Thursday, October 18, 2007

விடுமுறை

ஒரு வழியாக வான டிராஃபிக் ஜாம்களைத் தாண்டி, செல்வா ஸ்டேஷன் வந்து சேர்ந்தான். அவனது திட்டப்படி, ஏற்கனவே இரண்டு நிமிடங்கள் லேட்.

ஸ்டேஷனில் நடப்பதே கஷ்டமாயிருந்தது. தீபாவளிக் கூட்டம். நல்லவேளை! மூன்று மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்திருந்தான். அதனால் கவலையில்லை. ஆறு மாதமாயிற்று - கடைசி முறை அவன் வீட்டிற்கு சென்று. இந்த முறை பத்து நாட்கள் - தீபாவளி விடுமுறை.

இருக்கையைத் தேடிப் பிடித்து அமர்ந்தபொழுது சந்தோஷமாக இருந்தது. வீட்டுக் குழந்தைகளுக்கு வாங்கியிருந்த, விளையாட்டு ஜாமானான அந்த மடிக்கணிணியே, பாதி பேக்கை அடைத்துக் கொண்டிருந்தது. அழுக்குத்துணிகளை பெரிய பிளாஸ்டிக் பையில் கட்டியிருந்தான். வீட்டிற்குப் போய் நல்ல தண்ணீரில் துவைக்க வேண்டும்.

வண்டி கிளம்பும் நேரம் வந்தும், இன்னும் கிளம்பாமல் இருந்தது. கூட்டம் அதிகமிருந்ததால், கொஞ்சம் தாமதித்துதான் எடுப்பார்கள் என்று அருகிலிருந்தவர் சொன்னார். எப்பொழுது கிளம்பினாலும், வீட்டிற்குப் போய் சேர்ந்தால் சரிதான் என்று நினைத்துக் கொண்டான்.

தனது இருக்கையில் வசதியாக சாய்ந்து கொண்டு யோசித்தான். இந்த நிலத்தில் வேலை செய்வது இப்பொழுது அவனுக்கு வெறுத்துவிட்டது. குடிப்பதற்கு மாதத்திற்கு ஒரு முறை பத்து லிட்டர் மட்டுமே நல்ல தண்ணீர் மஞ்சள் நிறத்தில் கிடைக்கிறது. குளிப்பதற்கெல்லாம் அந்த வாடைவீசும் கறுப்பு நீர்தான். அதுவும் தினசரி ஒரு பக்கெட்தான். இதனாலேயே செல்வா பல நாட்கள் குளிப்பதில்லை. வீட்டிற்குப் போய் ஒரு நல்ல குளியல் போட வேண்டும். இங்கே காற்று கூட கறுப்பாயிருக்கிறது. வெப்பம் வேறு அறுபது டிகிரிக்கு கீழ் குறைவதில்லை.

என்ன எழவிற்காக இங்கே இன்னும் வேலை செய்ய வேண்டும். பேசாமல், வீட்டிற்கு அருகிலேயே ஏதாவது ஒரு வேலை தேடிக் கொள்ள முடியாதா? தினசரி வீட்டுச் சாப்பாடாவது கிடைக்கும். ஒரே ஒரு காரணம்தான். சம்பளம்! இந்த இடத்தில் கிடைப்பது போன்ற சம்பளத்தில், பாதிகூட அங்கு அவனுக்குக் கிடைக்காது. இதை நினைக்கும்பொழுது செல்வாவிற்கு, அவன் மேலேயே கோபம் வந்தது. 'சே! கேவலம் பணத்திற்காக என்னையே விற்கிறேனே!'. சந்தோஷமாக ஆரம்பமான சிந்தனை, சுயபரிசோதனையால் பச்சாதாபமானதில், முடிவில் கோபமே மனதில் தங்கியது.

"த்தம்ப்பி..." என்ற தெத்துக் குரல் அவன் சிந்தனையை தாக்கியது. திரும்பி பார்த்தான். மிகவும் நைந்து போயிருந்த உடையில் அந்த வயதான கிழவி, அவனை நோக்கி கை நீட்டினாள். அவன் அவளை ஒரு விநாடி மேலிருந்து கீழாக பார்த்தான். ஊனம் எதுவுமில்லைதான். ஆனாலும் இத்தனை வயதிற்கு மேல் அந்தக் கிழவி வேறு எந்த வேலையும் செய்து பிழைக்க முடியாது. அவள் நீட்டிய இயந்திரத்தில் தன் கைவிரல் ரேகையை பதித்து, பின் 100 என்று டைப் செய்தான். 'ரூ.' என்று தானாகவே சேர்ந்து கொண்டது. அந்தக் கிழவி அவனை வாழ்த்திவிட்டு அடுத்த இருக்கை நோக்கி மெதுவாக ஆடி ஆடி நகர்ந்தாள். அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் நினைத்துக் கொண்டான், 'இவள் கூட ஒரு வகையில் சுதந்திரமானவளோ?!'

அப்பொழுது வண்டி கிளம்பும் அறிவிப்பு ஒலிக்க ஆரம்பித்தது. "ஏரோ ஸ்பேஸ் எர்த் ஸ்டேஷனிலிருந்து, நிலவிற்கு செல்லும் ஸாலிட்டர் ஸாட்லைட் ஷட்டில், இப்பொழுது கிளம்பவிருக்கிறது."

10 comments:

காஞ்சனை said...

அச்சச்சோ! ரொம்பவே யோசிக்கறீங்கப்பா.
//'இவள் கூட ஒரு வகையில் சுதந்திரமானவளோ?!'//
ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நிச்சயமாய் நினைத்துப் பார்க்கும் வார்த்தைகள் இவை.
கதைக்கள‌ம் நன்று.

சகாரா.

யோசிப்பவர் said...

சகாரா,
//அச்சச்சோ!//
இது ஆச்சர்யமா இல்லை அனுதாபமா?;-))

//ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நிச்சயமாய் நினைத்துப் பார்க்கும் வார்த்தைகள் இவை.
கதைக்கள‌ம் நன்று.
//
நன்றி!!

யோசிப்பவர் said...

கொத்ஸ்,

நீங்க இந்த பக்கம் வந்து ரொம்ப நாளாச்சின்னு நினைக்கிறேன். வருகைக்கு நன்றி!;-)

Boston Bala said...

:)

யோசிப்பவர் said...

நீங்கள்ளாம் இப்படி சிரிக்கிறதைப் பார்த்தா, நான் ஏதோ காமெடி கதை எழுதியிருக்கிறேனோன்னு தோனுது!;-))

காஞ்சனை said...

//சகாரா,
//அச்சச்சோ!//

இது ஆச்சர்யமா இல்லை அனுதாபமா?;‍))//

ஆச்சர்யம், அனுதாபம் இரண்டுமே தான்.
உங்கள் கதை சொல்லும் பாணியை நான் வியந்தேன்.
இந்த கதையின் நாயகன் செல்வாவிற்கு அனுதாபங்கள்.

- சகாரா.

காஞ்சனை said...

ஏங்க யோசிப்பவரே! இருக்கீங்களா இல்ல ஊருக்கு எங்காச்சும் போய்ட்டீங்களா?
நீங்க எழுதற கதைய‌ படிக்க நாங்க எல்லாம் க்யூவுல நிக்கறோம். நீங்க பாட்டுக்கு சிவனேன்னு உக்காந்து மூணு மாசமா யோசிச்சுட்டேடேடே... இருக்கீங்களே. (ஓ.. அதான் யோசிப்பவர்னு பேர் வச்சிருக்கீங்களோ.அவ்வ்வ்வ்...) இது உங்களுக்கே நியாயமா இருக்கா? க‌தை விடுங்க‌ப்பா சீசீ க‌தை எழுதுங்க‌ப்பா. ப‌டிக்க‌ ஆவ‌லா இருக்கோமில்ல.

- சகாரா.

யோசிப்பவர் said...

இருக்கிறேன் சகாரா. என் கதையை படிக்கிறதுக்கு எதுக்கு க்யூவுல நிக்கனும்? மானிட்டர் முன்னாடி உட்கார்ந்தே படிக்கலாமே. நீங்க நிற்கிற கியூவை சரியா பாருங்க. ரேஷன் கடையா இருக்கப் போவுது. அமெரிக்கன் எம்பஸியா கூட இருக்கலாம்.;-))

அது ஒன்னும் இல்லை. ஸ்ரீதேவியோட மொழிபெயர்ப்பு நாவல் ஒன்றை தட்டச்சும் வேலையில் ஈடுபட்டிருப்பதால், கதை எதுவும் யோசிக்க வில்லை. அநேகமாக பொங்கல் முடிந்ததும் ஸ்ரீதேவி எழுதும் தொடர் ஒன்று ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு முன் ஏதாவது கதை தோன்றினால் எழுத முயல்கிறேன்(இப்போதைக்கு ஒன்லைன் மட்டும்தான் தோனியிருக்கு!!)

காஞ்சனை said...

//என் கதையை படிக்கிறதுக்கு எதுக்கு க்யூவுல நிக்கனும்? மானிட்டர் முன்னாடி உட்கார்ந்தே படிக்கலாமே.//

இல்லங்க. நீங்க ரொம்ப விறுவிறுப்பா கதை எழுதறீங்களா அதனால பொறுமையா உட்கார்ந்து படிக்க முடியறதில்லை. :)

//ஸ்ரீதேவியோட மொழிபெயர்ப்பு நாவல் ஒன்றை தட்டச்சும் வேலையில் ஈடுபட்டிருப்பதால், கதை எதுவும் யோசிக்க வில்லை.//

வாழ்த்துக்கள் ஸ்ரீதேவிக்கு..

//(இப்போதைக்கு ஒன்லைன் மட்டும்தான் தோனியிருக்கு!!)//

ம்..ம்.. சீக்கிர‌மா எழுதுங்க‌. எப்ப‌வும் போல‌ கியூவுல‌ வெயிட் ப‌ண்றேன் உங்க‌ க‌தைய‌ ப‌டிக்க‌ற‌துக்கு.

- சகாரா.

சிறில் அலெக்ஸ் said...

:)

நல்ல கற்பனை.
இன்னும் யோசியுங்க..