாயில்லை. ஸீ யூ ஸூன். பை". வண்டி போய் விட்டது.

சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்தேன். சாலிகிராமம். நான் நுங்கம்பாக்கம் போக வேண்டும். பேன்ட் பாக்கெட்டில் எப்பொழுதோ சில்லறை வாங்கிய ஒரு ரூபாய் இருந்தது. நுங்கம்பாக்கத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.


------------------------><---------------------

நான் சந்தோஷ். சென்னையில் ஒரு பெரிய ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. வேலை அதிகம் கிடையாது. அதனால் எனக்கு மற்ற விஷயங்களுக்கு நிறையவே நேரம் கிடைத்தது. மற்ற விஷயங்கள் என்றால்...ஆராய்ச்சி செய்வதற்கு. எனது ஆராய்ச்சி எதை பற்றியதென்று அப்புறம் சொல்கிறேன். முதலில் எனது ஆராய்ச்சி குறிப்புகளை அழிக்க வேண்டும். எல்லாம் இந்த ராஜீவால் வந்த வினை. ஸாரி. வரப்போகும் வினை. ராஜிவ், எனது நண்பன், பணக்காரன், சொந்தமாக சிறிய அளவில் ஒரு ஹார்ட்வேர் கம்பெனி வைத்திருக்கிறான். அதனால் எனது அராய்ச்சிக்கு தேவைப்படும் சின்னச் சின்னக் கருவிகளை அவ்வப்பொழுது செய்து தந்தான். எனது அராய்ச்சி வெற்றி அடைந்ததற்க்கு அவன் ஒரு முக்கிய காரணம். ஆமாம், எனது ஆராய்ச்சி வெற்றி அடைந்து விட்டது. உலகம் அழிவை நோக்கி காலடி எடுத்து வைத்துவிட்டது. எல்லாம் எனது புதிய கண்டுபிடிப்பினால். இன்று காலைதான் எனது கண்டுபிடிப்பு முழுமையடைந்தது. உலகின் முதல் டைம் ட்ராவல் மெஷின்.

டைம் ட்ராவல் சம்பந்தமாக, இவ்வளவு நாட்களும் விஞ்ஞானிகளுக்கு தண்ணி காட்டி கொண்டிருந்தது முக்கியமாக இரண்டு விஷயங்கள். கால வெளியில் பிராயணம் செய்ய வேண்டுமென்றால், ஒளி வேகத்துக்கு இணையான வேகத்தில் பிராயணிக்க வேண்டும். அப்படி பிராயணம் செய்ய ஒரு பாதை வேண்டுமே, அந்த பாதைகள் புழுத்துளைகள்(வார்ம் ஹோல்ஸ்) என அழைக்கப்படும் மிக மிக நுண்ணிய குழாய் பாதைகள். அப்படிப்பட்ட மிக நுண்ணிய வார்ம் ஹோல்ஸ்(புழுத்துளைகள்), இந்த பேரண்டத்தில் பல கோடிக்கணக்கிலிருக்கின்றன. அதற்குள் உங்களின் முடி கூட நுழையாது. அதற்குள் ஒரு உயிரையும், அந்த உயிரைக் கடத்தும் ஒரு வண்டியையும் நுழைத்து, அதையும் ஒளி வேகத்துக்கு இணையான வேகத்தில் அனுப்ப வேண்டும்.

நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகளுக்கு சவால் விட்ட இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் பத்து வருட போராட்டத்துக்கு பின் சென்ற வருடம், தீர்வு கண்டுபிடித்தேன். தீர்வை செயல்படுத்தி பார்க்காமல் உலகுக்கு அறிவிக்க விரும்பவில்லை. கடந்த ஒரு வருடமாக இந்த மெஷினை உருவாக்குவதிலேயே எனது நேரம் கழிந்தது. ராஜீவுக்கு நான் டைம் டிராவல் மெஷின் தான் செய்து கொண்டிருக்கிறேன் என்பது தெரியாது. ஏதோ ஹை-ஸ்பீட் எலெக்ட்ரனிக் கார் உருவாக்கி கொண்டிருக்கிறேன் என்று நினைத்து கொண்டிருக்கிறான்(கிருந்தான்).

இன்று காலை பத்து மணிக்கு, ஃப்யூவல் கம்பஸ்ஸன் சேம்பரின் உள்ளே பொருத்த வேண்டிய 'ZRD அனலைஸரை' பொருத்த ஆரம்பித்தேன். அதை உருவாக்குவதற்கு ராஜீவுக்கு ஆறு மாதம் பிடித்தது. அதை சேம்பரின் உள்ளே பொருத்தி முடிக்கும் பொழுது மணி ஒன்றரை. இதுதான் கடைசி வேலை. ZRD அனலைஸரை பொருத்தி முடித்ததும் எனக்குள் ஒரே பரபரப்பு. உடனே மூவாயிரத்துக்கு ஓடி விடலாமா? மூவாயிரத்துக்கு போவதென்று முடிவு செய்து விட்டேன்.

நான் உருவாக்கிய உலகின் முதல் டைம் டிராவல் வண்டிக்குள் ஏறி கன்ட்ரோல் பேனலின் முன் அமர்ந்தென். அது ஒரு கார் போலதான் இருக்கும். இங்கிருந்தே கிளம்ப முடியாது. அவுட்டருக்கு போனபின் தான் வேகமெடுத்து வார்ம் ஹோலுக்குள் நுழைய முடியும். பெங்களூர் ரோட்டை நோக்கி வண்டி போக ஆரம்பித்தது.

இதுதான் சரியான இடம். கிளம்ப வேண்டியதுதான்.

டைமரில் 08 : செப்டம்பர் : 3000 : 02 : 30 : 00 : 000 என்று செட் செய்தேன். எனது வாட்சில் மணி பார்த்தேன்.

2:29:30.

வண்டி வார்ம் ஹோலுக்குள் நுழைந்தது.

உண்மையிலேயே மூவாயிரமா? லேசான உதரலுடன் மெஷினில் இருந்த வாட்சை பார்த்தேன்.

08 : செப்டம்பர் : 3000 : 02 : 30 : 22 : 123
08 : செப்டம்பர் : 3000 : 02 : 30 : 22 : 746
08 : செப்டம்பர் : 3000 : 02 : 30 : 23 : 097
என்று ஓடி கொண்டிருந்தது.

டக்! டக்! ஜன்னலில் யாரோ ஒருவன் தட்டினான். திறந்தேன்.

"எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?"

- தொடரும்

4 comments:

ஆதவன் said...

என்னய்யா இப்படி பாதியிலேயே நிறுத்தி விட்டீர்கள்??

பொன்ஸ்~~Poorna said...

ஆமாம்.. பாதியில் நிறுத்தியது போல் தான் இருக்கு.. முடிவடையவில்லை.. அந்தப் பெண்ணிடம் லிப்ட் கேட்குமளவுக்கு உங்களுக்கும் உங்கள் வாகனத்துக்கும் என்னாச்சு என்பதைக் கடைசியில் சொல்லி இருக்க வேண்டும்..

யோசிப்பவர் said...

ஆதவன், பொன்ஸ்,
'தொடரும்' போட்டிருக்கிறேனே. அவசரப்பட்டால் எப்படி?

பழூர் கார்த்தி said...

அறிவியல் புனைவுகள் சுவாரஸ்யம்.
வாழ்த்துக்கள் !!

***

"அதே இருபது பதினாறில்தான்,
இந்த டைம் டிராவல் வண்டி கண்டு பிடிக்க பட்டது." போன்ற வரிகளால் யோசிக்க வைக்கிறீர்கள்.

***

விறுவிறுப்பாக செல்லும் கதை, அடுத்த பாகங்களையும் எதிர்பார்க்க வைக்கிறது.

***

போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை இங்கே
பாருங்கள்