Friday, February 27, 2009

யுதிஷ்ட்ரா

அந்தக் கலம் சென்று கொண்டிருந்தது. சந்தோஷ் கண் விழித்தான். கண்களின் முன்னால் பல நிறங்களில் திரவங்கள் நடனமாடின. ஸஸ்பெண்டட் அனிமேஷன் தொட்டிக்குள் இருந்து மெதுவாக தலையை மட்டும் வெளியே நீட்டினான். சந்தோஷ் மூச்சுக்குழாய்களில் உடனடியாக கடுமையான இறுக்கத்தை உணர்ந்தான். மீண்டும் தொட்டிக்குள் மூழ்கினான்.

'வெளியே ஏன் இன்னும் காற்று நிரப்பப்படவில்லை? இதற்குள் இருந்தவாறே கணிணியை கேட்கவும் முடியாது.’ ஸஸ்பெண்டட் அனிமேஷன் தொட்டிக்குள் உறங்க வைக்கப்படுமுன் பார்த்த காட்சிகளும், ட்ரெய்னிங்கின் பொழுது படித்த பாடமும் நினைவுக்கு வந்தன.

'சுவாச முகமூடிகள் இணைக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும் ஆக்ஸிஜன் பெட்டிகள், தொட்டிகளுக்கு அருகில் இருக்கும். ஒரு வேளை ஸஸ்பெண்டட் அனிமேஷன் நிலையிலிருந்து விழித்தெழுந்ததும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், முகமூடிகளை உடனே அணிந்து கொள்ளவும்'


'ஆக்ஸிஜன் பெட்டி உறங்கும் முன் அருகில்தான் இருந்தது. ஆம். ஞாபகம் இருக்கிறது. வலது புறம். வேகமாக சென்று அணிந்து கொள்ள வேண்டும்.'

ஒரு வினாடி நிதானித்து, சரேலென்று தொட்டியில் இருந்து வலதுபுறமாக வெளியே குதித்தான். முகமூடியை அதன் லாக்கிலிருந்து விடுவித்து, உடனடியாக மூக்கை மூடிக் கொண்டான். மூச்சு விட முடிந்தது. 'அப்பாடா!'.

நிதானமாக முகமூடியை தலையோடு இணைத்துக் கொண்டான். தனக்கான பெட்டியிலிருந்து, உடையை எடுத்து அணிந்து கொண்டான். 'ஏன் இன்னும் மற்றவர்களெல்லாம் விழிக்கவில்லை?'

கணிணியை தொடர்பு கொண்டான். "யுதிஷ்ட்ரா"

கலத்தின் கணிணி யுதிஷ்ட்ரா, "சந்தோஷ். விழித்து விட்டீர்களா?"

"ஆம். விழித்து விட்டேன். ஏன் இன்னும் கலத்தில் காற்று நிரப்பப்படவில்லை?"

"இன்னும் அதற்கான நேரம் வரவில்லை. அதனால் நிரப்பவில்லை."

"நேரம் வரவில்லையா? காற்று நிரப்பப்பட்ட பின்தானே எங்களை விழிப்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும்? அதற்கு முன் ஏன் என்னை விழிக்க வைத்தாய்?"

"நான் விழிக்க வைக்கவில்லை. நீங்களாக விழித்துக் கொண்டிருக்கிறீர்கள்?"

"நானாகவா? அது எப்படி முடியும்?"

"பத்து செகண்ட் பொறுங்கள்..........நீங்கள் உறங்கிக் கொண்டிருந்த ஒன்பதாம் எண் தொட்டியின் வெப்பம் கடைசி ஆறு மணி நேரமாக கணிசமாக உயர்ந்து வந்திருக்கிறது. வெப்பம் 6 டிகிரி அடைந்ததும், இயல்பாக எஸ்.ஏ தொட்டி அனுப்ப வேண்டிய எச்சரிக்கையை, எனக்கு அனுப்பவில்லை. எஸ்.ஏ தொட்டி ஒன்பதின் சென்ஸார்களில் பிரச்சனை. அதுதான் விழித்துக் கொண்டுவிட்டீர்கள்."

"யூ மீன், செயல் திட்டத்தை விட, நான் சீக்கிரமாகவே விழித்தெழுந்து விட்டேனா?"

"ஆமாம்."

"பயண காலம் எவ்வளவு தூரம் முடிந்திருக்கிறது?"

"பூமியிலிருந்து நூற்றிப் பதினாறு வருடங்கள், 206 நாட்கள், நான்கு மணி நேரம், முப்பத்தி ஏழு நிமிடங்கள், ஐம்பத்தி இரண்டு விநாடிகள்."

"வாட்? கிட்டத்தட்ட பாதி தூரம்தான் வந்திருக்கிறோமா?"

"நாற்பத்தி எட்டுப் புள்ளி அறுபத்தி ஏழு சதவிகித தூரம் வந்திருக்கிறோம்."

"யுதிஷ்ட்ரா! நிலைமை சிக்கலானது. எனது எஸ்.ஏ. தொட்டியில் என்ன பிரச்சனை, வெப்பம் ஏன் உயர்ந்தது என்று கண்டுபிடி. சீக்கிரம் சரி செய்"

"சரி சந்தோஷ். இன்னும் ஐந்து நிமிடத்தில் எஸ்.ஏ. தொட்டிப் பிரச்சனை குறித்து ரிப்போர்ட் செய்கிறேன்." அமைதியானது.

சந்தோஷ், பூர்ணா, ....., விஷ்வா ஆகிய ஒன்பது பேரும், அருகிலிருக்கும் எஃப்ஸிலான் எரிடனி சூரியனைச் சுற்றும், பூமியை ஒத்த கோளுக்கு, 'உயிர் வாழ இடம் தேடி' திட்டத்துக்காக, பூமியிலிருந்து பொறுக்கியெடுத்து அனுப்பப்பட்ட விஞ்ஞானிகள். பயண காலம் 239 வருடம் 284 நாட்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. அவ்வளவு காலம் பயணிகள் உயிரோடு இருந்தாக வேண்டும். தலைமுறை பயணிகளாக திட்டம் அமைத்தால், உணவு, காற்று, கழிவு என்று பல சிக்கல்கள். அதற்குப் பதிலாக பயணிகளை ஸஸ்பெண்டட் அனிமேஷனில் மூழ்கவைத்து தூங்க வைத்தால், அவர்களது இதயத் துடிப்பை வெகுவாக குறைத்து, ரத்த ஓட்டத்தைக் குறைத்து, திரவ சுவாசம் கொடுப்பதால், அவர்களது வாழ்நாளை நீட்டிக்கலாம். உடல் முதிர்வடையாமல் உயிரையும் பாதுகாக்கலாம். செலவும் தலைமுறைத் திட்டத்தோடு ஒப்பிடுகையில் வெகு குறைவு. பயணம் முடியும் கடைசி மணி நேரங்களில் பயணிகளை எழுப்பினால் போதுமானது. இடைப்பட்டப் பயணத்தைக் கலத்தின் கணிணி யுதிஷ்ட்ராவே கவனித்துக் கொள்ளும்.

'இன்னும் நூறு வருடங்களுக்கு மேல் பாக்கி இருக்கின்றன.' இந்த எண்ணமே சந்தோஷின் மனதில் சுற்றிக் கொண்டிருந்தது.

'எஸ்.ஏ.தொட்டியில் ஏன் திடீரென்று பிரச்சனை வந்தது? நூறு வருடங்கள் கலத்தினுள் கழிக்க முடியாது. அப்படி கழிக்க நேர்ந்தால் முப்பது, நாற்பது வருடங்களுக்குள் வயதாகி இறந்து விடுவேன். எஸ்.ஏ.தொட்டிதான் பாதுகாப்பு.'

"சந்தோஷ்" யுதிஷ்ட்ரா.

"என்ன. சரியாகிவிட்டதா?"

"இல்லை சரி செய்ய முடியவில்லை."

"என்ன பிரச்சனை?"

"தேவையான அளவுக்கு ஹைட்ரஜன் சல்ஃபைடு உற்பத்தியாகவில்லை. தேவையற்ற ஆர்கான் ரஸாயனத் திரவம் தொட்டியில் 19.6 சதவீதம் காணப்படுகிறது. ரஸாயன மாற்றங்கள் திட்டமிட்டபடி ஏற்படவில்லை."

"இப்பொழுது என்ன செய்வது?"

"கேள்வி நேரடியாக இருப்பது நல்லது. பொதுப்படையானக் கேள்விகளுக்கான பதில்கள் ஏராளம்."

"சரி, இப்பொழுது எஸ்.ஏ. தொட்டியை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?"

"ஆர்கான் திரவத்தை தொட்டியிலிருந்து அகற்ற வேண்டும். ஹைட்ரஜன் சல்ஃபைடு உற்பத்தியை சிறிது கூட்ட வேண்டும்."

"அப்படியென்றால் ஆர்கான் திரவத்தை தனியாகப் பிரித்து வெளியேற்று."

"ஆர்கான் திரவத்தை தனியாக பிரிக்க முடியவில்லை."

"இப்பொழுது சரி செய்ய முடியுமா? முடியாதா?"

"முடியலாம். அதற்குத் தேவையான பொருட்களும், ப்ரொசீஜர்களும் என்னிடம் இல்லை."

சந்தோஷிற்கு இப்பொழுது தெளிவாகத் தெரிந்து விட்டது. 'இனி எஸ்.ஏ. தொட்டிப் பயனில்லை.'

"யுதிஷ்ட்ரா, எஸ்.ஏ தொட்டிப் பிரச்சனையை உன்னால் சரி செய்ய முடியாது. தொட்டிக்கு வெளியே நானும் அதிக காலம் வாழ முடியாது. இந்த நிலையில் மாற்றுத் திட்டம் ஏதாவது, பூமி விஞ்ஞானிகள் உனக்குள் ஏற்படுத்தியிருக்கிறார்களா?"

"சந்தோஷ், இந்தப் பிரச்சனை விஞ்ஞானிகளால் எதிர்பார்க்கப்படவில்லை. அதனால் மாற்றுத் திட்டம் ஏதுமில்லை. மாற்றுத் திட்டம் இருந்தால் உங்களுக்கும் அது தெரிவிக்கப்பட்டிருக்கும்."

"அது எனக்குத் தெரியும். இருந்தாலும் உன்னிடம் ஏதாவது ரகசியத் திட்டம் இருக்கிறதா என்பதற்காகக் கேட்டேன்."

"ரகசிய மாற்றுத் திட்டம் ஏதுமில்லை."

"யுதிஷ்ட்ரா, இப்பொழுது நான் என்ன செய்யலாம்?"

"சந்தோஷ். தயவுசெய்து நேரடியான கேள்வி கேட்கவும்."

"மறுபடி நான் எஸ்.ஏ. தொட்டியில் உறங்க முடியாது என்ற நிலையில், நான் என்னவெல்லாம் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது?"

"இரண்டு சாத்தியக்கூறுகள், இந்தக் கேள்விக்கு, எனது ஹியூரிஸ்டிக் ப்ரோக்ராமில் தோன்றுகிறது."

"அவை என்னென்ன?"

"முதலாவது, என்னிடம், நீங்கள் அதிக காலம் வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜன் இல்லை; உணவு மாத்திரைகள் இல்லை; இவையெல்லாம் ஒன்பது பேருக்கு, இரண்டு வருடம் தேவையான அளவுக்கு திட்டப்படி உள்ளது. அவையனைத்தையும் உபயோகித்து, சிறிது காலம் இந்தக் கலத்தில் நீங்கள் உயிர் வாழலாம். இந்த சாத்தியக்கூறில், உங்களுக்கு செய்வதற்கு வேலையோ, பொழுதுபோக்கிற்கோ எதுவும் கிடையாது. அதனால் இறப்பதற்கு வெகு காலம் முன்பே மூளை பழுதடைந்து பைத்தியம் பிடித்து விடும்."

’பைத்தியம் பிடிப்பதை விட அபாயமான பிரச்சனை ஒன்றிருப்பதை இந்த இயந்திர மூளை உணரவில்லை. ஒன்பது பேருக்குரிய உணவையும், காற்றையும் நானே உபயோகித்து விட்டால், மற்றவர்கள் விழித்தெழும்பொழுது அவர்களுக்கு உணவோ ஆக்ஸிஜனோ இருக்காது. அல்லது பற்றாக்குறை ஏற்படும். மிஷன் முழுவதுமாக தோல்வியடைவதுடன், மற்ற எட்டு பேரும் ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்து போவார்கள். எட்டு பேர் - என்னால்.’

“இரண்டாவது சாத்தியக்கூறு?”

“நீங்கள் உடனடியாகவோ, சிறிது காலம் கழித்தோ தற்கொலை செய்து கொள்ளலாம்.” அதன் குரலில் துளியும் வருத்தமில்லை.

“இரண்டில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.”

“சரி யுதிஷ்ட்ரா. நான் சிறிது சிந்திக்க வேண்டும். முடிந்தவரை எஸ்.ஏ. தொட்டியை சரி செய்ய முயன்று கொண்டே இரு. முன்னேற்றம் தெரிந்தால் எனக்குத் தகவல் கொடு.”

“சரி சந்தோஷ்.”

சந்தோஷ் யோசித்தான். ’யுதிஷ்ட்ரா சொல்வது சரிதான். நான் உயிரைத் தக்க வைத்துக் கொண்டால்கூட வேலையோ, பொழுதுபோக்கோ இல்லாமல் இருந்தால் நிச்சயம் பைத்தியம் பிடித்து விடும். பொழுதுபோக்க ஏதாவது வழி இருக்கிறதா? பென்சில். பென்சில்கள் இருக்கின்றன. எழுதக் காகிதம் இல்லாவிட்டாலும் இந்தக் கலத்தின் பெரும்பகுதி பொருட்கள் பென்சிலால் எழுதப்படக்கூடிய பொருட்களாலேயே செய்யப்பட்டிருக்கிறது. பென்சில்களால் அவற்றில் ஏதாவது எழுதிக் கொண்டு, கிறுக்கிக் கொண்டு பொழுதைப்போக்கலாம். ஆனாலும் இது மட்டும் அதிக உதவி செய்து விட முடியாது. சேமிக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜனைக் கொண்டு, எவ்வளவு மெதுவாக மூச்சு விட்டாலும், இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் உயிரோடிருக்க முடியாது. இடையில் பைத்தியம் வேறு பிடித்துவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். இருபத்தி ஐந்து வருடங்கள் உயிரோடிருந்து பின் ஆக்ஸிஜன் போதாமல் இறக்க நேர்ந்தாலும், மற்றவர்களுக்கும் அதே கதி, அவர்கள் விழித்தெழுந்ததும் நேரும். எட்டுபேரின் உயிரும் என் ஒருவனால் போய் விடும். 1=8டா?. மிக அநியாயம். அதுவும் அந்த 1க்கு வாழ அர்த்தமேயில்லாதபொழுது. ம்ம்.’

சந்தோஷ் சிறிது நேரம் தீவிரமாக யோசித்துப் பார்த்தான். பின் ஒரு முடிவோடு எவாக்வேஷன் எக்ஸிட்டை நோக்கி சென்றான்.

“யுதிஷ்ட்ரா. நான் வெளியேற வேண்டும். எவாக்வேஷன் எக்ஸிட்டை திற. நான் வெளியேறியதும் மூடிவிடு.”

“சரி சந்தோஷ்.”

கதவு திறந்தது. வெளியே குதிக்குமுன், ‘எனக்கு எதற்கு இந்த ஆக்ஸிஜன் பெட்டி?! உயிரோடிருக்கும் எட்டு பேரில் ஒருவருக்காவது முப்பது நாட்கள் உபயோகப்படுமே!!’, நினைத்ததும் பெட்டியைத் தனியே கழற்றி, வாசலுக்கு அருகே வைத்தான். மூச்சை ஒரு முறை நன்றாக இழுத்து விட்டு, முகமூடியைக் கழற்றிவிட்டு வாசல் சுவற்றில் காலை நன்றாக ஊன்றி பலமாக சுவற்றை உதைத்து,...

கதவு மூடிக்கொண்டது.

யுதிஷ்ட்ரா தனது டேட்டாபேஸை அப்டேட் செய்தது. “கலத்திலிருக்கும் மொத்த உயிர்கள் = 0”.

அந்தக் கலம் சென்று கொண்டிருந்தது.

5 comments:

Thamiz Priyan said...

நல்ல இமாஜினேசன். ஒரே நாளில் இத்தனைக் கதைகளா? வாவ்!

யோசிப்பவர் said...

//ஒரே நாளில் இத்தனைக் கதைகளா?//
இல்லை தமிழ் பிரியன். ஏற்கெனவே எழுதி வைத்திருந்தேன் - சுஜாதா நினைவு சிறுகதை போட்டிக்காக. இன்று பதிவிலிட்டேன். அவ்வளவுதான்

காஞ்சனை said...

//யுதிஷ்ட்ரா, எஸ்.ஏ தொட்டிப் பிரச்சனையை உன்னால் சரி செய்ய முடியாது. தொட்டிக்கு வெளியே நானும் அதிக காலம் வாழ முடியாது//
//சந்தோஷ், இந்தப் பிரச்சனை விஞ்ஞானிகளால் எதிர்பார்க்கப்படவில்லை//

யோசிப்பவரே,
இவ்விடத்தில் லாஜிக் இடிப்பதாகப் படுகிறது எனக்கு. இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்தும் விஞ்ஞானிகள் குழு இப்பிரச்சனையைக் கட்டாயம் கவனத்தில் கொண்டிருப்பார்கள். கதை என்பதால் இதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாம். முடிவு நன்றாக இருக்கிறது.

Vanchinathan said...

மஹாபாரதத்தில், நச்சுப்பொய்கைத் தண்ணீரைக் குடித்து 'இறந்துபோன" சகோதரர்களை யுதிஷ்ட்ரர்
மீட்டார். இதென்ன உங்களுடைய இந்த யுதிஷ்ட்ரா
இப்படிச் செய்கிறார்?

யோசிப்பவர் said...

வாஞ்சி அவர்களே,

மஹாபாரதத்தில் யுதிஷ்ட்ரர் உண்மையை மறைத்ததால் துரோணர் இறந்தார். துரோணர் அவரிடம் பொய் இருக்கும் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. மேலும் யுதிஷ்ட்ரர் பொய் சொல்லவில்லை என்று சொன்னாலும், உண்மையை மறைத்தார்.

இங்கேயும் இயந்திரம் பொய் சொல்லவில்லை. கதாநாயகனும் இயந்திரத்திடம் பொய் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இயந்திரம் மறைத்த உண்மையால் இங்கே சாவு!!