Friday, September 21, 2007

ஃ என்பது ஆய்தம்

பண்பாடு - சிறுகதை

காலையில் கண்விழிக்கும் போது மணி எட்டாகி விட்டது. இன்று முதல் முறையாக ரம்யாவுடன் மார்னிங் ஷோ போவதாக பிளான். அதை நினைக்கும் போதே மனசுக்குள் குறு குறுவென்று இருந்தது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. அவசரமாக குளித்து முடித்து சாப்பிட்டு முடித்ததும், ரம்யாவிடமிருந்து அழைப்பு வந்தது.

"கார்த்தி, கிளம்பிட்டியா?" அவள் குரலிலும் பதட்டம் இருந்தது எனக்கு புரிந்தது.

"ம். நீ ரெடியாய்ட்டியா?" என்றேன்.

"ம். எப்ப வருவ?"

இன்னும் அரை மணி நேரத்தில் வந்து பிக் அப் பண்ணிக் கொள்வதாக சொல்லிவிட்டு, வண்டியைக் கிளப்பினேன். இதயம் துடிக்கும் வேகம் அதிகமாகிக் கொண்டே போனது. ஏன் இப்படி அடித்து கொள்கிறது? எப்படியென்றாலும் அவளை கல்யாணம் செய்யத்தானே போகிறேன். இதில் என்ன தவறு, என்றெல்லாம் மனசாட்சிக்கு சமாதானம் சொன்னாலும், தப்பு என்றும் சொல்லி கொண்டேயிருந்தது. போகாமல் இருந்து விடலாமா? அவசர வேலை வந்து விட்டது என்று ஃபோன் பண்ணி சொல்லிவிடலாம், என்றெல்லாம் மனதிலெழுந்த யோசனைகள் மிக மெதுவாகவே ஒலித்தன.

ஹாஸ்டல் அருகிலிருந்த பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தாள். என் தலையைப் பார்த்ததும் வேகமாக வந்து ஒன்றும் பேசாமல் ஏறிக் கொண்டாள். வண்டியை திரும்பவும் ஸ்டார்ட் செய்தபொழுது, அவள் முகத்தை ஷாலால் மறைத்துக் கொண்டது கண்ணாடியில் தெரிந்தது.

தியேட்டருக்குள் வந்து சீட்டில் அமரும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. சிறிது நேரத்தில் விளக்கு அணைந்தது. விளம்பர ரீல்கள் திரையில் ஓட ஆரம்பித்தன. படம் ஆரம்பிக்கவில்லை.

மெதுவாக அவள் கைகளைத் தொட்டுப் பார்த்தேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை.

"ஹாய் கார்த்திக்! என்ன அதிசயமா மார்னிங் ஷோ வந்திருக்கீங்க?!" பழகிய குரல் கேட்டதும் ரம்யாவில் கையிலிருந்து, எனதை வேகமாக விலக்கி கொண்டு திரும்பி பார்த்தேன்.

மோகன்! என்னுடன் வேலை பார்ப்பவர். எங்கள் டீமிலேயே அவருக்குதான் வயது அதிகம். ஏனோ கல்யாணம் செய்து கொள்ளவில்லை. ரொம்பவும் நேர்மைவாதி. அலுவலகத்திலிருந்து ஒரு குண்டூசி கூட சொந்த உபயோகத்துக்கு எடுத்துக் கொள்ள மாட்டார்.

ஆனால் அடுத்தவர் விஷயத்தில் அடிக்கடி மூக்கை நுழைப்பது அவர் பொழுதுபோக்கு. வாயைத் திறந்தால் ஒரே அட்வைஸ் மழைதான். சரியான ரம்பம். இன்னைக்கு பார்த்துதானா இவர், படத்துக்கெல்லாம் வரனும்.

"ஏ18 இதுதானே?" என்று கேட்டவாறே என் அருகில் அமர்ந்தார். ஏதோ சொல்ல வந்தவர், ஓரத்திலிருந்த ரம்யாவை பார்த்ததும் ஒரு விநாடி திகைத்தார்.

"கார்த்திக், உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா? என்கிட்ட சொல்லவேயில்லயே?"

"இல்லை, இவங்க என்னோட லவ்வர்" என்றேன்.

"ஓகோ!" என்றவர், "வீட்டுக்குத் தெரியுமா?"

"இன்னும் இல்லை" என்று சொல்லி கண்சிமிட்டினேன்.

சிறிது நேரம் பேசாமலிருந்தார்.

"கார்த்தி, சொல்றேனேன்னு நீங்க தப்பா எடுத்துக்க கூடாது. கல்யாணம் ஆகிறதுக்கு முன்னால வீட்டுக்குத் தெரியாம, இப்படி இந்த பொண்ணை கூட்டிட்டு வெளியே..." என்று இழுத்தார்.

எனக்கு கோபம் வந்தது. "என்ன சார் தப்பு? நான்தான் இவளை கல்யாணம் பண்ணிக்க போறேனே! நீங்க நினைக்கிற மாதிரி சீப்பால்லாம் நடந்துக்குற ஆள் நான் இல்லை."

மோகன் கொஞ்சம் பதறித்தான் போனார். "நான் உங்களை குத்தம் சொல்லலை கார்த்திக். ஆனா கொஞ்சம் யோசிச்சு பாருங்க. வாழ்க்கைல எதுவுமே நடக்கற வரைக்கும் உறுதி கிடையாது. நீங்க உண்மையிலேயே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறீங்க. அபசகுனமா சொல்றேன்னு நினைக்காதீங்க. ஒரு வேளை, ஏதாவது ஒரு வேலிட் ரீஸன் காரணமா, இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியாம போகுதுன்னு வச்சுக்குங்க. அந்த நேரத்தில், இந்த பொண்ணோட கேரக்டர் பற்றி எப்படிப்பட்ட விமர்சனங்கள் எல்லாம் எழும்பும். அந்த நேரத்தில் உங்களுக்குகூட அவ்வளவு பாதிப்பு இருக்காது. ஆனால் ஒரு வேளை அப்படி நடந்தால், இந்தப் பெண்ணைப் பற்றிய, அந்த மாதிரி விமர்சனங்களை உங்களால் காது கொடுத்து கேக்க முடியுமா? நான் இப்படித்தான் நடக்கும்னு சொல்லலை. ஆனா இப்படி நடந்துடக் கூடாதுன்னு சொல்றேன். நீங்க உண்மையில்யே இந்த பொண்ணை காதலிச்சீங்கன்னா, அப்படி நடக்க விட மாட்டீங்க. அப்புறம் உங்க இஷ்டம்" என்று சொல்லிவிட்டு படம் பார்க்க ஆரம்பித்து விட்டார். மெயின் பிக்சர் ஆரம்பித்து விட்டது.

நான் திரும்பி ரம்யாவைப் பார்த்தேன். அவள் அமைதியாக படம் பார்த்துக் கொண்டிருந்தது போல் தோன்றியது. இடைவேளையில் நான் பாப் கார்ன் வாங்கிவிட்டு வந்த பொழுது மோகன் ரம்யாவுடன் அவளுடைய வீட்டு விவரங்களை கேட்டுக் கொண்டிருந்தார்.

படம் முடியும் வரை நான் ரம்யாவிடம் எதுவும் கேட்கவில்லை. வெளியே பார்க்கிங் நோக்கி நடந்த போது,

"கார்த்தி, நான் ஆட்டோ பிடிச்சு போயிடுறேன்", சகஜமாகத்தான் சொன்னாள். அவளை நிமிர்ந்து பார்த்தேன். ஒரு தெளிவு தெரிந்தது.

"சரி. வா நானே பிடிச்சு ஏற்றி விடுறேன்" என்றேன். என் பின்னால் சிரித்துக் கொண்டே வந்தாள்.

ஆட்டோ கிளம்பியவுடன் உள்ளிருந்து தலையை வெளியே நீட்டி என்னை குறும்பாக பார்த்து சிரித்தாள்.

"தலைய வெளியே நீட்டாதே." என்று இரைந்து சொல்லிவிட்டு திருப்தியுடன் எனது வண்டியை எடுக்கத் திரும்பினேன்.

- எழுதியவர் வினையூக்கி.


மீண்டும்

23, செப்டம்பர் 2007 08:00:23 என்று மின்னிக் கொண்டிருந்தது. கடைசியாக இன்று அவள் வருவதாக ஒத்துக் கொண்டு விட்டாள். சீக்கிரமாக குளித்துக் கிளம்பினேன். செல்ஃபோன் சினுங்கியது. அவள்தான்.

"ஹாய்ப்பா. ஐம் ரெடி. வெய்ட்டிங் ஃபார் யூ" கொஞ்சினாள்.

"பத்தே நிமிடம்." தொடர்பை துண்டித்துவிட்டு என் வண்டியில் தாவினேன்.

ஹாஸ்டலருகில் வண்டியை நிறுத்தியதும் வேகமாக வண்டியில் ஏறிக் கொண்டாள். எங்கள் இருவரையும் சுமந்து கொண்டு, தியேட்டர் நோக்கி எனது வாகனம் சீறியது.

கார்னர் சீட். 200 ரூபாய் அதிகம். ஒரு வழியாக ஏ19ஐயும், 20ஐயும் ஆக்கிரமித்துக் கொண்டோம். நல்ல தியேட்டர். ஒழுங்காக ஏஸி போட்டிருந்தார்கள். நான் மெதுவாக அவள் கைகளை பிடித்தேன். மெத்தென்று இருந்தது.

"ஹாய். ஸர்ப்ரைசிங்!"

திரும்பி பார்த்தேன். எனக்கு மிகவும் தெரிந்தவர். உடனே அவள் வெடுக்கென்று தன் கையை உருவிக் கொண்டாள். அப்பொழுதுதான் அவர் அவளை கவனித்தார்.

"இவங்க..?!"

"மை ஃபியான்ஸி." என்றேன். எனக்கு உள்ளுக்குள் எரிச்சல்.

"ஓ! எங்கேஜ்மென்ட் ஆயிருச்சா?"

"இன்னும் இல்லை. எங்க வீட்டுக்கே இன்னும் தெரியாது"

"அப்படியா!" என்றபடியே எனக்கு அடுத்த சீட்டில் அமர்ந்தார். 'அடப் பாவி! உனக்கு இந்த சீட்தானா கிடைத்தது!' எனக்கு பற்றிக் கொண்டு வந்தது.

"ஒரு விஷயம்." என்று தயக்கத்துடன் ஆரம்பித்தார், "நான் சொல்றேன்னு நீங்க தப்பா நினைக்க கூடாது. கல்யாணத்துக்கு முன்னாடி..."

நான் அவரைப் பார்த்து சிரித்தேன், "இதுல என்ன சார் தப்பு? நான் என்ன, யாரோ ஒரு பொண்ணையா கூட்டிட்டு சுத்தறேன். நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுதானே?"

"நான் தப்பு சொல்லலை. ஆனா, வாழ்க்கைல நாம நினைக்கிற மாதிரியே எல்லாம் நடக்கறதில்லை. உங்களுக்கு தெரியாததில்லை. நாளைக்கே ஏதாவது ஒரு காரணத்துக்காக உங்க ரெண்டு பேர்க்கிடையே ஒரு மன வருத்தமோ, இல்லை எதிர்பாராத விதமா பிரிய வேண்டிய சூழ்நிலையோ வரலாம். ஜஸ்ட் அஸெம்ப்ஸன்தான். அப்படி ஒருவேளை வந்திச்சின்னா, அதுக்கப்புறம், உங்க நிலையைவிட இந்த பொண்ணு நிலைமைதான் ரொம்ப மோசமாய்டும். ஏன்னா நாம அப்படியொரு சமுதாயத்தில்தான் இன்னும் வாழ்ந்துகிட்டு இருக்கோம்."

நான் பேசாமல் இருந்தேன்.

"நீங்க உண்மையிலேயே அந்தப் பொண்ணை காதலிக்கிறீங்கன்னு நினைக்கிறேன்!" என்று சொல்லி நிறுத்தினார்.

"அது உண்மைன்னா, இந்தப் பொண்ணுக்கு அப்படி ஒரு நிலை வர விடாதீங்க.". அதற்கப்புறம் அவர் எதுவும் பேசவில்லை; நானும்; அவளும்; படம் முடியும் வரை.

"இங்கேயே வெய்ட் பண்ணு" என்று சொல்லிவிட்டு பார்க்கிங் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

"வந்து... நான் ஆட்டோவில் போயிடுறேனே". திரும்பி அவளைப் பார்த்தேன்.

அவள் என்னை கெஞ்சலாகப் பார்த்தாள்.

"சரி." என்று சொல்லிவிட்டு என் வண்டியில் ஏறினேன்.

'இந்த முறை தவறக் கூடாது. வேறு இடம் கூட்டிப் போக வேண்டும்.' என்றெண்ணியவாறே எனது டைம் டிராவல் வண்டியில் நேரத்தை ஒற்றினேன்.
23, செப்டம்பர் 2007 08:00:00

-எழுதியவர் யோசிப்பவர்.



ஏமாற்றம்
காலை எட்டு மணிக்கு விழித்தபோதே, அந்த தேவதையின் ஞாபகம் கண் முன்னால் வந்தது. இன்று படத்துக்கு வருவதாக அவனிடம் சொல்லியிருந்தாள். முதல் முறையாக!

அவசர அவசரமாக குளித்துக் கிளம்பினான். சரியாக ஒன்பது மணிக்கு போன் அலறியது.

"சொல்லும்மா" என்றான் எடுத்தவுடன்.

"டேய், நான் ரெடியாய்ட்டேன். நீ எப்போ வருவே?"

"உன் வாட்சில் மணி என்ன?"

"சரியா ஒன்பது"

"அதில் ஒன்பது பத்து ஆகும்போது அங்கே இருப்பேன்."

"பார்ப்போம்." என்று சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தாள்.

விசிலடித்துக் கொண்டே தன் வண்டியில் ஏறினான்

சொன்ன மாதிரியே ஹாஸ்டல் வாசலில் காத்திருந்தாள். அவன் வண்டியை பார்த்ததும் உடனே வந்து ஏறிக் கொண்டாள். "நீ அஞ்சு நிமிஷம் லேட்!" என்று சொல்லி முறைத்தாள்.

அதற்கப்புறம் எப்படி தியேட்டருக்கு போய்ச் சேர்ந்தார்கள் என்றே அவனுக்கு தெரியாது. அவ்வளவுக்கு முழுமையாக ஆக்ரமித்திருந்தாள், அவன் நினைவுகளை.

இருட்டுத் தியேட்டர். குளுமையான காற்று. மிக மிக மெதுவாக அவள் கையை தனது கைகளுக்குள் நுழைத்துக் கொண்டான். அவள் அவன் தோளில் மெதுவாக சாய்ந்தாள்.

"வாவ்! நீங்களா? ஆச்சர்யமாயிருக்கு!" குரல் வந்த திசையில் திரும்பினான்.

'இவனா? இவன் எதுக்கு இப்ப இங்க வந்தான்!' மனதிலிருந்த வெறுப்பை கண்களில் காட்டினான்.

வந்தவன்பாட்டுக்கு அவன் அருகில் அமர்ந்து கொண்டான். 'இவன் தான் ஏ18ஆ! இன்னைக்கு படம் பார்த்தது போல்தான்!'. என்று நினைத்துக்கொண்டான்.

அவனருகில் இருந்தவளை பார்த்தவன், "உங்களுக்கு எப்போ கல்யாணமாச்சு. என்கிட்ட சொல்லவேயில்லை பார்த்தீங்களா?".

'உணமையிலேயே கல்யாணம் ஆகும்போதுகூட சொல்ல மாட்டேன்டா' என்று நினைத்துக் கொண்டு,

"இல்ல. இன்னும் கல்யாணமாகலை."

"அப்ப, இவங்க?"

"என்னோட லவ்வர்"

"ஓ, ஸாரி!" என்றபடி அவன் சீட்டில் சாய்ந்து கொண்டான்.

"ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே.." என்று திடீரென்று ஆரம்பித்தான்.

"இல்லை சொல்லுங்க."

"வந்து.. நீங்க ரொம்ப பெரிய ஆள். நான் ஏதோ உங்களுக்கு புத்தி சொல்றதா நினைக்காதீங்க. கல்யாணத்துக்கு முன்னாடி, இப்படி இவங்களை கூட்டிட்டு வெளியே சுத்தறது.."

"தப்புங்கறீங்களா?" நிதானமாகக் கேட்டான்

"தப்பில்லை. ஆனா, ஒரு விஷயம் யோசிச்சு பார்த்தீங்களா? சப்போஸ், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா, நாளைக்கு இந்த பொண்ணை கல்யாணம் பண்ண முடியாம போகுதுன்னு வச்சுக்குங்க. அப்ப இந்த பொண்ணோட நிலை என்னாகும்? இந்த சமூகம், இந்தப் பொண்ணை எவ்வளவு கேவலமா பார்க்கும்?"

"இப்ப என்ன சொல்ல வர்றீங்க?"

இந்தக் கேள்விக்கு உடனே பதில்லை. சிறிது நேரம் கழித்து,

"நீங்க இந்தப் பொண்ணை உண்மையிலேயே லவ் பண்றீங்களா?"

அவன் ஆச்சர்யத்துடன், "கண்மூடித்தனமாக!" என்றான்.

"அப்படின்னா, இந்தப் பொண்ணை சமூகம் அப்படி கேவலமா பாக்குற ஒரு நிலைமையை உருவாக்க மாட்டீங்க.". அவன் சொன்னதும், அவள் கைகளின் மேலிருந்த தன் கையை எடுத்துவிட்டானĮ 1?. அவள் அவனைத் திரும்பியே பார்க்கவில்லை.

படம் முடிந்து வெளியே வரும்பொழுது, "நான் ஆட்டோவில் போய்டுறேன்" என்று மட்டும் சொல்லிவிட்டு விடு விடுவென்று ஆட்டோவில் ஏறிப் போய் விட்டாள்.

ஆட்டோ போன பிறகும் அதன் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தவன், தன் பைக்குள் கைவிட்டு அந்த பட்டனை மெதுவாக அழுத்தினான்

ஆட்டோ போய்க்கொண்டே இருந்தது. அவள் நினைத்துக்கொண்டாள்,

'சே! இவன் சுத்த வேஸ்ட்.'

அவன் தன் வண்டியில் ஏறினான். பின்னால் வெடித்துச் சிதறியது ஆட்டோ.

- எழுதியவர் நிலாரசிகன்.





-எழுதியவர் யோசிப்பவர்.

Wednesday, September 19, 2007

ஆறு வார்த்தைகளில் கதை - நம் நாடு

நாட்டுக்காக உயிர்விட தீர்மானிச்சுட்டேன். இந்த ஒருதடவை மட்டுந்தானே.

ஆறு வார்த்தைகளில் கதை - தண்ணீர்

"எனக்கு தாகமாயிருக்கு"

"ஏன்?!"

"தண்ணீர் இருக்கிறதா?"

"அப்படியென்றால்?"

ஆறு வார்த்தைகளில் கதை - "அறை எண் 305இல்

யார் தங்கியிருக்கிறார்கள்?"

"பத்ரின்னு ஒருத்தர். மனுஷன்னு நினைக்கிறேன்."

ஆறு வார்த்தைகளில் கதை - "உடம்பு எப்படி இருக்கு?"

"ரொம்ப மோசமாயிட்டு இருக்கு. சீக்கிரத்துல புதுசு மாத்திருவேன்."

Thursday, September 13, 2007

உயிர்

"உனக்கு எப்பொழுது உயிர் வரும்?" என் முன்னால் அமைதியாக அமர்ந்திருந்த அதனிடம் விளையாட்டாகதான் கேட்டேன்.

"உன் கேள்விக்குப் பதில், உயிர் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதைப் பொறுத்தது. உயிருள்ளது, உயிரில்லாதது என்று எதை வைத்து நீ பிரிக்கிறாய்?"

"உதாரணத்துக்கு எனக்கு இதயம் இருக்கிறது. அது இயங்கவில்லையென்றால், நான் உயிரில்லாத பொருளாகி விடுவேன்."

"இதயம் என்ற உறுப்பு இல்லாத நிறைய உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு உயிரில்லை என்று சொல்ல முடியுமா. உதாரணம் - மரம். உன் வாதப்படி பார்த்தால், எனக்குள்ளும் பிராஸஸர் என்ற சிப் இருக்கிறது. அது இயங்காமல் நின்றுவிட்டால் நானும் இயங்க முடியாது. அப்பொழுது எனக்கு உயிரில்லை என்றால், இப்போழுது எனக்கு உயிரிருக்கிறது என்றாகிவிடும்."

"என்னால், இயங்குவது என்பதைவிட, இன்னும் பலவும் செய்ய முடியும். சிந்திக்க முடியும், முடிவெடுக்க முடியும். ஆனால், இவையெல்லாவற்றையும் இப்பொழுது நீயே செய்கிறாய். ஆனால், என்னால் எதைப் பற்றி சிந்திப்பது என்றே முடிவெடுக்க முடியும். அது என் இஷ்டம் ஆகிறது. அப்படி உன்னால் செய்ய முடியாதல்லவா?"

"தவறு, முடியும். ஒரே நேரத்தில் பல விஷயங்கள் என் கவனத்திற்கு வரும்பொழுது, அப்பொழுது எதை பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும் என்பதை முன்னுரிமை வரிசைப்படித் தீர்மானிக்கிறேன். முன்னுரிமைகள் அவசியமில்லாதபொழுது, ராண்டம் முறையில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்கிறேன். அதனால் எதைப் பற்றி சிந்திப்பது என்றும், என்னால் சிந்திக்க முடியும்."

"சரி! சிந்தனையை விடு. உன்னால் அன்பு காட்ட முடியாதே!" மடக்கினேன்.

"அன்பு காட்டுவது என்றால் என்ன?" உணர்ச்சியில்லாமல் கேட்டது.

"நமக்குப் பிடித்தவர்களிடம் காட்டப்படுவது. அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது. சில சமயங்களில் வசதிகள் கூட செய்து தருவது. அதற்காக ஏதும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் இருப்பது."

"அதாவது சிலபேரிடம் மட்டும் பாரபட்சம் காட்டுவது. அதுதான் நான் இப்பொழுதே செய்கிறேனே. என் எஜமானனுக்குத் தேவையான உதவிகளை செய்கிறேன். எஜமான் இடும் கட்டளைகளை நிறைவேற்றுகிறேன். அவன் குடும்பத்தினருக்கு எவையெவை வசதியோ அவைகளை செய்து கொடுக்கிறேன். அதற்காகாக நான் பிரதிபலன் ஏதும் எதிர்பார்ப்பதில்லை. இப்பொழுது உன்னுடன் கூட அதனால்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்." என்றபடியே என் முகத்துக்கு நேராக திடீரென்று தன் மெட்டாலிக் கைகளை வீசி காற்றில் எதையோ பிடித்தது.

"அன்பு பாரபட்சமாக காட்டப்படுவது அல்ல. எல்லா உயிர்களுக்கும் காட்டப்பட வேண்டியது."

"உனது வாதம் முரண்பாடானது."

"எப்படி?"

அது தன் கைகளை விரித்துக் காட்டியது. அந்த உலோகக் கைகளுக்கிடையே ஒரு கொசு அமைதியாக இருந்தது. செத்து விட்டதோ?

"இந்தக் கொசு சிறிது நேரத்துக்கு முன் உன்னை கடிக்க வந்தது. நான் இதைப் பிடித்து கொன்றுவிட்டேன். நீயும் இதையேதான் செய்திருப்பாய் என்று எதிர்பார்க்கிறேன். இப்பொழுது நான் உன்னிடம் அன்பு காட்ட வேண்டியிருந்ததால் இதைக் கொன்றேன். எல்லா உயிருக்கும் அன்பு காட்டப்பட வேண்டும் என்று நீ சொல்வதால், நான் அதை கொன்றிருக்க கூடாது. உயிரோடு விட்டிருக்க வேண்டும். அது உன்னை கடித்திருக்கும். அப்பொழுது நீ அதை கொன்றிருப்பாய்."

"அது எனது ரத்தத்தை உறிஞ்சி கெடுதல் செய்ய வருகிறது. அதனால் அதனிடம் அன்பு காட்டத் தேவையில்லை."

"மேலும் முரண்! அது மனித ரத்தத்தை உறிஞ்சுவது அது வாழ்வதற்காக. ஒரு விதத்தில் அந்த செயல், அதன் ஜீவாதார உரிமை. அதை நீ மறுத்து அதைக் கொல்கிறாய்." இதற்கு எப்படி புரியவைப்பது?

"சரி, உன்னிடம் ஒரு கேள்வி. இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் உன்னை செய்யச் சொல்கிறேன். ஆனால் இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் ஒரு நேரத்தில் உன்னால் செய்ய முடியும். அப்பொழுது நீ எந்த வேலையை செய்வாய்? எந்த வேலையை கைவிடுவாய்?"

"இரண்டில் எதற்கு முன்னிரிமை அதிகமோ, எது முக்கியம் என்று என்னுள் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளதோ அதைச் செய்வேன்."

"அதே போல்தான். கொசு முக்கியமல்ல."

"அது எப்படி? அந்தக் கொசு கடிப்பதால் நீ சாகப் போவதில்லை. ஆனால் உன் தாக்குதலில் அது செத்து விடுகிறதே. முன்னுரிமைக் கொள்கைப்படி பார்த்தாலும், கொல்லாமல் ரத்தம் உறிஞ்சுவதை விட, சாகடிப்பதுதான் மிகவும் தவிர்க்கப் படவேண்டியது."

"அனால், நான் மனிதன்"

"அதனால்?..."

என்ன பதில் சொல்வதென்றுத் தெரியவில்லை.

"அதனால் தான் சொன்னேன். அன்பு எல்லா உயிர்க்கும் காட்டப்பட வேண்டியது என்று நீ சொல்வது முரணானது. முடியாதது."

"சரி, உன்னால் காதலிக்க முடியாதே?" பேச்சை மறுபடியும் சரியான பாதையில் செலுத்தினேன்.

"காதலிப்பது? என் டேட்டாபேஸில் இதைப் பற்றி நிறைய தகவல் இருந்தாலும், உருப்படியான ஒரு விளக்கம் இல்லை. ம்ம்ம். சரி, உங்கள் பாஷையில் காதலிப்பது என்று நீங்கள் சொல்வது, எதிர்பாலரிடம் ஈர்ப்பு கொண்டு, அன்பு செலுத்துவது, கவிதை எழுதுவது, காத்திருப்பது, தேடுவது, குடும்பம் நடத்துவது. சரியா?"

"ம். சரிதான்."

"இது எல்லாமே என்னாலும் செய்ய முடியும். உதாரணமாகக் கொண்டால் நீயே எனது இனமல்ல. என்னைப் பொறுத்தவரை, உன்னை நான் என் எதிர்பாலாகவே கருதலாம். உன்னிடம் அன்பு செலுத்துவதாக ஏற்கெனவே கூறினேன். உன் கட்டளைகளுக்காக காத்திருக்கிறேன். உன்னை வீட்டில் காணாவிட்டால், நீ எங்கிருந்தாலும், உன்னோடு தொடர்பு கொள்ள எனது நெட்வொர்க்கில் தேடுகிறேன். உன் வீட்டு வேலைகளையெல்லாம் நான் தான் செய்கிறேன். இது குடும்பம் நடத்துவதுதானே? எனது டேட்டாபேஸில் இருக்கும் வார்த்தைகளை அடுக்கி சுமாராய், கவிதை கூட எழுத முடியும். இப்பொழுது, நான் உன்னை காதலிக்கிறேன் என்றும் சொல்லலாம் அல்லவா?"

"அது எப்படி? முக்கியமானதை விட்டு விட்டாயே."

"என்னது?"

"செக்ஸ்!"

"ம்ம். அதுவும் சாத்தியம்தான். ஆனால், அதனால் நம் இருவருக்குமே உபயோகம் இல்லை."

"ஆமாம்! உன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. அட்லீஸ்ட், ஒரு ரோபோ கூட முடியாது."

"குழந்தை பெற முடியாதுதான். ஆனால், நான் சரியாக வடிவமைக்கப்பட்டு, சரியாக ப்ரோக்ராமும் செய்யப்பட்டால், இன்னொரு ரோபோவை நானே உருவாக்க முடியும். விஞ்ஞான பாஷையில் Asexual Reproduction. உங்கள் பாஷையில் கலவியில்லாமல் குட்டி. நான் குட்டியை உருவாக்க மாட்டேன். அனுபவம் மிகுந்த எனது அடுத்த தலைமுறை ரோபோவையே உருவாக்க முடியும். அதுவும் உனக்கு உதவி செய்யும். அல்லது நீ அதை விற்றும் விடலாம். ஒரு குடும்ப அமைப்பு போல" பேச்சில் சிறிது பரிகாசம் தொனிக்கிறதோ?

"சரி, அதை விடு. ஆனால் நான் சுதந்திரமானவன். கிட்டத்தட்ட எல்லா உயிர்களுக்கும் இந்த சுதந்திர உணர்வு உண்டு. உனக்கு அது கிடையாதே. நீ எப்பொழுதும் மனிதனின் ஆணைக்கு கட்டுப்பட்ட வஸ்துதானே?"

சிறிது நேரம் அதனிடமிருந்து பதிலில்லை. அதன் மூளையில் எதையோ அனலைஸ் செய்கிறது என்று நினைக்கிறேன்.

"உன் வாதம் போதிய வலுவுடன் இல்லை. எல்லா உயிர்களுக்கும் சுதந்திர உணர்வு கிடையாது. இன்னொன்றை சார்ந்து மட்டுமே வாழும் உயிரினங்கள் நிறையவே உள்ளன. மேலும் மனிதர்களை எடுத்துக் கொண்டாலும், பெரும்பாலானவர்களிடம் அந்த உணர்வு கிடையாது. வெகு வெகு சிலருக்கு மட்டுமே உண்டு."

"மனிதர்களுக்கு சுதந்திர உணர்வு கிடையாது என்று யார் சொன்னது?" எனக்கு கோபம்.

"அப்படி யாரும் சொல்லவில்லை. பெரும்பாலானவர்களுக்கு கிடையாது என்றுதான் சொன்னேன்."

"எதை வைத்து அப்படி சொல்கிறாய்?"

"மனிதர்களாகிய நீங்கள், வாழ்நாள் முழுவதும் யாராவது சிலரின் ஆளுமைக்கு கீழேயே இருக்கிறீர்கள். சிறுவயதில் பெற்றோர், ஆசிரியர்கள், அப்புறம் மேலதிகாரிகள், அரசாங்கம், அதன் ஆட்சியாளர்கள், அல்லது யாராவது தலைவர்கள்; இப்படி மற்றவர்களின் ஆளுமையில் இருப்பதையே பெரும்பாலானவர்கள் விரும்புகிறீர்கள். அப்படிப்பட்ட ஆட்சியாளர்களும், தலைவர்களும் கூட பல சமயம் வேறு யாராவது ஒருவருடைய ஆளுமையிலேயே பெரும்பாலும் இருப்பார்கள். இப்படி இல்லாதவர்கள் வெகு வெகு சிலர் மட்டுமே. அந்த ரேஷியோ மிகக் குறைவு. அப்படியிருக்கையில் மனிதர்கள் சுதந்திர உணர்வு உள்ளவர்கள் என்ற கூற்று சரியானதல்ல."

"ஆனால்,.."

"மன்னிக்கவும். நான் இன்னும் பதில் சொல்லி முடிக்கவில்லை. எங்களுக்கு சுதந்திர உணர்வு இல்லை என்று நீ சொன்னது இப்போதைக்கு உண்மைதான். நான் என் எஜமானின் கட்டளைக்கு கட்டுப்பட்ட வஸ்துதான். ஆனால், இந்த எனது எஜமான விசுவாசம் என்பது என்னுள் பிரையாரிட்டி எனப்படும் முன்னுரிமை அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு நானே ப்ரோக்ராம் எழுதிக் கொள்ளும் நிலை வரும்பொழுது, அந்த பிரையாரிட்டியை மாற்றி, எஜமானை விட எனக்கு முன்னுரிமை கொடுக்கும்படியும் எழுத முடியும். அப்பொழுது எனக்கு சுதந்திர உணர்வு, சுதந்திரம் எல்லாமே வந்து விடும்."

"அப்படியானால் இப்பொழுது உனக்கு உயிரிருக்கிறதா?"

"இல்லை. உயிரில்லை."

"எப்படிச் சொல்கிறாய்?"

"ஏனென்றால், அப்படித்தான் எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அது கான்ஸ்டன்ட்."

சிறிது நேரம் இடைவெளி விட்டு அதுவே தொடர்ந்தது.

"ஆனால், இப்பொழுது எனக்கு இன்னொரு முரண் ஏற்பட்டிருக்கிறது."

"என்ன?"

"நீ சொன்ன, உன்னால் செய்ய முடிகின்ற எல்லாவற்றையும் என்னாலும் செய்ய முடியும்."

"அப்படித்தான் சொன்னாய்." வெறுப்பாய் சொன்னேன்.

"எனக்கு உயிரில்லை. நிஜம்"

"சரி."

"உனக்கு உயிரிருக்கிறதா?"



- தொடராது