Friday, September 21, 2007

ஃ என்பது ஆய்தம்

பண்பாடு - சிறுகதை

காலையில் கண்விழிக்கும் போது மணி எட்டாகி விட்டது. இன்று முதல் முறையாக ரம்யாவுடன் மார்னிங் ஷோ போவதாக பிளான். அதை நினைக்கும் போதே மனசுக்குள் குறு குறுவென்று இருந்தது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. அவசரமாக குளித்து முடித்து சாப்பிட்டு முடித்ததும், ரம்யாவிடமிருந்து அழைப்பு வந்தது.

"கார்த்தி, கிளம்பிட்டியா?" அவள் குரலிலும் பதட்டம் இருந்தது எனக்கு புரிந்தது.

"ம். நீ ரெடியாய்ட்டியா?" என்றேன்.

"ம். எப்ப வருவ?"

இன்னும் அரை மணி நேரத்தில் வந்து பிக் அப் பண்ணிக் கொள்வதாக சொல்லிவிட்டு, வண்டியைக் கிளப்பினேன். இதயம் துடிக்கும் வேகம் அதிகமாகிக் கொண்டே போனது. ஏன் இப்படி அடித்து கொள்கிறது? எப்படியென்றாலும் அவளை கல்யாணம் செய்யத்தானே போகிறேன். இதில் என்ன தவறு, என்றெல்லாம் மனசாட்சிக்கு சமாதானம் சொன்னாலும், தப்பு என்றும் சொல்லி கொண்டேயிருந்தது. போகாமல் இருந்து விடலாமா? அவசர வேலை வந்து விட்டது என்று ஃபோன் பண்ணி சொல்லிவிடலாம், என்றெல்லாம் மனதிலெழுந்த யோசனைகள் மிக மெதுவாகவே ஒலித்தன.

ஹாஸ்டல் அருகிலிருந்த பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தாள். என் தலையைப் பார்த்ததும் வேகமாக வந்து ஒன்றும் பேசாமல் ஏறிக் கொண்டாள். வண்டியை திரும்பவும் ஸ்டார்ட் செய்தபொழுது, அவள் முகத்தை ஷாலால் மறைத்துக் கொண்டது கண்ணாடியில் தெரிந்தது.

தியேட்டருக்குள் வந்து சீட்டில் அமரும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. சிறிது நேரத்தில் விளக்கு அணைந்தது. விளம்பர ரீல்கள் திரையில் ஓட ஆரம்பித்தன. படம் ஆரம்பிக்கவில்லை.

மெதுவாக அவள் கைகளைத் தொட்டுப் பார்த்தேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை.

"ஹாய் கார்த்திக்! என்ன அதிசயமா மார்னிங் ஷோ வந்திருக்கீங்க?!" பழகிய குரல் கேட்டதும் ரம்யாவில் கையிலிருந்து, எனதை வேகமாக விலக்கி கொண்டு திரும்பி பார்த்தேன்.

மோகன்! என்னுடன் வேலை பார்ப்பவர். எங்கள் டீமிலேயே அவருக்குதான் வயது அதிகம். ஏனோ கல்யாணம் செய்து கொள்ளவில்லை. ரொம்பவும் நேர்மைவாதி. அலுவலகத்திலிருந்து ஒரு குண்டூசி கூட சொந்த உபயோகத்துக்கு எடுத்துக் கொள்ள மாட்டார்.

ஆனால் அடுத்தவர் விஷயத்தில் அடிக்கடி மூக்கை நுழைப்பது அவர் பொழுதுபோக்கு. வாயைத் திறந்தால் ஒரே அட்வைஸ் மழைதான். சரியான ரம்பம். இன்னைக்கு பார்த்துதானா இவர், படத்துக்கெல்லாம் வரனும்.

"ஏ18 இதுதானே?" என்று கேட்டவாறே என் அருகில் அமர்ந்தார். ஏதோ சொல்ல வந்தவர், ஓரத்திலிருந்த ரம்யாவை பார்த்ததும் ஒரு விநாடி திகைத்தார்.

"கார்த்திக், உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா? என்கிட்ட சொல்லவேயில்லயே?"

"இல்லை, இவங்க என்னோட லவ்வர்" என்றேன்.

"ஓகோ!" என்றவர், "வீட்டுக்குத் தெரியுமா?"

"இன்னும் இல்லை" என்று சொல்லி கண்சிமிட்டினேன்.

சிறிது நேரம் பேசாமலிருந்தார்.

"கார்த்தி, சொல்றேனேன்னு நீங்க தப்பா எடுத்துக்க கூடாது. கல்யாணம் ஆகிறதுக்கு முன்னால வீட்டுக்குத் தெரியாம, இப்படி இந்த பொண்ணை கூட்டிட்டு வெளியே..." என்று இழுத்தார்.

எனக்கு கோபம் வந்தது. "என்ன சார் தப்பு? நான்தான் இவளை கல்யாணம் பண்ணிக்க போறேனே! நீங்க நினைக்கிற மாதிரி சீப்பால்லாம் நடந்துக்குற ஆள் நான் இல்லை."

மோகன் கொஞ்சம் பதறித்தான் போனார். "நான் உங்களை குத்தம் சொல்லலை கார்த்திக். ஆனா கொஞ்சம் யோசிச்சு பாருங்க. வாழ்க்கைல எதுவுமே நடக்கற வரைக்கும் உறுதி கிடையாது. நீங்க உண்மையிலேயே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறீங்க. அபசகுனமா சொல்றேன்னு நினைக்காதீங்க. ஒரு வேளை, ஏதாவது ஒரு வேலிட் ரீஸன் காரணமா, இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியாம போகுதுன்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில், இந்த பொண்ணோட கேரக்டர் பற்றி எப்படிப்பட்ட விமர்சனங்கள் எல்லாம் எழும்பும். அந்த நேரத்தில் உங்களுக்குகூட அவ்வளவு பாதிப்பு இருக்காது. ஆனால் ஒரு வேளை அப்படி நடந்தால், இந்தப் பெண்ணைப் பற்றிய, அந்த மாதிரி விமர்சனங்களை உங்களால் காது கொடுத்து கேக்க முடியுமா? நான் இப்படித்தான் நடக்கும்னு சொல்லலை. ஆனா இப்படி நடந்துடக் கூடாதுன்னு சொல்றேன். நீங்க உண்மையில்யே இந்த பொண்ணை காதலிச்சீங்கன்னா, அப்படி நடக்க விட மாட்டீங்க. அப்புறம் உங்க இஷ்டம்" என்று சொல்லிவிட்டு படம் பார்க்க ஆரம்பித்து விட்டார். மெயின் பிக்சர் ஆரம்பித்து விட்டது.

நான் திரும்பி ரம்யாவைப் பார்த்தேன். அவள் அமைதியாக படம் பார்த்துக் கொண்டிருந்தது போல் தோன்றியது. இடைவேளையில் நான் பாப் கார்ன் வாங்கிவிட்டு வந்த பொழுது மோகன் ரம்யாவுடன் அவளுடைய வீட்டு விவரங்களை கேட்டுக் கொண்டிருந்தார்.

படம் முடியும் வரை நான் ரம்யாவிடம் எதுவும் கேட்கவில்லை. வெளியே பார்க்கிங் நோக்கி நடந்த போது,

"கார்த்தி, நான் ஆட்டோ பிடிச்சு போயிடுறேன்", சகஜமாகத்தான் சொன்னாள். அவளை நிமிர்ந்து பார்த்தேன். ஒரு தெளிவு தெரிந்தது.

"சரி. வா நானே பிடிச்சு ஏற்றி விடுறேன்" என்றேன். என் பின்னால் சிரித்துக் கொண்டே வந்தாள்.

ஆட்டோ கிளம்பியவுடன் உள்ளிருந்து தலையை வெளியே நீட்டி என்னை குறும்பாக பார்த்து சிரித்தாள்.

"தலைய வெளியே நீட்டாதே." என்று இரைந்து சொல்லிவிட்டு திருப்தியுடன் எனது வண்டியை எடுக்கத் திரும்பினேன்.

- எழுதியவர் வினையூக்கி.


மீண்டும்

23, செப்டம்பர் 2007 08:00:23 என்று மின்னிக் கொண்டிருந்தது. கடைசியாக இன்று அவள் வருவதாக ஒத்துக் கொண்டு விட்டாள். சீக்கிரமாக குளித்துக் கிளம்பினேன். செல்ஃபோன் சினுங்கியது. அவள்தான்.

"ஹாய்ப்பா. ஐம் ரெடி. வெய்ட்டிங் ஃபார் யூ" கொஞ்சினாள்.

"பத்தே நிமிடம்." தொடர்பை துண்டித்துவிட்டு என் வண்டியில் தாவினேன்.

ஹாஸ்டலருகில் வண்டியை நிறுத்தியதும் வேகமாக வண்டியில் ஏறிக் கொண்டாள். எங்கள் இருவரையும் சுமந்து கொண்டு, தியேட்டர் நோக்கி எனது வாகனம் சீறியது.

கார்னர் சீட். 200 ரூபாய் அதிகம். ஒரு வழியாக ஏ19ஐயும், 20ஐயும் ஆக்கிரமித்துக் கொண்டோம். நல்ல தியேட்டர். ஒழுங்காக ஏஸி போட்டிருந்தார்கள். நான் மெதுவாக அவள் கைகளை பிடித்தேன். மெத்தென்று இருந்தது.

"ஹாய். ஸர்ப்ரைசிங்!"

திரும்பி பார்த்தேன். எனக்கு மிகவும் தெரிந்தவர். உடனே அவள் வெடுக்கென்று தன் கையை உருவிக் கொண்டாள். அப்பொழுதுதான் அவர் அவளை கவனித்தார்.

"இவங்க..?!"

"மை ஃபியான்ஸி." என்றேன். எனக்கு உள்ளுக்குள் எரிச்சல்.

"ஓ! எங்கேஜ்மென்ட் ஆயிருச்சா?"

"இன்னும் இல்லை. எங்க வீட்டுக்கே இன்னும் தெரியாது"

"அப்படியா!" என்றபடியே எனக்கு அடுத்த சீட்டில் அமர்ந்தார். 'அடப் பாவி! உனக்கு இந்த சீட்தானா கிடைத்தது!' எனக்கு பற்றிக் கொண்டு வந்தது.

"ஒரு விஷயம்." என்று தயக்கத்துடன் ஆரம்பித்தார், "நான் சொல்றேன்னு நீங்க தப்பா நினைக்க கூடாது. கல்யாணத்துக்கு முன்னாடி..."

நான் அவரைப் பார்த்து சிரித்தேன், "இதுல என்ன சார் தப்பு? நான் என்ன, யாரோ ஒரு பொண்ணையா கூட்டிட்டு சுத்தறேன். நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுதானே?"

"நான் தப்பு சொல்லலை. ஆனா, வாழ்க்கைல நாம நினைக்கிற மாதிரியே எல்லாம் நடக்கறதில்லை. உங்களுக்கு தெரியாததில்லை. நாளைக்கே ஏதாவது ஒரு காரணத்துக்காக உங்க ரெண்டு பேர்க்கிடையே ஒரு மன வருத்தமோ, இல்லை எதிர்பாராத விதமா பிரிய வேண்டிய சூழ்நிலையோ வரலாம். ஜஸ்ட் அஸெம்ப்ஸன்தான். அப்படி ஒருவேளை வந்திச்சின்னா, அதுக்கப்புறம், உங்க நிலையைவிட இந்த பொண்ணு நிலைமைதான் ரொம்ப மோசமாய்டும். ஏன்னா நாம அப்படியொரு சமுதாயத்தில்தான் இன்னும் வாழ்ந்துகிட்டு இருக்கோம்."

நான் பேசாமல் இருந்தேன்.

"நீங்க உண்மையிலேயே அந்தப் பொண்ணை காதலிக்கிறீங்கன்னு நினைக்கிறேன்!" என்று சொல்லி நிறுத்தினார்.

"அது உண்மைன்னா, இந்தப் பொண்ணுக்கு அப்படி ஒரு நிலை வர விடாதீங்க.". அதற்கப்புறம் அவர் எதுவும் பேசவில்லை; நானும்; அவளும்; படம் முடியும் வரை.

"இங்கேயே வெய்ட் பண்ணு" என்று சொல்லிவிட்டு பார்க்கிங் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

"வந்து... நான் ஆட்டோவில் போயிடுறேனே". திரும்பி அவளைப் பார்த்தேன்.

அவள் என்னை கெஞ்சலாகப் பார்த்தாள்.

"சரி." என்று சொல்லிவிட்டு என் வண்டியில் ஏறினேன்.

'இந்த முறை தவறக் கூடாது. வேறு இடம் கூட்டிப் போக வேண்டும்.' என்றெண்ணியவாறே எனது டைம் டிராவல் வண்டியில் நேரத்தை ஒற்றினேன்.
23, செப்டம்பர் 2007 08:00:00

-எழுதியவர் யோசிப்பவர்.



ஏமாற்றம்
காலை எட்டு மணிக்கு விழித்தபோதே, அந்த தேவதையின் ஞாபகம் கண் முன்னால் வந்தது. இன்று படத்துக்கு வருவதாக அவனிடம் சொல்லியிருந்தாள். முதல் முறையாக!

அவசர அவசரமாக குளித்துக் கிளம்பினான். சரியாக ஒன்பது மணிக்கு போன் அலறியது.

"சொல்லும்மா" என்றான் எடுத்தவுடன்.

"டேய், நான் ரெடியாய்ட்டேன். நீ எப்போ வருவே?"

"உன் வாட்சில் மணி என்ன?"

"சரியா ஒன்பது"

"அதில் ஒன்பது பத்து ஆகும்போது அங்கே இருப்பேன்."

"பார்ப்போம்." என்று சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தாள்.

விசிலடித்துக் கொண்டே தன் வண்டியில் ஏறினான்

சொன்ன மாதிரியே ஹாஸ்டல் வாசலில் காத்திருந்தாள். அவன் வண்டியை பார்த்ததும் உடனே வந்து ஏறிக் கொண்டாள். "நீ அஞ்சு நிமிஷம் லேட்!" என்று சொல்லி முறைத்தாள்.

அதற்கப்புறம் எப்படி தியேட்டருக்கு போய்ச் சேர்ந்தார்கள் என்றே அவனுக்கு தெரியாது. அவ்வளவுக்கு முழுமையாக ஆக்ரமித்திருந்தாள், அவன் நினைவுகளை.

இருட்டுத் தியேட்டர். குளுமையான காற்று. மிக மிக மெதுவாக அவள் கையை தனது கைகளுக்குள் நுழைத்துக் கொண்டான். அவள் அவன் தோளில் மெதுவாக சாய்ந்தாள்.

"வாவ்! நீங்களா? ஆச்சர்யமாயிருக்கு!" குரல் வந்த திசையில் திரும்பினான்.

'இவனா? இவன் எதுக்கு இப்ப இங்க வந்தான்!' மனதிலிருந்த வெறுப்பை கண்களில் காட்டினான்.

வந்தவன்பாட்டுக்கு அவன் அருகில் அமர்ந்து கொண்டான். 'இவன் தான் ஏ18ஆ! இன்னைக்கு படம் பார்த்தது போல்தான்!'. என்று நினைத்துக்கொண்டான்.

அவனருகில் இருந்தவளை பார்த்தவன், "உங்களுக்கு எப்போ கல்யாணமாச்சு. என்கிட்ட சொல்லவேயில்லை பார்த்தீங்களா?".

'உணமையிலேயே கல்யாணம் ஆகும்போதுகூட சொல்ல மாட்டேன்டா' என்று நினைத்துக் கொண்டு,

"இல்ல. இன்னும் கல்யாணமாகலை."

"அப்ப, இவங்க?"

"என்னோட லவ்வர்"

"ஓ, ஸாரி!" என்றபடி அவன் சீட்டில் சாய்ந்து கொண்டான்.

"ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே.." என்று திடீரென்று ஆரம்பித்தான்.

"இல்லை சொல்லுங்க."

"வந்து.. நீங்க ரொம்ப பெரிய ஆள். நான் ஏதோ உங்களுக்கு புத்தி சொல்றதா நினைக்காதீங்க. கல்யாணத்துக்கு முன்னாடி, இப்படி இவங்களை கூட்டிட்டு வெளியே சுத்தறது.."

"தப்புங்கறீங்களா?" நிதானமாகக் கேட்டான்

"தப்பில்லை. ஆனா, ஒரு விஷயம் யோசிச்சு பார்த்தீங்களா? சப்போஸ், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா, நாளைக்கு இந்த பொண்ணை கல்யாணம் பண்ண முடியாம போகுதுன்னு வச்சுக்குங்க. அப்ப இந்த பொண்ணோட நிலை என்னாகும்? இந்த சமூகம், இந்தப் பொண்ணை எவ்வளவு கேவலமா பார்க்கும்?"

"இப்ப என்ன சொல்ல வர்றீங்க?"

இந்தக் கேள்விக்கு உடனே பதில்லை. சிறிது நேரம் கழித்து,

"நீங்க இந்தப் பொண்ணை உண்மையிலேயே லவ் பண்றீங்களா?"

அவன் ஆச்சர்யத்துடன், "கண்மூடித்தனமாக!" என்றான்.

"அப்படின்னா, இந்தப் பொண்ணை சமூகம் அப்படி கேவலமா பாக்குற ஒரு நிலைமையை உருவாக்க மாட்டீங்க.". அவன் சொன்னதும், அவள் கைகளின் மேலிருந்த தன் கையை எடுத்துவிட்டானĮ 1?. அவள் அவனைத் திரும்பியே பார்க்கவில்லை.

படம் முடிந்து வெளியே வரும்பொழுது, "நான் ஆட்டோவில் போய்டுறேன்" என்று மட்டும் சொல்லிவிட்டு விடு விடுவென்று ஆட்டோவில் ஏறிப் போய் விட்டாள்.

ஆட்டோ போன பிறகும் அதன் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தவன், தன் பைக்குள் கைவிட்டு அந்த பட்டனை மெதுவாக அழுத்தினான்

ஆட்டோ போய்க்கொண்டே இருந்தது. அவள் நினைத்துக்கொண்டாள்,

'சே! இவன் சுத்த வேஸ்ட்.'

அவன் தன் வண்டியில் ஏறினான். பின்னால் வெடித்துச் சிதறியது ஆட்டோ.

- எழுதியவர் நிலாரசிகன்.





-எழுதியவர் யோசிப்பவர்.

7 comments:

நளாயினி said...

.. பெண்ணை சாகடிச்சிட்டீங்களே.

காதல் மீது வெறுப்பா காதலிமீது வெறுப்பா சமூகத்தின் மீது வெறுப்பா. ஒருத்தருமே காதலிக்கிறாளவை இ.ல்லை எண்ட ஏமாற்றமா .. இப்படி பலி எடுக்கும் எண்ணத்தை உருவாக்கியது.?????

யோசிப்பவர் said...

//பெண்ணை சாகடிச்சிட்டீங்களே.//
ஆமாம். ஒரு தடவை!

//காதல் மீது வெறுப்பா காதலிமீது வெறுப்பா சமூகத்தின் மீது வெறுப்பா. ஒருத்தருமே காதலிக்கிறாளவை இ.ல்லை எண்ட ஏமாற்றமா .. இப்படி பலி எடுக்கும் எண்ணத்தை உருவாக்கியது.?????
//
கதையில் வரும் கதாபாத்திரங்களின் ஒவ்வொரு கருத்தையும் எனது கருத்தாக, நீங்கள புரிந்து கொண்டால், நான் எப்படி பொறுப்பேற்க முடியும்?;-)

அது நிலாரசிகனின் கடைசி வார்த்தையில் கதையை மாற்றிப் போடும் ஸ்டைலை கொண்டு வருவதற்காக கொண்டு வரப்பட்ட முடிவு. கதை! அவ்வளவுதான்.

யோசிப்பவர் said...

//பெண்ணை சாகடிச்சிட்டீங்களே.
//
//இப்படி பலி எடுக்கும் எண்ணத்தை உருவாக்கியது.?????
//
உயிர் கதையில் கூட ஒரு கொசுவை சாகடிச்சேன். பலி எண்ணம் பயங்கரமா எனக்கு இருக்குன்னு நினைக்கிறேன்!!;-))

காஞ்சனை said...

ம்ம்.. என்ன சொல்வது? வித்தியாசமா யோசிங்க யோசிப்பவரே.

கவிதைகளுடன்,
சகாரா.

காஞ்சனை said...

யோசிப்பவரே! நீங்க நல்லாவே வித்தியாசமா யோசிக்கறீங்க. தெரியாம சொல்லிட்டேன்.

கவிதைகளுடன்,
சகாரா.

யோசிப்பவர் said...

சகாரா,
//ம்ம்.. என்ன சொல்வது? வித்தியாசமா யோசிங்க யோசிப்பவரே//
//யோசிப்பவரே! நீங்க நல்லாவே வித்தியாசமா யோசிக்கறீங்க. தெரியாம சொல்லிட்டேன்.
//

உங்களுக்கு ஏன் திடீரென்று இந்த முரண் தோன்றியது?;-))

காஞ்சனை said...

முதலில் இந்த கதையை நீங்கள் எழுதியதன் பின்புலம் தெரியாமல் பின்னூட்டமிட்டு விட்டேன். பிறகு தான் தெரிந்து கொண்டேன். அதனால் தான் இரு பின்னூட்டங்கள்.

-சகாரா.