அவர்கள் செய்யும் அற்புதங்களை திரும்பத் திரும்ப கூர்ந்து கவனிப்பார். சில மணி நேரங்களில், சில சமயம் சில நாட்களில், அந்த அற்புத வித்தையின் சூட்சுமம் என்னவென்று தெரிந்து போகும். வேறு சில சமயங்களில் அந்த சாமியார்களிடமே நைச்சியமாகப் பேசி ரகசியத்தை கறந்திருக்கிறார். இப்படி சேகரித்த ரகசியங்களைத் திரட்டி, ”முக்தாலன்” என்ற புனைப்பெயரில் “இந்திய சாமியார்களின் அற்புத ரகசியங்கள்” என்று புத்தகமே போட்டிருக்கிறார்.
இன்றும் அப்படித்தான், பத்திரிக்கையில் ஏழாம் பக்கம் வெளியாகியிருந்த அந்த கிரிதரானந்தரின் அற்புதங்களைப் பற்றி படித்து விட்டு, அந்த ஆசிரமத்துக்குள் நுழைந்தார்.
ஆசிரமம் பைபாஸ் சாலையை ஒட்டியே இருந்தது. சுமாரான கூட்டம் இருந்தது. பெயர்தான் ஆசிரமமேத் தவிர உள்ளே பெரிய ஹாலாக, ஆங்காங்கே நவீன உலகின் ஆடம்பரங்கள் எட்டிப் பார்த்திருந்தன. நடுநாயகமாக ஒரு இலவம்பஞ்சு நிரப்பப்பட்ட வெல்வட் மேடை இருந்தது. சுவாமி, இமயமலை அருகிலிருந்து வருவதாக பக்தக்கோடிகள் பேசிக் கொண்டனர். ’இமயமலையில் எத்தனை சுவாமிகளப்பா?!’ என்று நினைத்துக் கொண்டார்.
சரியாக எட்டு மணிக்கு, கிரிதரானந்தர் அந்த நடு மேடையில் திடீரென்று தோன்றினார். ஆமாம். திடீரென்றுதான். புரான பட வெடி சத்தமோ, நவீன கால க்ராஃபிக்ஸோ இல்லாமல், சத்தமேயில்லாமல், கண்ணிமைக்கும் நேரத்திற்கும் மிக மிகக் குறைவானதொரு பொழுதில், திடீரென்று.
எவ்வளவோ அற்புதங்களை பார்த்திருக்கிற சிவநேசன் கூட அயர்ந்து விட்டார். அதற்கப்புறம் நிகழ்ந்த பிரார்த்தனையிலோ, வெறுங்கையில் விபூதி வழங்கும் அற்புதத்திலோ அவர் மனம் செல்லவேயில்லை. சரியாக அரைமணி நேரம். எட்டரைக்கு கிரிதரானந்தர் மீண்டும் அதே தீடீரென்று மேடையிலிருந்து காணாமல் போனார்.
கூட்டம் இப்பொழுது கலையத் தொடங்கியது. சிவநேசனுக்கு இது ஒரு சவாலாகவேத் தோன்றியது. பிரதான சீடராகத் தோன்றியவரை அணுகினார்.
“குருஜியை பார்க்கனும்.”
“மறுபடி மதியம் மூனு மணிக்கு தரிசனம் இருக்கு சாமி.”
“இல்லை. கொஞ்சம் தனிமையில் பேசனும்.”
அந்த சீடர் அவரை ஒருமுறை முழுவதுமாகப் பார்த்தார். சிவநேசன் வசதியாகத் தெரிந்தாரோ, என்னவோ? “கொஞ்ச நேரம் அந்த ரூம்புல உக்காருங்க. குருஜிட்ட அனுமதி வாங்கிட்டு வர்ரேன்.”
வாங்கிவிட்டு வந்தவர், “குருஜி வரச் சொல்றார்” என்றார்.
கிரிதரானந்தர் இருந்த அறை வெளிச்சம் குறைவாக இருந்தது. கிரிதரானந்தரே கொஞ்சம் மங்கலாகத்தான் தெரிந்தார். ஆனாலும் அவர் கழுத்தில் தொங்கிய உருத்திராட்சத்தை பொறித்திருந்த தங்கக் குண்டு கண்களை உறுத்தியது.
“வா சிவநேசா. வா”.
சிவநேசன் ஆச்சர்யப்படவில்லை. இதெல்லாம் பால பாட வித்தை என்பது அவருக்குத் தெரியும்.
சிறிது கண்களை மூடிய குருஜி, “உன் சின்னப் பெண்ணைக் கட்டிக் கொடுத்த இடத்தில் கொஞ்சம் பிரச்சனை. அதற்காகத்தானே வந்தாய்?”
“இல்ல குருஜி. பிரச்சனை இருக்குதான். ஆனா, அதுக்காக நா வரலை.” சிவநேசன் கிரிதரானந்தரை கண்களுக்குள் தீர்க்கமாகப் பார்த்தார்.
“பின்ன?” குரு சீடரின் பக்கம் கண்களை ஓட்டினார்.
“நாம கொஞ்சம் தனியாப் பேசலாமா?”
குருஜி ஒரு கணம் தயங்குவதாகத் தெரிந்தது. அப்புறம் தலையசைக்க, மற்றவர்கள் அகன்றனர்.
“என்னப் பிரச்சனை?”
“குருஜி! நான் நேரடியாவே விஷயத்துக்கு வர்ரேன். காலைல மேடைல திடீர்னு பிரசன்னமானீங்களே! எப்படி குருவே?”
கிரிதரானந்தர் கண்களில் அருளை வரவழைத்துக் கொண்டார். “அது என்னப்பன் எனக்கருளிய சில சித்திகளில் ஒன்று!” என்று மெல்ல சிரித்தார்.
“குருஜி! டோண்ட் ஃப்ளர்ட் மீ. நீங்கள் செய்த மற்ற எல்லா அற்புதங்களையும் என்னால் எப்படின்னு விளக்க முடியும். நாளைக்கே எதிர்த்தாப்லே கூட்டம் போட்டு எல்லா வித்தையையும் நான் பொதுவுல செஞ்சு காட்டினா, நீங்க போலீஸ் ஸ்டேசன் போக வேண்டியிருக்கும். அதனால எப்படின்னு சொல்லிருங்க.”
கிரிதரானந்தர் கண்களில் கலவரம் காட்டினார். இருந்தாலும் நிதானமாக “ஏன் நாளைக்கு? இன்றே செய்ய வேண்டியதுதானே?”
“ஸீ! நீங்க ஊரை ஏமாத்துங்க. சொத்து சேருங்க. என்னமும் பண்ணிட்டுப் போங்க. எனக்கு வேண்டியது அந்த வித்தையை எப்படி செய்றீங்கங்கறதுதான்.”
“அதை நான் உன்கிட்டே சொன்னா, நாளைக்கே நீ என்னை போலீஸ்ல காட்டிக் கொடுத்துருவியே!”
”கண்டிப்பா மாட்டேன். சொல்லுங்க.”
கிரிதரானந்தர் சிறிது நேரம் மௌனமாயிருந்தார். “குருஜி! பைத்தியக்காரத்தனமா என்னை இந்த ஆசிரமத்துக்குள்ளேயே ஏதாவது பண்ணிறலாம்னு ப்ளான் பண்ணாதீங்க. நான் இன்னும் ரெண்டு மணி நேரத்துல திரும்பிப் போகலைன்னா போலீஸ் இங்கே தேடி வந்துரும். எல்லா ஏற்பாடும் பண்ணிட்டுதான் வந்தேன். இப்போ நாம பேசிட்டிருக்கிறதுகூட ஒரு இடத்துல ரெக்கார்டாயிட்டிருக்கு.”
கிரிதரானந்தர் ஒரு கணம் மறுபடி மறைந்தார். ஒரே ஒரு கணம்தான். மீண்டும் தோன்றினார். அந்த ஒரு கணத்தில், சிவநேசனுக்கு தன் உடலை யாரோ வருடி விட்டாற்ப் போல் இருந்தது.
”பொய் சொல்லாதே. ஒங்கிட்ட மைக் எதுவுமில்லை.”
“மைக் இருக்கிற இடத்தை அவ்வளவு ஈஸியா நீங்க கண்டுபிடிச்சுட்டா, என்னை மேலே கூட அனுப்பிருவீங்கன்னு தெரியாதா? பத்திரமா வச்சிருக்கேன். உங்களால கண்டுபிடிக்க முடியாது. இப்ப ரகசியத்தை சொல்றீங்களா? இல்லை நான் கிளம்பட்டுமா?” சமாளித்து விட்டார்.
“ஓகே. சொல்றேன். ஆனால் நீ யார்ட்டையும் சொல்லக்கூடாது. என்னைக் காட்டிக் கொடுக்கக் கூடாது.”
”சொல்ல மாட்டேன். சொல்லுங்க.”
ஒரு குடுவையை எடுத்து மேலே வைத்தார். “இதை தயாரிக்கிறதை என் குருநாதர்தான் சொல்லிக் கொடுத்தார். இதைக் குடிச்சா மனுசன் சாதாரணமா செய்ற எந்த வேலையையும் அசுர வேகத்தில் செய்யலாம். அந்த வேகத்தை உன்னால் அளக்க முடியாது. உண்மையைச் சொன்னால் வெறுங்கண்ணால் அந்த செயல்களை பார்க்கக் கூட முடியாது. அவ்வளவு வேகம். அப்படித்தான் இந்த தீர்த்தத்தைக் குடிச்சுட்டு, இந்த அறையிலிருந்து அசுர வேகத்தில் அந்த மேடையில் போய் உக்காந்துக்குவேன். பார்க்கிறவங்களுக்கு திடீர்னு பிரதட்சனமான மாதிரித் தெரியும். திரும்ப மேடையிலிருந்து மறைஞ்சு போறதும் இதே மாதிரிதான். தாக சாந்தி பண்ற மாதிரி கொஞ்சமா மேடைல குடிச்சுட்டு, இங்கே ஓடியாந்துருவேன். இதுல என்ன பிரச்சனைன்னா, இந்த தீர்த்ததோட வீர்யம் நாலு நிமிஷம்தான். அதனால ஒவ்வொரு முறையும் கொஞ்சம் முழுங்கனும்.”
சிவநேசன் அவரை முறைத்தார். “மறுபடி கதை சொல்றீங்க பாத்தீங்களா? குருஜி! ஐயம் சீரியஸ்! திரும்பத் திரும்ப பொய் சொன்னீங்கன்னா போலீஸ் வந்துடும்.”
“ஐயோ! சிவநேசன். இதுதான் உண்மை. டைம் வார்ப்னு கேள்விப் பட்டிருக்கியா? மூன்று பரிமாணங்கள் கொண்ட ஸ்தூல சரீரத்தோட, காலம்ங்கற நாலாவது பரிமாணம், நிரம்பவும் சுருங்கிப் போகும். அந்த சரீரத்துக்கு நாலு நிமிஷங்கறது நாலு மணி நேரமாயிடும். அதாவது ஒரு சாதாரண ஆளுக்கு நாலு நிமிஷமாத் தெரியறது, அந்த சரீரத்துக்கு மட்டும் நாலு மணி நேரமாத் தெரியும். இந்த மாதிரி ஒரு சூழலில், அந்த சரீரம் அதனோட ஒரு நிமிஷத்தில் நிதானமா செய்ற எந்தக் காரியமுமே, சாதாரணமானவங்களுக்கு அசுர வேகத்தில், கிட்டத்தட்ட கண்ணால் பார்க்க முடியாத வேகத்தில் செய்த காரியமா இருக்கும்.”
“ஹைஸ்பீட் கேமரா மூலமா எடுக்குற ஸ்லோமோஷன் மாதிரி, இல்லையா? குரு! முதல்ல மாய மந்திரம்னு சதாய்ச்சீங்க! இப்போ ஸைன்ஸ் ஃபிக்ஷன் கத சொல்றீங்க. கொஞ்சம் நம்பற மாதிரி கத சொல்லுங்க. ட்ரிக் என்ன?”
“என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன்னா எப்படி? வேண்ணா நீயே ஒரு ஸிப் குடிச்சுப் பாரு. ஒனக்கேப் புரியும்.” குடுவையின் மூடியில் அந்தத் திரவத்தை நிரப்பி நீட்டினார்.
அதை வாங்கப் போன சிவநேசன், சட்டென்று சுதாரித்துக் கொண்டார். ”முதல்ல நீங்க கொஞ்சம் குடிச்சுக் காட்டுங்க.”
“ஓ! நம்பிக்கையில்லையா?!” என்றவாறு குடுவையிலிருந்து நேரடியாகவே வாய்க்குள் சிறிது சரித்துக் கொண்டார்.
கிரிதரானந்தரின் தொண்டைக்குள் இறங்கிவிட்டதை உறுதி செய்தபிறகு, சிவநேசன் மூடியிலிருந்ததை எடுத்துக் குடித்துவிட்டு கிரிதரானந்தரைப் பார்த்தார். ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லை.
“வெளியே போய் பார்த்துட்டு வா!”
சிவநேசன் வெளியே வந்தார். பிரமித்து விட்டார். ஹாலில் இருந்தவர்கள் அனைவரும் சிலைகள் போல் நின்று/உட்கார்ந்து/குனிந்தவாறு இருந்தனர். யாரிடமும் அசைவில்லை. காவிக்கும் சிகப்புக்கும் நடுவான கலரில் சேலையணிந்திருந்த ஒரு பக்தை, ஹாலை பெருக்கியவாறே உறைந்து போயிருந்தாள். அவள் பெருக்கிய குப்பையிலிருந்து கிளம்பும் அழுக்கு புழுதிகள் காற்றில் ஒரே இடத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. ஆசிரமத்திலிருந்து வெளியே வந்தார். எல்லோரும் அப்படி அப்படியே அவர்கள் செய்யும் காரியங்களில் உறைந்து போயிருந்தனர். திறமையான சிற்பி ஒருவன் செதுக்கிய சிலைகள் போல், ஆனால் உயிருடன் உறைந்து போயிருந்தனர். வெளியே அவ்வளவு கூட்டமிருந்தும் சிறிதும் அவர்களது சத்தம் கேட்கவில்லை. ஆனால் ஒரு மிக சன்னமான ஊளை சத்தம் மட்டும் கேட்டது.
ஹைவேயில் வாகனங்கள் அப்படி அப்படியே நின்று கொண்டிருந்தன. உள்ளே டிரைவர்கள் கவனமாக ரோட்டைப் பார்த்தவாறே உறைந்திருந்தனர். அப்பொழுதுதான் அதைக் கவனித்தார். சுமார் ஐந்து வயது குழந்தை ஒன்று ஹைவேயில் நடுவே ஓடுவது போல் உறைந்திருக்க, அதை இடிப்பதற்கு சரியாக இரண்டு செண்டிமீட்டர்த் தொலைவில் அந்த வேன் - அதுவும் உறைந்திருந்தது. சிவநேசனுக்கும் அந்த இடத்துக்கும், சுமார் ஐநூறு மீட்டருக்கு மேல் இருக்கும்.
சிவநேசன் தாமதிக்கவில்லை. அறுபத்தி நான்கு வயதையும் பொருட்படுத்தாமல் அந்த இடத்தை நோக்கி ஓடினார். இதற்குள் அந்த வேன் மேலும் அரை செண்டிமீட்டர் நகர்ந்திருந்தது. பக்கத்தில் போனதும் நிதானமாக நின்று அந்தக் காட்சியை மறுபடி ஒரு முறைப் பார்த்தார். அந்த வேன் மேலும் அரை செண்டிமீட்டர் நகர்வதை பொறுமையாக கவனித்தார். பின் அந்தக் குழந்தையை மிக மெதுவாக எடுத்துக் கொண்டு சாலையின் ஓரத்திற்கு நடந்தார். அவசரமேப்படவில்லை. அந்தக் குழந்தை பார்ப்பதற்கு தெரிவதை விட கொஞ்சம் கனமாகவே இருந்தது. அதை சாலையோரத்தில் மெதுவாக வைத்தார். இப்பொழுது அந்தக் குழந்தை மீண்டும் சாலையின் குறுக்கே ஓடுவது போலவே நிறுத்தப்பட்டிருப்பதை கவனித்தார். மீண்டும் அதை எடுத்துத், திருப்பி ஆசிரமத்தை நோக்கி ஓடுவது போல் வைத்தார்.
இப்பொழுது சிவநேசனுக்கு திடீரென்று அந்த விநோத ஆசை வந்தது. மீண்டும் அந்த வேன் முன்னால் வந்து நின்றார். டிரைவரை பார்த்துக் கையாட்டினார். டிரைவரின் முகத்தில் குழந்தை குறுக்கே வந்த கலவரமே இன்னும் உறைந்திருந்தது. குழந்தை நின்ற இடத்தையே அவன் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன. சிவநேசன் அவன் பார்வை திசையை கவனித்து கொஞ்சம் குனிந்து அவன் கண்களுக்குள் பார்க்க முயன்றார். பின் மெதுவாக அந்த வேனின் அருகே சென்று வேனின் தலையை, தன்னுடைய தலையால் செல்லமாக முட்ட....
“ஆஆஆஆ.........”
வேன் க்றீறீறீச் என்று அசிங்கமாக ஹைவேயில் டயரைத் தேய்த்தது. டிரைவர் இன்னமும் ஆச்சர்யமாக பார்த்தான். ’குழந்தை எப்படி கிழவனானது?’. அங்கே ஒரு உடனடி மக்கள் வட்டம் ஒழுங்கில்லாமல் உருவாக, செய்தி மிக விரைவாக கிரிதரானந்தரின் காதுகளை எட்ட....
’அடப்பாவி சிவநேசா! விஞ்ஞானம் கத்துக்கும்போது முழுசா கத்துக்க வேணாமா? கைனடிக் எனர்ஜின்னு ஒன்னு இருக்கே. அது கூட போய் வெளையாடலாமா? சக்தியின் இயக்கம் ஆற்றல் வாய்ந்ததேடா’.
X-----X-----X
'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.
26 comments:
என் கல்லூரித்தோழன் என்பதால் இந்த பின்னூட்டம்.
கதை படித்துவிட்டு விமர்சகனாக அடுத்த பின்னூட்டம் வரும்.
எனக்கு அறிவியல் அவ்வளவா தெரியாது.....
நல்ல சுவாரஸ்யமா இருந்துச்சு....நல்ல முயற்சி...
வெற்றி பெற வாழ்த்துக்கள்..
நல்லா இருக்குங்க ...
கைனடிக் எனர்ஜி... நல்லா இருக்கு திருப்பம் :)
வாழ்த்துகள் ஜி!
நன்றி மொழி!!
ஸ்ரீதர்,
அப்பாடா இந்தக் கதையோட திருப்பமாவது நல்லாருக்குன்னு சொல்லிட்டீங்களே!!;-) நன்றி
சுவாரசியமான திருப்பம் மட்டுமென்றில்லாமல், சிவநேசன் எப்படிப்பட்டவர் என்பது நம்பும்படி இயல்பாக அமைந்திருக்கிறீர்கள். அத்தகைய அதிவேகத்திற்கு தொழில்நுட்பச் சாத்தியக்கூறு
இருக்கிறதா தெரியவில்லை, ஆனால் அதற்கான அறிவியல் அடிப்படையை மிகவும் தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள். மிகவும் ரசித்தேன்
good story dude...எப்படி உன்னால மட்டும் இப்படி யோசிக்க முடியுது...அதுக்கு தான் உன் பேரு யோசிப்பவரா????
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் யோசிப்பவர்.. நான் எதிர்பார்த்த சில வெற்றிக்கதைகளில் இதுவும் ஒன்று.. பாராட்டுகள்..
Vaazthukkal.
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!!!!
வாழ்த்துகள் நண்பரே ! :-)
வாழ்த்துகள் டா :) ஹிஹி இப்போதான் கதையை படிச்சேன்
"யோசிப்டச்" இருக்கு.கலக்கு.
ரொம்ப நல்லா இருக்கு. நம்ப முடியாத மாதிரி எதுவும் இல்லை இந்தக் கதையில். கைனடிக் எனர்ஜி - நல்ல திருப்பம்.
போட்டியில் வென்றதற்கு வாழ்த்துகள்.
அனுஜன்யா
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் தல.
நல்ல கதை. வெற்றிக்கு வாழ்த்துகள்!
-ப்ரியமுடன்
சேரல்
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் தல!!!
போட்டியில் வென்றதற்கு வாழ்த்துக் கூறிய நண்பர்கள், வெண்பூ, தமிழ் பிரியன், வெயிலான், ரெஜோ, அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், சேரல், வெட்டிப்பயல் ஆகியோருக்கு நன்றிகள்!!!
நான் போட்டிக்கு வந்த கதைகளில் மூன்று, நான்கு கதைகளைத் தவிர வேறு எதையும் இன்னும் வாசிக்கவில்லை. அதனால் வெற்றி பெற்றவர்களின் கதைகளையும் பெரும்பாலும் இன்னும் வாசிக்காததால், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்தும் சொல்லவில்லை. இனிதான் மெதுவாக ஒவ்வொன்றாக வாசித்து வாழ்த்து சொல்ல வேண்டும். (பேஸிக்கலா நான் ஒரு சோம்பேறி!!)
கதை அருமை,
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!
கதையை நீங்கள் வெளியிட்ட அன்றே நான் இங்கே (ருவாண்டாவில்) இருக்கும் என் நண்பர்களிடம் சொல்லி விட்டேன், இது வெற்றி பெறும் என்று.
வெற்றி பெற்ற இருபத்து கதைகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப் பட்டதைப் பார்த்ததும் சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை, அதே நண்பர்களுக்கு உடனே தொலை பேசி, "பாத்தியா நான் தான் அப்பவே சொன்னேன்ல" என்று பெருமைப் பட்டுக் கொண்டேன்.
உங்களை தொலை பேசியில் அழைத்த போது, நீண்ட நேரம் பேச இயலவில்லை.
மனமார்ந்த வாழ்த்துகள்.
சுந்தர்
ருவாண்டா
நன்றி இரவுப்பறவை!
அன்பு நண்பர் வணங்காமுடி அவர்களே, வாழ்த்துக்கு நன்றி!. மற்றவை ஃபோனில் அல்லது மின்மடலில்!!;-)
பரிசு பெற்றமைக்கு என் இனிய வாழ்த்துக்கள் :-)
நல்ல முயற்சி...,
கைனடிக் எனர்ஜி என்றால் என்ன ?
நல்லா இருக்குங்க ...
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் ...
மிக அழகான கதை.
நானும் போட்டிக்கு கதை எழுதுகிறேன் என்று கிளம்பி, அது அனுமார் வால் போன்று நீண்டு, என்னாலேயே அதை இரண்டாம் முறை படிக்கமுடியாமல், போட்டிக்கு தாமதம் ஆகிவிட்டதால் அனுப்பியிருந்தேன்.
முடிந்தால் படித்துவிட்டு பின்னுட்டம் எழுதவும்.(அனுப்பும்போதே இது selection கூட ஆகாது என்று நினைத்து தான் அனுப்பினேன்)
நல்ல கதை
நானும் உங்களை மாதிரிதான். ஹிஹி.. சோம்பேறி.!
இப்போதான் படிச்சேன். மிகவும் சுவாரசியம் குன்றாத கதையாக இருந்தது. பெரும்பாலும் விஞ்ஞானக்கதைகள் ஒரே ஃபார்மெட்டில் இருப்பது போல தோன்றும். இது அவ்வாறு இல்லாத மாதிரி இருந்தது சிறப்பு. ரசித்தேன். வாழ்த்துகள்.!
Post a Comment