Wednesday, September 13, 2006

எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?

==============================
முன்கதை - ஒன்று
==============================


முடியாது என்று சொல்லிவிட்டு போய் விடலாமா என்று யோசித்தேன்.

ஆனால் எனக்கும் அப்பொழுது வழி காட்ட யாராவது தேவை.

"வாங்க"

"எந்த வருடத்துக்கு போகிறீர்கள்?"

எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமாய் இருந்தது. எப்படி இது டைம் டிராவல் வண்டியென்பது இவனுக்கு தெரிந்தது?

"உங்களுக்கு இந்த வண்டியை பத்தி தெரியுமா?"

"தெரியுமே! நிறைய பணக்காரர்கள் வைத்திருக்கிறார்களே. ஆனால் விலை அதிகமல்லவா?
இது போன்று ஒன்று வாங்க வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை!!" அவன் தமிழ் கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது. காலவெளியில் இது சகஜம்தான்.

"நீங்க எங்கே போகனும்?"

"நான் தானே முதலில் கேட்டேன்."

"நான் இப்போதான் இங்கே வந்திருக்கேன். முதல்ல லைப்ரரிக்கு போகனும். ஆனா வழி தெரியலை"

"என்ன விதமான லைப்ரரி?"

எனக்கு கேள்வி புரியவில்லை. "புக் லைப்ரரிதான்!"

"இங்கே கோது சாலையில் சிட்டி புக் லைப்ரரி இருக்கிறது."

"கோது சாலை எவ்வளவு தூரம்?"

"அருகிலேதான். நான்கு என்.எல்"

"என்ன எல்?"

"என்.எல்."

"எத்தனை கிலோ மீட்டர் என்று சொன்னால் நல்லது!!"

"ஓ!" அவன் சட்டைப்பையிலிருந்து எதையோ தகடு போல் உருவி எடுத்தான். சில இடங்களில் அமுக்குவது போல் பாவனை செய்தான். "முப்பத்தி ஐந்து கிலோ மீட்டர். என்னையும் அங்கேயே இறக்கி விட்டு விடுங்கள். அங்கிருந்து நான் வேறு வண்டி பிடித்து கொள்கிறேன்."

அவனை கொஞ்சம் நிதானமாக பார்த்தேன். மேலிருந்து கீழ் வரை ஒரே துணியாக இருக்கமான உடை அணிந்திருந்தான். வெளியில் தெரிந்த தோல் பாகங்களில் ஒரு பள பளப்பு தெரிந்தது. தலையில் சுத்தமாக முடியில்லை. வெழுத்த நிறம். கண்கள் உள்ளடங்கியிருந்தன. உயரம் குறைவாகத்தான் இருப்பான். நாலடியிருந்தால் அதிகம். நான் ஓட்டி கொண்டிருந்த பொழுது கன்ட்ரோல் பேனலையே உற்றுப் பார்த்து கொண்டிருந்தான்.

"நீங்கள் இருபது பதினாறிலிருந்தா வருகிறீர்கள்?" பானலை பார்த்தபடியே கேட்டான்.

"ஆமாம்"

"உங்கள் பெயர்"

"சந்தோஷ்"

அதற்கப்புறம் கோது சாலை வரை எதுவும் பேசவில்லை. ஏதோ தீவிர சிந்தனையிலிருந்தான்.

"இங்கேதான்.. இதுதான் சிட்டி புக் லைப்ரரி. நான் இறங்கி கொள்கிறேன்."

வண்டியை வாசலுக்கு மிக அருகிலேயே பார்க் செய்து விட்டு இறங்கி நடந்தேன். வண்டியிலிருந்து இறங்கியவுடனேயே பயங்கர வெப்பம். முடியெல்லாம் பற்றி எரிவது போலிருந்தது. மயக்கம் வருவது போலிருந்தது. மயங்கி விழுவதற்குள் நல்ல வேளையாக லைப்ரரிக்குள் நுழைந்துவிட்டேன். உள்ளே நுழைந்ததும்தான் படபடப்பு குறைந்தது. சிறிது ஆசுவாசத்துக்குபின் ரிஷப்சன் போலிருந்த ஒரு செட்டப்பில் உட்கார்ந்திருந்த அந்த பெண்ணிடம் சென்றேன்.

"ஹாய்! எனக்கு டைம் டிராவல் மெஷின் சம்பந்தமாக சில தகவல்கள் வேண்டும்."

"எந்த மாதிரி தகவல்கள். டெக்னிக்கலாக வேண்டுமென்றால் முப்பத்தி மூன்றாவது மாடியில், ஐந்தாவது அறை, ஸ்லாட் எட்டில், ரேக் மூன்றிலிருந்து எட்டு வரைக்கும் புத்தகங்கள் உள்ளன."

"இல்லை. எனக்கு அதை பற்றி வரலாற்று செய்திகள் வேணும்." எனது பெயரை நானே வரலாற்றில் பார்க்க வேண்டாமா?.

"அப்படியானால் இருபத்தி எட்டாவது மாடியில் மூன்றாவது அறை. ஸ்லாட் நான்கு. ரேக் இருபது."

"வெளியே ஏன் இவ்வளவு வெப்பமா இருக்கு?"

தலையை தூக்கி பார்த்து, நமுட்டுச் சிரிப்புடன் "இறந்த காலத்திலிருந்து வருகிறீர்களா?"

"ஆமாம்"

"இந்த காலத்தில் அட்மாஸ்பியரில் ரேடியோ ஆக்டிவ் கதிர்கள் கிட்டத்தட்ட சம பங்கு கலந்திருக்கிறது. பின் வெப்பமாக இல்லாமல் என்ன செய்யும்? நீங்கள் ஒரு ரேடியோ ஆக்டிவ் ஃபில்டர் வாங்கி கொள்ளுங்கள். அப்பொழுதுதான் வெளியில் செல்ல முடியும்."

"எங்கிட்ட இப்போ பணம் இல்லை. வேணும்னா இந்த வாட்ச்சை வச்சுக்கிட்டு, உங்களோட ஃபில்டரை கொடுத்து உதவ முடியுமா? ப்ளீஸ்!!! எனக்கு எப்படியும் இப்படி ஒன்னு தேவை."

"என்னிடம் பழைய ஃபில்டர் ஒன்றுள்ளது. அதை வேண்டுமானால் தருகிறேன். ஆனால் அது கொஞ்சம் டேமேஜான நிலையில்தான் இருக்கிறது. அதிக நேரம் தாங்காது. பரவாயில்லையா?"

"சரி! அதையாவது கொடுங்கள்", ஒன்றுமில்லாததற்கு இதாவது கிடைக்கிறதே. அவள் உள்ளே உள்ள ஒரு அறைக்கு சென்று திரும்பினாள். திரும்ப வரும்பொழுது கண்ணாடி தாள் போன்ற ஒரு உடையை கொண்டு வந்தாள்.

"இதுதான் ஃபில்டரா?". எனக்கு ஃலிப்ட் கேட்டவனின் தோல் ஞாபகம் வந்ததது.

அதை வாங்கி கொண்டு, ஃலிப்டுக்கு போக திரும்பிய பொழுது, எனது வண்டி பக்கம் பார்த்தேன். ஃலிப்ட் கேட்ட அந்த ஆள் என் வண்டியருகே நின்று கொண்டிருந்தான். 'இன்னுமா இவன் போகலை?' யோசித்து கொண்டே 'LIFTS' என்று எழுதியிருந்ததை நோக்கி நடந்தேன்.

அங்கே குழாய் குழாயாக ஏகப்பட்டது இருந்தது. ஒரு குழாயில் ஒரு மனிதன் தாராளமாக நின்று கொள்ளலாம். இரண்டு பேர் இடித்து கொண்டுதான் நிற்க முடியும். ஒவ்வொரு குழாய்க்கும் சின்னதாக ஒரு வாசல். அவைதான் அங்கே லிஃப்டுகள் என்று புரிந்தது. ஒருவர் மட்டுமே போகக் கூடிய லிஃப்டுகள்.

என்னைப் போலவே சில பேர் நின்று கொண்டிருந்தார்கள். அது என்னமோ தெரியவில்லை, நான் எதிர்பார்த்து கொண்டிருந்த லிஃப்டுகள் மட்டும் கிரவுண்ட் ஃப்ளோருக்கு வரவே இல்லை. கூட நின்று கொண்டிருந்த ஐந்து பேரில் நாலு பேர் போய்விட்டார்கள். ஒரே ஒரு பெண் மட்டும் மிச்சமிருந்தாள்.

ஒரு லிஃப்ட் வருவது தெரிந்தது. ஆனால் நான் அந்த லிஃப்ட் அருகே போவதற்குள் அவள் நுழைந்து விட்டாள். பத்து நிமிடங்களுக்கு மேலாக நான் வெயிட் மட்டுமே பண்ணிக்கொண்டிருந்தேன். இவள் வந்து இரண்டு நிமிடத்தில் ஏறிவிட்டாளே. இனியும் நிற்க முடியாது. லிஃப்ட் கதவு சாத்துவதற்குள், கதவு இடைவெளியில் ஒரு காலை வைத்து கொண்டு,

"எக்ஸ்கியூஸ் மீ! பத்து நிமிஷமா வெய்ட் பண்றேன். கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?"

- தொடரும்

2 comments:

கோவி.கண்ணன் [GK] said...

ரொம்ப நாளாக ஆளைக் காணோமே ....!

நல்லா உட்கார்ந்து யோசிச்சி கிட்டே தேன்கூடு போட்டிக்கு கதை எழுதிக்கிட்டு இருந்தீர்களா ?
:)

யோசிப்பவர் said...

கோவி,
பந்தாவுக்காக சொல்லவில்லை. உண்மையிலேயே நேரம் இல்லை. நெசம்ம்ம்மா!!!!;)