Monday, September 18, 2006

எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?

==============================
முன்கதை - ஒன்று, இரண்டு
==============================

அவள் என்னை பாவமாக பார்த்தாள்.

"சரி! நீங்கள் போங்கள். நான் அடுத்ததில் வருகிறேன்". வெளியே வந்து விட்டாள்.

'அப்பாடா!'. உள்ளே நுழைந்து இருபத்தி எட்டை தடவினேன். முப்பதாவது வினாடி கதவு திறந்து கொண்டது.

மூன்றாவது அறை, நான்காவது ஸ்லாட், ரேக் இருபது. வரிசையாக

'Journey of Time Travel'
'A way into Time'
'History of Time'
.
.
.
.
'கால வெளியும் மனித முன்னேற்றமும்'
'ராஜீவின் பார்வையில் காலவெளி'

அந்த புத்தகத்தை உருவினேன். அட்டையில் ஒரு கிழவரின் படம். ராஜீவின் சாயலில் இருந்தார்.

"முன்னுரை - மனிதன் காலத்தை அளக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே, காலவெளியை கடப்பது பற்றி கனவு காண ஆரம்பித்துவிட்டான். ஆனால் அது பல கோடி நுற்றாண்டுகளாக வெறும் கனவாகவே இருந்தது. அந்த கனவுக்கு மீண்டும் உயிர் கொடுத்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879 - 1955). ஆனால் ஐன்ஸ்டீன் ஒரு கோடி மட்டுமே காட்டினார். அதை பற்றி கொண்டு பின்னால் வந்த மாக்ஸ் ஜாமர் போன்றவர்கள் பற்பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, கால வெளி பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்தினர். ஆனாலும் அவையெல்லாம் வெறும் அனுமானத்தினாலும், ஒப்பீட்டு ஆராய்ச்சிகளினாலும் அமைந்த கொள்கைகளாக மட்டுமே இருந்தன. அந்த கொள்கைகளுக்கு வடிவம் கொடுக்க மேலும் நூறாண்டுகள் பிடித்தது. ஒரு வழியாக 2063இல் கால வேளி பயணத்துக்கு வடிவம் கொடுத்தார் ராஜீவ். 2032இல் பிறந்த ராஜீவ் தொடர்ந்த பத்து வருட ஆராய்ச்சிக்கு பின் 2063இல் கால வெளி பயண வாகனத்தை உருவாக்கினார்...."

'என்னது, ராஜீவ் கண்டுபிடித்தானா? அறுபத்தி மூன்றிலா?ஒரு வேளை ராஜீவ் என்னை ஏமாற்றி விடுவானோ? அப்படியானாலும் டைம் டிராவல் வண்டியை உருவாக்க அவனுக்கு ஏன் இத்தனை வருடம் பிடித்தது? ஒரு வேளை நான்???' அதை நினைத்து பார்க்க பயமாய் இருந்தது.

'Journey of Time Travel'ஐ எடுத்து அவசரமாக புரட்டினேன். அதிலும் ராஜீவ்தான். 'A Way into Time', 'History of Time' எல்லாவற்றிலுமே ராஜீவ் மட்டும்தான். என் பெயர் எதிலுமே மருந்துக்கு கூட இல்லை.

'கூடாது! ராஜீவிடம் இனியும் ஏமாற கூடாது! உடனடியாக நான் திரும்பி போய்..,' 'காலவெளி ஊர்தியென்னும் காலன்' அந்த சிறு புத்தகம் என் கண்ணில் பட்டது. அதை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

சுமாரான எழுத்தாளர். விஷயங்கள் அவ்வளவு விரிவாக இல்லை. அந்த புத்தகத்தின் சாராம்சம் இதுதான். ராஜீவ் உருவாக்கிய டைம் டிராவல் வண்டியை பிற்பாடு 2106இல் கார்கோ என்பவன் மாற்றியமைத்துள்ளான். ராஜீவ் உருவாக்கிய டைம் டிராவல் வண்டி - அதாவது நான் கண்டுபிடித்தது ஒளி வேகத்துக்கு சற்று குறைவான வேகத்தில்தான் செல்லும். அதனால் பயன நேரம் கால வெளியின் தொலைவை பொறுத்து, 100 மைக்ரோ செகன்டிலிருந்து, சில வினாடிகள் வரை இருக்கும். ஆனால் கார்கோ பயன நேரம் என்பதே இல்லாமல் அடித்து விட்டான். ஒளி வேகத்தை கொடுத்து விட்டான். அதற்காக அவன் கால வெளி வண்டியில் ஒரு மாற்றம் செய்தான். நான் எனது வண்டியில் ஃயூவலாக உபயோகப்படுத்தியது HF312 என்னும் சாதுவான ரேடியோ ஆக்டிவ் தனிமம். அதனால் மனிதனுக்கோ மற்ற உயிர்களுக்கோ, பாதிப்பு ஒன்றும் இல்லை. ஆனால் கார்கோ உபயோகப்படுத்தியது EL245 எனும் தனிமம். இதை பற்றி நான் கேள்வி பட்டதேயில்லை. புத்தகத்தின் ஆசிரியர், இந்த தனிமம் வெளிப்படுத்தும் ரேடியோ ஆக்டிவ் கழிவினால் பூமியின் வெப்பம் அதிகரித்து விட்டது. மேலும் காற்றில் ரேடியோ ஆக்டிவ் தன்மை மிகுந்து, மனிதர்கள் வெளியில் சாதாரணமாக நடமாடமுடியாதபடி செய்து விட்டதாக எழுதிருந்தார்.

எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது. எனது டிஸைனில் கழிவே கிடையாது. ஒளி வேகத்தை அடைய வேண்டுமென்றால் மிக வேகமாக ரேடியோ ஆக்டிவிட்டியால் அழியும் தன்மை கொண்ட தனிமத்தை உபயோகிக்க வேண்டும். எனது டிஸைனில் ஒரு வினாடிக்கு ஒரு கிலோ HF312 அழியும். மேலும் HF312இல் ஒரு வசதி என்னவென்றால், கழிவை கொண்டு மீண்டும் HF312ஐ உருவாக்கலாம். அதற்கு எனது டிஸைனில் தனி சேம்பர் உண்டு. அதனால் கிடைக்கும் லாபம் கம்மிதான் என்றாலும், கழிவு வெளியேறாது.
கார்கோவின் டிஸைன் எப்படியிருக்கிறதென்று பார்க்க வேண்டும்.

டெக்னிக்கல் விஷயங்கள் முப்பத்தி மூன்றாவது மாடியில் ஐந்தாவது அறை என்று அந்த பெண் சொன்னது ஞாபகம் இருந்தது. திரும்பவும் லிஃப்ட்டுக்காக காத்திருக்காமல் ஐந்து மாடிகள் படியேறியே போய் விட்டேன். ஐந்தாவது அறையில் - 'எந்த ஸ்லாட்?'; ஒவ்வொன்றாக பார்த்து கொண்டு வந்தேன். எட்டாவது ஸ்லாட்டின் தலையில் 'Time Travel' என்று போட்டிருந்தது. மொத்தம் பத்து ரேக்குகள் இருந்தன. முதல் ஐந்து ரேக்குகளில் நான் தேடியது கிடைக்கவில்லை. ஆறாவதில் 'Cargo Over Rajiv' என்ற புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

ராஜிவ் டிஸைன் அப்படியே எனது டிஸைனை ஒத்திருந்தது. கார்கோவின் டிஸைனில் ஃப்யூவல் டாங்கின் அளவு பெரியதாக இருந்தது. ஃயூவல் ரீசைக்கிளிங் சேம்பர் இல்லவேயில்லை. 'அடப்பாவி!'. மேலும் அவன் உபயோகப்படுத்திய EL245 ஒரு வினாடிக்கு 50 கிலோ அழியும். கழிவை அப்படியே காற்றில் கலக்கும்படி டிஸைன் பண்ணியிருந்தான்.

எனக்கு தலை சுற்றியது. வினாடிக்கு 50 கிலோ அழிந்தால், கழிவு குறைந்த பட்சம் இரண்டு கிலோ இருக்கும். வினாடிக்கு இரண்டு கிலோ ரேடியோ ஆக்டிவ் கழிவு காற்றில் கலக்கிறது. ஒன்பது நூற்றாண்டுகளாக வெளியேறிய கழிவுகளினால், காற்றுவெளி முழுக்க இப்பொழுது கெட்டுவிட்டது. இதன் உக்கிரம் இன்னும் அதிகமானால், இந்த பூமி இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு கூட தாங்காது.

அப்படியே அங்கு உட்கார்ந்து விட்டேன். எனக்கு என்ன செய்வதென்றே புரிய வில்லை. எனது கண்டுபிடிப்பால் விளையப் போகும் அழிவை என்னால் நினைத்து பார்க்கவே முடியவில்லை. இதை எப்படியாவது தடுத்தாக வேண்டும். எப்படி?

அரைமணி நேரம் யோசித்ததில், 'இப்படி ஒரு கண்டுபிடிப்பே நடக்கவில்லையென்றால்? ராஜீவும் எனது ஆராய்ச்சி குறிப்புகளை ஆதாரமாக வைத்துதானே இதை உருவாக்கியிருப்பான். அந்த குறிப்புகளே இல்லாமல் செய்து விட்டால்? உடனே அவற்றை அழிக்க வேண்டும். உடனே நான் திரும்பி போக வேண்டும்.'

அந்த பெண் கொடுத்த ஃபில்டரை அணிந்து கொண்டு லைப்ரரியை விட்டு வெளியே வந்தேன். இப்பொழுதும் சூடாகத்தான் இருந்தது. சமாளிக்க முடிந்தது.
ஐயையோ! என் வண்டியை காணவில்லை!!. சுற்றிலும் பார்த்தேன். எனது வண்டியை தவிர எதேதோ வண்டியெல்லாம் நின்றது. அதை காணவில்லை.

கையருகில் மிகவும் சுட ஆரம்பித்தது. அவள் கொடுத்த ஃபில்டர் கைப்பக்கத்தில் இளக ஆரம்பித்திருந்தது. 'இது வேறயா?'. லைப்ரரி காம்பவுண்டிலிருந்து அவசரமாக வெளியேறி, ரோட்டிற்கு வந்தேன்.

தூரத்தில் ஒரு சிவப்பு வண்டி வருவது தெரிந்தது. அந்த மாடலை பார்த்ததுமே அது டைம் டிராவல் வண்டியென்று எனக்கு புரிந்து விட்டது. எனது வண்டியை தேட இப்பொழுது நேரமில்லை. கை எரிவது போல் இருந்தது. தலை பக்கமும் சுட ஆரம்பித்தது. அந்த வண்டி நெருங்கி விட்டது. கை காட்டி நிப்பாட்டினேன்.

வண்டியின் ஜன்னலில் வர்ஷிதாவின் முகம் தெரிந்தது.

"எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?"

-தொடரும்.

No comments: