Sunday, July 10, 2011

சமச்சீர் விச்சு

சமச்சீர் தீர்ப்பால், அம்மாவை விட அதிகமாய் கவலைப்பட்டது விச்சுவாகத்தான் இருக்க முடியும். (கதாசிரியரின் இடைச் செருகல்:- அம்மா என்பது விச்சுவின் அம்மாவைக் குறிக்கிறது என்பதை பணிவுடன்(!) தெரிவித்துக் கொள்கிறேன்). SSLC நேரத்தில் இப்படி மாறி மாறி முடிவுகள் வருகின்றனவே என்பதுதான் அம்மாவின் கவலை.

விச்சுவை, குறைந்தபட்சம் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுக்க வைத்து விட வேண்டும் என்று அம்மாவின் திட்டம். அதற்காக விடுமுறையிலேயே, நெட்டில் டவுண்லோடு செய்த சமச்சீர் பாடங்களை வைத்து, ரெகுலர் கோச்சிங், திடீர் கோச்சிங்,ஸ்பெஷல் கோச்சிங், ஒன்வர்டு கோச்சிங் என்று பலவித போராட்டங்களில் விச்சுவை ஈடுபடுத்தியிருந்தார். விடுமுறையில் சந்தோஷமாக இருக்க முடியவில்லையே என்று விச்சு கடுப்பில் இருந்தாலும், காந்திஜி, நேருஜி, நேதாஜி இவர்களின் போராட்டங்களை எண்ணிப் பார்த்து தன் மனதை திடப்படுத்திக் கொண்டான்.

சமச்சீர் பாடத்திட்டத்தில், ஒரு மாதிரி பாதிக்கு மேல் படித்து முடித்து விட்டான். அப்போது வந்ததே ஒரு அதிரடி தீர்ப்பு! ரெண்டு நாளில் விச்சுவின் சமச்சீர் பணால் ஆனது!! இனி மெட்ரிக் பாடத்திட்டம் தானாம்!!!

என்ன கொடுமை சரவணன் சார்! படிச்சதெல்லாம் வேஸ்ட் ஆயிட்டே... ஏதோ இந்த மட்டும் ரெண்டு வாரம் உபரி லீவு கிடைத்ததே... ஜாலியா இருக்க வேண்டியதுதான் என்று தன் மனதை விச்சு ஆறுதல் படுத்தினாலும், அம்மா விடவில்லை.

பழைய புத்தகம் ஒன்றை வாங்கி, டியூசன் படிக்க ஏற்பாடு செய்ய, விச்சுவின் தசாவதார போராட்டம் மீண்டும் முதல் படியிலிருந்து ஆரம்பமானது!

உனக்கு ஸ்டேட் ஃபர்ஸ்ட்டை தவிர வேறெதுவும் கிடைக்க வாய்ப்பே இல்லைடா விச்சு!”, என்று அம்மா ஏற்றி விட, அவனும் மெட்ரிக் பாடங்களை உருப்போட ஆரம்பித்தான்.

பள்ளியிலும் ஸ்பெஷல் கோச்சிங்கை திருட்டுத்தனமாய் ஆரம்பித்து விட்டனர். யாராவது கேட்டா நானாகத்தான் சந்தேகம் கேட்க வந்தேன்னு சொல்லணும்னு அறிவுரை வேறு...! நாங்களெல்லாம் அந்தளவிற்கு சின்சியராக ஆயிட்டோமா....? எரிச்சலில் விச்சு இருந்தாலும், படிப்பதை விடவில்லை. ஸ்டேட் ஃபர்ஸ்ட்ன்னா சும்மாவா?

ஆனால், ரெண்டாவது போராட்டத்திற்கும் இப்படி கோர்ட் மூலம் தடங்கல் வரும்னு எதிர்பார்க்கவேயில்லை.

விச்சுவிற்கு தலை சுற்றியது... இனி என்ன செய்ய? மீண்டும் சமச்சீர் பாடங்கள் தானா? இல்லை புதிதாக சிலபஸ் தயாரிப்பார்களா?

என் பையனுக்கு மட்டுந்தான் இப்படியெல்லாம் நடக்கணுமா?, என்று அம்மா அங்கலாய்த்தாலும், விக்கிரமாதித்தன் போல சற்றும் மனந்தளராமல், மீண்டும் சமச்சீர் பாடத்தை ஆரம்பித்தார்.

அடப்போம்மா... ரெண்டு நாள் ஃபிரீயா விடுங்க

சமச்சீர் கூட நல்லதுதான் விச்சு... பாடங்கள் கம்மி. நல்ல மார்க் வாங்கலாம். 500க்கு 500 நீதான் வாங்கப் போறியோ என்னவோ...!என்று பாஸிட்டிவாக அம்மா கூற, மீண்டும் சமச்சீர் ஜெராக்ஸுகள் தூசி தட்டப்பட்டன.

ஒருவழியாய் பள்ளி ஆரம்பித்து விட்டது. முதல் கிளாஸ் கூட ஒழுங்காய்தான் போனது. அடுத்து வந்த சயின்ஸ் மாஸ்டர் தான் ஒரு பெரிய ஹிரோஷிமா அணுகுண்டைப் போட்டார்.

இன்னும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வர வேண்டியதிருக்குடா... பழையபடி மெட்ரிக் சிலபஸே வரலாம். அதனால் என்ன பண்றீங்க... தினமும் ரெண்டு சிலபஸிலும் ஹோம்வொர்க் தருவேன்! ரெண்டையும் படித்துவிட்டு வரவேண்டும்!!”, என்று அக்கறையோடு கூற, விச்சுவோடு சேர்ந்து அனைத்து மாணவர்களும் அழாத குறைதான்.

அவருக்கென்ன.... கூறிவிட்டார்....

அகப்பட்டவன்...”, என்று விச்சு ஆரம்பிக்க, “நாங்களடா...”, என்று சக மாணவர்கள் சோகத்தோடு கோரஸ் பாடினர்.

சயின்ஸ் மாஸ்டர் பற்ற வைத்த திரி, மற்ற ஆசிரியர்களுக்கும் தெரிந்து விட்டது. எங்களை கொல்லணும்னா எல்லோரும் ஒற்றுமையாய்டுவாங்களே...! விளைவு... எல்லா ஆசிரியர்களும் மெட்ரிக், சமச்சீர்னு ரெண்டு திட்டங்களிலும் ஹோம்வொர்க் கொடுக்க, விச்சு காண்ட்டாயிட்டான்!

டேய்... இந்த குளறுபடி எப்படா முடியும்...?”

டிசம்பர்ல கூட தீர்ப்பு வந்து பாடத்திட்டம் மாற்றப்படலாம்னு எங்க மாமா சொல்றாங்கடா...!

ஒரேடியா ஊத்தாதேடா...

நெசமாத்தாண்டா. கொஞ்ச வருஷத்திற்கு முன்னால் என்ஜினியரிங் நுழைவுத்தேர்வு விஷயமா, கோர்ட், கேஸ்னு சென்று, ஒரு முடிவுக்கு வர ஆறு மாசம் ஆனதாம்...

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எப்படி வந்தாலும், அப்பீல் அது இதுன்னு இழுத்தடிப்பாங்களாம்டா...

இப்படி பசங்க வேறு பீதியை கிளப்பிக் கொண்டிருக்க, விச்சு குழப்பத்தில் இருந்தான்.

இப்பவும் அம்மா விடவில்லை.

உன் சயின்ஸ் மாஸ்டர் சொல்றது சரிதான். கோர்ட்க்கு போயிட்டாலே தீர்ப்பு வரவும் லேட்டாகும். அப்படியே வந்தாலும் அப்பீல் பண்ணி பண்ணி இழுத்துக்கிட்டே தான் இருப்பாங்க. அதனால, எந்த பாடத்திட்டம்னு தெளிவா தெரியற வரைக்கும் ரெண்டையும் படிடா... உன்னால் முடியும்டா விச்சு... உன் திறமை உனக்கே தெரியாதுடா...!”, என்று அம்மா உற்சாகப்படுத்தினார்.

நெசமாத்தானா....? என் திறமை எனக்கே தெரியலையோ...? ஐயோ.... ஒரு பாடத்திட்டத்தில் படிக்கிறதுக்குள்ளே நொந்து நூடுல்ஸாகி விடுகிறேன்... இதுலே ரெண்டா...? நோ... நோ... மனந்தளரக்கூடாது... யூ கேன் டூ... நம்பிக்கை... நம்பிக்கை... என்னத்த நம்பிக்கை...!

சமச்சீர், மெட்ரிக் என்ற இரண்டு வார்த்தைகளும் அவன் மூளையை சுற்றி சுற்றி வட்டமிட்டு விளையாடிக் கொண்டிருந்ததை, தடுக்க நினைத்து முடியாமல், வேறு வழியில்லாமல் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே விச்சு தூங்கி விட்டான்.

அடுத்த நாளிலிருந்து விச்சு தெளிவாகி விட்டான். மாஸ்டர் சொன்னபடி ரெண்டு சிலபஸிலும் படிக்க வேண்டியது தான்! முடிவு எதுவாகுதோ... ஆகட்டும். படிப்பது நமக்கு நல்லது தானே!

இப்படியே ரெண்டு வாரமாக, ரெண்டு பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் விச்சு! இருந்தாலும் உற்சாகமாகவே இருந்தான். மற்ற மாணவர்களெல்லாம் ஒரு சிலபஸிலேயே திணறிக் கொண்டிருக்க, அவன் மட்டும் ரெண்டிலும் கலக்கிக் கொண்டிருந்தான். அப்பாட... இது கூட ஒருவிதமா செட்டாகிவிட்டது.

டியூஷன் முடிந்து விச்சு அன்று வீட்டிற்கு வந்த போது, இரவு மணி ஒன்பது. அங்கோ அம்மாவும், அப்பாவும் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படியென்ன சந்தோஷமான செய்தி. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்து விட்டதா...? என்ன பாடத்திட்டம்னு முடிவாகி விட்டதா....?

கேள்விக்குறியுடன் அப்பாவிடம் சென்றான்.

விச்சு, அப்பா நீண்ட நாளா கேட்டுட்டு இருந்த புரமோஷனும், டெல்லி டிரான்ஸ்பரும் வந்திடிச்சு...! வீடு, கார் எல்லாம் கம்பெனியே கொடுக்குது...! வாவ்... ஐயாம் எக்சைட்டட்.... இன்னும் ரெண்டு நாளில் நாமெல்லாரும் டெல்லி போகிறோம்!

டெல்லியா....? அப்படின்னா என் ஸ்கூல்....?”

கம்பெனியே ஸ்கூல் அட்மிஷனையும் பார்த்துட்டாங்க. இண்டர்நேஷனல் ஸ்கூல். இந்த சமச்சீர், மெட்ரிக் தொல்லைகள் கிடையாது. உனக்கு இனி சென்ட்ரல் போர்டு சிலபஸ்டா....!”, என்ற அப்பாவின் கூற்றைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தான் விச்சு.

என்னது.... மறுபடியும் முதலில் இருந்தா....?”


- எழுதியவர் ஸ்ரீதேவி

Tuesday, January 11, 2011

60 வயதுப் பாலம்

அன்று :
அம்மா இறந்து விட்டாள். அழுவதா! அல்லது வேடிக்கை பார்ப்பதா! என்று புரியாத வயது. தாய் தந்தை இல்லாதவன் அனாதை என்றும், யாராவது ஒருவர் இறந்தாலும் பாதி அனாதை என்று சொல்லுவார்கள். ஆனால் என்னைச் சுற்றிலும் ஏராளமான உறவினர்கள். தாத்தா பாட்டி, அப்பா, மாமன்மார், அத்தை, பெரியம்மா, அவரது பிள்ளைகள், சின்னம்மா, என்று ஏராளம்….

இன்று :
”அப்பாவுக்கு லேசான நெஞ்சுவலியாம்! டாக்டரிடம் போகலாம்.”, ”இல்லை இல்லை. அப்பல்லோவுக்கு போய் வைத்தியம் செய்யலாம்.”, என்று குரல்கள் கேட்கின்றன. சுற்றிலும் பார்க்கிறேன். என்னுடைய 4 பிள்ளைகள், 4 மருமக்கள், 8 பேரன் பேத்திகள், மனைவி என்ற உறவுகளில் ஒரு பட்டாளமே நிற்கிறார்கள்.

அது சரி!… அன்று இருந்த உறவினர்கள் என்ன ஆனார்கள்? இன்றைக்கு இருக்கும் உறவினர்கள் அன்று ஏன் இல்லை? அவர்களுக்கு இவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா? அல்லது இவர்களுக்குத்தான் அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா? அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் ’நான் ஒருவன்’ என்ற சம்பந்தத்தைத் தவிர வேறு என்ன சம்பந்தம்?

என்ன! பாலத்துக்கு அக்கரையில் அவர்கள்! இக்கரையில் இவர்கள்! அன்று எனக்கு வயது 10. இன்று 70. அவ்வளவுதான் வித்தியாசம். யோசித்தேன். ஜென் தத்துவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.

இந்த உலகில்,
எல்லாம் இருக்கிறது.
ஆனால் ஒன்றுமே இல்லை.

எழுதியவர் G.ராமசாமி

Tuesday, October 26, 2010

60+இன் புலம்பல்

2010ல்

ம். என்ன இது! கத்திரிக்காய் கிலோ ரூ.50; அரிசி 35/-; தங்கம் பவுண் 13000. இப்படி விலைவாசி இருந்தால் எப்படி? மாதம் 10000 வருமானம் வந்தால்கூட குடும்பம் நடத்துவது சிரமமாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் பிள்ளைகளோ பெற்றோரை மதிப்பது கூட இல்லை. வீட்டிலே உக்காந்து நாக்கு முக்க’, என்று கூப்பாடு போடுகிறான். என்னடா என்றால், சினிமாப் பாட்டு என்கிறான். இப்படி ஒரு பாட்டு! இப்போ வருகிற பாடல்கள் எல்லாம்... ம்.. என்ன சொல்ல! 2 பேர் கள்ளக்கடத்தல் செய்கிறான். தாதாவாக இருக்கிறான். அதில் ஒருவன் கதாநாயகன்; மற்றவன் வில்லன் என்கிறான். என்னடா படம் இது, இரண்டு பேரும் அயோக்கியன்தானே என்று சொன்னால், அதெப்படி?! நடிப்பதில் ஒருவன் ஹீரோ, அதனால் அவன் நல்லவன் என்கிறான். மொத்தத்தில் எல்லாமே சுத்த மோசம்! எங்கள் காலத்தில் எல்லாம் இப்படியா? பாரதிராஜா, பாக்கியராஜ், இளையராஜா, எவ்வளவு அற்புதமானவர்கள்!! ம்.. அது ஒரு பொற்காலம் சார்!!!

X---X---X

1985ல்

மாதம் ரூ.1000 வருமானம் வந்தும் குடும்ப பட்ஜெட் உதைக்கிறது. கத்தரிக்காய் கிலோ 5ரூபாய்; அரிசி கிலோ 10/- தங்கம் பவுண் Rs.800. இந்த விலை விற்றால் எப்படி குடும்பம் நடத்துவது? பயல்களை கண்டிக்க முடிவதில்லை. ஓரம்போ!!என்று கத்துகிறான். என்னடா என்றால், அருமையான சினிமாப் பாட்டு என்கிறான். தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருக்கிறது. இப்போல்லாம் சினிமாவா எடுக்கிறான்? படம் பார்ப்பவர்கள் காதில் பூ சுற்றுகிறான். ஒரே டைரக்டர் 2 படம் எடுக்கிறான். ஒரு படத்தில் கதாநாயகியை தாலியை கழற்றிவிட்டு காதலனுடன் போகும்படி செய்கிறான். இன்னொரு படத்தில், தாலியைக் கழற்றும் தைரியம் உனக்கு இருக்கிறதா? கணவன்தான் முக்கியம்; காதலன் அல்ல, என்று அட்வைஸ் செய்கிறான். ஒரே கூத்து! எங்கள் காலத்தில் இப்படியா? ஒரு பாசமலர் போதுமே. காலகாலத்துக்கு பதில் சொல்லுமே! எவ்வளவு அருமையான சினிமா! எவ்வளவு அருமையான பாட்டு. ம்.. அது ஒரு பொற்காலம் சார்!!!

X---X---X

1965ல்

முதலாளி எவ்வளவோ நல்லவர். மாதம் 150 சுளையாகத் தருகிறார். இருந்தும் என்ன பிரயோஜனம். மனைவிக்கும் சிக்கனத்துக்கும் சம்பந்தமே இல்லை. இந்தப் பணம் போதவில்லையாம். அரிசி படி 2 ரூபாய் ஆகிவிட்டதாம். கிலோ 10 பைசா விற்ற காய்கறி எல்லாம் 60 பைசா, 70 பைசாவாக விற்கிறதாம். தங்கம் பவுண் ரூ.100 ஆகிவிட்டதாம். எப்படி கட்டுபடியாகும் என்கிறாள். பிள்ளைகளோ, MGR, சிவாஜி படம் என்று வாரம் தவறாமல் படம் பார்க்கிறார்கள். தலைக்கு 40 பைசா சினிமா செலவு எவ்வளவு ஆகிறது? கேட்டால் இலந்தப் பழம்என்கிறார்கள். சீசன் இல்லாத நேரத்தில் இலந்தப் பழம் ஏது என்று கேட்டால், அப்பா, அது சினிமாப் பாட்டு என்கிறான். எல்லாமே இரவல் பாட்டு. ஒருவன் வாயசைக்கிறான். ஒருவன் பாடுகிறான். கேட்டால் பின்னனிப் பாடல் என்கிறான். இந்தப் பயல் சொல்கிறான் என்று சமீபத்தில் வந்த ஒரு படம் பார்த்தேன். சகிக்கவில்லை. அண்ணன், தங்கை பாசமாம். தங்கைக்கு திருமணம் ஆனபின்னும் கணவன் வீட்டுக்கு அனுப்ப மாட்டானாம். வீட்டோடு மாப்பிள்ளையாம். சரி, அப்படி மாப்பிள்ளை மட்டும் இருந்தாலும் பரவாயில்லை. மாப்பிள்ளை வீட்டார் ஒரு கும்பலே வருகிறது. பகை வருகிறது. கதாநாயகன் தங்கையை அவர்கள் வீட்டுக்கு அனுப்பினால், தன்னுடைய மானம் போய்விடும் என்று கூப்பாடு போடுகிறான். அவர்களோ, அப்படியானால் நீ வெளியே போ என்று சொல்கிறார்கள். சரி என்று உடனே வெளியே போய் விடுகிறான். இப்போது மட்டும் மானம் போகவில்லையா? கேட்டால் அவன் கதாநாயகன், தியாகி என்கிறார்கள். எங்கள் காலத்திலெல்லாம் இப்படியா? அந்த காலத்தில் கேட்ட பாகவதர் குரல் எவ்வளவு இனிமையாக இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது! அப்போதெல்லாம் நாட்டில் பாலும் தேனும் ஓடியது. ம்.. அது ஒரு பொற்காலம் சார்!!!

X---X---X

1945ல்

ம். என்ன செய்வது? இந்த பஞ்ச காலத்தில் இந்தப் பிள்ளைகள் பிறந்து இருக்கிறது. எங்கள் காலத்தில் 1ரூபாய்க்கு 16படி அரிசி விற்றது. ஆனால் இப்போது வெறும் இரண்டரைப் படி அரிசிதான். மாதத்தில் 10 நாள் பட்டினி கிடக்க வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் மாதம் 5 ரூபாய் சம்பளத்தில் 25 பைசா மிச்சம் பிடிப்போம். இப்போது மாதம் 10 ரூபாய் கிடைத்தும் கஷ்டம்தான். தங்கம் வாங்க வேண்டுமென்றால் கூலி சும்மாவா கிடைக்கிறது; பவுண் 13 ரூபாய் சொல்கிறான். முன்பெல்லாம் 1 அணா கொடுத்து நாலு நாள் விடிய விடிய வள்ளி திருமணம் நாடகம் பார்ப்போம். சம்பூர்ண ராமாயணம் தெருக்கூத்து 4 நாள் விடிய விடிய நடக்கும். ராஜா வேடம் போடுபவர், ராஜ நடை போட்டு, வந்தேனேனன மகராஜன் வந்தேனேனன என்று எட்டுக் கட்டையில் பாடுவது எவ்வளவு கம்பீரம்! இப்போது 4 மணி நேரம் மட்டும் வெள்ளை வேட்டியில் நிழல் படம் காட்டி 2 அணா வசூல் செய்து ஊரை ஏமாத்துகிறார்கள். இதுவும் ஏமாறுதுகள்! என்ன கொடுமையப்பா?! ம்.. அந்தக் காலம் ஒரு பொற்காலம் சார்!!!

X---X---X

2045ல்

TV, கம்ப்யூட்டர், சினிமா புரஜக்டர் எல்லாம் வீட்டில் இருந்தாலும், பிள்ளைகள் தியேட்டரில் போய் படம் பார்க்க வேண்டும் என அடம்பிக்கிறதுகள். குடும்பத்தோட 1 படம் பார்த்து வர 20000 ரூபாய் செலவாகிறது. ஒரு பாக்கெட் பாப்கார்ன் ரூ.500, ஒரு டீ ரூ.500 என்கிறான். பணத்தோட அருமை பிள்ளைகளுக்கு எங்கே தெரிகிறது? சம்பளம் என்ன அள்ளியா கொடுக்கிறான்? பிச்சக்காசு அஞ்சு லட்சம் கொடுக்கிறான். இது எந்த மூலைக்குப் போதும்! அரிசி கிலோ 500, காய்கறி 800, தங்கம் 1 பவுண் ஒன்னரை லட்சமாக விற்கிறது. ஆசைக்கு ஒரு வீடு கட்டலாம் என்றால், ஒரு ப்ளாட் காலி இடம் 2 கோடி ரூபாய் சொல்றான். இது எல்லாம் பிள்ளைகளுக்கு எங்கே தெரிகிறது? கொஞ்சமும் பொறுப்பு இல்லாதவர்கள். 30 வருடத்துக்கு முன் என் அப்பா காலத்தில் விலைவாசியெல்லாம் கொள்ளை மலிவு. ம்.. அது எல்லாம் ஒரு பொற்காலம் சார்!!!

பின்குறிப்பு 1 :- இந்தக் க(ட்டுரை)தைக்கு ஆதாரம் சுமார் 2000 வருடங்களுக்கு முன் தத்துவமேதை சாக்ரடிஸ் சொன்ன வார்த்தைகள்தான்.

இந்தக் காலத்துப் பிள்ளைகள் பொறுப்பில்லாதவர்கள்; பெரியவர்கள் பேச்சை மதிப்பதில்லை. மரியாதை தெரியாதவர்கள்.

பிகு 2 :- 2045ம் ஆண்டு தவிர, மற்ற வருட விலைவாசிகள் முழு உண்மை. கற்பனை அல்ல.

பிகு 2a :- அது சரி. 2045ம் ஆண்டு விலைவாசி மட்டும் கற்பனை என்று யார் சொன்னது?

- எழுதியவர் G.ராமசாமி

(நவீன விருட்சம் 87-88 இதழில் பிரசுரமான படைப்பு)

Tuesday, October 19, 2010

நிரூபணம்

”நிஜமாவா சொல்றீங்க? போறதுக்கு உங்களுக்கு ஓகேவா மிஸ்டர்…?”

“ராஜீவ். ம். போறதுக்கு ஓகேதான். ஆனா ஒரே ஒரு விஷயம்….”, வாக்கியத்தை என்னை அவர் முடிக்க விடவில்லை.

“நிஜமாவே நம்பமுடியலை. நாங்க இங்க என்ன செய்துகிட்டிருக்கோம்னு உங்களுக்குத் தெரியுமா?"

“தெரியும். பிளாக் ஹோலுக்கு ஒரு கலத்தை அனுப்பப் போறீங்க.”

”இது ஒரு டைம் மிஷின் ப்ராஜக்ட். அது தெரியுமா?”

எனக்கு கொஞ்சம் எரிச்சலாக வந்தது. ’இது கூடவாத் தெரியாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறேன்? என்னை என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்?’, பின்னால் நகர்ந்து நன்றாக சாய்ந்து கொண்டேன். கொஞ்சம் தண்ணீர் குடித்துக் கொண்டேன்.

“தெரியும். ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் தியரியை செயல் படுத்தப் போறீங்க. ஆண்ட்ரோமீடா காலக்ஸியைத் தாண்டி இருக்கும், சமீபத்துல கண்டுபிடிச்ச பிளாக் ஹோலுக்கு ஒரு ஷிப்பை அனுப்பப் போறீங்க. அந்த ஷிப் பிளாக் ஹோலை நெருங்கி, அதற்குள் விழுந்து விடாமல், ஈவண்ட் ஹாரிஸனுக்கு முன்பே அந்த பிளாக் ஹோலை சுத்தி ஒரு வட்டப்பாதையின் டான்ஜண்டில் நுழையும். இது நமக்கு ஒரு ஃப்ரீ ரிட்டன் டிராஜக்டரியை அமைச்சிக் கொடுக்கும். ப்ளாக் ஹோல் தன்னோட அபரிமிதமான ஈர்ப்பு விசையால், நம்ம கலத்தை ஒரு அரை வட்டம் சுத்த வைச்சு, பூமியை நோக்கி திருப்பி விட்றும். ஆனா அந்த வேகம் ரொம்ப அதிகமா இருக்கும். நம்ம கலம் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தை அடைஞ்சுடும்.. இது வரைக்கும் சரியா?”

”சொல்லுங்க. நிறைய தப்பிருந்தாலும், மெய்ன் தியரி என்னவோ சரிதான்.”
“சரி. இப்ப இந்த வேகம்தான் காலப்பயணத்தை சாத்தியமாக்குது. இந்த வேகத்தில் பூமிக்குத் திரும்பி வரும்போது, ஐன்ஸ்டீன் தியரிப்படி, கலத்துக்கு உள்ளே ’நேரம்’ மெதுவா ஓடும். ஆனா கலத்துக்கு வெளியே நேரம் நார்மலான வேகத்தில் ஓடும். அதனால நம்மக் கலம் இந்த வேகத்தில் ஒரு வருஷம் பிரயாணம் பண்ணிட்டு திரும்பி வருதுன்னு வச்சுக்குவோம். இப்ப கலத்தோட நேரத்தவிட, பூமியோட நேரம் வேகமா இருக்கும். அதனால் கலம் வந்து சேரும் பொழுது பூமியில் பல வருடங்கள் முடிஞ்சிருக்கும். ஆனா கலம் பிரயாணம் பண்ணினதென்னவோ ஒரு வருஷம் தான். அதனால அந்தக் கலம் தரையிறங்கும்போது, பூமில பல வருஷம் முடிஞ்சு எதிர்காலத்துல எறங்குது. போதுமா?”
“சரிதான். இதுல முக்கியமான சில விஷயங்கள் இருக்கு. முதலாவதா, இது ஒரு ஒன்வே டைம் ட்ராவல் ட்ரிப். நீங்க திரும்ப நிகழ்காலத்துக்கு வரவே முடியாது. எதிர்காலத்திலேயே தங்கிட வேண்டியிருக்கும்.”

“தெரியும். எனக்கு இப்ப அம்பத்தி மூனு வயசாவுது. கல்யாணம் பண்ணிக்கலை. சொந்தக்காரங்கன்னு யாரும் இல்லை. அதனால எனக்கு ஃப்யூச்சர்ல செட்டிலாவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.”

“ரெண்டாவதா. ப்ளாக் ஹோல். இதுதான் ரியல் டேஞ்சர். நாங்க துல்லியமாத்தான் கால்குலேஷன்ஸ் எல்லாம் போட்டிருக்கோம். ஆனால் அந்த கால்குலேஷன்ஸ் கொஞ்சம் தப்பானாலும், 0.000000000001 சதவீதம் தப்பானாக்கூட, நீங்க பிளாக் ஹோலுக்குள்ள விழுந்துடுவீங்க.”

“இந்த ரிஸ்க் எடுக்கிறேன். எனக்கு நம்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் மேல நம்பிக்கையிருக்கு. அவங்கள நம்பி இதுவரைக்கும் மூனு தடவை விண்வெளிப் பிரயாணம் செஞ்சிருக்கேன். ஒரு உயிர் விஷயம்னு வரும்போது, அவங்க தப்பு பண்ண மாட்டாங்க.”

“தாங்க்ஸ். நீங்க எங்கேல்லாம் இதுவரைக்கும் ஸ்பேஸ் டிராவல் பண்ணீருக்கீங்க?
“ரெண்டு தடவை மார்ஸுக்கு. ஒரு தடவை டைட்டனுக்கு. அதுக்கப்புறம் ரிட்டைர்மெண்ட் வாங்கிட்டேன். அதுக்கப்புறம், இந்த தடவை ஃபூயூச்சருக்குப் போறேன்.” என்று சிரித்தேன்.

“குட். மூனாவது விஷயம் உங்க உடல்நிலை. இப்ப உங்களுக்கு வயசு அம்பத்தி மூனு. எங்க கணக்குப் படி இந்தப் பயணம் போய்த் திரும்ப பதினோரு வருஷம் ஆகும். அதாவது உங்க ஆரோக்கியம் அறுபத்தி நாலு வயசு வரைக்கும் விண்வெளிப் பிரயாணத்தை தாங்கக் கூடியதா இருக்கணும்.”

“சரி, டெஸ்ட் பண்ணிப் பாருங்க. எனக்கு என்ன சந்தேகம்னா, என்னோட உடம்பு ப்ளாக் ஹோலை நெருங்கும்போது, அவ்வளவு ஈர்ப்பை தாங்குமாங்கறதுதான் டவுட்டா இருக்கு.”

“அது பிரச்சனையேயில்லை. பிளாக் ஹோலில் மாட்டிக் கொண்டால்தான் பிரச்சனை. அதில் மாட்டிக் கொள்ளாதவரை, உங்களைப் பொறுத்தவரை இது ஒரு சாதாரண விண்வெளிப் பிரயாணமாகத்தான் இருக்கும். நீங்க ஏதோ கேக்கனும் சொன்னீங்களே, என்னதது?”

“இப்பவாவது கேட்டீங்களே. எனக்கு நீங்க ஒரே ஒரு விஷயத்தை மட்டும் க்ளியர் பண்ணனும். இப்ப நான் ஃப்யூச்சர்ல போய் இறங்குவேன் இல்லையா? சரியா எந்த வருஷம் போய் இறங்குவேன்?”

“இது 2074. நீங்க திரும்பி வர்ரதுக்கு 99 வருஷம் ஆகும். அதாவது 2173ல் போய் இறங்குவீங்க.”

“சரி. இப்ப இந்த விஷயத்தை கவனிங்க. ஒருத்தன் எதிர்காலத்தில் இருந்து இறந்த காலத்துக்கு வர்ரான்னு வச்சுக்குங்க. ’அவன் எதிர்காலத்தில் இருந்து வந்தவன்’ அப்படிங்கறத, அவனால அந்த இறந்த காலத்தில் இருக்கிறவங்களுக்கு ஈஸியா நிரூபிச்சிற முடியும். ஏன்னா அவன் கிட்ட எதிர்காலத்துக்கு மட்டுமே சொந்தமான அதிநவீன கருவிகள், வஸ்துக்கள் இருக்கும்.

ஆனா நம்ம கேஸ்ல இது சாத்தியம் இல்லை. நான் இறந்த காலத்திலிருந்து எதிர்காலத்துக்குப் போறேன். அங்கேயுள்ளவங்களுக்கு, நான் இறந்த காலத்திலிருந்து காலப்பயணம் செஞ்சு 99 வருஷங்கள் கடந்து எதிர்காலத்துக்கு வந்திருக்கேன்னு ப்ரூவ் பண்ணியாகனும். நான் சொல்றதை அவங்க நம்பலைன்னா அங்கே என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க. என்னை ஒரு ஃபிராடுன்னு சொல்லி கைது பண்ணிறலாம். இல்லை பைத்தியம்னு சொல்லி ஹாஸ்பிட்டலில் கட்டி வச்சிரலாம். அந்த மாதிரி வாழ எனக்கு ஆசையில்லை. அவங்களுக்கு நான் இறந்த காலத்திலிருந்து வந்திருக்கேன்னு எப்படி ப்ரூவ் பண்றதுங்கறதுக்கு மட்டும் வழி சொல்லுங்க. நான் இந்த பிரயாணத்துக்கு ஒத்துக்கறேன்.” கடைசியில் ஒரு வழியாக என் பயத்தை சொல்லிவிட்டேன்.

”ம்ம். நீங்க சொல்றதும் ஒரு வேலிட்டான பாயிண்ட்தான். இதப் பத்தி நம்ம விஞ்ஞானிகள் குழு ஆளுங்ககிட்ட கருத்துக் கேட்போம். இப்போதைக்கு எனக்கு எதுவும் தோனலைன்னாலும், வி மஸ்ட் கெட் அன் ஆன்ஸர் டூ திஸ். நிச்சயம் ஏதாவது விடை இருக்கும். பார்ப்போம். நான் மீட்டிங்கிற்கு ஏற்பாடு பண்ணறேன். எப்படியும் ரெண்டு நாள் ஆய்டும். அதுக்குள்ள நீங்க மெடிக்கல் செக்கப்பெல்லாம் முடிச்சுருங்க. மீட்டிங் கன்ஃபார்ம் ஆனதும் நான் சொல்றேன்.”

“சரி”

X-X-X-X-X-X-X-X-X

அந்த அறை பெரிதாக ஓவல் வடிவத்தில் இருந்தது. அங்கே நானும் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவின் தலைவர், டாக்டர் சிவநேசனும் மட்டுமே பெரிய முட்டை வடிவ மேஜையின் ஒரு முனையில் உட்கார்ந்திருந்தோம். சிவநேசன் கம்ப்யூட்டரில் குரல் ஆணை கொடுத்ததும், அங்கே ஒவ்வொருவராக ஹோலோகிராஃப் பிம்பங்களாக நாற்காலிகளோடு தோன்ற ஆரம்பித்தனர். அவர்களில் நிறைய பேரை எனக்கு யாரென்றே தெரியவில்லை.

“வெல் ஜெண்டில்மேன் அன் லேடீஸ். ராஜீவ் கேட்ட கேள்வியப் பத்தி உங்க எல்லாருக்கும் ஏற்கனவே சொல்லியிருந்தேன். ஒரு காலப்பயணி வருங்காலத்துக்குப் பிரயாணம் செஞ்சா, அங்கே இருக்கறவங்களுக்கு அவர் எப்படித், தான் இறந்த காலத்தில் இருந்து காலப் பயணம் செய்து வந்தவர் என்பதை நிரூபிப்பது? உங்க யார்ட்டயாவது இதுக்கு பதில் இருக்கா?”

“ஒரு டைம் கேப்ஸ்யூல் அனுப்பலாமே?”

“வாட்?” என்றேன்.

“இந்த மாதிரி, இன்ன தேதியில், இன்ன இடத்தில் இருந்து நீங்க காலப்பயணம் கிளம்பியிருப்பதாக ஒரு டாக்குமெண்ட் தயாரித்து, அதை ஒரு பத்திரமான பெட்டியில் வைத்துப் பூட்டணும். அந்தப் பெட்டி அதிக காலம் மக்காத, துருப்பிடிக்காத, உறுதியான பொருளால செய்யப்பட்டிருக்கணும். அதைக் குறிப்பிட்ட இடத்துல நிலத்தில் ஆழமா புதைச்சு வச்சுருவோம். அந்தப் பெட்டியோட சாவிய நீங்க வச்சுக்கனும். நீங்க திரும்பி வந்து, எதிர் காலத்தில் இருக்கறவங்ககிட்ட, அந்தப் பெட்டியைத் தோண்டியெடுக்க சொல்லுங்க. இந்தப் பழைய டாக்குமெண்ட் அவங்ககிட்ட நீங்க இறந்த காலத்தில் இருந்து வந்தவர்ங்கறதை நிரூபிக்கும்.”

“ஆனா, அவங்ககிட்ட அப்படி ஒரு டைம் கேப்ஸ்யூல் பெட்டி இருக்கிறதை நான் தான் சொல்லனும். அதோட சாவியும் எங்கிட்டேயே இருக்குதுன்னா, நானே திடீர் புகழுக்கு ஆசைப்பட்டு அவங்க காலத்திலேயே ஒரு பெட்டியை புதைச்சு வச்சிருக்கலாம்னு அவங்க வாதாடலாமில்லையா?”

“பொருளோட வயசுன்னு ஒன்னு இருக்கே! ரேடியோ ஐஸோடோப் கார்பன் 14 முறை மூலமா அந்தக் கேப்ஸ்யூலோட வயதை கணிக்கச் சொல்லுங்க. அது போதுமே”

”இப்ப ஒருத்தனுக்கு இந்த மாதிரிப் புதைச்சு வச்ச பழைய பெட்டி ஒன்னு, புதையல் மாதிரி எதிர்பாராதவிதமா கிடைக்குதுன்னு வச்சுக்குங்க. அதோட பூட்டைத் திறந்து மூடவும் அவன் கத்துக்கிட்டான்னு வையுங்க. அவன் உங்ககிட்ட வந்து நான் இந்த மாதிரி பழைய சோழர்கள் காலத்திலேர்ந்து வந்திருக்கேன். பாருங்க ஆதாரம்னு அந்தப் பெட்டியக் காட்டினா, நீங்க நம்பிருவீங்களா.”

”ஆனா இதுக்கான லாக் பாஸ்வேர்ட் இணைக்கப்பட்டது. அதுக்கான பாஸ்வேர்ட் உங்களுக்கு மட்டும்தானே தெரியும்?”

“சாவிக்கும் பாஸ்வேர்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? திறந்து கிடந்த ஒரு பழைய பெட்டிக்கு நான் புது பாஸ்வேர்ட் செட் செய்து ஏமாற்றி இருக்க முடியாதா?"

இப்பொழுது குரலின் திசை மாறியது. பெண் குரல், “இப்ப என்ன பிரச்சினை? டைம் கேப்ஸ்யூல் இருப்பதை நீங்க சொன்னாதானே நம்ப மாட்டாங்க? கவர்மெண்டே சொன்னால்?”

“கவர்மெண்டே சொல்வதற்கு இன்னொரு டைம் கேப்ஸ்யூல் வைப்பீங்களா?” என்றேன்.

“இல்லை. ரொம்ப சிம்பிள். நீங்கள் காலப்பயணம் சென்ற செய்தியை, அதிகாரப் பூர்வ அரசாங்க ஆவணங்களா சேமிப்போம். அந்த ஆவணங்கள் அரசாங்கங்கள் மாறினா கூட பத்திரமாக அடுத்த தலைமுறைக்கும் சேமிக்கப்பட்டிருக்கும். நீங்க திரும்பி வந்ததும், அரசாங்க ரெக்கார்டுங்களை தேடிப் பார்க்க சொன்னாலே போதுமே?”

“அரசாங்கங்கள் மாறினால் கவலை இல்லை. அரசியல் அமைப்பே மாறிப்போச்சுன்னா?”

“என்ன சொல்றீங்க?” என்று சிவநேசன் கொஞ்சம் பதட்டமாகிவிட்டார்.

“ஒருப்பேச்சுக்கு சொல்றேன். இப்ப இருக்கிற ஜனநாயக ஆட்சிமுறை, திடீர்னு ராணுவ ஆட்சியாவோ, ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியாவோ மாறிடுச்சுன்னு வைங்க. இல்லை ஏதாவது உலகப்போர் வந்து வேற ஒரு நாடு, நம்ம நாட்டோட ஆட்சியை கைப்பற்றிடலாம். அப்படியாச்சுன்னா இந்த கவர்மெண்ட் ரெக்கார்ட்ஸை அவங்க பத்திரமா வச்சிருப்பாங்களா? ஒருவேளை ஏதாவது காரணத்துக்குக்காக அவங்களே கூட கவர்மெண்ட் ரெக்கார்ட்ஸை அழிச்சிடலாம். அப்ப என் கதி?”

“இது அதீத கற்பனை இல்லையா? நடக்காத்தை எல்லாம் ஏன் கற்பனை பண்ணிக்கிறீங்க?”

“இல்லை. நான் தோல்வி அடையறதுக்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் தவிர்க்க விரும்பறேன்.”

”ஒரு ஐடியா” இப்பொழுது குரல் கொடுத்த விஞ்ஞானிக்கு முப்பது வயதுக்கு மேலிருக்காது என்று நினைத்தேன்.

”உங்களுக்கு ஒரு ஐடிக் கார்ட் கொடுத்து விடுகிறோம்.”

“அதை கொண்டு போய் அங்கே காட்டினால் நம்புவார்கள் என்கிறீர்களா?”

“இது சாதாரண ஐடிக் கார்ட் இல்லை. இப்போதைய நமது ஐடிக் கார்ட்கள் எப்படி இருக்கு? கார்டை அதற்கான ரீடரில் காட்டினால், நம்மோட ஒரு சின்ன ஹோலோகிராஃபிக் பிம்பம், ரீடரிலிருந்து உருவாகி, நம்மை அடையாளம் சொல்லுது. ஆனால் உங்களுக்கு தரப்படும் விஷேச கார்டை நீங்கள் ரீடரில் காட்டத்தேவையில்லை. உங்க கருவிழிக்கு பக்கத்துல அஞ்சு செண்டிமீட்டர் இடைவெளிக்குள்ள காட்டினால், உங்களோட ஹோலோ கிராஃபிக் பிம்பம் ஆட்டோ மேட்டிக்காய் உங்க கார்டிலிருந்தே உருவாகும். அதோடு உங்க பிறந்த தேதி, இந்தப் பயணம் புறப்பட்ட விவரங்கள், மாதிரியான விஷயங்களும் அதில் தெரியும்படியா நாம் அந்தக் கார்டை உருவாக்குவோம். அந்த மாதிரி ஐடிக் கார்டை நீங்கள் காட்டினா அவங்க நம்பமாட்டாங்களா?”

”நம்மாள இப்பவே இந்த மாதிரி ஒரு கார்டை உருவாக்க முடியும்னா, எதிர்காலத்துல இது சர்வ சாதாரணம் ஆயிடாதா? அப்ப கொண்டு போய் இந்தக் கார்டை காட்டினா சிரிக்க மாட்டாங்களா?” ரொம்பவும் காட்டமாக சொல்லிவிட்டேன் போலிருக்கிறது. அந்த விஞ்ஞானியின் முகம் சிறுத்து விட்டது.

“ஓகே. இப்படிப் பண்ணலாம். இப்ப நம்ம காலத்தில பிரபலமா இருக்கிற சில பேரோட நீங்க சேர்ந்து இருக்கிற மாதிரி ஃபோட்டோ, வீடியோ, ஹோலோகிராம் எல்லாம் எடுத்து, அதை, முதல்ல சொன்ன டைம் காப்ஸ்யூலில் வச்சிடலாம். இது நீங்களும் அந்த பிரபலங்கள் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவர்தான்னு ப்ரூவ் பண்ணுமே.”

“நல்ல ஐடியாதான். ஆனால் எல்லாமே டிஜிட்டலாகி விட்ட இந்த யுகத்தில் எந்த மாதிரியான பிம்பத்தையும் கம்ப்யூட்டர் மூலமா உருவாக்க முடியுமே! இது எதிர் காலத்துக்கும் பொருந்துமே!”

“நான் ஒரு ஐடியா சொல்றேன். சரியா வருமா பாருங்க. நம்மகிட்ட இப்ப இருக்கிற பாலிகிராஃப் லை டிடக்டர் அறுபது சதவீதம் நம்பகத்தன்மை வாய்ந்தது. எதிர்காலத்தில் இந்த பொய் சொன்னால் கண்டுபிடிக்கிற கருவி, நிச்சயம் இன்னும் ஃபைன் ட்யூன் செய்யப்பட்டிருக்கும். அது இல்லாட்டி கூட ட்ரூத் ஸீரம் இருக்குது, ஸோடியம் தையோபெண்டால், மரிஜுவானா இந்த மாதிரி. இதில் அந்த நேரத்தில் அவங்க எந்த ட்ரூத் டெஸ்டை ஒத்துக்குவாங்களோ, அந்த டெஸ்டை உங்க கிட்ட செய்யச் சொல்லுங்க. அதில் நீங்க பொய் சொல்லலைன்னு ப்ரூவ் ஆயிருமே!”

“ம்ம். சரியானத் தியரிதான். ஆனால் நீங்க சொல்ற ட்ரூத் ஸீரம் டெஸ்ட் இப்பல்லாம் எண்பது எண்பத்தைந்து சதவீதம்தான் எதிர்பார்த்த முறையில் வேலை செய்யுது. அதனால இதையெல்லாம் நாமே விஞ்ஞான பூர்வமா ஒத்துக்கறதில்ல. இதே நிலைமை நீடிச்சுதுன்னு வைங்க. எதிர்காலத்தில் இருக்கிறவங்க கிட்டேயும் பொய்யை கண்டுபிடிக்க உருப்படியான சாதனம் இருக்காது. அந்த நிலைமைல இந்த யோசனை அடிவாங்கிருது.”, நான் எல்லாவற்றையும் மறுத்துக் கொண்டே வருவது அவர்களிடையே கொஞ்சம் அதிருப்தியை கிளப்பியிருப்பதை உணர்ந்தேன்.

“கரன்சி நோட் முறை?”

“அப்படின்னா?”

“ஒவ்வொரு நாட்டோட கரன்சி நோட்டும் வித்தியாசமான முறையில் தயாரிக்கப் படுது. இது அத்தனையிலும் ஒரு சாம்பிள் நீங்க போகும்போது எடுத்துட்டுப் போங்க. கவுண்டர் ஃபீட் கரன்சியை நாமளே ஈஸியா கண்டுபிடிச்சுடுவோம். அப்படியிருக்கும் போது எதிர் காலத்தில இருக்கிறவங்க நீங்க கொண்டு போற நோட்டெல்லாம் கவுண்டர் ஃபீட் நோட் கிடையாதுன்னு உறுதிப்படுத்திட்டா, நீங்க இறந்த காலத்திலிருந்து வந்திருக்கிறது நிஜம்னு ஆயிரும்.”

“ஒரு கரன்சி கலெக்ஷன் செய்பவரிடம் கூட எல்லா நாட்டினுடைய பழைய நூற்றாண்டு நோட்டுக்கள் இருக்குமே?”

”ஆனா, நீங்க வச்சிருக்கிற கரன்சி நோட்டோட வயது! அதை கார்பன் 14 ஐஸோடோப் டெஸ்ட் பண்ணினா, அது பத்து பதினைஞ்சு வருஷத்துக்குள் அச்சடிக்கப்பட்ட நோட் என்பது தெளிவாயிருமே.”

“ம்ம். இது கொஞ்சம் வொர்க் அவுட் ஆகும் போல் தான் தெரிகிறது. ஆனா உங்க வாதப்படியே அது பத்து பதினைஞ்சு வருஷத்துக்குள்ள அச்சடிக்கப்பட்டதுன்னா, அதனாலேயே, அதை அவங்க கவுண்டர் ஃபீட்னு நினைக்கலாமே?”

இப்பொழுது சிவநேசன் பேசினார், “மிஸ்டர் ராஜீவ். நீங்க இந்தப் பயணத்த தவிர்க்கிறதுக்காக, பேசற மாதிரித் தெரியுது. இதுல ஏதாவது ஒரு முறைல நிச்சயமா, அவங்க நீங்க சொல்றதை ஒத்துக்குவாங்க. ஆனா, இப்ப நீங்க நிஜமாவே இந்த பிரயாணம் மேற்கொள்ள விரும்பறீங்களா? இல்லையா?”

“நிச்சயமா. நிச்சயமா நான் போறேன். ஆனா அதே நேரத்தில் என் பத்திரத்தைப் பத்தியும் நான் கவலைப்படுறது தப்பில்லையே.”

”ஓகே இப்படி செய்யலாம். ஏதாவது ஒரு யோசனைங்கிறத மாத்தி, இந்த எல்லா யோசனைகளையும் செயல்படுத்தலாம். அரசாங்க ரெக்கார்ட்ஸ் மெய்ண்டைன் பண்ணுவோம். அதோட ஒரு காப்பியையும் டைம் கேப்ஸ்யூலில் வைப்போம். பிரபலமான தலைவர்கள், சினிமா ஸ்டார்ஸ் இவங்களோட நீங்க இருக்கிற ஃபோட்டோ, வீடியோ, ஹோலோகிராம் எல்லாம் தயார் பண்ணி, க்ரிஸ்டல் டிஸ்கில் சேமித்து, அதில் ஒரு காப்பியை நீங்களும், இன்னொரு காப்பியை டைம் கேப்ஸ்யூலிலும் வைப்போம். ஹோலோ பிம்பத்தை ஆட்டோமேட்டிக்காக உருவாக்கும் ஸ்பெஷலான ஒரு ஐடிக் கார்டை உருவாக்கித் தர்றோம். அதையும் எடுத்துட்டுப் போங்க. எதிர்காலத்தில் அவங்க ட்ரூத் ஸீரம், பாலிகிராஃபி மாதிரி எந்த டெஸ்ட் எடுக்க சொன்னாலும், மறுக்காம ஒத்துக்குங்க. அதே மாதிரி எல்லா நாட்டு கரன்சியும் ஒரு சாம்பிள் எடுத்துட்டுப் போங்க. கார்பன் டேட்டிங், அது இல்லைன்னா அந்த நேரத்தில் அதை விட சிறப்பான முறை ஏதாவது இருந்தா, டைம் கேஸ்யூலோட வயதையும், கரன்சிகளோட வயதையும் கணிக்க சொல்லுங்க. பூமிக்குத் திரும்பும் போது இந்தியப் பெருங்கடல்ல இறங்குங்க. அதுதான் வசதி, எங்க கரையொதுங்குவீங்கன்னு இப்பவே சொல்ல முடியாது. அதனால, இந்தியப் பெருங்கடலை ஒட்டியிருக்கிற கடலோரப் பகுதிகள் எல்லாத்திலேயும், பகுதிக்கு ஒன்னா ஒரு டைம் கேப்ஸ்யூலை புதைச்சு வச்சுருவோம். எந்தெந்த இடத்தில் எல்லாம் டைம் கேப்ஸ்யூல் புதைக்கப் பட்டிருக்குங்கறதுக்கான மேப்பும் நீங்க வச்சுக்குங்க. பல சாட்சிகள் இருக்கிறதால அவங்க கண்டிப்பா நம்புவாங்க. இந்த யோசனை ஓகேவா மிஸ்டர் ராஜீவ்?” சிவநேசன் முடித்தார்.

“ஓகே” என்றேன்.

X-X-X-X-X-X-X-X-X

பிரபலங்கள் பலருடன் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டு, புகைப்படம், வீடீயோ, ஹோலோகிராம் என்று டிஜிட்டல் உருவாமாக்கி, கிரிஸ்டல் டிஸ்குகளில் அடைத்தார்கள். அத்தனை டைம் கேப்ஸ்யூல் பெட்டிகளையும் என்னிடம் கொண்டு வந்து ஒரு பாஸ்வர்ட் செட் செய்யச் சொன்னார்கள். மொத்தம் நூற்றி எண்பத்தாறு பெட்டிகள். ஒரு முறை மூடிவிட்டால், பாஸ்வேர்ட் இல்லாமல் மீண்டும் திறக்க முடியாத பெட்டிகள். கரன்சிகள் கொடுத்தார்கள், இருபது வருடத்துக்குப் போதுமான உணவு மாத்திரைகள் கொடுத்தார்கள். கை குலுக்கினார்கள். வாழ்த்துச் சொன்னார்கள். விலகிக் கொண்டார்கள். கலம் மூடப்பட்டு மிக மிக மெதுவான ஆரம்ப வேகத்திலேயே கிளம்பியது. பூமியை ஒரு முறை சுற்றியது. ஒரு புள்ளியில் பிளாக் ஹோல், ஐந்து வருடங்கள் கழித்து எங்கே இருக்குமோ, அதை நோக்கி கலம் சீறிப்பாய்ந்தது. பூமியிலிருந்து ஒரு வருடம் வரை ரேடியோவில் தொடர்ந்தார்கள். அப்புறம் ….. விட்டு விட்டார்கள்.

X-X-X-X-X-X-X-X-X

பூமிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன். நம்பவே முடியவில்லை. ப்ளாக் ஹோலைத் தாண்டி சுற்றிக் கொண்டு திரும்பி வருவேன் என்று பூமியில் யாராவது நம்பிக்கை வைத்திருப்பார்களா? பூமியில் இது எந்த வருஷமாயிருக்கும்? நிஜமாகவே 2173ஆ?

“ஹலோ ரோஜர்! ரோஜர்! சாக்ராஸ் கலத்திலிருந்து பேசுகிறேன். ரோஜர்! ரோஜர்!” ம்ஹூம் இன்னும் சிக்னல் கிடைக்கவில்லை. ஃப்ரீக்குவென்சிகள் மாற்றிப் பார்த்தேன். “ரோஜர்! ரோஜர்! திஸ் இஸ் சாக்ராஸ்! ரோஜர்”” “………” மௌனம்தான். ஒரு வேளை எதிர்காலத்தில் கம்யூனிக்கேஷன் முறைகளையே மாற்றியிருப்பார்களோ?! இதற்குள் எனது கலம் பூமியில் இறங்குவதற்கு அதைச் சுற்ற ஆரம்பித்திருந்தது. அவர்களுக்கு சிக்னல் கிடைத்து கடலில் இருந்து என்னை மீட்க வந்தால் நல்லது. இல்லையென்றாலும், பதினோரு வருடங்களாக என் வீடாக இருந்த இந்த சாக்ராஸ் கலம், கடலையும் கடந்து விடும் என்றாலும், கொஞ்சம் நேரமாகும்.

“ரோஜர்! நான் பிளாக் ஹோலை சுற்றி விட்டுத் திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்.” கலம் காற்று மண்டலத்தில் நுழைந்து விட்டது. ”இந்தியப் பெருங்கடலில் இறங்கப் போகிறேன்.”. கடல் தெரிய ஆரம்பித்து விட்டது. “என்னையும் கலத்தையும் கடலிலிருந்து மீட்க உதவி..” கலம் கருநீலக் கடலுக்குள் விழுந்த சத்தம் கேட்டது. மறுபடி மறுபடித் தொடர்புக்கு முயன்று பார்த்தேன். ம்ஹூம். பதில் கிடைக்கவில்லை. வேறு வழியில்லை நேரமாகிக் கொண்டிருக்கிறது. கலத்தின் படகு அமைப்பை மட்டும் விடுவித்தேன். தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டேன். காம்பஸ் உதவியுடன் வடக்கை நோக்கி படகை செலுத்த ஆரம்பித்தேன்.

கரை வந்தது, நான்கு மணி நேரத்திற்குப் பின். கடற்கரை அமைதியாக இருந்தது. ஆளில்லாத தீவு ஏதாவதில் கரையொதுங்கி விட்டோமா? இல்லை அதோ ஒரு கோயில். அந்தக் கோயில். ஆம் அதை நான் இதற்கு முன் பார்த்திருக்கிறேன். எங்கே? ஞாபகம் வந்து விட்டது. அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு டைம் கேப்ஸ்யூலை புதைப்பதற்காக வந்தோம். நன்றாக ஞாபகம் இருக்கிறது. இது எந்த ஊர்? ஆனால் புதைக்க வந்தபொழுது கடல் இந்தக் கோயிலுக்கு இவ்வளவு பக்கத்தில் இல்லையே. குறைந்தது ஐந்து கிலோமீட்டராவது தூரம் இருந்திருக்குமே!

அப்பொழுது என் காலை வாரி விடப்பார்த்த அந்தப் பொருளை எனக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. டைம் கேப்ஸ்யூல். ஆனால் ஆழமாகப் புதைக்கப்பட்டிருந்த இது எப்படி இவ்வளவு மேலே வந்தது?

’ஆ15கஸ்1947ட்’ என்ற பாஸ்வேர்டை அமைத்து அந்த டைம் கேப்ஸ்யூலின் உள்ளிருந்தவற்றுக்கு சுதந்திரம் கொடுத்தேன். உள்ளே சகல விதமான ஆவணங்களும் பத்திரமாக இருந்தன. இது…, இது என்ன.. புதிதாய்? இது வரை நான் பார்க்காத அரசாங்கக் காகிதம்? அதில் இவ்வாறு எழுதியிருந்தது.

15, ஆகஸ்ட் 2097

ஹலோ ராஜீவ். நலமாகத் திரும்பி வந்து விட்டீர்களா? உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல ஆசைப்பட்டேன். அதனால் இந்த எக்ஸ்ட்ரா கடிதம். விஷயம் இதுதான். இன்னும் பதினைந்து நாளில் (செப்டம்பர் 1க்குள் எதிர்பார்க்கிறேன்) இந்த உலகம் அழிந்து விடும். ஏன்? எதற்கு? எப்படியென்றெல்லாம் இந்தச் சிறிய கடிதத்தில் விளக்க முடியாது. அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், உங்கள் கலம் நல்ல நிலையில் இருந்தால், இந்தப் பெட்டியில் இருக்கும் கிரிஸ்டல் டிஸ்க்கை கலத்தில் உள்ள கம்ப்யூட்டரில் கொடுத்துப் பார்க்கவும். அப்புறம் இன்னொரு விஷயம். நீங்கள் இறந்த காலத்திலிருந்து வந்தவர் என்பதை யாருக்கும் நிரூபிக்கத் தேவையிருக்காது என்று நம்புகிறேன்.
- சிவநேசன்”
பெயருக்குக் கீழே ஒரு சிரிக்கும் முகத்தை வரைந்து முடித்திருந்தார்.


X---------------------------------------------X






-2010 செப்டம்பர் மாத தென்றல் இதழில் “இறந்த காலத்திலிருந்து வந்தவர்” என்ற தலைப்பில் வெளியான எனது சிறுகதை.

Thursday, May 13, 2010

கவிதை உறவு போட்டியில் பரிசு

நண்பர்களே,

கவிதை உறவு இலக்கிய இதழ் நடத்திய போட்டியில், சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான பிரிவில், எனது புத்தகம் ”௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்” மூன்றாவது பரிசு வென்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

போட்டியில் வென்ற மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!!!

Monday, May 10, 2010

ஒரே ஒரு ஆதாம்

“எனக்கு ப்ரவீனை பிடிக்கலைப்பா”

பூர்ணா அப்படி சொன்னதும் மிகவும் அதிர்ந்து போனேன்.

“என்னம்மா சொல்றே?”

“ஆமாம். சின்ன வயசில் இருந்து அவன் என் ஃபிரெண்டு தான். அதுக்காக கல்யாணமெல்லாம் பண்ணிக்க முடியாது.”

”வேற வழியில்லையேம்மா! நீ அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்.”

ஆமாம். அவனைத் தவிர வேறு வழியில்லை. பூமியிலிருந்து கிளம்பி முப்பது வருடப் பிரயாணம் முடிந்து விட்டது. இந்தத் தலைமுறைக் கப்பலின் மூதாதையர்களாக நானும் என் மனைவி வர்ஷிதாவும், ராஜீவும், அவன் மனைவி சிமியும் நியமிக்கப்பட்டிருக்கிறோம். இதுவரைக்கும் எங்கள் கடமைகளை சரியாக 80 சதவீதம் முடித்து விட்டோம். அடுத்த தலைமுறை குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்தும் ஆகி விட்டது. எனக்கு ஒரு பெண், ஒரு பையன். ராஜீவிற்கு ஒரு பையன், ஒரு பெண். கலத்தின் கணிணியால் திட்டமிடப்பட்டு பெறப்பட்ட குழந்தைகள்.

என்னுடைய பெண் பூர்ணா. ராஜிவின் பையன் ப்ரவீன். என்னுடைய பையனும், ராஜிவின் பெண்ணும் இன்னும் இணை சேரும் வயதுக்கு வரவில்லை. இவர்கள்தான் அடுத்த தலைமுறை பெற்றோர்கள். அவர்களின் சந்ததியும் கணிணியில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது. இப்படியே 17 தலைமுறைகளை இந்த பெரிய கலத்துக்குள்ளேயே கடத்தியாக வேண்டும்.

476 வருடப் பிரயாணகாலத்துக்குப் பின், சூரிய மண்டலத்து அண்டை நட்சத்திரங்களில் ஒன்றான ”டாவ் சேடி” நட்சத்தித்திரத்தை சுற்றி வரும் பூமியை ஒத்த கோளான “சேடஸ்”இல் தரையிறங்கி, அந்தக் கிரகத்தில் மெதுவாக உயிர்களைப் பரவச் செய்வதே எங்களுக்கு விதிக்கப்பட்ட மிஷன். இப்பொழுது முதல் தலைமுறையிலேயே இப்படி ஒரு பிரச்சனை.

“நிச்சயமா முடியாது.”

“ஏன்? ப்ரவீன் அழகாதானே இருக்கான். இந்தக் கலத்தின் செயல்பாடு முழுக்க அவனுக்கு அத்துபடி. கேலக்ஸிகளின் மேப்களை கரைத்துக் குடித்திருக்கிறான். அவன் அப்பா மாதிரி ஜெனிடிக் விஞ்ஞானத்திலும் கெட்டிக்காரனாய் இருக்கிறான். ஏன் உனக்கு அவனைப் பிடிக்கலை?”

பூர்ணா என்னை அடிபட்டாற்போல் பார்த்தாள்.

“அப்பா. அழகுங்கறதுக்கு டெஃபினஷன் ஒருத்தருக்கொருத்தர் மாறுபடுது. இங்கே, நம்மோட கலத்திலிருக்கும் எல்லாரும் வெள்ளையா இருக்கோம். எல்லாருக்கும் வெள்ளைத் தோல். நான் டிஜிட்டல் லைப்ரரியில்தான் கருப்புத் தோல் மனிதர்களைப் பார்த்தேன். தே வேர் ஸோ அமேஸிங்! உங்களுக்குத் தலையில் அதிகம் முடி வச்சிக்கிறது அழகாத் தெரியலாம். எனக்கு லைப்ரரி படங்கள்ல பார்த்த மொட்டைத் தலைகள்தான் கவர்ச்சிகரமாகத் தெரியுது. யெஸ் டாடி. நான் காதலித்து குழந்தை பெத்துக்கறதுன்னா ஒரு நீக்ரோ ஆணைத்தான் விரும்புவேன். ப்ரவீனோடு முடியவே முடியாது.”

”ஸோ. இப்போ அழகுதான் பிரச்சனையா? ஆனாலும் காலம் பூரா வாழ்றதுக்கு மனசு முக்கியமில்லையா? யாரோ முன்னப்பின்னத் தெரியாத கற்பனையான ஒரு நீக்ரோவ ஒத்துக்கறே. இவ்வளவு நாளாப் பழகின ப்ரவீன் நல்லவனாத் தெரியலையா?”

“அப்பா! இந்த 90000 கனசதுர அடி கலத்துக்குள்ளே நல்லவன் என்ன? கெட்டவன் என்ன? ப்ரவீன் திறமைசாலின்னு வேணா ஒத்துக்கலாம். ஆனா, இதுவரைக்கும் ’நல்லது’ அப்படின்னு சொல்ற அளவுக்கு என்ன பண்ணியிருக்கான்?”

“சரி. ஆனா ’கெட்டது’னு சொல்ற அளவுக்கும் அவன் ஏதும் பண்ணியதில்லையே?”

“தட்ஸ் இட். இந்த சின்ன, தக்கனூண்டு கப்பல்லே நாம செய்யற செயல்கள்ல நல்லதோ, கெட்டதோ இல்லை. இயந்திரத்தனமும், செயல்திறமும் மட்டும்தான் இருக்கு. விஷயம் இப்படி இருக்கறப்போ, நல்லவன், மனசு அப்படிங்கறதெல்லாம் உங்களுக்கே பைத்தியக்காரத்தனமா தோணலையா?”

பூர்ணா சொன்னதின் அர்த்தத்தை முழுதும் புரிந்து கொள்ள எனக்கு சிறிது நேரமானது.

“ஓகே பூர்ணா. ஐ அக்ரி. ஆனா இப்ப கலத்தின் ஆரோக்கியத்துக்கு வேறு வழியில்லை. பிடிச்சாலும் பிடிக்காட்டாலும், நீயும் அவனும் இணைஞ்சுதான் ஆகனும். அடுத்த தலைமுறை பிரயாணிகள் தீர்மானிக்கப்பட்டபடி கப்பலுக்குத் தேவை.”

“யார் தீர்மானிச்சது?”

“பூமி விஞ்ஞானிகள்.”

“எப்போ தீர்மானிச்சாங்க?”

“முப்பது வருசத்துக்கு முன்னாடி.”

“நான் அப்ப பிறக்கவேயில்லையே? என்னோட லைஃப தீர்மானிக்கிறதுக்கு அவங்க யாரு? அவங்களுக்கு என்ன உரிமை?”

ஆமாம் அவர்களுக்கு ஏது உரிமை? எனக்கே உரிமை கிடையாதே?

”எல்லாமே சரிதான் பூர்ணா. உன் லைஃபைப் பற்றித் தீர்மானிக்க உனக்கு மட்டும்தான் உரிமையிருக்கு. ஆனா நீயும் அவனும் இப்ப இணையலேன்னா, எப்படி அடுத்த தலைமுறையை உருவாக்குறது? இப்ப உனக்கு இருபத்தி அஞ்சு வயசு. கணிணியின் திட்டப்படி பெண்கள் 26 வயசில ஒரு குழந்தையும், 28ல் ஒன்னும்தான் பெற்றுக் கொள்ளமுடியும். இந்த நேரத்தை விட்டா ஒரு குழந்தை வேஸ்டாயிடும். சரி, உனக்குப் பிடிக்கலைன்னா ஆர்டிஃபிஷியல் இன்செமினேஷன் செய்வோமா? நீயும் அவனும் இணையத் தேவையில்லை. கண்ணாடிக் குடுவைல உன்னோட கருமுட்டைய வச்சு...”

”அப்பவும் ப்ரவீனோட குழந்தையைத்தானே என் வயிற்றில் வளர்ப்பீங்க?” வெறுப்பு தெரிந்தது.

”பூர்ணா, உன் விருப்பப்படி வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கறதுக்கு, உன்னை உடனே பூமிக்கா திருப்பி அனுப்ப முடியும்? இல்ல வேற ஒருத்தனை புதுசா இங்கே வரவழைக்க முடியுமா? நிலைமைய புரிஞ்சிக்க. யூ ஹவ் டூ டிஸைட் சம்திங்.”

”ஏம்பா? நான் என்ன ஏவாளா? ஒரே ஒரு ஆதாமைத் தவிர எனக்கு வேற ஆப்ஷனே இல்லையா? ஒரே ஒரு ஆதாம் மட்டும்தான் ஆப்ஷன்னா, எனக்கு அந்த ஆப்ஷன் வேண்டாம்பா. நான் கடைசி வரை இப்படியே இருந்துர்ரேன்.”

“பூர்ணா. ப்ளீஸ் பி பிராக்டிகல். அவ்வளவுதான் சொல்லுவேன். நல்லா யோசி”, என்று சொல்லிவிட்டு எழுந்து என் அறைக்கு சென்று விட்டேன்.

X--------X---------X

ராஜீவையும் ப்ரவீனையும் சந்தித்து விஷயத்தைக் கூறினேன். ராஜீவ் ரொம்பவும் கலவரப்பட்டுப் போனான். ப்ரவீன் ஓரளவு இதை எதிர்பார்த்திருப்பான் போல. “அங்கிள், எனக்குப் பூர்ணாவை பிடிச்சிருக்கு. ஆனா கல்யாணம்னா அவளோட இஷ்டம் கண்டிப்பா முக்கியம். அவளுக்கு இதில் இஷ்டமில்லைன்னா விட்டுருங்க. ரெண்டு பேரும் இப்படியே ஃப்ரெண்ட்ஸா இருந்துட்டுப் போறோம்.” என்று அலட்டிக் கொள்ளாமல் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

அதற்குப் பின் ராஜீவ் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ப்ரவீனும் பூர்ணாவின் பார்வையில் படுவதை தவிர்ப்பதாகத் தோன்றியது. நானும் இந்த விஷயம் குறித்து தீவிரமாக யோசித்தேன். பூர்ணாவின் இஷ்டப்படி ஒரு நீக்ரோவை, இங்கே கப்பலில் உருவாக்கவா முடியும்? இல்லை கிட்டத்தட்ட ஒரு ஒளியாண்டுத் தொலைவிலிருக்கும் பூமியிலிருந்து வரவழைக்க முடியுமா? ப்ரவீனுக்கு வேறு ஆப்ஷன்? நானும் என் மனைவியும் இன்னொரு பெண் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? ஊகூம். அதுவும் அபத்தம். என் சந்ததி எப்படி வளரப் போகிறது? எங்கள் மிஷன் இரண்டாம் தலைமுறையைத் தாண்டுமா? ம்ம்ம். என்ன செய்வது?

நாட்கள், நியூட்டனின் விதிகள் ஓட்டிக் கொண்டிருந்த எங்கள் கப்பலைப் போலவே, வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன.

மூன்று மாதங்கள் ஆகி விட்டன. இன்னும் பத்து நாட்களில் பூர்ணாவின் பிறந்தநாள். அன்று ராஜீவ் எனது அறைக்கு வந்தான்.

“உன் பெண்ணைக் கூப்பிடு.”

“என்ன விஷயம்?”

“கூப்பிடு சொல்றேன்.”

பூர்ணாவை அழைத்தேன். வந்தாள்.

“வெல், பூர்ணா. உன்னோட விருப்பம் என்ன? என் பையன் உனக்கு வேண்டாம். அழகான நீக்ரோதான் வேண்டும். இல்லையா?”

“சாரி அங்கிள். ப்ரவீன் எனக்கு நல்ல ஃபிரெண்ட். ஆனா...”

“ஓகே, தெரியும். எனக்கு என் பையனை விட, இந்த மிஷனோட வெற்றிதான் முக்கியம். அதனால, உன் விருப்பத்தை நிறைவேத்தப் போறேன்.”

”அங்கிள் ஆனா...”

“வெய்ட். வெய்ட். வெய்ட். பதறாம கொஞ்சம் அங்கே பாரு” என்று வாசலைக் காண்பிக்க, அங்கே..........ஒரு நீக்ரோ!!! ஆறரை அடி உயரம், கருஞ்சிவப்புத் தோல், கொஞ்சம் சப்பையான அகலமான மூக்கு, தடித்த உதடுகளுடன் பெரிய வாய், நீக்ரோவேதான்.

“ஹவ் இஸ் ஹீ பூர்ணா? டூ யூ லைக் ஹிம்?”

பூர்ணா கலவரமாக அந்த நீக்ரோவையும், ராஜீவையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“வாட்ஸ் திஸ் நான்சென்ஸ்? என்ன அங்கிள் இது? நான் உங்ககிட்ட கேட்டனா? யார் இது? எப்படி இங்க வந்தான்? இவனை எங்க பிடிச்சீங்களோ, அங்கேயே கொண்டு விட்டுருங்க!”

ராஜீவ் பதட்டத்தோடு அவளிடம், “நீதானேம்மா நீக்ரோவைத்தான் காதலிப்பேன்னு உங்கப்பாக்கிட்ட...”

“ஆஆஆவ். எப்பவோ ஏதோ சொன்னதை ஸீரியஸா எடுத்துக்கிட்டு, இப்படியா ஒரு கருப்பனைக் கொண்டு வந்து என் கழுத்தை அறுப்பீங்க?! போங்க அங்கிள். முதல்ல இவனைத் திரும்ப அனுப்புங்க.” உச்சஸ்தாயில் கத்திவிட்டு அவள் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

ராஜீவ் குழப்பமாக என்னைப் பார்த்தான். “டேய் நீதானேடா அவள் நீக்ரோவைத்தான் காதலிப்பேன்னு சொல்றாள்னு சொன்னே?”

”அது இருக்கட்டும். யார்டா அவன்? எப்படிடா வந்தான்? டெலிபோர்ட்டிங் மெஷின் ஏதாவது வச்சிருக்கியா என்ன?”

ராஜீவ் இப்பொழுது வசதியாக சாய்ந்து உட்கார்ந்தான்.

”டெலிபோர்ட்டிங்கா. அது ஒன்னோட டிபார்ட்மெண்ட் தம்பி! நான் பயாலஜி, ஜீன்ஸ், குரோமோசோம்ஸ். அப்படி ஏதாவது யோசிச்சுப் பாரு. புரியலாம்.”

“ஜீன்ஸ், குரோமோஸோம்ஸ்? அப்படின்னா லேப்ல வச்சு உருவாக்கினியா? இதத்தான் மூனு மாசமா பண்ணிட்டிருந்தியா?

“ம்ம்ம். நான் பூமிலேருந்து கிளம்பறப்பவே பரிசோதனைக்காக எல்லா மனித இனங்களோட ஜீன்ஸ் சாம்பிளையும் கொண்டு வந்திருந்தேன். இப்போ இந்தப் பிரச்சனைக்கு விஞ்ஞான ரீதியா தீர்வு இருக்கான்னு யோசிச்சேன். ஒரு ஐடியா தோனுச்சு. அதுபடி ஒரு நீக்ரோ ஜீன்ஸ் சாம்பிளை லேபில் வச்சுப் பல மடங்காக்கினேன். ஆனால் நீ நினைக்கிற மாதிரி ஜீன்ஸை மட்டும் வச்சிகிட்டு ஒருத்தனை, ஒரு மனித உயிரை லேபில் உருவாக்க முடியாது. அந்த அளவுக்கு நம்மகிட்ட இன்னும் விஞ்ஞானம் இல்லை. அப்படி இருந்தாத்தான் அடுத்த தலைமுறைக்கு குழந்தையே தேவையில்லையே”

“அப்ப?”

“போதுமான அளவு ஜீன்ஸ் உற்பத்தியானதும், அதை முறையாப் பிரிச்சு, ஒரு உயிருள்ள உடம்புல விதைச்சிட்டேன். ஜீன்ஸ் ட்ராஸ்ப்ளாண்டேஷன்.”

“அப்போ அந்த நீக்ரோ?!”

“ப்ரவீனேதான்.”

“அடப் பாவி!”

“வாட்?”

“நான் இந்த மூனு மாசத்தில பூர்ணாவுக்கு, அவளுக்கேத் தெரியாமல் நாலு செஷன் மெண்டல் கமெண்டிங் பண்ணியிருக்கேண்டா.”

“அடப்பாவி!”

“இட்ஸ் அ டீடியஸ் ப்ராஸஸ். பூர்ணாவோட மூளையிலிருந்த அந்த பழைய எண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமா மாற்றி, அவளுக்கு ’வெள்ளையானவர்கள்தான் அழகானவர்கள்’ அப்படிங்கிற எண்ணத்தை, அவ மூளைல நேரடியா விதைச்சிருக்கேன். இப்போ மறுபடி அதை ரிவர்ஸ் பண்ணினா, அவளுக்கு பைத்தியம் பிடிச்சாலும் பிடிச்சுடுமே?”

எங்கள் இருவரையும் அந்த ஒரே ஒரு கருப்பு ஆதாம் பரிதாபமாகப் பார்த்தான்.

Friday, March 05, 2010

செருப்பு

அந்த ஒற்றை செருப்பு பின்னாலிருந்து அழகாக ஸ்கேட் செய்து முன்னால் வந்து நின்றது. முன் வரிசையில் தனியாக அமர்ந்திருந்த நான் கவனிக்கவேயில்லை. நியூரல் நெட்வொர்க்ஸ் நடத்திக் கொண்டிருந்த சந்தியா மேடம் முகத்தில் ஏற்பட்ட திடீர் பிரமிப்பை கவனித்த பிறகே, அவரின் பார்வைக் கோணத்தில் பார்த்தால், அந்த செருப்பு!

எங்கள் கிளாஸில் மொத்தம் பதிமூன்று ஆண்கள், ஆறு பெண்கள். இந்த பதிமூன்றில் எப்படியும் தினசரி 7,8 இருக்கைகள்தான் அதிகபட்சம் நிரம்பும். மற்றவர்களெல்லாம் அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட்ஸ் - கல்லூரிக்கே! எனக்கும் மற்ற பன்னிரெண்டு பேருக்கும் முதல் வருடம் நடந்த எக்ஸ்போவிலேயே கொஞ்சம் பிரச்சனை. நான் எக்ஸ்போவை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று நினைத்த தேர்ட் இயர் மாணவர்களுக்கு உதவினேன். தேர்ட் இயர் பசங்களை பிடிக்காததால், எக்ஸ்போவை கெடுக்க வேண்டும் என்று நினைத்த செகண்ட் இயர் மாணவர்கள், அவர்களை கைக்குள் போட்டுக் கொண்டார்கள். இதெல்லாம் போன வருடப் பிரச்சனை. இப்பொழுது நாங்கள் செகண்ட் இயர்.

சந்தியா மேடம் கொஞ்சம் கருப்பு. பாடமும் அவ்வளவாக நடத்தத் தெரியாது. அது என்னவோ தெரியவில்லை, என் எம்சிஏ படிப்பில், எனக்கு பலமுறை வந்த சந்தேகம், எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு பாடம் நடத்துகிறார்களா, இல்லை நான் அவர்களுக்கு பாடம் நடத்துகிறேனா என்பதுதான். ஆனாலும் அப்படிப்பட்ட ஆசிரியர்களையும் நண்பர்களாக்கி கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். மற்றபேர் தலை மேல் ஏறி கழுதை மேய்க்க முனைந்தார்கள்.

சந்தியா மேடம் கிளாஸில் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. மாணவர்களின் கிண்டல்களை பொருட்படுத்தாமல், பதிலுக்கு பதில் கிண்டலாகவே விஷயத்தை முடித்து விடுவார். பசங்க இன்று பாடம் நடத்த வேண்டாம் என்று சொன்னால் பாடம் நடத்துவதில்லை. சில சமயம் “போர்ஷன் முடிக்கனும்பா. ஒரு அரைமணி நேரம் பாடம் நடத்திக்கிறேன். ப்ளீஸ்” என்பார். அப்படி நடத்துவதையும் யாரும் கவனிப்பதில்லை என்பது வேறு விஷயம். இந்தளவுக்கு ஸ்டூண்ட்ஸோடு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் மேடத்தின் முகத்தில் அவ்வளவு கோபத்தை பார்த்த பிறகுதான் எனக்கும் விஷயத்தின் தீவிரம் உரைத்தது.

“யார் செருப்பு இது?” கொஞ்சம் உயர்ந்த குரலில்தான் மேடம் கேட்டார்.

பதிலில்லை.

“யாருதுன்னு கேக்கறனில்லை?!” குரல் மேலும் உயர்ந்தது, கோபமும்!

நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன்.

யாரும் அசைவதாகத் தெரியவில்லை. ஃப்ரெட்ரிக் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.

மேடம் முகத்தில் அவமானம். என்ன செய்வதென்று அவருக்கும் தெரியவில்லை. கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது.

“ஓகே. யாரோடதாவும் இருக்கட்டும். யாராவது ஒருத்தர் அதை எடுத்து வெளில போடுங்க.”

யாரும் வரவில்லை.

“இந்தக் கிளாஸ்ல எம்பேச்சை கேக்கிறதுக்கு ஒர்த்தர் கூட இல்லியா?”

பாக்கியராஜ் கடைசி வரிசையிலிருந்து வேகமாக எழுந்து வந்து வெளியே சென்றான். அங்கு முக்கில் சார்த்தி வைக்கப்பட்டிருந்த ஒட்டடை குச்சியை எடுத்து வந்து, அந்த செருப்பை கொழுக்கி வெளியே எடுத்து சென்று ஜன்னல் வழியே வெளியே விட்டான். வகுப்பிருந்தது முதல் மாடியில். அதனால் கீழே போடப்பட்ட செருப்பு சன் ஷேடில் விழுந்தது.

மேடம் தவறான முடிவு எடுத்துவிட்டார் என்று எனக்குத் தோன்றியது. பசங்க இன்னிக்கும் கிளாஸை காலி பண்ண முடிவு செய்துவிட்டார்கள். செமஸ்டர் முடியப் போகிறது. இன்னும் பாதி போர்ஷன் கூட முடியவில்லை.

”நான் கொஞ்ச நேரம் கழிச்சு நடத்துறேன்.” என்று சொல்லிவிட்டு வகுப்பில் ஜன்னல் பக்கமாக திரும்பி நின்று கொண்டார். வழக்கமாக இப்படி நின்றிருந்தால் பசங்க ஃபிரீயாக அரட்டை அடிப்பார்கள். இன்றும் உடனே அரட்டை ஆரம்பமான சத்தம் கேட்டது.

மேடம் திரும்பி, “உங்களுக்கு கொஞ்சம்கூட டிஸிப்ளின் தெரியாதா? இங்க முன்னாடி வந்து பாடம் நடத்திப் பாருங்க. அப்ப யாராவது உங்க முன்னாடி செருப்ப விட்டெறிஞ்சா எப்படியிருக்கும்னு தெரியும். சே!” என்று மறுபடி திரும்பிக் கொண்டார். நான் பின்னால் திரும்பிப் பார்த்து மெதுவாக சிரித்துக் கொண்டேன், ’இந்தப் பசங்களுக்கு நல்லா வேணும்.’

பின்னால் தூங்கிக் கொண்டிருந்த ஃப்ரெட்ரிக்கை யாரோ தட்டி விட்டார்கள். பாக்கியராஜ் அவனிடம், “யேல, ஒன் செருப்பு எங்க?” என்று கேட்டது என் காதில் விழுந்தது. மேடத்துக்கு கேட்டிருக்காது.

ஃப்ரெட்ரிக் மலங்க மலங்க விழித்து குனிந்து தேட ஆரம்பித்தான்.

“யேல! என்ன?”

“என் செருப்பக் காணோம்ல.”

மேடம் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்.

“மேடம் ஓன் செருப்பத் தூக்கி வெளியே வீசிட்டாங்க” கடைசி வரிசை பசங்க ஊதி விட்டார்கள்.

ஃப்ரெட்ரிக் எழுந்து மேடத்தை நோக்கி விழித்தான்.

மேடம், ”என்ன?”

“செருப்பு!?!”

“என்னது?”

“என் செருப்பக் காணோம் மேடம்.”

கொஞ்சம் குறைந்திருந்த மேடத்தின் கோபம் மறுபடி கூடியது.

“அப்பத நான் கேட்டப்பவே ஏன் சொல்லலை.”

“அவன் தூங்கிட்டான் மேடம்.” பின்னாலிருந்து கேட்ட குரல் பாக்கியராஜினுடையதுதான்.

“ஏன் சொல்லலைன்னு கேட்கிறேன்.”

“தூங்கிட்டேன் மேடம்.”. ஃப்ரெட்ரிக் இப்படித்தான். கொஞ்சம் மெண்டலி டிஸ்டர்ப்ட் ஆனவன். சில சமயம் என்ன சொல்கிறோம், செய்கிறோம் என்பதை உணராமலே சொல்லி/செய்து விடக் கூடியவன். அவன் சொந்த வாழ்வை புகுந்து பார்த்தால், அம்மா கிடையாது, சித்தி கொடுமை, அப்பா கவனிக்கவில்லை என்று பல காரணங்கள் சொன்னாலும், இந்தக் கதைக்கு அவையெல்லாம் தேவையில்லையாதலால், அவன் மெண்டலி டிஸ்டர்ப்ட். அது போதும்.

“இங்க ஒருத்தி போர்ஷன் முடிக்கனுமேன்னு, உங்களுக்காக நைட்டெல்லாம் நோட்ஸ் எடுத்து வந்து பாடம் நடத்துவா. நீ பாட்டுக்கு அதை கவனிக்காம தூங்கிருவே. ஒன் செருப்ப எடுத்து இன்னொருத்தன் அவ மேல வீசுவான். அதுவும் ஒனக்குத் தெரியாதுல்ல. என்னன்னும் போங்க.” மேடம் மறுபடி வெடித்தார்.

இப்பொழுது பின் வரிசையிலிருந்து ஸாம் எழுந்தான், “மேடம் அவன் நெஜமாவே தூங்கிட்டிருந்தான். அவனுக்கு எதுவும் தெரியாது. அவன் செருப்பை எடுத்து யாரோ லேசா தள்ளி விட்ருக்காங்க. அதுக்காக அவன் செருப்பை எடுத்து வெளியே வீசினா என்ன மேடம் அர்த்தம். பாவம் மேடம். ரொம்ப கஷ்டப்பட்ட பையன். இன்னொரு ஜோடி செருப்பு வாங்குறதனா அவனுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? இருந்தாலும் நீங்க சரியா விசாரிக்காம அவன் செருப்ப வெளியே போட்ருக்கக் கூடாது மேடம்.”

எனக்கு சனியன் சங்கில் ஏறி உட்காருவதாகத் தோன்றியது.

“அப்ப அவன் செருப்ப யாரு முன்னாடி தள்ளி விட்டதுன்னு சொல்லுங்க.”

“அத நான் கவனிக்கலை மேடம். ஆனா நீங்க எப்படி மேடம் அவன் செருப்ப வெளில போடலாம். இப்ப அவன் செருப்புக்கு என்ன மேடம் பதில். நீங்க வாங்கிக் கொடுப்பீங்களா? யேல, ஒனக்காகத்தான்ல பேசிட்டிருக்கேன். ஒன் செருப்புக்கு என்ன பண்ணப் போறாங்கன்னு கேளு.” இன்னும் தூக்கம் சரியாகக் கலையாத ஃப்ரெட்ரிக்கை உசுப்பிவிட்டான்.

“நீங்க நான் கேட்கிறதுக்கு பதில் சொல்ல மாட்டேங்கறீங்க. செருப்ப...” என்று மேடம் திரும்ப பழைய பல்லவியை பாட, ஸாமும் பதிலுக்கு அவன் பல்லவியை பாட, இதற்குள், கடைசி வரிசை பசங்க நாலு பேரும் ஸாமுடன் இணைந்து கொண்டார்கள். பொன்ராஜுக்கு ஸாமை பகைத்துக் கொள்ள முடியாது. முரளிக்கு கிளாஸை எப்படியாவது ஓய்த்து விட வேண்டும். எப்படி ஓய்த்தால் என்ன. பாக்கியராஜோ எப்பொழுது எந்தப் பக்கம் நிற்கிறான் என்றே தெரியவில்லை.

அப்புறம் நடந்த சம்பாஷனைகளை விவரிப்பது கொஞ்சம் கடினம். இரு தரப்பும் மாறி மாறிப் பேச, சண்டை போட,
மாணவர்கள் பக்கம் மடத்தனமான பலம் சேர்ந்து விட, செருப்பை வெளியே வீசச் சொன்ன சந்தியா மேடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிலைமை தலை கீழாக மாறியது.

பீரியட் முடிய ஐந்து நிமிடமே பாக்கியிருந்ததால், மேடம் கோபித்துக் கொண்டு ஸ்டாஃப் ரூமுக்கு போய் விட்டார். அடுத்து பத்து நிமிடம் பிரேக். அதற்கு அடுத்து கம்யூட்டர் பிராக்டிக்கல் பீரியட். பின் வரிசையில் மாணவர்கள் மாநாடு கூட்டப்பட்டது. ’மேடம் எப்படியும் பிரச்சனையை இந்நேரத்துக்கு ஸ்டாஃப் ரூம்ல ரிப்போர்ட் பண்ணிருப்பா. ஹெச்.ஓ.டி. கலைமகள் சும்மாவே முசுடு. ஏற்கெனவே நம்ம கிளாஸ் மேல கொலவெறில இருக்கா. அதுனால பிரச்சனையை பிரின்ஸி வரைக்கும் கொண்டு போய்டுவா. அவங்க பிரச்சனையை பிரின்ஸிகிட்ட கொண்டு போறதுக்கு முன்னாடி நாம முந்திக்கனும். அதுனால நாம ஒத்துமையா இருக்கனும். நம்ம மேல தப்பு வராம இருக்கனும்னா, நாமளும் ஸ்ட்ராங்கா ஏதாவது பண்ணனும். பேசாம பிராக்டிக்கல் லேப பாய்காட் பண்ணிரலாம். அப்பதான் அவங்க பக்கமும் தப்பு இருக்குன்னு பிரின்ஸிக்குப் புரியும்.’

”நான் ரெடிப்பா”, என்றான் முரளி, “பாய்காட்!” என்று கூவினான்.

”ஸோ, அடுத்த பீரியட், கம்ப்யூட்டர் லேபை எம்.சி.ஏ. செகண்ட் இயர் பாய்காட் பண்றோம். பண்றோம்டா. பண்றோம்டா” என்று பொன்ராஜ் எக்கோ கொடுத்தான். கடைசி வரிசை பசங்கள் ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தனர். நான் எதுவும் காதில் விழாத மாதிரி பிரேக்குக்கு போய் விட்டேன்.

பிரேக் முடிந்ததும், நேராக லேபுக்கு போய் விட்டேன். லேப் கீழேதான். அதனால் முதல் மாடி வகுப்புக்குள் நுழையவோ, வாசலைக் கடக்கும் பிரச்சனையோ இல்லை. அப்ஸர்வேசன் நோட்டெல்லாம் லேபுக்கு எடுத்துப் போகும் பழக்கமும் நமக்கு கிடையாது. அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் லேபுக்குள் நுழைந்தேன், அதாவது லேப் காரிடாரில். லேபுக்குள் நுழைய இன்னொரு கதவைத் திறக்க வேண்டும்.

லேப் காரிடாரில் எங்கள் வகுப்பு பெண்கள் நின்று குழம்பிக் கொண்டிருந்தது தெரிந்தது. பசங்களை பகைத்து கொண்டு லேபுக்குள் போவதா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்தனர். நான் உள்ளே நுழையவும் ஹேமாவையும், ரம்யாவையும் என்னிடம் அனுப்பி என்ன செய்யலாம் என்று கேட்கச் சொன்னார்கள். அவர்கள் இருவர் மட்டும்தான் பசங்களோடு வெட்கப்படாமல் பேசுபவர்கள்.

ஹேமா என்னிடம் வந்து, ”என்னடா பண்றது? நீ உள்ளப் போப்போறியா?” என்று கவலையோடு கேட்டாள்.

நான் வாயைத் திறந்து, “ஆ...”, யாரோ என் பெயரை சொல்லி அழைத்ததால் திரும்பிப் பார்த்தேன். பாக்கியராஜ் காரிடார் வாசலில் நின்று கொண்டிருந்தான். “என்ன?” என்றேன்.

“ஒர் நிம்சம் இங்க வாயேன்.”

போனேன். “நம்ம பசங்கல்லாம் லேபை பாய்காட் பண்றதுன்னு முடிவு பண்ணிருக்காங்க.” சொல்லும்பொழுது அவன் குரல் மிகவும் தாழ்ந்து இருந்தது, ஏதோ சொல்லக் கூடாததை சொல்வது போல. பசங்களுக்கு என் மேல் எப்பொழுதும் ஒரு பயமுண்டு. நான் அடிதடி பயில்வான் என்றெல்லாம் இல்லை. சொல்லப்போனால் என்னை புல்தடுக்கி பயில்வான் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் நான் எப்பொழுதும் எந்த விஷயத்திலும் கரெக்டாக நடந்து கொள்வேன் என்பதால்தான் என் மீது பயம். அந்த பயம் எனக்கும் கொஞ்சம் கர்வமாக இருந்தது.

“சரி, அதுக்கென்ன?”

“அதான், நீயும்....”, என்று இழுத்தான்.

“இங்கப் பாரு. தப்பு யாரு மேல? ஒருத்தங்க பாடம் நடத்திட்டிருக்கும்போது அவங்க முன்னாடி செருப்ப விட்டெறிஞ்சா அவங்களுக்கு கோபம் வராம என்ன செய்யும்? இந்த ஃப்ரெட்ரிக் வேற பாடம் நடத்தறப்போ தூங்கிட்டு, அதையும் அவங்ககிட்டயே சொன்னா எரிச்சல் வராதா. இதுல இவன்கிட்ட மேடம் மன்னிப்பு கேக்கனும்னு வேற நீங்கல்லாம் சொல்றீங்க.”

“எனக்கும் தெரியுதுடா. இருந்தாலும் இப்ப நாம ஒன்னா இல்லைன்னா நம்ம கிளாஸுக்குதான் அவமானம். இந்த ஒரு தடவை மட்டும் வந்துறேன்.” அவன் குரல் மிகவும் கெஞ்சலோடு இருந்தது. எனக்கு அவன் மீது எப்பொழுதும் கொஞ்சம் மதிப்பு உண்டு. ’பையன் நல்லவந்தான். சேர்க்கதான் சரியில்ல’ என்று நினைத்துக் கொள்வேன்.

அவன் மறுபடி, “ப்ளீஸ்டா” என்றான். கொஞ்சம் தர்மசங்கடமாக அவனைப் பார்த்தேன். “சரி வர்ரேன். ஆனா, உங்களுக்கு சாதகமா ஒரு வார்த்தைகூட பேச மாட்டேன்.” என்றேன்.

“நீ வந்தா போதும்.” என்றான், என்னை இழுத்துச் செல்லும் அவசரத்துடன்.

பின்னால் திரும்பி பெண்களை ஒருமுறை பார்த்துவிட்டு, அவனுடன் மேலே சென்றேன். நானும் வந்து விட்டதால், பெண்களும் பின்னாலேயே வந்து விட்டார்கள்.

கிளாஸுக்குள் என் இருக்கைக்கு போய் உட்கார்ந்து கொண்டேன். யாரையும் திரும்பிப் பார்க்கவில்லை. யாருடனும் பேசவில்லை.

அரைமணி நேரம் கழித்து ஹெச்.ஓ.டி. கலைமகள் வந்தார். பசங்க அசைந்து கொடுக்கவில்லை. அடுத்த பதினைந்து நிமிடத்தில் பிரின்ஸி எங்கள் அறைக்குள் நுழைந்தார். எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார். நான் முதல் வரிசையில், நான் மட்டும்.

அவரும், “ஒருத்தங்க முன்னாடி கிளாஸ் எடுத்தி....” என்று பழைய பல்லவியை பாடிவிட்டு, “நீங்களெல்லாம் படிக்க வந்திருக்கீங்களா வேற எதுக்காவது வந்திருக்கீங்களா? ஆர்ட்ஸ் படிக்கிற பயலுங்கதான் இந்த மாதிரி ஸ்ட்ரைக் கிய்க்ன்னு பண்ணுவாங்க. நீ சைன்ஸ் படிக்க வந்திருக்கேய்யா. பொறுப்பு வேணாம்.....” அரை மணி நேரத்துக்கு அவர் ஓயவில்லை. பசங்கள் இடையில் ஒரு வார்த்தை பேசவில்லை.

எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. நேராக அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவரும் என்னைப் பார்த்துதான் அவ்வளவு திட்டுக்களையும் திட்டிக் கொண்டிருந்தார். போன வருடம் நடத்திய எக்ஸ்போ மூலம் என்னை அவருக்கு மிக நன்றாகத் தெரியும். என்னிடம் அவருக்கு நல்லெண்ணம் உண்டு என்று எனக்கும் தெரியும். ஆனால் அவ்வளவு நல்லெண்ணமும் இன்று நாசமாகிவிட்டது என்று தோன்றியது.

இறுதியில், “கடைசியா சொல்றேன். இப்ப எல்லாரும் அவங்கவங்க அப்ஸர்வேசன் நோட்டை எடுத்துகிட்டு லேபுக்கு போங்க.” என்றார். அரைமணி நேரமாக இதற்காகவே காத்திருந்தது போல நான் எனது ஒரே நோட்டை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறி, லேபுக்கு போனேன். என்னைத் தொடர்ந்து இன்னும் இருவர் வர, அவர்களைத் தொடர்ந்து பெண்களும் வர, கடைசி வரிசை பாக்கியராஜ், ஸாம், முரளி, பொன்ராஜ், செருப்புக்கு சொந்தக்காரன் ஃப்ரெட்ரிக் ஆகிய ஐவர் தவிர எல்லோரும் லேபுக்கு போய்விட்டோம்.

எங்கள் முன்னால் வாங்கு வாங்கென்று வாங்கிய பிரின்ஸி, முக்கியமாக என்னை கிழி கிழியென்று கிழித்தவர், நாங்கள் லேபுக்கு வந்தபின்னும், அவர்கள் ஐவரும் பிடிவாதமாக நின்றதால், அவர்களிடம் சமாதானமாக பேசியதாகவும், மேடம் ஃப்ரெட்ரிக்கிடம் தனியாக மன்னிப்பு கேட்டதாகவும், யார் மீதும் எந்த நடவடிக்கையும் கிடையாது என்றும், பின்னர் ஸ்டாஃப் ரூமில் நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து லேபுக்குள் செய்தி கிடைத்தது.

எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. இந்த நிகழ்வின் நியாய தர்மங்கள் எனக்குப் புரியவேயில்லை.

அந்த நிகழ்வுக்குப் பிறகு, கிளாஸில் நான் யாருடனும் பேசுவதில்லை, கிட்டத்தட்ட ஒரு வருடம். அப்புறம் பிரியப்போகிற சமயம் எதற்கு வீணாக பகையோடு பிரிய வேண்டும் என்று சமாதானமாகி, கல்லூரி விட்டு வெளியே வந்து, சென்னையில் வேலை தேடும் பொழுது ஸாம், பொன்ராஜோடு ஒரே மேன்ஷனிலும், முரளியோடு ஒரே அறையிலும் காலம் தள்ளி என்று வாழ்க்கை போய் விட்டது.

கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதும் இந்த நிகழ்வு குறித்து எனக்குள் எழுவது ஒரே ஒரு கேள்விதான்.

’அந்த செருப்ப எறிஞ்சது யாரு?’

Thursday, January 28, 2010

ஆன்லைனில் எனது விஞ்ஞான சிறுகதைகள் நூல் - ௨௲௧௧

டிஸ்கி : இதுவும் ஒரு சுய விளம்பரப் பதிவு!!!

எனது விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு “௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்” வெளியாகியிருப்பது உங்களனைவருக்கும் தெரியும். இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்? எங்கே கிடைக்கும்? என்று பல கோடி(?!?) பேர் கேட்கிறார்கள். அதற்காகவே இந்தப் பதிவு.

தபால் மூலம் வாங்க, ’TRISAKTHI PUBLICATIONS’ என்ற பெயருக்கு புத்தக விலை ரூ.70+தபால் செலவு ரூ.25க்கு Demand Draft எடுத்து, புத்தகப் பெயரையும் குறிப்பிட்டு,

Chief Editor
Trisakthi Publications
Giriguja Enclave
56/21, First Avenue, Shastri Nagar
Adyar
Chennai 600 020
என்ற முகவரிக்கு அனுப்பவும்.

நேரடியாக வாங்க, மேற்கண்ட முகவரிக்கு வருகை தந்தால், திரிசக்தி பதிப்பகத்தாரின் அனைத்துப் புத்தகங்களும் கிடைக்கும்(என்னுடையதும் இதில் அடங்கும்!).

ஆன்லைனில் கூட வாங்கலாம். ஆன்லைனில் புத்தகத்தை இங்கு வாங்குங்கள் ->
http://ezeebookshop.com/eshop/product_info.php?cPath=14_17&products_id=85



பி.கு.:- இந்தப் பதிவு எனது எல்லா வலைப்பூக்களிலும் வெளியாகும். அதனால் திரட்டிகளில் மறுபடி மறுபடி இந்தத் தலைப்பை காண நேர்ந்தால், அது உங்கள் தலைவிதி!!!;-)

Sunday, November 15, 2009

நிபுணன்

ப்ரவீன் என்றதும் இருபதிலிருந்து முப்பது வயது இளைஞனை கற்பனை செய்து கொண்டால், அது உங்கள் தவறு. ப்ரவீன் என்று பெயர் வைத்துக் கொண்டால் வயதாகாதா என்ன? ப்ரவீன் - வயது 56 - நடு வழுக்கை - தொப்பை - கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த இருபத்தி இரண்டாம் நூற்றாண்டுக்கு பொருத்தமில்லாமல், இன்னும் பழைய ஷர்ட் பேண்ட் மாடல் உடையில், அவரை நீங்கள் அடிக்கடி ஹெலிபஸ் ஸ்டாண்ட்களில் பார்க்கலாம்.

பார்ப்பவர்கள் ப்ரவீனை கடத்தல்காரர் என்று வாய்தவறிக் கூட சொல்ல மாட்டார்கள். கடத்தல்காரர் என்ற வார்த்தைப் பிரயோகம் கூடத் தவறு. ப்ரோக்கர் என்று சொல்லாமா? அதுவும் முடியாது. பில்லில்லாமல் விற்கப்படும் பொருளை வாங்குபவரிடமிருந்து, அன் அக்கவுண்ட் பணத்தை வாங்கி, அதை பத்திரமாக விற்பவரிடம் கொடுப்பதுதான் ப்ரவீனின் தொழில். சுருக்கமாக சொன்னால் ’அன் அக்கவுண்ட் பேங்கர்’. ஹி இஸ் எ ப்ரொஃபஷ்னல். அவரை எப்படி அழைப்பது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஒரு அழுக்கு வியாழக்கிழமை. ’வசூலு’க்கு வந்தவர் ஹெலிபஸ்ஸிலிருந்து இறங்கி ஏர் டாக்ஸியில் ஏறி, தன் வீஃபோனைத் திறந்து பெயரை ஒற்றி, “சார், நான் ஸாக்ரா கம்பெனி பேமெண்ட்டுக்காக வந்திட்டிருக்கேன். எங்க வரனும்னு சொல்லுங்க”, என்றார் குரலைத் தனித்து.

“ஹெலிபஸ்ஸ்டாண்டிலிருந்து ஏர்பிரிட்ஜ் வருது பாருங்க. அது வழியா வந்........திரும்பி எடது பக்கம் பார்த்தீங்கன்னா, நம்ம கம்பெனி போர்ட் மிதந்திட்டிருக்கும். வந்துருங்க.”

“ஓகே சார். பக்கத்துல வந்துட்டு தேவைன்னா மறுபடி கூப்புட்றேன்.” கட் செய்து விட்டு, டிரைவரிடம் ”ப்ரிட்ஜ க்ராஸ் பண்ணுப்பா” வழி சொல்ல ஆரம்பித்தார்.

X----X-----X

ராஜீவ் - டீசெண்டான பேர் இல்லே! அவனும் பார்க்க டீசெண்டாத்தான் இருப்பான். ஆனாத் தொழில்?! ஏன் யிந்த மாதிரி தொழில் பண்றவங்கள்ளாம், மாரி, பக்கிரி, மன்னாரு இப்டிதான் பேர் வச்சுப்பாங்களா? ராஜீவ் பண்ணக் கூடாதா? ஆமாபா, திருட்டுப்பயதான். ஆனா மத்தவனுங்க மாரி புத்தியில்லாமத் திருடி மாட்டிக்குற ரகமில்லே. நேக்கா ரூட்டுப் போட்டு புரோக்ராம் எழுதி, பக்கெல்லாம் ஃபிக்ஸ் பண்ணி திருடுறவன். இதுவர மாட்னதே இல்ல.

திடீரென்று கத்திய வீஃபோனைத் தட்டியவன், “சொல்லு கார்த்தி! பட்சி ஏதாச்சும் சிக்கிச்சா?”

“ராஜ்ஜி! செமத்தியா ஒரு பார்ட்டி வந்திருக்கு. வஸூல் பண்றதுதான் தொளிலே. இன்னிக்கு நம்மூருக்கு வந்திருக்கு. எப்டியும் பத்து பதினஞ்சு தேறும்.”

“ஆள வுட்றாத. க்ளோஸா வாச் பண்ணிட்டே இரு.”

“பாத்துட்டுதான் இருக்கேன். இப்பதான் கம்பெனிக்குள்ள வந்திருக்கான். கெளம்பும்போது சொல்றேன். நீ பாத்துக்க. எம் பர்சண்டேஜ்ஜ மட்டும் கரெட்டா குடுத்திரு.”

“சர்டா. கெளம்பும்போது சொல்லு.” கட் செய்தான்.

’நாம மட்டும் தட்டிரலாமா? லேசர் லேகாவயும் கூப்டுக்கலாமா? அவளக் கூப்ட்டா வேல இல்லேன்னாலும் பர்சண்டேஜ் கொடுக்கனுமே?!’ மனசுக்குள்ள கணக்குப் போட ஆரம்பிச்சான்.

X----X-----X

“ஒங்க பேர் சார்?”

“ப்ரவீன்.”

“பார்ட்டி யாரு?”

“பணங்குடி எம்.ஆர். அன் கோ.”

“சாக்ராஸுக்கு சப்ளையரா?”

“ஆமாம்.”

“நீங்க அவங்களுக்கு என்ன வேணும்.”

“நான் தேர்ட் பார்ட்டி. மீடியேட்டர்.”

“ஓகோ! நோட் கொண்டு வந்தீங்களா?”

எந்தக் காலத்திலும், இது மாதிரி விஷயங்களில் புதிய ஆட்களை அடையாளம் கண்டுகொள்ள, அரதப் பழைய டெக்னிக். பர்ஸில் கவனமாக மடித்து வைத்திருந்த ஆயிரம் ரூபாய் ப்ளாஸ்டிக் தாளை எடுத்துக் கொடுத்தார். அரசாங்கமே அச்சடித்துக் கொடுத்திருக்கும் ஐடிக் கார்ட். நோட்டை வாங்கிக் கொண்டவர் அதன் நம்பரை, தனது பிடிஏவில் செக் செய்துவிட்டு, “சரியா இருக்கு சார். அமவுண்ட் எவ்வளவு?”

“பதினேழு, இருபத்தி எட்டு, நாற்பத்தி அஞ்சாயிரம்.”

நோட்டுக்கட்டுக்கள் எண்ணப்பட்டன - இருமுறை. ப்ரவீன் ஒவ்வொரு கட்டாக எடுத்து தனது லெதர் பைக்குள் அடுக்கினார்.

X----X-----X

“ராஜ்ஜி! ஆளு கெளம்பறான். எலிபஸ்ஸ்டேண்டுக்குதான் வாரான். கைல கருப்பு லெதர் பை இருக்கு - தோள்ல தொங்கவுடற டைப்பு. பழைய ஸ்டைல்ல சட்டையும் பேண்டும் போட்டிருக்கான். கொஞ்சம் தாட்டியா இருப்பான். அப்புறம் சட்டைப் பாக்கெட்ல பழைய டப்பா சைஸ் வீஃபோன். இத்தப் பெரிய ஃபோன எவனும் இப்ப வச்சிருக்க மாட்டான். அத வச்சே நீ அவன ஈஸியா கண்டுக்கலாம்.”

“சர்டா! ஆளு பணத்த பைக்குள்ளதான் வச்சானா? நீ பார்த்தியா?”

“ஆங்! சொல்ல மறந்துட்டேன் பா. ஆளு பாம்பு மாதிரி ஒரு பெரிய பை வச்சிருந்தான். அதுக்குள்ளதான் எல்லா பணத்தையும் போட்டான். அப்றம் அந்தப் பைய லெதர் பைக்குள்ள வச்சான்.”

”எடப்பையா இருக்கும். சரியா சொல்லு. அந்தப் பாம்புப் பைய ஒடம்புல கட்டிகிட்டானா? இல்ல லெதர் பைல வச்சானா?”

“லெதர் பைலதான் வச்சான்.”

”ஆமா கேக்க மறந்துட்டேன். பார்ட்டி பேர் என்ன?”

“ப்ரவீன் - அப்படின்னு, கம்பெனி லாகின்ல இருக்கு.”

“சரி. நான் பாத்துக்கறேன். கட் பண்ணு.”

‘ம்ம்ம். லெதர் பை. அதுக்குள்ள எடப்பை. லெதர் பையத் தட்றது விஷயமே இல்ல. ஒருவேள எலிபஸ்ஸ்டேண்ட்க்கு வர்ர வழில எடப் பைய எடுத்து ஒடம்புல கட்டிகிட்ருந்தா? கார்த்தி கம்பெனிக்குள்ள மட்டும்தான் வாச் பண்ணுவான். கம்பெனிக்கு வெளில வந்தப்பறம் அவன் கட்டீருந்தா கார்த்திக்குத் தெரியாது. எடப் பைல பணத்தப் போடறவன், அத லெதர் பைக்குள்ளேயா வப்பான்? எடுத்து கட்டிக்க மாட்டான்? இன்னொரு பாயிண்ட் இருக்குது. பார்ட்டிக்கு வசூல்தான் தொளிலு. அப்படின்னா எல்லாவிதத்திலேயும் ஜாக்கிரதையா இருப்பான். நோட்டம் போடறவனை ஏமாத்தறதுக்காக எடப்பை வச்சிருக்கலாம். பணம் லெதர் பைலயே கூட இருக்கலாம். ம். மிஸ் பண்ணிரக்கூடாது. பத்து பர்சண்டேஜ் போனாப் போவுது. லேகாவ கூப்டுக்கலாம். ச்சும்மா லேசர் கத்தியால மில்லிமீட்டர் துல்லியமா ஒடம்புல படாம துணிய வெட்றதுக்கு அவதான் சரி!’

X----X-----X

ப்ரவீன் ஏற வேண்டிய ஹெலிபஸ் கிளம்பத் தயாராக இருந்தது. ஏறுவதற்காக கதவைத் திறந்தவரை உள்ளேயிருந்த ஒருவன் சட்டென்று இடித்துவிட்டு இறங்க, தோளில் கணம் குறைந்ததை உணர சில வினாடிகள் ஆனது. உணர்ந்ததும், சட்டென்று திரும்பி, “ஏஏஏய்!”. யார் இடித்தது? இந்தக் கூட்டத்தில் எப்படித் தேடுவது?

உடனடியாக தோன்றிய தொடர்பு நினைவில், சட்டென்று கையை இடுப்பில் தடவிப்பார்க்க, இடையில் கட்டியிருந்த பையையும் காணவில்லை. பின் இடுப்புப் பகுதியில் சட்டை நேர் கோட்டில் கிழிக்கப்பட்டிருப்பதாக தட்டுப்பட்டது. அரை நிமிடம் யோசித்தவர், சட்டென்று ஹெலிபஸ் உள்ளே ஏறி அமர்ந்து கொண்டார். அவர் உட்காரவும் ஹெலிபஸ் டேக் ஆஃப் ஆனது.

X----X-----X

ராஜீவ், லெதர் பையோட வேகமா நடந்துட்டிருந்தவன், எயல்பா திரும்பி எலிபஸ் பறந்துட்டதை பாத்தபெறவு மெதுவானான். ’ஆள் ஒன்னும் அமளி பண்ணலை. எதிர்பார்த்ததுதான். பின்ன, கறுப்பு பணம் ஆச்சே?! கத்துவானா!!’

“என்னா லேகா! சொன்ன மாரி எடப்பைய கத்தி போட்டியா?”

“போடாம. அதெல்லாம் நேக்கா வெட்டிட்டேன். நான் வெட்னதே தெர்யாம லூஸு மாரி அந்த ஆள் நடந்து போறான். சரி, நம்ம பர்சண்டேஜ சீக்கிரம் பிர்ச்சுக் கொடு.”

“மொதல்ல எடப்பைய கொடு”

“ஆமா, பெர்ய பையி. இதுல என்னா இருக்கு. மால் ஒங்கிட்டல்ல சிக்கிருக்கு.” சொல்லிகிட்டே துணிப்பந்த அவன்ட்ட வீசினா.

“ஏ, ஏ, ஏய், லேகா வெளாடாதே. இதுல இருந்த பணம் எங்க?”

“அட! இதுல பணம் ஒன்னும் இல்லபா. நீ அடிச்ச பைல இல்ல? சும்மா பர்சண்டேஜ் கொடுக்காம கத்தி போட பாக்காத.”

“அடப்போடி....இவளே! நான் அடிச்சதுல ஒன்னும் இல்லை. அடிச்சவுடனேயே எனக்குத் தெர்ஞ்சுப் போச்சு, பையி வெத்துப் பையின்னு. நா ஒங்கிட்ட சிக்கிருக்கும்னு நெனச்சேன். அப்ப லெதர் பை, எடைப்பை, ரெண்டில\யும் பணம் இல்லையா? இந்த லெட்சணத்துல பர்சண்டேஜ் வேற!?!”

“அப்ப பணம் எங்கேப்பா? கெழவன் வேற ஏதாவது பைல வச்சிருந்தானா?”

”அந்தாள்ட்ட வேற பொட்டி பை எதுவும் இல்லையே.”

“ஆள் கரெக்டுத்தானே?”

“பேர் கூட அடிக்கிறதுக்கு முந்தி செக் பண்ணிட்டேன். நா அடிச்ச ஆள் கரெக்டுதான். நீ நான் காட்ன ஆள்ட்டதான அடிச்ச?”

“ஆமா.”

“அப்ப பணம் எங்க போச்சு?”

X----X-----X

ஹெலிபஸ்ஸிலிருந்து இறங்கியதும், பிரவீன் நேரே தன் வீட்டிற்கு சென்றார். படபடப்பாக இருந்தது. ஒரு பாட்டில் ஆறு டிகிரி நீரை அருந்தியபின் படபடப்பு கொஞ்சம் அடங்கியது.

‘பாவிப் பசங்க!! இவ்வளவு முன்னெச்சிரிக்கையா இருந்தும், என்னை எவ்வளவு உன்னிப்பாக கண்காணித்திருக்கிறார்கள். இது நிச்சயம் திட்டமிட்ட திருட்டுதான். நன்றாக கண்காணித்தே திருடியிருக்கிறார்கள். சாதாரண திருட்டாக இருந்தால் லெதர் பை மட்டுமோ, இடைப் பை மட்டுமோதான் போயிருக்கும். இரண்டுமே போவதென்றால், நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கை இதில் இருந்திருக்க வேண்டும். இனியாவது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.’

வீஃபோனை எடுத்து ‘M', 'R' என்று ஒற்றி, “ஆங், நான் தான் ப்ரவீன் பேசறேன். பணம் வாங்கிட்டு வந்துட்டேன். கொஞ்சம் அன் எக்ஸ்பெக்டடா சில விஷயங்கள் நடந்து போச்சு. பணம் வாங்கிட்டு, ஹெலிபஸ்ஸ்டாண்டிலிருந்து கிளம்பும்போது, என் பேக் திருடு போயிடுச்சு. ஆனா, பை காட்ஸ் க்ரேஸ், உங்க பணம் பத்திரமா இருக்கு.”

“நிஜமாவா? அப்ப பணத்தை எங்கே வச்சு கொண்டு வந்தீங்க?”

“அது தொழில் ரகசியம் ராக்கி. அதுக்கு மேல கேக்காதீங்க. இந்தத் தொழில்ல இதிலெல்லாம் ரொம்ப கவனமா இல்லைன்னா, இத்தனை நாள் இந்த வேலை செய்ய முடியுமா? இன்னும் ஒரு மணி நேரத்துல உங்க ஆஃபீஸ்க்கு பணத்தோட வர்ரேன்.”

ப்ரவீன் தனது சட்டைப் பையிலிருந்த அந்த கனமான சிறிய ’டப்பா’வை எடுத்து மேஜை மேல் வைத்தார். கொஞ்சம் எக்ஸ்ட்ரா லார்ஜ் சிகரெட் லைட்டர் போல இருந்த அதன் பக்கவாட்டில் அழுத்தியவுடன் இரண்டாகத் திறந்து கொண்டது. அதற்குள் சின்னச் சின்னதாய் பத்து பதினைந்து ப்ளாஸ்டிக் சிப்புகள். அவற்றை பத்திரமாக எடுத்து மேஜை மேல் அடுக்கினார். இப்பொழுது டப்பாவை மறுபடி மூடி, “Dematerialising Shrinker" என்ற எழுத்துக்கள் மேலே தெரிவது போல பிடித்துக் கொண்டு, ‘பொருட்களை சுருக்க பச்சை பட்டன். மறுபடி பெரிதாக்க சிவப்பு பட்டன். கரெக்ட்தானே. இந்தக் குழப்பம் இதை வாங்கிய நாளிலிருந்து இருக்கிறது. வயதாகிக் கொண்டிருக்கிறது!’ எதற்கும் ஒருமுறை மேன்யுலை படித்து உறுதிப்படுத்திக் கொண்டு ப்ளாஸ்டிக் சிப்புகளை நோக்கி சிவப்பை அழுத்த .....

மேஜையிலிருந்த ப்ளாஸ்டிக் சிப்புகள் விரிந்து, ப்ளாஸ்டி பணக்கட்டுகளாக மாறின. டப்பாவை பத்திரமாக அதன் கூட்டில் வைத்தபொழுது அதன் ஓரத்தில், “Made in Mars".

ப்ரவீனைப் பற்றி ஏற்கனவே சொல்லியாயிற்று அல்லவா? ஹி இஸ் எ ப்ரொஃபஷ்னல்.

Tuesday, June 30, 2009

பிரசன்னம்

சிவநேசனுக்கு வயது அறுபத்தி நான்கு முடிந்து ஏழு மாதம் பன்னிரெண்டு நாட்கள் ஆகிவிட்டன. அன்றுதான் அந்த பிரசித்தி பெற்ற சம்பவம் நிகழ்ந்தது. நாம் நேரடியாகவே கதைக்குள் நுழைந்து விடலாம். சிவநேசனுக்கு கடவுள் நம்பிக்கை நிரம்பவே இருந்தாலும், சாமியார்கள், மந்திரவாதிகள் இன்னபிற‘கள்’ மேல் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் எந்த சாமியார் எங்கே உதயமானாலும், கைக்காசில் பஸ் டிக்கெட் செலவழித்துப் போய் பார்ப்பார். ஆனால் அந்த சாமியார்/ரிணி ஏதாவது அற்புதங்கள் செய்து காட்டுபவராக இருக்க வேண்டும்.

அவர்கள் செய்யும் அற்புதங்களை திரும்பத் திரும்ப கூர்ந்து கவனிப்பார். சில மணி நேரங்களில், சில சமயம் சில நாட்களில், அந்த அற்புத வித்தையின் சூட்சுமம் என்னவென்று தெரிந்து போகும். வேறு சில சமயங்களில் அந்த சாமியார்களிடமே நைச்சியமாகப் பேசி ரகசியத்தை கறந்திருக்கிறார். இப்படி சேகரித்த ரகசியங்களைத் திரட்டி, ”முக்தாலன்” என்ற புனைப்பெயரில் “இந்திய சாமியார்களின் அற்புத ரகசியங்கள்” என்று புத்தகமே போட்டிருக்கிறார்.

இன்றும் அப்படித்தான், பத்திரிக்கையில் ஏழாம் பக்கம் வெளியாகியிருந்த அந்த கிரிதரானந்தரின் அற்புதங்களைப் பற்றி படித்து விட்டு, அந்த ஆசிரமத்துக்குள் நுழைந்தார்.

ஆசிரமம் பைபாஸ் சாலையை ஒட்டியே இருந்தது. சுமாரான கூட்டம் இருந்தது. பெயர்தான் ஆசிரமமேத் தவிர உள்ளே பெரிய ஹாலாக, ஆங்காங்கே நவீன உலகின் ஆடம்பரங்கள் எட்டிப் பார்த்திருந்தன. நடுநாயகமாக ஒரு இலவம்பஞ்சு நிரப்பப்பட்ட வெல்வட் மேடை இருந்தது. சுவாமி, இமயமலை அருகிலிருந்து வருவதாக பக்தக்கோடிகள் பேசிக் கொண்டனர். ’இமயமலையில் எத்தனை சுவாமிகளப்பா?!’ என்று நினைத்துக் கொண்டார்.

சரியாக எட்டு மணிக்கு, கிரிதரானந்தர் அந்த நடு மேடையில் திடீரென்று தோன்றினார். ஆமாம். திடீரென்றுதான். புரான பட வெடி சத்தமோ, நவீன கால க்ராஃபிக்ஸோ இல்லாமல், சத்தமேயில்லாமல், கண்ணிமைக்கும் நேரத்திற்கும் மிக மிகக் குறைவானதொரு பொழுதில், திடீரென்று.

எவ்வளவோ அற்புதங்களை பார்த்திருக்கிற சிவநேசன் கூட அயர்ந்து விட்டார். அதற்கப்புறம் நிகழ்ந்த பிரார்த்தனையிலோ, வெறுங்கையில் விபூதி வழங்கும் அற்புதத்திலோ அவர் மனம் செல்லவேயில்லை. சரியாக அரைமணி நேரம். எட்டரைக்கு கிரிதரானந்தர் மீண்டும் அதே தீடீரென்று மேடையிலிருந்து காணாமல் போனார்.

கூட்டம் இப்பொழுது கலையத் தொடங்கியது. சிவநேசனுக்கு இது ஒரு சவாலாகவேத் தோன்றியது. பிரதான சீடராகத் தோன்றியவரை அணுகினார்.
“குருஜியை பார்க்கனும்.”

“மறுபடி மதியம் மூனு மணிக்கு தரிசனம் இருக்கு சாமி.”

“இல்லை. கொஞ்சம் தனிமையில் பேசனும்.”

அந்த சீடர் அவரை ஒருமுறை முழுவதுமாகப் பார்த்தார். சிவநேசன் வசதியாகத் தெரிந்தாரோ, என்னவோ? “கொஞ்ச நேரம் அந்த ரூம்புல உக்காருங்க. குருஜிட்ட அனுமதி வாங்கிட்டு வர்ரேன்.”

வாங்கிவிட்டு வந்தவர், “குருஜி வரச் சொல்றார்” என்றார்.

கிரிதரானந்தர் இருந்த அறை வெளிச்சம் குறைவாக இருந்தது. கிரிதரானந்தரே கொஞ்சம் மங்கலாகத்தான் தெரிந்தார். ஆனாலும் அவர் கழுத்தில் தொங்கிய உருத்திராட்சத்தை பொறித்திருந்த தங்கக் குண்டு கண்களை உறுத்தியது.

“வா சிவநேசா. வா”.

சிவநேசன் ஆச்சர்யப்படவில்லை. இதெல்லாம் பால பாட வித்தை என்பது அவருக்குத் தெரியும்.

சிறிது கண்களை மூடிய குருஜி, “உன் சின்னப் பெண்ணைக் கட்டிக் கொடுத்த இடத்தில் கொஞ்சம் பிரச்சனை. அதற்காகத்தானே வந்தாய்?”

“இல்ல குருஜி. பிரச்சனை இருக்குதான். ஆனா, அதுக்காக நா வரலை.” சிவநேசன் கிரிதரானந்தரை கண்களுக்குள் தீர்க்கமாகப் பார்த்தார்.

“பின்ன?” குரு சீடரின் பக்கம் கண்களை ஓட்டினார்.

“நாம கொஞ்சம் தனியாப் பேசலாமா?”

குருஜி ஒரு கணம் தயங்குவதாகத் தெரிந்தது. அப்புறம் தலையசைக்க, மற்றவர்கள் அகன்றனர்.

“என்னப் பிரச்சனை?”

“குருஜி! நான் நேரடியாவே விஷயத்துக்கு வர்ரேன். காலைல மேடைல திடீர்னு பிரசன்னமானீங்களே! எப்படி குருவே?”

கிரிதரானந்தர் கண்களில் அருளை வரவழைத்துக் கொண்டார். “அது என்னப்பன் எனக்கருளிய சில சித்திகளில் ஒன்று!” என்று மெல்ல சிரித்தார்.

“குருஜி! டோண்ட் ஃப்ளர்ட் மீ. நீங்கள் செய்த மற்ற எல்லா அற்புதங்களையும் என்னால் எப்படின்னு விளக்க முடியும். நாளைக்கே எதிர்த்தாப்லே கூட்டம் போட்டு எல்லா வித்தையையும் நான் பொதுவுல செஞ்சு காட்டினா, நீங்க போலீஸ் ஸ்டேசன் போக வேண்டியிருக்கும். அதனால எப்படின்னு சொல்லிருங்க.”

கிரிதரானந்தர் கண்களில் கலவரம் காட்டினார். இருந்தாலும் நிதானமாக “ஏன் நாளைக்கு? இன்றே செய்ய வேண்டியதுதானே?”

“ஸீ! நீங்க ஊரை ஏமாத்துங்க. சொத்து சேருங்க. என்னமும் பண்ணிட்டுப் போங்க. எனக்கு வேண்டியது அந்த வித்தையை எப்படி செய்றீங்கங்கறதுதான்.”

“அதை நான் உன்கிட்டே சொன்னா, நாளைக்கே நீ என்னை போலீஸ்ல காட்டிக் கொடுத்துருவியே!”

”கண்டிப்பா மாட்டேன். சொல்லுங்க.”

கிரிதரானந்தர் சிறிது நேரம் மௌனமாயிருந்தார். “குருஜி! பைத்தியக்காரத்தனமா என்னை இந்த ஆசிரமத்துக்குள்ளேயே ஏதாவது பண்ணிறலாம்னு ப்ளான் பண்ணாதீங்க. நான் இன்னும் ரெண்டு மணி நேரத்துல திரும்பிப் போகலைன்னா போலீஸ் இங்கே தேடி வந்துரும். எல்லா ஏற்பாடும் பண்ணிட்டுதான் வந்தேன். இப்போ நாம பேசிட்டிருக்கிறதுகூட ஒரு இடத்துல ரெக்கார்டாயிட்டிருக்கு.”

கிரிதரானந்தர் ஒரு கணம் மறுபடி மறைந்தார். ஒரே ஒரு கணம்தான். மீண்டும் தோன்றினார். அந்த ஒரு கணத்தில், சிவநேசனுக்கு தன் உடலை யாரோ வருடி விட்டாற்ப் போல் இருந்தது.

”பொய் சொல்லாதே. ஒங்கிட்ட மைக் எதுவுமில்லை.”

“மைக் இருக்கிற இடத்தை அவ்வளவு ஈஸியா நீங்க கண்டுபிடிச்சுட்டா, என்னை மேலே கூட அனுப்பிருவீங்கன்னு தெரியாதா? பத்திரமா வச்சிருக்கேன். உங்களால கண்டுபிடிக்க முடியாது. இப்ப ரகசியத்தை சொல்றீங்களா? இல்லை நான் கிளம்பட்டுமா?” சமாளித்து விட்டார்.

“ஓகே. சொல்றேன். ஆனால் நீ யார்ட்டையும் சொல்லக்கூடாது. என்னைக் காட்டிக் கொடுக்கக் கூடாது.”

”சொல்ல மாட்டேன். சொல்லுங்க.”

ஒரு குடுவையை எடுத்து மேலே வைத்தார். “இதை தயாரிக்கிறதை என் குருநாதர்தான் சொல்லிக் கொடுத்தார். இதைக் குடிச்சா மனுசன் சாதாரணமா செய்ற எந்த வேலையையும் அசுர வேகத்தில் செய்யலாம். அந்த வேகத்தை உன்னால் அளக்க முடியாது. உண்மையைச் சொன்னால் வெறுங்கண்ணால் அந்த செயல்களை பார்க்கக் கூட முடியாது. அவ்வளவு வேகம். அப்படித்தான் இந்த தீர்த்தத்தைக் குடிச்சுட்டு, இந்த அறையிலிருந்து அசுர வேகத்தில் அந்த மேடையில் போய் உக்காந்துக்குவேன். பார்க்கிறவங்களுக்கு திடீர்னு பிரதட்சனமான மாதிரித் தெரியும். திரும்ப மேடையிலிருந்து மறைஞ்சு போறதும் இதே மாதிரிதான். தாக சாந்தி பண்ற மாதிரி கொஞ்சமா மேடைல குடிச்சுட்டு, இங்கே ஓடியாந்துருவேன். இதுல என்ன பிரச்சனைன்னா, இந்த தீர்த்ததோட வீர்யம் நாலு நிமிஷம்தான். அதனால ஒவ்வொரு முறையும் கொஞ்சம் முழுங்கனும்.”

சிவநேசன் அவரை முறைத்தார். “மறுபடி கதை சொல்றீங்க பாத்தீங்களா? குருஜி! ஐயம் சீரியஸ்! திரும்பத் திரும்ப பொய் சொன்னீங்கன்னா போலீஸ் வந்துடும்.”

“ஐயோ! சிவநேசன். இதுதான் உண்மை. டைம் வார்ப்னு கேள்விப் பட்டிருக்கியா? மூன்று பரிமாணங்கள் கொண்ட ஸ்தூல சரீரத்தோட, காலம்ங்கற நாலாவது பரிமாணம், நிரம்பவும் சுருங்கிப் போகும். அந்த சரீரத்துக்கு நாலு நிமிஷங்கறது நாலு மணி நேரமாயிடும். அதாவது ஒரு சாதாரண ஆளுக்கு நாலு நிமிஷமாத் தெரியறது, அந்த சரீரத்துக்கு மட்டும் நாலு மணி நேரமாத் தெரியும். இந்த மாதிரி ஒரு சூழலில், அந்த சரீரம் அதனோட ஒரு நிமிஷத்தில் நிதானமா செய்ற எந்தக் காரியமுமே, சாதாரணமானவங்களுக்கு அசுர வேகத்தில், கிட்டத்தட்ட கண்ணால் பார்க்க முடியாத வேகத்தில் செய்த காரியமா இருக்கும்.”

“ஹைஸ்பீட் கேமரா மூலமா எடுக்குற ஸ்லோமோஷன் மாதிரி, இல்லையா? குரு! முதல்ல மாய மந்திரம்னு சதாய்ச்சீங்க! இப்போ ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் கத சொல்றீங்க. கொஞ்சம் நம்பற மாதிரி கத சொல்லுங்க. ட்ரிக் என்ன?”

“என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன்னா எப்படி? வேண்ணா நீயே ஒரு ஸிப் குடிச்சுப் பாரு. ஒனக்கேப் புரியும்.” குடுவையின் மூடியில் அந்தத் திரவத்தை நிரப்பி நீட்டினார்.

அதை வாங்கப் போன சிவநேசன், சட்டென்று சுதாரித்துக் கொண்டார். ”முதல்ல நீங்க கொஞ்சம் குடிச்சுக் காட்டுங்க.”

“ஓ! நம்பிக்கையில்லையா?!” என்றவாறு குடுவையிலிருந்து நேரடியாகவே வாய்க்குள் சிறிது சரித்துக் கொண்டார்.

கிரிதரானந்தரின் தொண்டைக்குள் இறங்கிவிட்டதை உறுதி செய்தபிறகு, சிவநேசன் மூடியிலிருந்ததை எடுத்துக் குடித்துவிட்டு கிரிதரானந்தரைப் பார்த்தார். ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லை.

“வெளியே போய் பார்த்துட்டு வா!”

சிவநேசன் வெளியே வந்தார். பிரமித்து விட்டார். ஹாலில் இருந்தவர்கள் அனைவரும் சிலைகள் போல் நின்று/உட்கார்ந்து/குனிந்தவாறு இருந்தனர். யாரிடமும் அசைவில்லை. காவிக்கும் சிகப்புக்கும் நடுவான கலரில் சேலையணிந்திருந்த ஒரு பக்தை, ஹாலை பெருக்கியவாறே உறைந்து போயிருந்தாள். அவள் பெருக்கிய குப்பையிலிருந்து கிளம்பும் அழுக்கு புழுதிகள் காற்றில் ஒரே இடத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. ஆசிரமத்திலிருந்து வெளியே வந்தார். எல்லோரும் அப்படி அப்படியே அவர்கள் செய்யும் காரியங்களில் உறைந்து போயிருந்தனர். திறமையான சிற்பி ஒருவன் செதுக்கிய சிலைகள் போல், ஆனால் உயிருடன் உறைந்து போயிருந்தனர். வெளியே அவ்வளவு கூட்டமிருந்தும் சிறிதும் அவர்களது சத்தம் கேட்கவில்லை. ஆனால் ஒரு மிக சன்னமான ஊளை சத்தம் மட்டும் கேட்டது.

ஹைவேயில் வாகனங்கள் அப்படி அப்படியே நின்று கொண்டிருந்தன. உள்ளே டிரைவர்கள் கவனமாக ரோட்டைப் பார்த்தவாறே உறைந்திருந்தனர். அப்பொழுதுதான் அதைக் கவனித்தார். சுமார் ஐந்து வயது குழந்தை ஒன்று ஹைவேயில் நடுவே ஓடுவது போல் உறைந்திருக்க, அதை இடிப்பதற்கு சரியாக இரண்டு செண்டிமீட்டர்த் தொலைவில் அந்த வேன் - அதுவும் உறைந்திருந்தது. சிவநேசனுக்கும் அந்த இடத்துக்கும், சுமார் ஐநூறு மீட்டருக்கு மேல் இருக்கும்.

சிவநேசன் தாமதிக்கவில்லை. அறுபத்தி நான்கு வயதையும் பொருட்படுத்தாமல் அந்த இடத்தை நோக்கி ஓடினார். இதற்குள் அந்த வேன் மேலும் அரை செண்டிமீட்டர் நகர்ந்திருந்தது. பக்கத்தில் போனதும் நிதானமாக நின்று அந்தக் காட்சியை மறுபடி ஒரு முறைப் பார்த்தார். அந்த வேன் மேலும் அரை செண்டிமீட்டர் நகர்வதை பொறுமையாக கவனித்தார். பின் அந்தக் குழந்தையை மிக மெதுவாக எடுத்துக் கொண்டு சாலையின் ஓரத்திற்கு நடந்தார். அவசரமேப்படவில்லை. அந்தக் குழந்தை பார்ப்பதற்கு தெரிவதை விட கொஞ்சம் கனமாகவே இருந்தது. அதை சாலையோரத்தில் மெதுவாக வைத்தார். இப்பொழுது அந்தக் குழந்தை மீண்டும் சாலையின் குறுக்கே ஓடுவது போலவே நிறுத்தப்பட்டிருப்பதை கவனித்தார். மீண்டும் அதை எடுத்துத், திருப்பி ஆசிரமத்தை நோக்கி ஓடுவது போல் வைத்தார்.

இப்பொழுது சிவநேசனுக்கு திடீரென்று அந்த விநோத ஆசை வந்தது. மீண்டும் அந்த வேன் முன்னால் வந்து நின்றார். டிரைவரை பார்த்துக் கையாட்டினார். டிரைவரின் முகத்தில் குழந்தை குறுக்கே வந்த கலவரமே இன்னும் உறைந்திருந்தது. குழந்தை நின்ற இடத்தையே அவன் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன. சிவநேசன் அவன் பார்வை திசையை கவனித்து கொஞ்சம் குனிந்து அவன் கண்களுக்குள் பார்க்க முயன்றார். பின் மெதுவாக அந்த வேனின் அருகே சென்று வேனின் தலையை, தன்னுடைய தலையால் செல்லமாக முட்ட....

“ஆஆஆஆ.........”

வேன் க்றீறீறீச் என்று அசிங்கமாக ஹைவேயில் டயரைத் தேய்த்தது. டிரைவர் இன்னமும் ஆச்சர்யமாக பார்த்தான். ’குழந்தை எப்படி கிழவனானது?’. அங்கே ஒரு உடனடி மக்கள் வட்டம் ஒழுங்கில்லாமல் உருவாக, செய்தி மிக விரைவாக கிரிதரானந்தரின் காதுகளை எட்ட....

’அடப்பாவி சிவநேசா! விஞ்ஞானம் கத்துக்கும்போது முழுசா கத்துக்க வேணாமா? கைனடிக் எனர்ஜின்னு ஒன்னு இருக்கே. அது கூட போய் வெளையாடலாமா? சக்தியின் இயக்கம் ஆற்றல் வாய்ந்ததேடா’.

X-----X-----X

'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.