Showing posts with label மீனு. Show all posts
Showing posts with label மீனு. Show all posts

Tuesday, September 24, 2013

அவளா இது?

லூசியா. அதுதான் அவள் பெயர்.பாத்திரங்களை முறையாக அடுக்கிக் கொண்டிருந்தாள். ஆனால், அவள் வேறு ஏதோ நினைவில் உழன்று கொண்டிருந்தாள். “இன்னும் சிறிது நேரத்தில் எட்வர்டு வந்து விடுவார்” என்ற எண்ணம் எழுந்ததும், இரவு உணவு தயாரிக்கும் வேலையில் இறங்கினாள். பத்தே நிமிடத்தில் மிருதுவான சப்பாத்தியும், மணமணக்கும் குருமாவும் தயார் பண்ணிவிட்டாள். அவற்றை சூடாகவே இருக்கும்படி வைத்துவிட்டு, சோபாவில் சற்றே ஆசுவாசமாக அமர்ந்தாள்.

அவள் இதுவரை தான் வாழ்ந்த வாழ்வை அசை போட்டுக் கொண்டிருந்தாள். அவள் முன் எட்வர்டு, சமையலறை மட்டுமே நிழலாடின. சலிப்பாக உணர்ந்தாள் முதன்முறையாக. ‘என் வாழ்க்கை இவ்வளவுதானா?’ என்ற நினைப்பு அவளை என்னவோ செய்தது. நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
எட்வர்டு தன் முதல் மனைவி இறந்த பிறகு, மிகவும் சிரமப்பட்டான். அலுவலகத்திற்கும் சென்று, ஐந்து மற்றும் மூன்றே வயதான தன் பெண் குழந்தைகளையும் கவனிக்க அவனால் இயலவில்லை. அந்த நேரத்தில்தான் லூசியாவை சந்தித்தான். அவளின் சந்திப்பால் எட்வர்டு சிறிது ஆறுதல் அடைந்தான். அவன் தன் விருப்பத்தை அன்றே அவளிடம் கூறிவிட்டான். உடன் தன் நிலைமையையும் எடுத்துரைத்தான்.

ஆனால் லூசியாவோ, “உங்கள் குழந்தைகள் விருப்பமும் எனக்கு மிக முக்கியம்”, என்று கூறிவிட்டாள். மறுநாளே சந்தித்தான் குழந்தைகளுடன். அவள் அன்பாக பேசிய சில நிமிஷங்களிலேயே குழந்தைகள் அவளிடம் ஒட்டிக் கொண்டனர். அவர்கள் வயது அப்படி.

வீட்டிற்கு வந்த சில நாளிலேயே எட்வர்டு மனதிலும், குழந்தைகள் மனதிலும் நிலையான ஒரு இடத்தைப் பிடித்து விட்டாள் லூசியா. வீட்டை அவ்வப்போது மாற்றங்கள் செய்வது, புதியவகை உணவுகள் தயார் செய்வது என முழுமையாக தன்னை குடும்பத்திற்காக அர்ப்பணித்து விட்டாள். முக்கியமாக குழந்தைகள் கவனிப்பில் அவளை மிஞ்ச அவளேதான். குழந்தைகள் தன்னை ‘லூசியா’ என்றே அழைக்கப் பழக்கப்படுத்தியிருந்தாள். இதனால், குழந்தைகளுக்கும், தனக்குமுள்ள இடைவெளி குறையும் என்பது அவள் எண்ணம். தினமும் கதை கூறுவாள். அடிக்க மாட்டாள். ஆனால், கண்டிப்புடன் இருப்பாள். மொத்தத்தில் தங்கள் அம்மாவையே மறக்கச் செய்து விட்டாள். அவர்கள் வளர்ந்து தன் வழியே சென்றபின், எட்வர்டு மட்டுமே அவளின் உலகமானான்.

‘டிங் டாங்’. அழைப்பு மணி ஓசை அவளை இக்காலத்திற்கு மீட்டது. சுயநினைவு வந்தவளாய், உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஒரு பொத்தானை அழுத்தினாள். கதவு திறந்தது. எட்வர்டு தான் வந்தான்.

அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டேக் கேட்டாள். “எட்வர்டு, நான் உங்களோடு சிறிது நேரம் பேசலாமா?”

“இது என்ன புது கேள்வி?! எப்போதும் நீதான் பேசுவாய். நான் கேட்டுக் கொண்டிருப்பேன். இன்றைக்கு என்ன ஆச்சு?”

அவன் ஹாஸ்யத்தை அவள் ரசிக்கவில்லை.

“இல்லை.. என்னைப் பற்றி பேச வேண்டும்”

அவன் அவளை விநோதமாகப் பார்த்தான். ‘இன்று இவளுக்கு என்ன ஆச்சு’என்ற விநோதப் பார்வை.

“சரி, சொல்லு”, என்றான் எட்வர்டு, மனதில் ஆயிரம் கேள்விகளுடன்.

“எட்வர்டு, நான் என் வாழ்நாளை வீணடித்து விட்டதாக உணர்கிறேன்”

அவளை ஆழமாகப் பார்த்தான். இன்று லூசியா அவளாகவே இல்லை.

“எனக்கு நீங்கள், குழந்தைகள், சமையலறை தவிர வேறு ஒன்றுமே என் வாழ்க்கையில் இல்லை. இத்தனை நாள் இப்படி, எப்படி இருந்தேன் என எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. உங்களோடு இருபது வருடம் வாழ்ந்து விட்டேன். ஆனால், அதனால் நான் சாதித்தது என்ன??..” அவள் பேசிக் கொண்டே போனாள்.

அவள் பேச்சு அவன் காதில் விழவில்லை. லூசியா எப்படி இப்படி மாறினாள் என அதிசயித்தான். இத்தனை நாள் தன்னைப் பற்றி சிந்திக்காமல் இப்போதாவது சிந்தித்தாளே என்று மகிழ்ந்தான். ஆனால், அடுத்த நொடி சற்றே நிதானித்து விழித்துக் கொண்டான்.

அவர்களின் முதல் சந்திப்பின் போது நிகழ்ந்த உரையாடல் ஞாபகமாக ஞாபகத்திற்கு வந்தது.

“உன் பெயர் என்ன?”

“லூசியா. உங்கள் பெயர்?”

“எட்வர்டு. உன் வயது?”

“ஆறு!”

அப்படியானால், இவள் வயது இப்போது இருபத்தியாறு. எப்படி மறந்தேன் இதை. அவளின் அன்பின் பிடியில் மறந்து விட்டேன் போலும். இனியும் தாமதிக்கக் கூடாது. ஏற்கனவே ஒரு வருடம் தாமதமாகி விட்டது. இது ஆபத்தின் அறிகுறி. சட்டென்று தன் லேசர் பேனாவை கீழே போட்டான். அதை எடுப்பது போல கீழே குனிந்தான்.

அவளின் கெண்டைக் காலில் மச்ச்ம் போன்ற ஒன்று இருந்தது. சட்டென அதை அழுத்தினான்.

“எட்வர்டு, என்ன செய்கிறாய்?” பதட்டமானாள்.

அவன் பிடியை விடவில்லை.

“விடு என்...”, பேச்சிழந்தாள்.

அதன் பிறகும் ஒரு நிமிடம் கழித்தே தன் பிடியை விட்டான். ’அப்பாடா’ என்றிருந்தது அவனுக்கு.அவன் அவளை, இல்லை, அதை தூக்கி ஓரமாக நிறுத்தி விட்டு, அவளை வாங்கிய இடத்திற்கு போன் போட்டு ‘Switch off' செய்து விட்டதை கூறினான்.

சோபாவில் கண்மூடி சாய்ந்தான். ‘லூசியாவை பிரியணும்’ என்ற எண்ணம் அவனை வதைத்தது. ‘ஆனாலும், லூசியா இல்லாவிட்டால் என்ன... வேறு ஒரு ஃபெல்சியாவோ, ஆசியாவோ வரப்போகுது. செய்யும் வேலைகள் ஒன்றுதானே’, என்று சமாதனமானான்.

ஆனாலும் ஒரு ரோபோ எப்படி இருபத்தைந்து வருடங்களில் சுயமாக சிந்திக்க ஆரம்பிக்கிறது என்பது அவனுக்கு மட்டுமல்ல. பலருக்கும் இன்னும் அது புரியாத புதிராகவே உள்ளது. இந்த 24ம் நூற்றாண்டிலும் கூட!

எழுதியவர் மீனு

Tuesday, August 12, 2008

ரசனைகள்

ஒரு நாள் பால்கனியில் கதை எழுதும் எண்ணத்தோடு அமர்ந்த எனக்கு கதைக் கரு எதுவும் கிடைக்கவில்லை. எனவே யோசித்தபடியே கண்மூடி ஈஸிசேரில் சாய்ந்தேன். கற்பனை குதிரையை தட்டி விட்டேன்.

வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, எனது பெரும்பாலான நேரங்களை பால்கனியிலும், பேப்பரிலும், நூலகத்திலும்தான் செலவிடுகிறேன். அவ்வப்போது சிறுகதைகள், துணுக்குகள் என பத்திரிக்கைக்கு அனுப்புவதும் உண்டு. எப்படியும் பத்தில் நான்கு பிரசுரமாகி விடும்.

ஆனால் என் மனைவி எனக்கு நேரெதிர். அதனால்தான் எனக்கு மனைவியானாளோ என்னவோ? அவளுக்கு டி.வி. நடிகைகளின் அழுகையும், அவர்களுக்காக வருத்தப்படவும்தான் தெரியும். அதில் செய்திகள்கூட பார்க்கமாட்டாள். தாயில்லாக் குழந்தை என்பார்கள், ஆனால் அவள் தாயாகா குழந்தை. எனவே நானும் அவளை ஒன்றும் சொல்வதில்லை.

முன் ஒருமுறை நான் எழுதிய, கதை வந்துள்ள பத்திரிக்கை ஒன்றை அவளிடம் காண்பித்தேன். அதற்கு அவள்,
”என்ன, ஒரு கதைதான் வந்திருக்கு? நீங்க நாலு கதை அனுப்புனீங்களே!?”

“எல்லா கதையையும் ஒரே புத்தகத்துலயா போட முடியும்? அடுத்த வாரம் வந்தாலும் வரும், இல்ல, வராம கூடப் போகும்.”

“என்ன எழவு பத்திரிக்கையோ? என்ன கதையோ? நீங்கதான் மெச்சிக்கனும். அந்தக் கதை எழுதின பேப்பருக்கு ஒரு சோத்துக் கரண்டி வாங்கியிருக்கலாம். அதை விட்டுட்டு என்னமோ பெரிசா கதை எழுதறாராம், கதை.”

அதன் பின் என் கதைகள் பிரசுரமானால் கூட நான் அவளிடம் காட்டுவதில்லை. கதை என்றில்லை, பல விஷயங்களில் அவள் அப்படித்தான். எனக்கு சாதாரண கோழிமுட்டை கூட அதிசயமாகத் தெரியும். அவளுக்கு அதை ஆம்லெட் போடத்தான் தெரியும். ஆனால் இத்தனை வருடங்களில் என்னை கவனித்துக் கொண்டதில் அவளுக்கு நிகர் அவள்தான்.

கற்பனைக் குதிரையில் பயணித்த நான் சட்டென கண் திறந்தேன். ஏதோ ஓர் உந்துதலில், கீழே பார்த்தேன். அங்கே கருப்பாக ஒருவன் வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் பார்வைகளில் பயமா அல்லது திருட்டுத்தனமா எனத் தெரியவில்லை. கூர்ந்து கவனித்தேன். வேகமாக நடப்பதும், ஒரு நொடி நின்று சுற்றிலும் ஒரு பார்வை பார்ப்பதுமாக போய்க் கொண்டிருந்தான். நான் சிறிது அசைந்தாலும் உஷாராகி விடுவான் என அசையாமல் உட்கார்ந்திருந்தேன். அவன் யாரையோ தேடிக் கொண்டிருந்தது போலிருந்தது.

சட்டென ஒரு யோசனை உதித்தது எனக்கு. 'ஏன் இதையே ஒரு கதையாக எழுதக் கூடாது' என, அவன் நடவடிக்கைகளை தீவிரமாக கவனித்தேன். அப்போது என் மனைவி அங்கு வந்தாள். வந்தவள், “நேத்துதான் பொடி போட்டு இந்த எறும்பெல்லாம் ஒழிச்சேன். அதுக்குள்ள எங்கருந்துதான் வருமோ? சே!” என்று அலுத்தவாறே நான் பார்த்துக் கொண்டிருந்த அந்த அழகான எறும்பை, விளக்குமாறு கொண்டு வெளியே தள்ளினாள்.

‘அந்த ஒரு எறும்பு உன்ன என்ன செஞ்சிடப் போவுது' என கேட்க நினைத்தும் ஊமையாக நின்றேன். ஏனென்றால் அவள் அப்படி நடந்து கொள்வதால்தான் நான் அவளைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. என்னைப் பற்றியும்தான்.

‘ரசனைகள் வேறாக இருந்தால்தான் வாழ்க்கையும் ரசனையாக இருக்குமோ?' என்று எண்ணியவாறே, சுவற்றில் அசையாமல் நின்று கொண்டிருந்த பல்லி ஒன்றை, நானும் அசையாமல் ரசிக்க ஆரம்பித்தேன்.


-எழுதியவர் மீனு

அவனைத் தேடி...

நாங்கள் மூன்று பேரும் ஒருவனை தேடிச் சென்று கொண்டிருந்தோம். தலைவி உத்தரவு.
எங்கள் மூவரைத் தவிர இன்னும் பலர் வெவ்வேறு திசைகளில் சென்றிருந்தனர். தலைவியின் சொல் மீறி நாங்கள் ஒரு முறை கூட நடந்து கொண்டதில்லை.

நாங்கள் தேடிக் கொண்டிருப்பவன் சரக்கு இருக்குமிடம் அறிந்து வரப் போனவன். போனவன், போனவன்தான். திரும்பி வரவில்லை. எங்களுக்குத் தெரியும்; வராமல் இருப்பவன் எப்போதுமே வரமாட்டான் என்று. ஆனாலும் இது எங்கள் கடமை. எனவே தேடினோம்.

சரக்கு நிலையாக ஒரு இடத்தில் இராது. குறிப்பிட்ட ஐந்தாறு இடங்களில் 2 அல்லது 3 இடங்களில் தான் கிடைக்கும். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அதிகமாக கிடைக்கும். ஆனால் அதில் ஆபத்து அதிகம்.

அவர்களிடம் சிக்காமல் சரக்கெடுப்பது மிக கடினம்.

நாங்கள் இதுவரை தேடிய இடங்களில் அவனும் இல்லை, சரக்கும் இல்லை. முடிவில் வேறு வழியில்லாமல், ஆபத்தான பகுதிக்குச் சென்று தேட ஆரம்பித்தோம். ஆனால் அங்கு, நாங்கள் நடக்கக்கூடாது என்று நினைத்திருந்தது, நடந்திருந்தது. ஆம், அவன் சடலமாகிக் கிடந்தான். சிறிதேனும் உயிர் இருக்காதா என்ற ஆவலுடன் வேகமாக அவனை நோக்கிச் சென்றோம். ஆனால் அவன் இறந்து வெகு நேரம் ஆகிவிட்டது.

அவர்கள் உயர்ஜாதியினராவே இருக்கட்டும். அதற்காக, நாங்கள் திருடுகிறோம் என்ற ஒன்றிற்காக, இப்படி கண்மண் தெரியாமல் நடந்து கொள்ளவேண்டிய அவசியம் என்ன? வந்த கோபத்தில் அவனை கொன்றவர்களை அப்படியே கடித்துக் குதற வேண்டும் போல் இருந்தது. ஆனால் அப்படி செய்வதால் என்ன பயன்?

நாங்களும் அவன் கதிக்கு ஆளாக வேண்டியது தான்.

அடுத்தகட்ட நடவடிக்கையாக, மூவரும் சேர்ந்து அவனை புதைப்பதற்காக தூக்கிச் சென்றோம். யாரும் பார்க்காத வண்ணம் கொண்டு சென்று அவனைப் புதைத்தோம். பின் தலைவியிடம் சென்று விஷயத்தைக் கூறினோம். எங்களுக்காக வருத்தபடுவதற்கு அவருக்கு நேரமில்லை. அவன் வேலைக்கு வேறு ஒருவனை நியமித்து விட்டார்.

ஆனால் அவனும் திரும்பி வருவான் என்பது நிச்சயமல்ல. எங்கள் வாழ்க்கை அப்படி. ஏனெனில் நாங்கள் சாதாரண கட்டெறும்புகள் தானே!

-எழுதியவர் மீனு