“ராஜீவ். ம். போறதுக்கு ஓகேதான். ஆனா ஒரே ஒரு விஷயம்….”, வாக்கியத்தை என்னை அவர் முடிக்க விடவில்லை.
“நிஜமாவே நம்பமுடியலை. நாங்க இங்க என்ன செய்துகிட்டிருக்கோம்னு உங்களுக்குத் தெரியுமா?"
“தெரியும். பிளாக் ஹோலுக்கு ஒரு கலத்தை அனுப்பப் போறீங்க.”
”இது ஒரு டைம் மிஷின் ப்ராஜக்ட். அது தெரியுமா?”
எனக்கு கொஞ்சம் எரிச்சலாக வந்தது. ’இது கூடவாத் தெரியாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறேன்? என்னை என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்?’, பின்னால் நகர்ந்து நன்றாக சாய்ந்து கொண்டேன். கொஞ்சம் தண்ணீர் குடித்துக் கொண்டேன்.
“தெரியும். ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் தியரியை செயல் படுத்தப் போறீங்க. ஆண்ட்ரோமீடா காலக்ஸியைத் தாண்டி இருக்கும், சமீபத்துல கண்டுபிடிச்ச பிளாக் ஹோலுக்கு ஒரு ஷிப்பை அனுப்பப் போறீங்க. அந்த ஷிப் பிளாக் ஹோலை நெருங்கி, அதற்குள் விழுந்து விடாமல், ஈவண்ட் ஹாரிஸனுக்கு முன்பே அந்த பிளாக் ஹோலை சுத்தி ஒரு வட்டப்பாதையின் டான்ஜண்டில் நுழையும். இது நமக்கு ஒரு ஃப்ரீ ரிட்டன் டிராஜக்டரியை அமைச்சிக் கொடுக்கும். ப்ளாக் ஹோல் தன்னோட அபரிமிதமான ஈர்ப்பு விசையால், நம்ம கலத்தை ஒரு அரை வட்டம் சுத்த வைச்சு, பூமியை நோக்கி திருப்பி விட்றும். ஆனா அந்த வேகம் ரொம்ப அதிகமா இருக்கும். நம்ம கலம் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தை அடைஞ்சுடும்.. இது வரைக்கும் சரியா?”
”சொல்லுங்க. நிறைய தப்பிருந்தாலும், மெய்ன் தியரி என்னவோ சரிதான்.”
“சரி. இப்ப இந்த வேகம்தான் காலப்பயணத்தை சாத்தியமாக்குது. இந்த வேகத்தில் பூமிக்குத் திரும்பி வரும்போது, ஐன்ஸ்டீன் தியரிப்படி, கலத்துக்கு உள்ளே ’நேரம்’ மெதுவா ஓடும். ஆனா கலத்துக்கு வெளியே நேரம் நார்மலான வேகத்தில் ஓடும். அதனால நம்மக் கலம் இந்த வேகத்தில் ஒரு வருஷம் பிரயாணம் பண்ணிட்டு திரும்பி வருதுன்னு வச்சுக்குவோம். இப்ப கலத்தோட நேரத்தவிட, பூமியோட நேரம் வேகமா இருக்கும். அதனால் கலம் வந்து சேரும் பொழுது பூமியில் பல வருடங்கள் முடிஞ்சிருக்கும். ஆனா கலம் பிரயாணம் பண்ணினதென்னவோ ஒரு வருஷம் தான். அதனால அந்தக் கலம் தரையிறங்கும்போது, பூமில பல வருஷம் முடிஞ்சு எதிர்காலத்துல எறங்குது. போதுமா?”
“சரிதான். இதுல முக்கியமான சில விஷயங்கள் இருக்கு. முதலாவதா, இது ஒரு ஒன்வே டைம் ட்ராவல் ட்ரிப். நீங்க திரும்ப நிகழ்காலத்துக்கு வரவே முடியாது. எதிர்காலத்திலேயே தங்கிட வேண்டியிருக்கும்.”
“தெரியும். எனக்கு இப்ப அம்பத்தி மூனு வயசாவுது. கல்யாணம் பண்ணிக்கலை. சொந்தக்காரங்கன்னு யாரும் இல்லை. அதனால எனக்கு ஃப்யூச்சர்ல செட்டிலாவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.”
“ரெண்டாவதா. ப்ளாக் ஹோல். இதுதான் ரியல் டேஞ்சர். நாங்க துல்லியமாத்தான் கால்குலேஷன்ஸ் எல்லாம் போட்டிருக்கோம். ஆனால் அந்த கால்குலேஷன்ஸ் கொஞ்சம் தப்பானாலும், 0.000000000001 சதவீதம் தப்பானாக்கூட, நீங்க பிளாக் ஹோலுக்குள்ள விழுந்துடுவீங்க.”
“இந்த ரிஸ்க் எடுக்கிறேன். எனக்கு நம்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் மேல நம்பிக்கையிருக்கு. அவங்கள நம்பி இதுவரைக்கும் மூனு தடவை விண்வெளிப் பிரயாணம் செஞ்சிருக்கேன். ஒரு உயிர் விஷயம்னு வரும்போது, அவங்க தப்பு பண்ண மாட்டாங்க.”
“தாங்க்ஸ். நீங்க எங்கேல்லாம் இதுவரைக்கும் ஸ்பேஸ் டிராவல் பண்ணீருக்கீங்க?
“ரெண்டு தடவை மார்ஸுக்கு. ஒரு தடவை டைட்டனுக்கு. அதுக்கப்புறம் ரிட்டைர்மெண்ட் வாங்கிட்டேன். அதுக்கப்புறம், இந்த தடவை ஃபூயூச்சருக்குப் போறேன்.” என்று சிரித்தேன்.
“குட். மூனாவது விஷயம் உங்க உடல்நிலை. இப்ப உங்களுக்கு வயசு அம்பத்தி மூனு. எங்க கணக்குப் படி இந்தப் பயணம் போய்த் திரும்ப பதினோரு வருஷம் ஆகும். அதாவது உங்க ஆரோக்கியம் அறுபத்தி நாலு வயசு வரைக்கும் விண்வெளிப் பிரயாணத்தை தாங்கக் கூடியதா இருக்கணும்.”
“சரி, டெஸ்ட் பண்ணிப் பாருங்க. எனக்கு என்ன சந்தேகம்னா, என்னோட உடம்பு ப்ளாக் ஹோலை நெருங்கும்போது, அவ்வளவு ஈர்ப்பை தாங்குமாங்கறதுதான் டவுட்டா இருக்கு.”
“அது பிரச்சனையேயில்லை. பிளாக் ஹோலில் மாட்டிக் கொண்டால்தான் பிரச்சனை. அதில் மாட்டிக் கொள்ளாதவரை, உங்களைப் பொறுத்தவரை இது ஒரு சாதாரண விண்வெளிப் பிரயாணமாகத்தான் இருக்கும். நீங்க ஏதோ கேக்கனும் சொன்னீங்களே, என்னதது?”
“இப்பவாவது கேட்டீங்களே. எனக்கு நீங்க ஒரே ஒரு விஷயத்தை மட்டும் க்ளியர் பண்ணனும். இப்ப நான் ஃப்யூச்சர்ல போய் இறங்குவேன் இல்லையா? சரியா எந்த வருஷம் போய் இறங்குவேன்?”
“இது 2074. நீங்க திரும்பி வர்ரதுக்கு 99 வருஷம் ஆகும். அதாவது 2173ல் போய் இறங்குவீங்க.”
“சரி. இப்ப இந்த விஷயத்தை கவனிங்க. ஒருத்தன் எதிர்காலத்தில் இருந்து இறந்த காலத்துக்கு வர்ரான்னு வச்சுக்குங்க. ’அவன் எதிர்காலத்தில் இருந்து வந்தவன்’ அப்படிங்கறத, அவனால அந்த இறந்த காலத்தில் இருக்கிறவங்களுக்கு ஈஸியா நிரூபிச்சிற முடியும். ஏன்னா அவன் கிட்ட எதிர்காலத்துக்கு மட்டுமே சொந்தமான அதிநவீன கருவிகள், வஸ்துக்கள் இருக்கும்.
ஆனா நம்ம கேஸ்ல இது சாத்தியம் இல்லை. நான் இறந்த காலத்திலிருந்து எதிர்காலத்துக்குப் போறேன். அங்கேயுள்ளவங்களுக்கு, நான் இறந்த காலத்திலிருந்து காலப்பயணம் செஞ்சு 99 வருஷங்கள் கடந்து எதிர்காலத்துக்கு வந்திருக்கேன்னு ப்ரூவ் பண்ணியாகனும். நான் சொல்றதை அவங்க நம்பலைன்னா அங்கே என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க. என்னை ஒரு ஃபிராடுன்னு சொல்லி கைது பண்ணிறலாம். இல்லை பைத்தியம்னு சொல்லி ஹாஸ்பிட்டலில் கட்டி வச்சிரலாம். அந்த மாதிரி வாழ எனக்கு ஆசையில்லை. அவங்களுக்கு நான் இறந்த காலத்திலிருந்து வந்திருக்கேன்னு எப்படி ப்ரூவ் பண்றதுங்கறதுக்கு மட்டும் வழி சொல்லுங்க. நான் இந்த பிரயாணத்துக்கு ஒத்துக்கறேன்.” கடைசியில் ஒரு வழியாக என் பயத்தை சொல்லிவிட்டேன்.
”ம்ம். நீங்க சொல்றதும் ஒரு வேலிட்டான பாயிண்ட்தான். இதப் பத்தி நம்ம விஞ்ஞானிகள் குழு ஆளுங்ககிட்ட கருத்துக் கேட்போம். இப்போதைக்கு எனக்கு எதுவும் தோனலைன்னாலும், வி மஸ்ட் கெட் அன் ஆன்ஸர் டூ திஸ். நிச்சயம் ஏதாவது விடை இருக்கும். பார்ப்போம். நான் மீட்டிங்கிற்கு ஏற்பாடு பண்ணறேன். எப்படியும் ரெண்டு நாள் ஆய்டும். அதுக்குள்ள நீங்க மெடிக்கல் செக்கப்பெல்லாம் முடிச்சுருங்க. மீட்டிங் கன்ஃபார்ம் ஆனதும் நான் சொல்றேன்.”
“சரி”
X-X-X-X-X-X-X-X-X
அந்த அறை பெரிதாக ஓவல் வடிவத்தில் இருந்தது. அங்கே நானும் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவின் தலைவர், டாக்டர் சிவநேசனும் மட்டுமே பெரிய முட்டை வடிவ மேஜையின் ஒரு முனையில் உட்கார்ந்திருந்தோம். சிவநேசன் கம்ப்யூட்டரில் குரல் ஆணை கொடுத்ததும், அங்கே ஒவ்வொருவராக ஹோலோகிராஃப் பிம்பங்களாக நாற்காலிகளோடு தோன்ற ஆரம்பித்தனர். அவர்களில் நிறைய பேரை எனக்கு யாரென்றே தெரியவில்லை.
“வெல் ஜெண்டில்மேன் அன் லேடீஸ். ராஜீவ் கேட்ட கேள்வியப் பத்தி உங்க எல்லாருக்கும் ஏற்கனவே சொல்லியிருந்தேன். ஒரு காலப்பயணி வருங்காலத்துக்குப் பிரயாணம் செஞ்சா, அங்கே இருக்கறவங்களுக்கு அவர் எப்படித், தான் இறந்த காலத்தில் இருந்து காலப் பயணம் செய்து வந்தவர் என்பதை நிரூபிப்பது? உங்க யார்ட்டயாவது இதுக்கு பதில் இருக்கா?”
“ஒரு டைம் கேப்ஸ்யூல் அனுப்பலாமே?”
“வாட்?” என்றேன்.
“இந்த மாதிரி, இன்ன தேதியில், இன்ன இடத்தில் இருந்து நீங்க காலப்பயணம் கிளம்பியிருப்பதாக ஒரு டாக்குமெண்ட் தயாரித்து, அதை ஒரு பத்திரமான பெட்டியில் வைத்துப் பூட்டணும். அந்தப் பெட்டி அதிக காலம் மக்காத, துருப்பிடிக்காத, உறுதியான பொருளால செய்யப்பட்டிருக்கணும். அதைக் குறிப்பிட்ட இடத்துல நிலத்தில் ஆழமா புதைச்சு வச்சுருவோம். அந்தப் பெட்டியோட சாவிய நீங்க வச்சுக்கனும். நீங்க திரும்பி வந்து, எதிர் காலத்தில் இருக்கறவங்ககிட்ட, அந்தப் பெட்டியைத் தோண்டியெடுக்க சொல்லுங்க. இந்தப் பழைய டாக்குமெண்ட் அவங்ககிட்ட நீங்க இறந்த காலத்தில் இருந்து வந்தவர்ங்கறதை நிரூபிக்கும்.”
“ஆனா, அவங்ககிட்ட அப்படி ஒரு டைம் கேப்ஸ்யூல் பெட்டி இருக்கிறதை நான் தான் சொல்லனும். அதோட சாவியும் எங்கிட்டேயே இருக்குதுன்னா, நானே திடீர் புகழுக்கு ஆசைப்பட்டு அவங்க காலத்திலேயே ஒரு பெட்டியை புதைச்சு வச்சிருக்கலாம்னு அவங்க வாதாடலாமில்லையா?”
“பொருளோட வயசுன்னு ஒன்னு இருக்கே! ரேடியோ ஐஸோடோப் கார்பன் 14 முறை மூலமா அந்தக் கேப்ஸ்யூலோட வயதை கணிக்கச் சொல்லுங்க. அது போதுமே”
”இப்ப ஒருத்தனுக்கு இந்த மாதிரிப் புதைச்சு வச்ச பழைய பெட்டி ஒன்னு, புதையல் மாதிரி எதிர்பாராதவிதமா கிடைக்குதுன்னு வச்சுக்குங்க. அதோட பூட்டைத் திறந்து மூடவும் அவன் கத்துக்கிட்டான்னு வையுங்க. அவன் உங்ககிட்ட வந்து நான் இந்த மாதிரி பழைய சோழர்கள் காலத்திலேர்ந்து வந்திருக்கேன். பாருங்க ஆதாரம்னு அந்தப் பெட்டியக் காட்டினா, நீங்க நம்பிருவீங்களா.”
”ஆனா இதுக்கான லாக் பாஸ்வேர்ட் இணைக்கப்பட்டது. அதுக்கான பாஸ்வேர்ட் உங்களுக்கு மட்டும்தானே தெரியும்?”
“சாவிக்கும் பாஸ்வேர்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? திறந்து கிடந்த ஒரு பழைய பெட்டிக்கு நான் புது பாஸ்வேர்ட் செட் செய்து ஏமாற்றி இருக்க முடியாதா?"
இப்பொழுது குரலின் திசை மாறியது. பெண் குரல், “இப்ப என்ன பிரச்சினை? டைம் கேப்ஸ்யூல் இருப்பதை நீங்க சொன்னாதானே நம்ப மாட்டாங்க? கவர்மெண்டே சொன்னால்?”
“கவர்மெண்டே சொல்வதற்கு இன்னொரு டைம் கேப்ஸ்யூல் வைப்பீங்களா?” என்றேன்.
“இல்லை. ரொம்ப சிம்பிள். நீங்கள் காலப்பயணம் சென்ற செய்தியை, அதிகாரப் பூர்வ அரசாங்க ஆவணங்களா சேமிப்போம். அந்த ஆவணங்கள் அரசாங்கங்கள் மாறினா கூட பத்திரமாக அடுத்த தலைமுறைக்கும் சேமிக்கப்பட்டிருக்கும். நீங்க திரும்பி வந்ததும், அரசாங்க ரெக்கார்டுங்களை தேடிப் பார்க்க சொன்னாலே போதுமே?”
“அரசாங்கங்கள் மாறினால் கவலை இல்லை. அரசியல் அமைப்பே மாறிப்போச்சுன்னா?”
“என்ன சொல்றீங்க?” என்று சிவநேசன் கொஞ்சம் பதட்டமாகிவிட்டார்.
“ஒருப்பேச்சுக்கு சொல்றேன். இப்ப இருக்கிற ஜனநாயக ஆட்சிமுறை, திடீர்னு ராணுவ ஆட்சியாவோ, ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியாவோ மாறிடுச்சுன்னு வைங்க. இல்லை ஏதாவது உலகப்போர் வந்து வேற ஒரு நாடு, நம்ம நாட்டோட ஆட்சியை கைப்பற்றிடலாம். அப்படியாச்சுன்னா இந்த கவர்மெண்ட் ரெக்கார்ட்ஸை அவங்க பத்திரமா வச்சிருப்பாங்களா? ஒருவேளை ஏதாவது காரணத்துக்குக்காக அவங்களே கூட கவர்மெண்ட் ரெக்கார்ட்ஸை அழிச்சிடலாம். அப்ப என் கதி?”
“இது அதீத கற்பனை இல்லையா? நடக்காத்தை எல்லாம் ஏன் கற்பனை பண்ணிக்கிறீங்க?”
“இல்லை. நான் தோல்வி அடையறதுக்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் தவிர்க்க விரும்பறேன்.”
”ஒரு ஐடியா” இப்பொழுது குரல் கொடுத்த விஞ்ஞானிக்கு முப்பது வயதுக்கு மேலிருக்காது என்று நினைத்தேன்.
”உங்களுக்கு ஒரு ஐடிக் கார்ட் கொடுத்து விடுகிறோம்.”
“அதை கொண்டு போய் அங்கே காட்டினால் நம்புவார்கள் என்கிறீர்களா?”
“இது சாதாரண ஐடிக் கார்ட் இல்லை. இப்போதைய நமது ஐடிக் கார்ட்கள் எப்படி இருக்கு? கார்டை அதற்கான ரீடரில் காட்டினால், நம்மோட ஒரு சின்ன ஹோலோகிராஃபிக் பிம்பம், ரீடரிலிருந்து உருவாகி, நம்மை அடையாளம் சொல்லுது. ஆனால் உங்களுக்கு தரப்படும் விஷேச கார்டை நீங்கள் ரீடரில் காட்டத்தேவையில்லை. உங்க கருவிழிக்கு பக்கத்துல அஞ்சு செண்டிமீட்டர் இடைவெளிக்குள்ள காட்டினால், உங்களோட ஹோலோ கிராஃபிக் பிம்பம் ஆட்டோ மேட்டிக்காய் உங்க கார்டிலிருந்தே உருவாகும். அதோடு உங்க பிறந்த தேதி, இந்தப் பயணம் புறப்பட்ட விவரங்கள், மாதிரியான விஷயங்களும் அதில் தெரியும்படியா நாம் அந்தக் கார்டை உருவாக்குவோம். அந்த மாதிரி ஐடிக் கார்டை நீங்கள் காட்டினா அவங்க நம்பமாட்டாங்களா?”
”நம்மாள இப்பவே இந்த மாதிரி ஒரு கார்டை உருவாக்க முடியும்னா, எதிர்காலத்துல இது சர்வ சாதாரணம் ஆயிடாதா? அப்ப கொண்டு போய் இந்தக் கார்டை காட்டினா சிரிக்க மாட்டாங்களா?” ரொம்பவும் காட்டமாக சொல்லிவிட்டேன் போலிருக்கிறது. அந்த விஞ்ஞானியின் முகம் சிறுத்து விட்டது.
“ஓகே. இப்படிப் பண்ணலாம். இப்ப நம்ம காலத்தில பிரபலமா இருக்கிற சில பேரோட நீங்க சேர்ந்து இருக்கிற மாதிரி ஃபோட்டோ, வீடியோ, ஹோலோகிராம் எல்லாம் எடுத்து, அதை, முதல்ல சொன்ன டைம் காப்ஸ்யூலில் வச்சிடலாம். இது நீங்களும் அந்த பிரபலங்கள் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவர்தான்னு ப்ரூவ் பண்ணுமே.”
“நல்ல ஐடியாதான். ஆனால் எல்லாமே டிஜிட்டலாகி விட்ட இந்த யுகத்தில் எந்த மாதிரியான பிம்பத்தையும் கம்ப்யூட்டர் மூலமா உருவாக்க முடியுமே! இது எதிர் காலத்துக்கும் பொருந்துமே!”
“நான் ஒரு ஐடியா சொல்றேன். சரியா வருமா பாருங்க. நம்மகிட்ட இப்ப இருக்கிற பாலிகிராஃப் லை டிடக்டர் அறுபது சதவீதம் நம்பகத்தன்மை வாய்ந்தது. எதிர்காலத்தில் இந்த பொய் சொன்னால் கண்டுபிடிக்கிற கருவி, நிச்சயம் இன்னும் ஃபைன் ட்யூன் செய்யப்பட்டிருக்கும். அது இல்லாட்டி கூட ட்ரூத் ஸீரம் இருக்குது, ஸோடியம் தையோபெண்டால், மரிஜுவானா இந்த மாதிரி. இதில் அந்த நேரத்தில் அவங்க எந்த ட்ரூத் டெஸ்டை ஒத்துக்குவாங்களோ, அந்த டெஸ்டை உங்க கிட்ட செய்யச் சொல்லுங்க. அதில் நீங்க பொய் சொல்லலைன்னு ப்ரூவ் ஆயிருமே!”
“ம்ம். சரியானத் தியரிதான். ஆனால் நீங்க சொல்ற ட்ரூத் ஸீரம் டெஸ்ட் இப்பல்லாம் எண்பது எண்பத்தைந்து சதவீதம்தான் எதிர்பார்த்த முறையில் வேலை செய்யுது. அதனால இதையெல்லாம் நாமே விஞ்ஞான பூர்வமா ஒத்துக்கறதில்ல. இதே நிலைமை நீடிச்சுதுன்னு வைங்க. எதிர்காலத்தில் இருக்கிறவங்க கிட்டேயும் பொய்யை கண்டுபிடிக்க உருப்படியான சாதனம் இருக்காது. அந்த நிலைமைல இந்த யோசனை அடிவாங்கிருது.”, நான் எல்லாவற்றையும் மறுத்துக் கொண்டே வருவது அவர்களிடையே கொஞ்சம் அதிருப்தியை கிளப்பியிருப்பதை உணர்ந்தேன்.
“கரன்சி நோட் முறை?”
“அப்படின்னா?”
“ஒவ்வொரு நாட்டோட கரன்சி நோட்டும் வித்தியாசமான முறையில் தயாரிக்கப் படுது. இது அத்தனையிலும் ஒரு சாம்பிள் நீங்க போகும்போது எடுத்துட்டுப் போங்க. கவுண்டர் ஃபீட் கரன்சியை நாமளே ஈஸியா கண்டுபிடிச்சுடுவோம். அப்படியிருக்கும் போது எதிர் காலத்தில இருக்கிறவங்க நீங்க கொண்டு போற நோட்டெல்லாம் கவுண்டர் ஃபீட் நோட் கிடையாதுன்னு உறுதிப்படுத்திட்டா, நீங்க இறந்த காலத்திலிருந்து வந்திருக்கிறது நிஜம்னு ஆயிரும்.”
“ஒரு கரன்சி கலெக்ஷன் செய்பவரிடம் கூட எல்லா நாட்டினுடைய பழைய நூற்றாண்டு நோட்டுக்கள் இருக்குமே?”
”ஆனா, நீங்க வச்சிருக்கிற கரன்சி நோட்டோட வயது! அதை கார்பன் 14 ஐஸோடோப் டெஸ்ட் பண்ணினா, அது பத்து பதினைஞ்சு வருஷத்துக்குள் அச்சடிக்கப்பட்ட நோட் என்பது தெளிவாயிருமே.”
“ம்ம். இது கொஞ்சம் வொர்க் அவுட் ஆகும் போல் தான் தெரிகிறது. ஆனா உங்க வாதப்படியே அது பத்து பதினைஞ்சு வருஷத்துக்குள்ள அச்சடிக்கப்பட்டதுன்னா, அதனாலேயே, அதை அவங்க கவுண்டர் ஃபீட்னு நினைக்கலாமே?”
இப்பொழுது சிவநேசன் பேசினார், “மிஸ்டர் ராஜீவ். நீங்க இந்தப் பயணத்த தவிர்க்கிறதுக்காக, பேசற மாதிரித் தெரியுது. இதுல ஏதாவது ஒரு முறைல நிச்சயமா, அவங்க நீங்க சொல்றதை ஒத்துக்குவாங்க. ஆனா, இப்ப நீங்க நிஜமாவே இந்த பிரயாணம் மேற்கொள்ள விரும்பறீங்களா? இல்லையா?”
“நிச்சயமா. நிச்சயமா நான் போறேன். ஆனா அதே நேரத்தில் என் பத்திரத்தைப் பத்தியும் நான் கவலைப்படுறது தப்பில்லையே.”
”ஓகே இப்படி செய்யலாம். ஏதாவது ஒரு யோசனைங்கிறத மாத்தி, இந்த எல்லா யோசனைகளையும் செயல்படுத்தலாம். அரசாங்க ரெக்கார்ட்ஸ் மெய்ண்டைன் பண்ணுவோம். அதோட ஒரு காப்பியையும் டைம் கேப்ஸ்யூலில் வைப்போம். பிரபலமான தலைவர்கள், சினிமா ஸ்டார்ஸ் இவங்களோட நீங்க இருக்கிற ஃபோட்டோ, வீடியோ, ஹோலோகிராம் எல்லாம் தயார் பண்ணி, க்ரிஸ்டல் டிஸ்கில் சேமித்து, அதில் ஒரு காப்பியை நீங்களும், இன்னொரு காப்பியை டைம் கேப்ஸ்யூலிலும் வைப்போம். ஹோலோ பிம்பத்தை ஆட்டோமேட்டிக்காக உருவாக்கும் ஸ்பெஷலான ஒரு ஐடிக் கார்டை உருவாக்கித் தர்றோம். அதையும் எடுத்துட்டுப் போங்க. எதிர்காலத்தில் அவங்க ட்ரூத் ஸீரம், பாலிகிராஃபி மாதிரி எந்த டெஸ்ட் எடுக்க சொன்னாலும், மறுக்காம ஒத்துக்குங்க. அதே மாதிரி எல்லா நாட்டு கரன்சியும் ஒரு சாம்பிள் எடுத்துட்டுப் போங்க. கார்பன் டேட்டிங், அது இல்லைன்னா அந்த நேரத்தில் அதை விட சிறப்பான முறை ஏதாவது இருந்தா, டைம் கேஸ்யூலோட வயதையும், கரன்சிகளோட வயதையும் கணிக்க சொல்லுங்க. பூமிக்குத் திரும்பும் போது இந்தியப் பெருங்கடல்ல இறங்குங்க. அதுதான் வசதி, எங்க கரையொதுங்குவீங்கன்னு இப்பவே சொல்ல முடியாது. அதனால, இந்தியப் பெருங்கடலை ஒட்டியிருக்கிற கடலோரப் பகுதிகள் எல்லாத்திலேயும், பகுதிக்கு ஒன்னா ஒரு டைம் கேப்ஸ்யூலை புதைச்சு வச்சுருவோம். எந்தெந்த இடத்தில் எல்லாம் டைம் கேப்ஸ்யூல் புதைக்கப் பட்டிருக்குங்கறதுக்கான மேப்பும் நீங்க வச்சுக்குங்க. பல சாட்சிகள் இருக்கிறதால அவங்க கண்டிப்பா நம்புவாங்க. இந்த யோசனை ஓகேவா மிஸ்டர் ராஜீவ்?” சிவநேசன் முடித்தார்.
“ஓகே” என்றேன்.
X-X-X-X-X-X-X-X-X
பிரபலங்கள் பலருடன் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டு, புகைப்படம், வீடீயோ, ஹோலோகிராம் என்று டிஜிட்டல் உருவாமாக்கி, கிரிஸ்டல் டிஸ்குகளில் அடைத்தார்கள். அத்தனை டைம் கேப்ஸ்யூல் பெட்டிகளையும் என்னிடம் கொண்டு வந்து ஒரு பாஸ்வர்ட் செட் செய்யச் சொன்னார்கள். மொத்தம் நூற்றி எண்பத்தாறு பெட்டிகள். ஒரு முறை மூடிவிட்டால், பாஸ்வேர்ட் இல்லாமல் மீண்டும் திறக்க முடியாத பெட்டிகள். கரன்சிகள் கொடுத்தார்கள், இருபது வருடத்துக்குப் போதுமான உணவு மாத்திரைகள் கொடுத்தார்கள். கை குலுக்கினார்கள். வாழ்த்துச் சொன்னார்கள். விலகிக் கொண்டார்கள். கலம் மூடப்பட்டு மிக மிக மெதுவான ஆரம்ப வேகத்திலேயே கிளம்பியது. பூமியை ஒரு முறை சுற்றியது. ஒரு புள்ளியில் பிளாக் ஹோல், ஐந்து வருடங்கள் கழித்து எங்கே இருக்குமோ, அதை நோக்கி கலம் சீறிப்பாய்ந்தது. பூமியிலிருந்து ஒரு வருடம் வரை ரேடியோவில் தொடர்ந்தார்கள். அப்புறம் ….. விட்டு விட்டார்கள்.
X-X-X-X-X-X-X-X-X
பூமிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன். நம்பவே முடியவில்லை. ப்ளாக் ஹோலைத் தாண்டி சுற்றிக் கொண்டு திரும்பி வருவேன் என்று பூமியில் யாராவது நம்பிக்கை வைத்திருப்பார்களா? பூமியில் இது எந்த வருஷமாயிருக்கும்? நிஜமாகவே 2173ஆ?
“ஹலோ ரோஜர்! ரோஜர்! சாக்ராஸ் கலத்திலிருந்து பேசுகிறேன். ரோஜர்! ரோஜர்!” ம்ஹூம் இன்னும் சிக்னல் கிடைக்கவில்லை. ஃப்ரீக்குவென்சிகள் மாற்றிப் பார்த்தேன். “ரோஜர்! ரோஜர்! திஸ் இஸ் சாக்ராஸ்! ரோஜர்”” “………” மௌனம்தான். ஒரு வேளை எதிர்காலத்தில் கம்யூனிக்கேஷன் முறைகளையே மாற்றியிருப்பார்களோ?! இதற்குள் எனது கலம் பூமியில் இறங்குவதற்கு அதைச் சுற்ற ஆரம்பித்திருந்தது. அவர்களுக்கு சிக்னல் கிடைத்து கடலில் இருந்து என்னை மீட்க வந்தால் நல்லது. இல்லையென்றாலும், பதினோரு வருடங்களாக என் வீடாக இருந்த இந்த சாக்ராஸ் கலம், கடலையும் கடந்து விடும் என்றாலும், கொஞ்சம் நேரமாகும்.
“ரோஜர்! நான் பிளாக் ஹோலை சுற்றி விட்டுத் திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்.” கலம் காற்று மண்டலத்தில் நுழைந்து விட்டது. ”இந்தியப் பெருங்கடலில் இறங்கப் போகிறேன்.”. கடல் தெரிய ஆரம்பித்து விட்டது. “என்னையும் கலத்தையும் கடலிலிருந்து மீட்க உதவி..” கலம் கருநீலக் கடலுக்குள் விழுந்த சத்தம் கேட்டது. மறுபடி மறுபடித் தொடர்புக்கு முயன்று பார்த்தேன். ம்ஹூம். பதில் கிடைக்கவில்லை. வேறு வழியில்லை நேரமாகிக் கொண்டிருக்கிறது. கலத்தின் படகு அமைப்பை மட்டும் விடுவித்தேன். தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டேன். காம்பஸ் உதவியுடன் வடக்கை நோக்கி படகை செலுத்த ஆரம்பித்தேன்.
கரை வந்தது, நான்கு மணி நேரத்திற்குப் பின். கடற்கரை அமைதியாக இருந்தது. ஆளில்லாத தீவு ஏதாவதில் கரையொதுங்கி விட்டோமா? இல்லை அதோ ஒரு கோயில். அந்தக் கோயில். ஆம் அதை நான் இதற்கு முன் பார்த்திருக்கிறேன். எங்கே? ஞாபகம் வந்து விட்டது. அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு டைம் கேப்ஸ்யூலை புதைப்பதற்காக வந்தோம். நன்றாக ஞாபகம் இருக்கிறது. இது எந்த ஊர்? ஆனால் புதைக்க வந்தபொழுது கடல் இந்தக் கோயிலுக்கு இவ்வளவு பக்கத்தில் இல்லையே. குறைந்தது ஐந்து கிலோமீட்டராவது தூரம் இருந்திருக்குமே!
அப்பொழுது என் காலை வாரி விடப்பார்த்த அந்தப் பொருளை எனக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. டைம் கேப்ஸ்யூல். ஆனால் ஆழமாகப் புதைக்கப்பட்டிருந்த இது எப்படி இவ்வளவு மேலே வந்தது?
’ஆ15கஸ்1947ட்’ என்ற பாஸ்வேர்டை அமைத்து அந்த டைம் கேப்ஸ்யூலின் உள்ளிருந்தவற்றுக்கு சுதந்திரம் கொடுத்தேன். உள்ளே சகல விதமான ஆவணங்களும் பத்திரமாக இருந்தன. இது…, இது என்ன.. புதிதாய்? இது வரை நான் பார்க்காத அரசாங்கக் காகிதம்? அதில் இவ்வாறு எழுதியிருந்தது.
“15, ஆகஸ்ட் 2097
ஹலோ ராஜீவ். நலமாகத் திரும்பி வந்து விட்டீர்களா? உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல ஆசைப்பட்டேன். அதனால் இந்த எக்ஸ்ட்ரா கடிதம். விஷயம் இதுதான். இன்னும் பதினைந்து நாளில் (செப்டம்பர் 1க்குள் எதிர்பார்க்கிறேன்) இந்த உலகம் அழிந்து விடும். ஏன்? எதற்கு? எப்படியென்றெல்லாம் இந்தச் சிறிய கடிதத்தில் விளக்க முடியாது. அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், உங்கள் கலம் நல்ல நிலையில் இருந்தால், இந்தப் பெட்டியில் இருக்கும் கிரிஸ்டல் டிஸ்க்கை கலத்தில் உள்ள கம்ப்யூட்டரில் கொடுத்துப் பார்க்கவும். அப்புறம் இன்னொரு விஷயம். நீங்கள் இறந்த காலத்திலிருந்து வந்தவர் என்பதை யாருக்கும் நிரூபிக்கத் தேவையிருக்காது என்று நம்புகிறேன்.
- சிவநேசன்”
பெயருக்குக் கீழே ஒரு சிரிக்கும் முகத்தை வரைந்து முடித்திருந்தார்.X---------------------------------------------X
-2010 செப்டம்பர் மாத தென்றல் இதழில் “இறந்த காலத்திலிருந்து வந்தவர்” என்ற தலைப்பில் வெளியான எனது சிறுகதை.
6 comments:
Good one.
Anujanya
நல்லா இருந்தது.
அருமையான சிறுகதைக்கு சுட்டி கொடுத்த தமிழ்ப்ரியனுக்கு நன்றி.
கொஞ்சம் பெரிய கதையா இருந்தாலும்.. அருமையா இருக்குங்க..
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_02.html
உங்களின் இந்த கதையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்
நன்றி
பல டெக்னிக் சங்கதிகளுடன் விறுவிறுப்பான
கதை; வியப்பைத் தந்த முடிவு!
ஒரே வார்த்தையில் சொன்னால்...
'பிரமாதம்'
Post a Comment